Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

தீ மீது வீணை 26



அத்தியாயம் 26 

பிரமாண்டமான அந்தப் பச்சை நிறக் கதவைக் காண்பாள் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லை.

கனவு… வரும். 

அடிக்கடி வரும். 

நேற்றுக்கூட கனவில் அவள் அப்பா வந்து ஆதரவாய் பேசி, அன்பாய் கன்னத்தில் முத்தமிட்டு, மறுக்க மறுக்க உணவு ஊட்டிவிட்டுத்தான் சென்றார்.

அவர் இருக்கிறார் என்ற எண்ணம் தந்த தைரியத்தில் தானே மைக்கேல் விட்டு சென்ற மெத்தையில் நிம்மதியாய் துயில் கொண்டாள்.

ஆனால் அந்த நிம்மதி, மறுநாள் காலையின் பரபரப்பில் கரைந்துபோகும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

விழிக்கும் முன்பே அந்த பரபரப்பு அவளை தொற்றிக் கொண்டது. 

“மேடம்! மேடம் சீக்கிரம் எந்திரிங்க?” கிரிஸ்டோபர் கதவை தட்டியபோது அரக்க பரக்க தான் எழுந்தமர்ந்தாள் ரீனா. 

“என்ன? என்னாச்சு?” அதிர்ந்து இவள் வினவ, “மேடம்! பாஸ் உங்கள சீக்கிரம் கிளம்ப சொன்னாங்க. பிரைவேட் ஜெட் நமக்காக தயாராகிட்டு இருக்கு.” அவசரவசரமாய் படபடத்துவிட்டு, “இந்தா வந்துடுறேன் பாஸ்.” என்று கூறி மறைந்தான் கிரிஸ்டோபர். 

‘என்ன அவசரம்? எங்க போகனுமாம்?’ என்ற கேள்வி அவளை அரித்தாலும், கிளம்பு என்றபின் கிளம்பாமல் இருக்க முடியுமா? அதுவும் மைக்கேல் சொல்லி கிளம்பவில்லை என்றால் அவ்வளவு தான். 

‘எவர் கண்டார்? இதற்காகவும் அடிக்க வருவான்.’ என்ற பயம் அவளின் ஆயிரம் கேள்விகளை ஒதுக்கி தள்ளி வைத்துவிட்டு கிளம்ப வைத்தது. 

குளித்தாள்… 

கிளம்பினாள்…

பயணத்திற்கு ஏற்ற எளிய உடை ஒன்றை அணிந்துக் கொண்டாள். 

கையில், காதில், கழுத்தில் சிறுசிறு நகைகளை அணிந்தபடியே இவளோ வெளியே வர, மார்கோ எவ்வளவோ மறுத்தும், கேளாமல் வீட்டிற்கு ஏற்பட்ட சேதத்திற்கான பணத்தை அவரது கையில் வலுக்கட்டாயமாகத் திணித்துக் கொண்டிருந்தான் மைக்கேல். 

என்ன எது என்று இவள் யோசிக்கும்முன்பே கலங்கிய விழிகளுடன் அவளை நோக்கி வந்தார் எலிசா. 

அவரை கண்டதும் பிரிவின் வலியோ ரீனாவின் இதயத்தை தாக்கிட, “ம்மா…” என்று விம்மியவள், ஓடிச் சென்று அவரை கட்டியணைத்தாள்.  

அவரும் அவளது கூந்தலை தடவியபடியே கண்ணீர் வடித்தார். 

இருவரும் மொழியால், இனத்தால், பழக்க வழக்கங்களால் வெவ்வேறானவர்களாக இருப்பினும் அன்பு மட்டும் அவர்களுக்கிடையே பாலமாய் அமைந்து, ஒரு தாய் சேய் உறவை அவர்களுக்குள் உருவாக்கியிருந்தது. 

அந்த பாசப் பிணைப்பில் கட்டுண்டவர்கள் பிரிந்து செல்ல மனமின்றி தவியாய் தவித்தனர்.

அவர்களின் தவிப்பைக் கண்ட மைக்கேலின் இறுகிய மனம்கூட ஒரு கணம் இளகியது.

ஆறுதலாய் அவளது தோளை தொட்டான் மைக்கேல். 

அதே நேரம், மார்கோவும் எலிசாவின் தோளை மெதுவாகப் பற்றிக்கொண்டு ஆறுதல் கூறினார்.

அதன்பின்பே மனதை ஒருவழியாக தேற்றிக் கொண்டு ரீனாவின் நெற்றியில் முத்தமிட்டு விலகியவர், ஏதோ சீர்வரிசை போல் வீட்டிலேயே தயாரித்த ஒயின் பாட்டில்களையும், தேனீ பண்ணையில் சேகரித்த தேன் பாட்டில்களையும் ஒரு பையில் போட்டு அவளது கையில் திணித்தார் எலிசா. 

அவரது அன்புக்கு கட்டுண்டவளாய் மறுபேச்சியின்றி அவர் தருவதை வாங்கிக் கொண்டு கனத்த இதயத்துடன் அவரிடமிருந்து விடைப்பெற்றாள் ரீனா. 

அதன்பின் வந்த நிமிடங்கள் எதுவும் அவளது மனதில்  ஏனோ பதியவில்லை. 

கிரிஸ்டோபரோ மைக்கேலின் பாதுகாப்பு ஏற்பாடுகளிலேயே மூழ்கியிருந்தான்.

மைக்கேலோ அவளை பார்ப்பதும், கைப்பேசியை பார்ப்பதுமாக நேரத்தை ஓட்டினான். 

இப்படியே விமான பயணம் இனிதாய் முடிந்தாலும், ரீனாவின் கேட்கப்படாத கேள்விகள் மட்டும் அப்படியே இருந்தன. 

அது, ‘எங்கே போகிறோம்? எதற்காக போகிறோம்? யாரை பார்க்க போகிறோம்?’ என்பது தான். 

ஒருவேளை கேட்டிருந்தால் அவளது கேள்விக்கான பதில் உடனே கிடைத்திருக்கும். ஆனால் ஏனோ யாரிடமும் இவள் கேட்கவில்லை. 

காரணம்?  

அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருக்கும் கிரிஸ்டோபரிடம் இவளால் கேட்க முடியவில்லை. 

அமைதியாக தனக்கு அருகில், தன்னையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கும் மைக்கேலிடம் இவளுக்கோ கேட்க விருப்பமில்லை. 

எல்லாவற்றிக்கும் மேலாக, இப்போது கேட்டு என்ன ஆகபோகிறது என்ற விரக்தியே அவளை அமைதியாக ஜன்னலை வெறிக்க வைத்தது. 

அப்படி ஜன்னலை வெறித்தப்படியே வந்தவளின் கண்ணில் தான் அந்த பெரிய பச்சை நிற இரும்பு கதவு தென்பட்டது. 

அந்தக் கதவின் கம்பீரம், அவளுக்கு அவளிருந்த மனநல காப்பகத்தின் முகப்பை நினைவூட்ட, ரீனாவிற்கோ உடல் தானாய் அதிர்ந்து நடுங்கியது.  

போதாக்குறைக்கு கிரிஸ்டோபர் வேறு சரியாக அந்த கதவின் முன்னால் காரை நிறுத்த, இதயமோ மார்புக்கு வெளியே எகிறி குதித்தது ரீனாவிற்கு. 

‘ஏ… ஏன் இங்க காரை நிப்பாட்டினீங்க?” பயத்தில் இவளோ மெல்ல அலற, எந்தப் பதிலும் சொல்லாமல் நிதானமாய் காரிலிருந்து இறங்கி அவள் பக்க கதவை திறந்துவிட்டான் மைக்கேல். 

அவளை நோக்கி வலது கரத்தை நீட்டியவன், “வா, ரீனா...” என்றான் அமைதியாக. 

எங்கே மறுபடியும் மனநல காப்பகத்தில் சேர்த்துவிடுவானோ என்ற அச்சத்தில் “நா… நான் வரமாட்டேன்.” பதறி மறுத்தவள், கார் இருக்கையை இறுக பற்றிக் கொண்டாள். 

அவளது முகத்தில் தெரிந்த பயம் மைக்கேலை குழப்ப, “என்னாச்சு ரீனா?” அமைதியாக வினவினான் புருவம் இடுக்கி.  

“பிளீஸ் பிளீஸ்… என்ன விட்டுடுங்க. நான்... நான் எங்கயாவது ஓடிப்போயிடுறேன்... இனிமே உங்க கண்ணுல கூட படமாட்டேன்…” மறுப்பாய் தலையாட்டி இருக்கையுடன் ஒட்டினாள் ரீனா. 

“ஒடி போறீயா? எங்க?” இமை இடுக்கியவன், “ஏய் ரீனா உனக்கு என்னாச்சு?” பதறி வினவியபடியே மெதுவாய் அவளது தோளை தொட்டான் மைக்கேல். 

அவன் மெதுவாகத் தொட்டதைக்கூட, வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துச் செல்லப் பிடிக்கிறான் என நினைத்த ரீனா, உடம்பெல்லாம் நடுங்க, “வி… விடுங்க பிளீஸ்… நா… நான் வரல. எ… என்ன அங்க கூடிட்டு போகாதீங்க. பிளீஸ்…” என்று அலறி முழங்கால்களை நெஞ்சோடு அணைத்தபடி இருக்கையோடு இருக்கையாக ஒட்டிக்கொள்ள,  சும்மாவே அவனுக்கு பொறுமை கிடையாது. 

இவளோ அநியாயத்திற்கு அடம்பிடித்து வைக்க,

“ஏய்... லூசு!” என்று கூறி பற்களை அரைத்தான் மைக்கேல்.

அவன் "லூசு" என்றதும் தான் தாமதம், நினைத்தது போலவே மனநல மருத்துவமனையில் சேர்க்க தான் அழைத்து வந்து இருக்கிறார்கள் என்று நம்பியவள், “நா… நான் ஒன்னும் லூசு இல்ல.” என்றாள் குரலை உயர்த்தி. 

அவளது குரல் உயரவும்,  இவனோ சிலையென உறைந்திட, “உங்கள கெஞ்சிக் கேட்கிறேன். பிளீஸ் என்ன விட்டுடுங்க. தயவு செய்து மறுபடியும் என்ன மென்டல் ஹாஸ்பிட்டல சேர்த்துடாதீங்க.” கண்ணீர் மல்க கெஞ்சினாள் ரீனா.  

மென்டல் ஹாஸ்பிட்டல் என்றதும், “வாட்?” என்று அவன் அதிர்ந்து விளிக்க, “பிளீஸ் நீ… நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன். என்ன இன்னும் நாலு அடி கூட அடிங்க. பிளீஸ் அங்க மட்டும் வேணாம். அவங்க… அவங்க என்ன அடிப்பாங்க. ரூம்ல பூட்டி வச்சு கரண்ட் சாக் கொடுப்பாங்க.” அழுதபடியே கூறிவளுக்கோ உடல் தானாய் நடுங்கின. 

“பிளீஸ்ங்க எ… என்ன மறுபடியும் அ… அங்க சே… சேர்த்துடாதீங்க.” முழங்காலுக்கு முகம் புதைத்து அவள் அழ,  ஒரு கணம் உடல் இறுகி பின் தளர்ந்தது மைக்கேலுக்கு. 

தானாய் அவனது கரம் உயர்ந்து அவளது கூந்தலை வருட போக, என்ன நினைத்தானோ சட்டென கரத்தை இழுத்து கால் சட்டையின் பாக்கெட்டில் சொறுகிக் கொண்டான். 

ஒருமுறை அழுத்தமாய் அவளை பார்த்துவிட்டு, “கிரிஸ்டோபர்…” என்று கூவினான் மைக்கேல். 

உடனே, “யெஸ் பாஸ்.” என்றவாறு அருகில் ஓடி வந்து கை கட்டினான் கிரிஸ்டோபர். 

அவளிடமிருந்து பார்வையை விலக்காமல், “இவளைக் கூட்டிட்டு வா.” என்று மட்டும் கூறிவிட்டு திரும்பி நடந்தான் மைக்கேல். 

“மேடம் மேடம் பிளீஸ் அழாதீங்க.” ரீனாவின் அருகே மண்டியிட்டு அவளைச் சமாதானப்படுத்த முயன்றான் கிரிஸ்டோபர்.

ஆனால் அவளோ எதற்கும் சமாதானம் ஆகாமல், “நா… நான் வரமாட்டேன். பிளீஸ் எ… என்ன வி… விட்டுடுங்க.” தொடர்ந்து அனத்திக் கொண்டே இருக்க, “மேடம் பிளீஸ் கொஞ்சம் கேளுங்க. நாம ஒன்னும் மெண்டல் ஹாஸ்பிட்டலுக்கு வரல. ஜெயிலுக்கு வந்திருக்கோம். உங்களுக்கு சந்தேகம்னா அங்க பாருங்க.” அவளது கரத்தை பிடித்து கதவை பார்க்க தூண்டினான் கிரிஸ்டோபர். 

‘ஜெயில்...’ என்றதும் அழுகையை ஒரு நொடி நிறுத்தியவள், திரையிட்ட விழிநீரைத் துடைத்தபடியே சிறை வாசலை நோக்கினாள்.

அந்த பிரமாண்டமான பச்சை நிற இரும்புக் கதவின் மேல், "சென்ட்ரல் ஜெயில், நியூ டெல்லி" என்று பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது.

அதைப் பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

“ஜெ... ஜெயிலா?” என்று திகைப்புடன் வினவினாள்.

“ஆமா மேடம்...” என்று மெதுவாகத் தலையாட்டிய கிரிஸ்டோபர், அவள் முகத்தைப் பார்த்தபடியே, “பாஸ் உங்கள மென்டல் ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டு வரல... உங்க அப்பாவைப் பார்க்கத்தான் கூட்டிட்டு வந்திருக்கார்.” அவளுக்கு புரியும் வண்ணம் வார்த்தைகளை அழுத்தினான் கிரிஸ்டோபர். 

“அ… அப்பாவா?” உதடுகள் தானாய் அசைந்தன ரீனாவிற்கு. 

“ஆமா மேடம்! சீக்கிரம் வாங்க.” மெல்ல கூறியவன் அவளை காருக்குள் இருந்து இறங்குமாறு சைகை காட்டினான். 

இருப்பினும், ரீனாவின் கால்கள் அசைய மறுத்தன.

‘இல்ல… இல்ல… இவனுங்க பொய் சொல்றானுங்க.’ சூடு கண்ட பூனையல்லவா அவள்? ஒருமுறை நம்பி ஏமாந்த மனம், மறுமுறை நம்ப தயாராகவில்லை. 

“இல்ல… நீங்க பொய்… பொய் சொல்றீங்க.” கால்களை இறுக கட்டிக் கொண்டு மறுப்பாய் தலையாட்டினாள் ரீனா. 

“ஐயோ மேடம், நாங்க எதுக்கு உங்ககிட்ட பொய் சொல்லணும்? நான் உண்மையத்தான் சொல்றேன் மேடம். உங்க அப்பாவைப் பார்க்கத்தான் நாம இங்க வந்திருக்கோம். இப்பவே டைம் ஆகிடுச்சு. லேட்டாச்சுனா ஜெயிலர் உங்க அப்பாவைப் பார்க்க விடமாட்டாரு மேடம். பிளீஸ்... சொன்னா கேளுங்க.” கை கடிகாரத்தைப் பார்த்தபடியே பதற்றத்துடன் கூறினான் கிரிஸ்டோபர்.

ஒரு நிமிட யோசனைக்கு பின் தயங்கியபடியே காரிலிருந்து மெல்ல இறங்கினாள் ரீனா. 

‘இவங்க சொல்றது உண்மையா? பொய்யா?’ உள்ளுக்குள் ஒரு பெரிய பட்டிமன்றமே ஓடிக் கொண்டிருக்க, சிறை வாசலை நோக்கி ஒவ்வொரு அடியும் மிகுந்த கவனத்துடன் எடுத்து வைத்தாள்.

கதவருகே  நெருங்க நெருங்க, இதயத் துடிப்பும் அதிகரித்தது.

சிறை காவலரோ கதவை திறந்து உள்ளே அழைக்க, பயத்தில் தயங்கி நின்றாள் ரீனா. 

“ம்ம்ம்… போங்க மேடம் டைமாச்சு.” பின்னாலிருந்து கிரிஸ்டோபரோ அவசரப்படுத்த, பயந்த விழிகள் பயந்தபடியே இருக்க, மெல்ல தனது கால்களை முன்னால் எடுத்து வைத்தாள் ரீனா. 

அவள் அடுத்த அடியை எடுத்து வைக்கும்முன்,  சட்டென அவளது இடையை வளைத்துப் பிடித்து தூக்கிக் கொண்டான் மைக்கேல்.

அதில் அதிர்ந்தவள், “எ... என்ன? எங்க தூக்கிட்டு போறீங்க?” என்று அவன் தோளைப் பற்றிக் கொண்டு அலற,

“உஷ்...!” என்று அவளை அடக்கியவன்,

“ஏற்கனவே டைமாச்சு டி. இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு. உங்க அப்பாவைப் பார்க்கணும்னா, கொஞ்சம் வாயை மூடிட்டு வா.” எரிச்சலுடன் கூறிவிட்டு, அவள் மறுபடியும் அடம்பிடிக்க இடமே கொடுக்காமல் விறுவிறுவென சிறை வளாகத்திற்குள் நடந்தான்.

ஜோசப்போ, சிறைக் கம்பிகளை இறுகப் பற்றியபடி மகளுக்காக காத்திருந்தார்.

சோர்வில் கண்கள் களையிழந்திருந்தன.

ஏக்கத்துடன் அவரோ வழிமேல் விழி வைத்திருக்க, ஒரு கையால் அவளைத் தூக்கி வந்து அவருக்கு முன் நிறுத்தினான் மைக்கேல்.

இருவரையும் ஒன்றாகக் கண்ட ஜோசப்பின் கண்கள் மெல்ல விரிந்து கண்ணீரால் நிரம்பின.  

“ரீனா…” உயிர் உருக அவர் அழைக்க, “டாட்…” விழி விரிய அவரை கண்டவள், பசுவை கண்ட கன்றாய் துள்ளி குதித்து அவரிடம் ஓடினாள். 

இருவருக்கும் இடையில் இரும்பு கம்பிகள் இருக்க, அவரை அணைக்க முடியாமல், “டாடி… டாடி…” என்று இவள் மறுக, இரும்பு கம்பிகளை இறுகப் பற்றி அவரோ கண்ணீர் வடித்தார். 

“அம்மாடி…” அடி தொண்டையில் அவர் அழைக்க, அவரது விரல்களுக்கு மேல் தனது விரலை வைத்து, “டாடி… டாடி எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?” நலம் விசாரித்தாள் ரீனா. 

“ம்ம்ம் நல்லா இருக்கேன்டா.” கண்ணீரை மென்று விழுங்கியவர், “அம்மா… அம்மா எப்படி இருக்கா? சார்லஸ் என்ன பண்றான்?” ஆர்வத்துடன் விசாரித்தார்.  

எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல், சுவரில் சாய்ந்தபடி, கால் மேல் கால் போட்டுக் கை கட்டி நின்றான் மைக்கேல். 

ஆனால் அவனது கூர்மையான விழிகள் மட்டும் ரீனாவையும் ஜோசப்பையும் கவனித்துக் கொண்டிருக்க, வீட்டின் உண்மை நிலை தெரிந்தால் அப்பா இன்னும் வேதனைப்படுவார் என்று எண்ணிய ரீனா, பேச்சை மாற்ற நினைத்து, “அன்னைக்கு என்ன நடந்துச்சு டாடி? எப்படி ராயப்பன் அங்கிளும் ஆண்ட்டியும் செத்துப் போனாங்க?” என்று இவளோ மெதுவாகக் கேட்க, சட்டென முகம் மாறினார் ஜோசப். 

கைகளை மெல்ல அவளிடமிருந்து உருவியவர், பேச பிடித்தம் இல்லை என்பது போல் முதுகை காட்டி நின்றார். 

“டாடி…” அவரின் செய்கை கண்டு இவளோ அதிர்ந்து விளிக்க, “ஹும்…” முதுகு தண்டோ ஏறி இறங்க ஓர் ஆழ்ந்த பெருமூச்சுடன், “அவங்க சாவுக்கு நான் காரணம்…” என்றார் அழுத்தம் திருத்தமாக. 

“டாடி…” பதிலுக்கு இவளோ விழி விரிக்க, “இனிமே என்ன பார்க்க வராத!” என்று மட்டும் கூறிவிட்டு விறுவிறுவென அவரோ திரும்பி பார்க்காமல் நடக்க, “டாடி… டாடி…” உறக்க ஒருபாடு கத்தி தீர்த்தவள், காவலாளி, “ஜாவோ ஜாவோ…” என்றதும் “டாடி…” என்றவாறு தரையில் விழுந்து அழ, விழுந்தவளை வாரி அணைத்துக் கொண்டான் மைக்கேல். 


தொடரும்...   


அன்பான வாசகர்களுக்கு ❤️

இந்த அத்தியாயத்துடன் "தீ மீது வீணை" சிறிய இடைவேளை எடுக்கிறது.

Paper Space-ல் நடைபெறும் "இதயமொழி" நாவல் போட்டியில், "வேடனின் வெம்பகையே" என்ற கதையுடன் நான் பங்கேற்க இருக்கிறேன். அந்தக் கதையை முழு கவனத்துடன் எழுதி முடிக்க வேண்டியிருப்பதால், அதுவரை "தீ மீது வீணை" நாவலின் அடுத்த அத்தியாயம் வெளியாகாது.

போட்டி முடிந்ததும் மீண்டும் ரீனா, மைக்கேல் கதையோடு உங்களைச் சந்திக்கிறேன். அதுவரை கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.

அதே நேரத்தில், "வேடனின் வெம்பகையே" கதைக்கும் உங்கள் அன்பான ஆதரவும், வாழ்த்துகளும், ஆசீர்வாதங்களும் வேண்டும். உங்கள் ஊக்கம்தான் என்னைப் போன்ற எழுத்தாளர்களின் மிகப்பெரிய பலம்.

என் எழுத்துப் பயணத்தில் எப்போதும் துணையாக இருக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ❤️

உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் என்றும் வேண்டுகிறேன். 🙏


  - யாஷ் கார்முகில்

கருத்துகள்

கருத்துரையிடுக

“உங்கள் கருத்துகள் எங்களுக்கு முக்கியம். கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.. தாராளமாய் பகிருங்கள் 😊

பிரபலமான இடுகைகள்