Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

தீ மீது வீணை 16


அத்தியாயம் 16 

“ப்ச்… அப்புறம்? இது ரேர் குரூப் மேடம். உடனே பிளட் அரேஞ்ச் பண்ணணும். இல்லைனா இவரைக் காப்பாத்துறது ரொம்ப கஷ்டம்,” எரிச்சலுடன் கூறிய மருத்துவர், உடனே செவிலியரை நோக்கி,

“பிளட் பேங்குக்கு கால் பண்ணுங்க. ஓ நெகட்டிவ் எவ்வளவு கிடைக்குதோ உடனே அரேஞ்ச் பண்ணச் சொல்லுங்க. ம்ம்… ஃபாஸ்ட்!” என கட்டளையிட்டு விரட்டினார்.

“யெஸ் டாக்டர்…” என்று பதறியபடியே கைப்பேசியைச் காதில் வைத்துக் கொண்டு செவிலியரோ தனியிடம் செல்ல, உலகமே தட்டாமாலையாய்ச் சுற்றத் தொடங்கியது ரீனாவிற்கு. 

இதயமோ ஒரு நிமிடம் நின்று பின் துடிக்க, நிற்கக் கூடத் திராணியின்றிச் சட்டென அருகில் கிடந்த இருக்கையில் விழுந்தாள் ரீனா.

“நோ… நோ… பிளீஸ்…” என அவள் உதடுகள் தானாய் அசைந்தன. 

கண்களில் கண்ணீரோ பெருக்கெடுக்க, ஆரப்பரிக்கும் உணர்வுகளை அடக்க முடியாமல் இரு கைகளாலும் இறுகத் தனது தலையைப் பற்றிக் கொண்டாள், ரீனா.  

செவிகளிலோ, “ரொம்ப கஷ்டம்…” என்ற மருத்துவரின் வார்த்தைகள் மட்டும் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்க, நெஞ்சமோ பாறாங்கல்லைச் சுமப்பது போலக் கனம் கொண்டது.

அவனோ ஆக்ஸிஜன் மாஸ்க் மற்றும் மருத்துவக் கருவிகளுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க… இவளோ கொஞ்சம் கொஞ்சமாய்ச் சாகாமல் செத்துக் கொண்டிருந்தாள்.

‘இனி எல்லாம் அவ்வளவுதான்…’ முற்றிலும் நம்பிக்கையற்ற நிலையில்… இருளில் முளைத்த ஒளிக் கீற்றாய், “என் பிளட் குரூப்பும் ஓ நெகட்டிவ் தான் டாக்டர்…” என்றவாறு அவ்விடம் வந்து சேர்ந்தான் கிரிஸ்டோபர்.

அழுத்தமாய் ஒலித்த அவன் குரலில் சட்டென நிமிர்ந்தவள், “உ… உங்களுக்கும் ஓ நெகட்டிவ் தானா?” படபடத்தவாறே அவனை நோக்கி விரைந்தாள்.

ஓர் ஆழ பார்வையுடன், “ம்ம்…” என பதிலுக்கு இவனோ மேலும் கீழும் தலையாட்ட, “ஆர் யூ ஷூர்?” இருவருக்கும் இடையே வந்து அவசரமாய் வினவினார் மருத்துவர்.

“ம்ம்… எஸ் டாக்டர். லாஸ்ட் வீக் தான் கம்ப்ளீட் பாடி செக்-அப் பண்ணேன். ரிப்போர்ட் கூட இருக்கு பாருங்க,” என்றவன் தனது கைப்பேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்துக் காட்ட, “தேங்க் காட்…” எனப் பெருமூச்சு விட்ட மருத்துவர், “ஓகே… பக்கத்துல ஏதாவது மெடிக்கல் ஷாப் இருந்தா ஆம்புலன்ஸை நிறுத்தச் சொல்லுங்க. ம்ம்… கொஞ்சம் மெடிக்கல் திங்ஸ் வாங்கணும்,” என்றார் ஆழ்ந்த நிம்மதியுடன்.

அவர் சொல்படி அவசர ஊர்தியோ மருந்தகம் நோக்கி விரைந்திட, மருத்துவரும் செவிலியரும் அவனது வலிப்பு நீங்க, அவனது கை கால்களைப் பரபரவெனத் தேய்க்கத் தொடங்கினர். 

அவர்களுடன் அவர்களாக ரீனாவும் அவனது கை கால்களை தேய்த்துக் கொண்டிருக்க, வினாடிகளோ யாரையும் கவனிக்காமல் விரைந்து சென்றது. 

கிட்டத்தட்ட அரை மணிநேர பயணத்திற்கு பின் ஒரு பெரிய மருந்தகத்திற்கு முன் வாகனமோ நிறுத்தபட, “க்வீக்… இந்த பிரிஸ்கிர்ப்சன்ல இருக்கிறத சீக்கிரம் வாங்கிட்டு வாங்க.” என கிரிஸ்டோபரை விரட்டினார், மருத்துவர். 

அவனும் ஓடி சென்று தேவையான அனைத்தையும் வாங்கி வர, மருத்துவரும் செவிலியரும் மைக்கேலை காப்பாற்றும் பொருட்டு துரிதமாக செயல்பட தொடங்கினர்.  

“பிப்… பிப்…” என்ற கருவிகளின் சத்தம் மட்டும் அவன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறான் என்பதை பறை சாற்ற, “ஜீசஸ் பிளீஸ்… சேவ் ஹிம்.” கண்ணீருடன் மனம் உருக இறைவனை வேண்டினாள், ரீனா. 

அவளது கூக்குரல் இறைவனுக்கு கேட்டதோ இல்லை அருகில் நின்றிருந்த கிரிஸ்டோபருக்கு தெளிவாக கேட்டது. 

‘இதெல்லாம் உண்மையா? இப்படியெல்லாம் கூட ஒரு பெண்ணால நடிக்க முடியுமா? ப்ச்… பட், இது நடிப்பு மாதிரியும் தெரியலையே!’ அவளை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் இரண்டும் கெட்டான் மனநிலையில் அவன் திண்டாட, “கிரிஸ்டோபர்…” அவசரமாய் அவனை கூவி அழைத்தார், மருத்துவர். 

அவரின் குரல் கேட்டு இவனோ அவரிடம் விரைந்துச் செல்ல, “பிளட் எடுக்க போறோம். இங்க இருங்க கிரிஸ்டோபர்.” என்று கூறி மைக்கேலுக்கு அருகில் படுக்க வைத்தார், மருத்துவர்.  

“ஓகே டாக்டர்.” மருத்துவர் சொல்படி இவனும் நடந்துக் கொள்ள, ஊசி மூலமாக இவனது இரத்தம் மைக்கேலின் உடலுக்குள் செலுத்தப்பட்டது. 

குழாயில் சொட்டு சொட்டாய் கொட்டும் இரத்தத்தை கவனித்தபடியே ரீனா அமர்ந்திருக்க, கிரிஸ்டோபரோ அவளை உற்று நோக்கியபடியே இரத்த தானம் செய்துக் கொண்டிருந்தான். 

அவளின் வெளிறிய முகம், சிவந்து வீங்கிய கண்கள், அழுகையில் துடிக்கும் அதரங்கள்… இவையெல்லாம் எதையோ அவனுக்குச் சொல்லாமல் உணர்த்தின. 

காலையிலிருந்து உண்ணாமல், உறங்காமல், ஓரடி கூட மைக்கேலை விட்டு நகராமல் எப்படி ஒரு பெண்ணால் இருக்க முடியும்? நினைக்க நினைக்கப் பிரமிப்பாகவே இருந்தது அவனுக்கு.

“பாஸ் மேல இவ்வளவு பாசமா இருக்குற பொண்ணு, எப்படி அப்படியொரு துரோகம் பண்ணியிருக்கும்?” பிறருக்குக் கேட்காவண்ணம் தனக்குத் தானே பேசிக் கொண்டவனின் நினைவுகள் மட்டும் மெல்ல பின்னோக்கிச் சென்றன.

அன்று எப்போதும் போல அன்றைய நிகழ்ச்சி நிரல்களை மைக்கேலுக்கு நினைவூட்ட அவனது அறைக்குள் நுழைந்தான் கிரிஸ்டோபர். எப்போதும் பளிச்சென்று சுத்தமாக இருக்கும் அந்த அறை, அன்று ஏனோ போர்க்களம் போலக் காட்சியளித்தது.

மேசையிலிருந்த பொருட்கள் அனைத்தும் உடைந்து சிதறிக்கிடந்தன. தரையெங்கும் காகிதங்கள் காற்றில் தூக்கி வீசியதுபோல் பரவிக் கிடக்க, கலங்கிச் சிவந்த விழிகளுடன், வாடிய பட்டமரமாய் ஒரு கை தலையைத் தாங்க, குனிந்தபடி அமர்ந்திருந்தான் மைக்கேல்.

என்றும் இல்லாது கண்களில் அளவில்லா வலியுடன் காட்சியளித்த தனது முதலாளியைப் பார்த்த கிரிஸ்டோபருக்கு ஏதோ சரியில்லை என்ற உணர்வு தோன்ற, “பாஸ்…” மெதுவாக அழைத்தபடியே கீழே சிதறிக்கிடந்த காகிதங்களை ஒன்றொன்றாகப் பொறுக்க ஆரம்பித்தான்.

அப்போது காகிதங்களுக்கிடையே சில புகைப்படங்களும் சிதறிக்கிடப்பதைக் கவனித்தவன், குழப்பத்துடன் புருவத்தைச் சுருக்கிக் கொண்டு அப்புகைப்படங்களை எடுத்துப் பார்க்க… அறைகுறை ஆடையுடன் ஏதோ ஓர் ஆணுடன் காட்சியளித்தாள் ரீனா.

அதுபோல் பல படங்கள்… ஒவ்வொரு புகைப்படத்திலும் விதவிதமான ஆண்கள் இருந்தனர்.

சில புகைப்படங்களில் மூன்று நான்கு ஆண்களுடன் கூட அவள் இருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்க, “ச்சே… இவளெல்லாம் ஒரு பொம்பளையா?” அருவருப்பு மேலிட, முகம் சுளித்தபடியே அப்புகைப்படங்களைத் தூர எறிந்தான் கிரிஸ்டோபர்.

சுவரை வெறித்தபடியே, “எப்படி… எப்படி எனக்கு இப்படியொரு துரோகத்தைச் செய்ய அவளுக்கு மனசு வந்துச்சு?” மெல்ல வினவினான் மைக்கேல்.

“ஐயோ பாஸ்… பிளீஸ்… எமோஷனல் ஆகாதீங்க,” ஆறுதலாக அவனது தோளைத் தொட்டான் கிரிஸ்டோபர்.

“இல்ல கிரிஸ்டோபர்… நா… நான் ஏமாந்துட்டேன். நான் எவ்வளவு பெரிய முட்டாளா இருந்தா, போயும் போயும் ஒரு பொண்ணுகிட்ட போய் ஏமாந்திருப்பேன்?” குரல் கரகரக்க மைக்கேலோ தலையில் கை வைக்க, “ப்ச்… விடுங்க பாஸ்! அதான் அவளை மெண்டல் அசைலம்ல சேர்த்துட்டீங்களே. ம்ம்… நல்லா அங்கேயே கிடந்து சாகட்டும்,” பதிலுக்கு இவனோ பற்களை நறநறவெனக் அரைத்தான்.

‘ச்சே… பாஸையே அழ வச்சுட்டாளே, அவளெல்லாம் நல்லா இருப்பாளா?’ மனதிற்குள் இவன் வசைபாட, “கஷ்டமா இருக்கும்ல…” கண்ணீரை மறைக்கக் கண்களை இறுக மூடிக் கொண்டு வினவினான் மைக்கேல்.

“யாருக்கு பாஸ்?” புரியாமல் இவன் புருவம் சுருக்க, “அவளுக்குத்தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்ல…” கண் சிமிட்டி வார்த்தைகளை அழுத்தினான் மைக்கேல்.

“பாஸ்! அது வந்து…” என்ன சொல்லி அவனைத் தேற்றுவது என்று தெரியாமல் கிரிஸ்டோபர் தடுமாற, “நேத்து கூட தப்பிக்க ட்ரை பண்ணி கீழே விழுந்துட்டாளாம்…” கவலையுடன் தொடர்ந்தான் மைக்கேல்.

“நல்லா விழட்டும்! விழுந்து சாகட்டும்! உங்களுக்குத் துரோகம் பண்ணவ நல்லாவே இருக்கக் கூடாது பாஸ்,” இம்முறை வெறுப்பில் வாய் விட்டே கிரிஸ்டோபர் சபிக்க, “க்கும்…” வெற்றுப் புன்னகை இதழோரம் கசிந்திட, “உன்ன மாதிரிதான் நானும் யோசிக்க ட்ரை பண்றேன் கிரிஸ்டோபர்! பட், ஏன்னு தெரியல… அவ கஷ்டப்படுறதை என்னால பார்க்க முடியல…” சிறிது இடைவெளி விட்டு, “அது ஏன்?” என்ற கேள்வியுடன் கிரிஸ்டோபரை நோக்கினான் மைக்கேல்.

“அதுதான் பாஸ் உங்க மனசு. பகைவருக்குக் கூட இளகுற மனசு…” மனதார இவன் அவனைப் பாராட்ட, “க்கும்… மனசா?” வெற்றுச் சிரிப்பை இதழோரம் உதிர்த்தவன், “அது எனக்கு எப்பவோ எனிமி ஆகிடுச்சு கிரிஸ்டோபர். இவ்வளவு நடந்ததுக்கு அப்பறம் கூட ‘அவ இதெல்லாம் செஞ்சிருக்க மாட்டா’ன்னு அது சொல்லிக்கிட்டே இருக்கு. நானும் அது சொல்ற மாதிரியே இதெல்லாம் உண்மையா இருந்திடக் கூடாதான்னுதான் ஒவ்வொரு முறையும் கிடைக்கும் எவிடன்ஸ பிரிச்சு பார்க்கிறேன். பட்…” பெருமூச்சுடன் மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆதாரங்களை கையில் எடுத்தான். 

“பட்… இந்த எவிடன்ஸ் எல்லாமே அவளுக்கு எதிராத்தான இருக்கு…” விரக்தியின் உச்சியில் மீண்டும் அவைகளை தூர எறிந்தான், மைக்கேல். 

அவனின் உள்ள கொதிப்பும், உடைந்த குரலும் மீண்டும் மீண்டும் கிரிஸ்டோபரின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. 

மைக்கேலின் கையால் அன்று எறியப்பட்ட காகிதங்கள், இன்றும் அவனது முகத்திற்கு நேராக பறப்பது போல் தோன்ற, ‘பணத்துக்காகவும் சுகத்துக்காகவும் அலையிற பொண்ணு எப்படி இவ்வளவு பாசமா இருக்கும் ம்ம்? ஒன்னு அந்த எவிடன்ஸ் ஃபேக்கா இருக்கனும். இல்ல இந்த பொண்ணு ஃபேக்கா நடிக்கனும்.. இதுல எது உண்ம எது பொய்?’ குழப்பத்துடனே மீண்டும் அவளை இவன் நோக்க, அவனது கரத்தில் சொறுகியிருந்த ஊசியை மெல்ல எடுத்தாள், செவிலியர். 

அதில் உணர்வு பெற்றவன்,
“போதுமா டாக்டர்?” என்று வினவ, “ம்ம்… போதும் கிரிஸ்டோபர். இனி எந்தப் பிரச்சனையும் இல்லை. சீக்கிரம் அவருக்கு கான்ஷியஸ் வந்துரும். கான்ஷியஸ் வர்ற வரைக்கும் ரொம்ப டிராவல் பண்ண வேண்டாம். ஹாஸ்பிட்டல் ரூம் மாதிரி ஏதாவது சேஃபான இடத்துக்கு அவர கொண்டு போக ட்ரை பண்ணுங்க,” என்றவர், சிறிது நேர இடைவேளைக்கு பின், “ம்ம்ம்… கொஞ்ச நாளைக்கு அவர் எந்த வேலையும் பண்ணக் கூடாது. கம்ப்ளீட் பெட் ரெஸ்ட் எடுக்கணும். நான் பிரிஸ்கிரிப்ஷன் எழுதி தர்றேன். டைம் பார்த்து மறக்காம கொடுத்துடுங்க. ஹாங்… நர்ஸ் அப்பாயிண்ட் பண்ணணுமா?” என்று வினவினார், புருவம் உயர்த்தி. 

பதிலுக்கு இவனோ, “வேணாம் டாக்டர்…”
ரீனாவை பார்த்தபடியே மறுப்பாய் தலையாட்டினான்.  

அவனது பார்வை சென்ற திசையை வைத்தே அவனை  படித்தவர் “ம்ம்… ஓகே கிரிஸ்டோபர். அப்ப பார்த்துக்கோங்க.” என்றபடியே அங்கிருந்து விலக, அவரையும் செவிலியரையும் பத்திரமாய் ஒரு காரில் அனுப்பி வைத்துவிட்டு ரீனாவிடம் திரும்பினான், கிரிஸ்டோபர்.

கலங்கிய விழிகள் கலங்கியபடியே இருக்க, இமைக்கக் கூட மறந்து தன்னவனை பார்த்தபடியே அவள் அமர்ந்திருக்க, அவளுக்கு அருகே வந்து நின்று, “மேடம்…” என மெல்ல அழைத்தான், கிரிஸ்டோபர். 

அவனது அழைப்பை  அவளது காதுகள் ஏற்றுக் கொண்டன என்பதற்கு ஆதாரமாய் அவளது சிவந்த விழிகள் மட்டும் மெல்ல அவன் பக்கம் திரும்பின. 

“மேடம்! பாஸ் கிரிட்டிக்கல் கண்டிஷனை தாண்டிட்டதா டாக்டர் இப்ப தான் சொல்லிட்டு போனார். நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க மேடம். பாஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிடுவாரு...” என்று இவனோ ஆறுதல் கூற, அதுவரை அடக்கி வைத்த உணர்வுகள் எல்லாம் பீறிட்டு எழ, “மைக்கேல்…” என்று கதறியபடியே குழுங்கி குழுங்கி அழ தொடங்கினாள், ரீனா. 

அவளது அழுகையை கண்டதும் தானாய் மனம் நெகிழ்ந்திட, “ஐயோ மேடம் பிளீஸ் அழாதீங்க.” கெஞ்சியபடியே அவளுக்கு அருகில் அமர்ந்தான், கிரிஸ்டோபர். 

“என் மைக்கேல்… என் மைக்கேல்…” வார்த்தைகள் வெளிவர மறுக்க, விரலால் மைக்கேலை சுட்டி காட்டிய படியே தேம்பி தேம்பி அழும் ரீனாவை காண காண உள்ளம் பிசைந்தது, கிரிஸ்டோபருக்கு. 

“ஐயோ பிளீஸ் பாஸுக்கு இப்ப ஒன்னும் இல்ல.  ரிலாக்ஸ்…  உங்கள நீங்களே ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க மேடம் பிளீஸ். ஐயோ அழாதீங்க! பாஸ் இப்ப கண்ணு முழிச்சிடுவாரு.” என்று இவன் வாய் மூடவும், “ரீனா…” என்ற அலறலுடன் மைக்கேல் கண் திறக்கவும் சரியாக இருந்தது. 

மைக்கேலின் குரல் கேட்டு இருவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து விழித்தனர். 

“மைக்கேல்…” ரீனாவின் இதழோ தானாய் விரிந்திட, “பாஸ்…” சந்தோசத்தில் கூச்சலிட்டான், கிரிஸ்டோபர். 

“மைக்கேல் மைக்கேல்… உங்களுக்கு இப்ப ஒன்னும் இல்லையே?” விழிகளை துடைத்துக் கொண்டு அவனுக்கு அருகில் வந்து நின்றாள், ரீனா. 

அவளை கண்டும் காண பிடிக்காதவன் போல் முகத்தை திருப்பியவன், “ப்ச்… நீ எதுக்கு இங்க வந்த? எங்கேயாவது போயிருக்க வேண்டியது தான?” என்று எரிச்சல் பட, சட்டென விழிகளில் நீர் துளிர்விட, அமைதியாக ஓர் ஓரத்தில் சென்று அமர்ந்துக் கொண்டாள், ரீனா. 

அவள் செல்வதையும், சென்று ஓர் இடத்தில் அமர்வதை பார்த்தபடியே இவன் படுத்திருக்க, “பாஸ் அவங்க…” ஏதோ ரீனாவிற்காக பரிந்து பேச முயன்ற,  கிரிஸ்டோபரிடம், “டேவிட்ட கூப்பிடு.” என்று இவன் கட்டளையிட, மறுபேச்சியின்றி டேவிட்டை அழைத்தான், கிரிஸ்டோபர். 

எடுத்ததுமே, “மைக்கேல்… மைக்கேல்… எப்படி இருக்கான்?” என டேவிட் படபடக்க, “ஹும்… நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன் டேவிட்.” படுத்தாலும் சிங்கம் சிங்கம் தானே? கர்ஜனையாய் ஒலித்தது மைக்கேலின் குரல். 

“தேங்க் காட்.” மறுபக்கம் அவனோ நிம்மதி பெருமூச்சு விட, “இதெல்லாம் யார் பண்ணது டேவிட்?” அழுத்தி வினவினான், மைக்கேல். 

“எல்லாம் ஆண்டனி ஆளுங்க தான்.” என்று டேவிட் கூற, “ஆண்டனியா?” கோபத்தில் பற்களை அரைத்தான், மைக்கேல். 

“மைக்கேல்! நீ இப்ப எங்க இருக்கியோ எனக்கு தெரியாது. தெரிஞ்சுக்கவும் நான் இப்ப விரும்பல. பட் ஒன் திங் நீ இந்தியாவுக்குள் இருக்கிற ஒவ்வொரு நிமிசமும் உன் உயிருக்கு ஆபத்து. அவனுங்க உன்ன தான் வலைப் போட்டு தேடிட்டு இருக்காங்க.” எச்சரித்தான், டேவிட். 

“சோ… என்ன கோழை மாதிரி தப்பிச்சு ஓட சொல்ற, இல்லை?” பதிலுக்கு இவனோ சீற, “ப்ச்… மைக்கேல்! பிராட்டிகல பேசு. இப்ப உன் பாடி இருக்கிற கண்டிசனுக்கு அவனுங்களோட உன்னால சண்டை போட முடியுமா? ஹும்… நான் சொல்றத கேளு. உன்ன நான் கோழ மாதிரி ஓடி ஒளிய சொல்லல்ல. கொஞ்ச நாளைக்கு உன் ஹெல்த்த பார்த்துக்க தான் சொல்றேன்.” நிறுத்தி நிதானமாக பதில் கொடுத்தான், டேவிட்.  

“சோ... மறைமுகமா என்னால முடிந்துங்கிற ஹாங்?” கடுப்பில் இவனோ கத்த, “மைக்கேல்! நீ என்ன என்னவேணாலும் நினைச்சுக்கோ. இந்த நிலைமையில நீ அவனுங்க கூட சண்டை போட போறேன்னு சொல்றது எனக்கு என்னமோ சரியா படல. உனக்கு வேணா உன் உயிர் மேல அக்கற இல்லாம இருக்கலாம். பட் என் பொண்டாட்டி, அதான் உன் அக்கா… அவ நாளைக்கே எத்திச்சு வந்து என் தம்பி எங்கனு கேட்டா நான் என்ன பதில் சொல்வேன்?” கேள்வியுடன் அவன் முடிக்க, கண்களை மூடி யோசித்தான், மைக்கேல். 

அவனுக்கு என்று இருக்கும் ஒரே உறவு அவனது அக்காவும் அக்காவின் குடும்பமும் தான். அவர்களுக்காகயாவது சில நாட்கள் உயிருடன் இருக்க வேண்டும் என நினைத்தவன், “ப்ச்… ஓகே டேவிட். நான் பாத்துக்கிறேன்.” என்றவாறு அழைப்பை துண்டிக்க, “இப்ப என்ன பண்றது பாஸ்?” கவலையுடன் வினவினான், கிரிஸ்டோபர்.   

“சாப்பிட்டாளா?” விழிகளால் அவளை சுட்டிக் காட்டி மெல்ல வினவினான், மைக்கேல். 

“உஹும்…” பதிலுக்கு இவனோ மறுப்பாய் தலையாட்ட, “சாப்பிட சொல்லு. நாம சீக்கிரம் பிளைட் பிடிக்கனும்.” என்றான் மைக்கேல் அதிகார தோரணையில். 

“எங்க பாஸ்?” கிரிஸ்டோபரோ புருவம் உயர்த்த, “ப்ச்… சொன்னத செய். ஆமா இப்ப எங்க இருக்கோம்.” பதிலுக்கும் இவனும் புருவம் உயர்த்தினான். 

“இப்ப மும்பை பக்கத்துல இருக்கோம் பாஸ்.” என்றான் கிரிஸ்டோபர். 

“ம்ம்… ஓகே!” கிரிஸ்டோபரின் காதுக்குள் ஏதோ கூறிட, “ஓகே பாஸ் ஓகே…” தலையாட்டிபடியே கேட்டுக் கொண்டவன் சிறிது நேரத்தில் ரீனாவிற்கு உடையும் உணவும் வாங்கி வந்தான். 

மைக்கேல் பிழைத்துக் கொண்டாலும் இன்னும் தன்னை புரிந்துக் கொள்வில்லையே என்ற வேதனையில் அவளோ அழுது வடிய, “இந்தாங்க மேடம்.” உணவு பொட்டலத்தை அவளிடம் நீட்டினான், கிரிஸ்டோபர். 

கண்ணீருடன் அவனையும் மைக்கேலும் மாறி மாறி பார்த்துவிட்டு, “வேணாம்.” என்று இவள் மறுக்க, “சாப்பிட்டா என்கூட இருக்கலாம். இல்லைனா கிளம்ப சொல்லு காத்து வரட்டும்.” என்றான், மைக்கேல் அதட்டலாக. 

உடனே அவள் உணவு பொட்டலத்தை வாங்கி உண்ண, “எப்ப பாத்தாலும் அழுது வடிஞ்சுக்கிட்டு… ஒழுங்கா சிரிஞ்சமாரி இருக்க சொல்லு. ஹும்… இந்த மூஞ்ச தான் இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் பார்க்கனும் போல.” வார்த்தைகளில் அவனோ அமிலத்தை அள்ளி கொட்ட, கலங்கிய விழிகளுடன் உண்ண முடியாமல் உண்டு முடித்தாள், ரீனா. 

எங்கு செல்ல போகிறோம்? என்ன பண்ண போகிறோம்? என்ற கேள்வியுடனே  கிரிஸ்டோபர் காட்டிய இடத்தில் குளித்து புது துணி அணிந்து வந்தாள், ரீனா. 

அவள் வருவதற்குள் பஞ்சாப் சிங் வேடத்தில் கிரிஸ்டோபரும் மைக்கேலும் தயாராகியிருந்தனர். 

“நடந்துடுவீங்களா பாஸ்.” அக்கறையுடன் கிரிஸ்டோபர் வினவ, “ஹும்… அப்படி தான் நினைக்கிறேன்.” பெருமூச்சு பதில் கொடுத்து மார்பை பிடித்தான், மைக்கேல். 

“ஐயோ மைக்கேல் என்னாச்சு?” ஆளுக்கு முன் இவளோ பதறி துடிக்க, பதிலுக்கு ஏனோ காரணமே இன்றி அவளை முறைத்தான், மைக்கேல். 

அதில் இவளோ அமைதியாகிட, அவசர ஊர்தியை அனுப்பி வைத்துவிட்டு, மூவரும் வாடகை காரில் மும்பை விமான நிலையம் வந்தனர். 

சுற்றும் முற்றும் பார்த்தபடியே ஆண்கள் இருவரும் கவனமுடன் விமான நிலையத்திற்குள் நுழைய, காணாத அதிசயத்தை கண்டது போல் விழி விரித்தாள், ரீனா.  

இதுவரை விமானத்தையோ விமான நிலையத்தையோ அருகில் சென்று பார்க்காதவளுக்கு காணும் யாவும் பிரமிப்பையே நல்கின. 

“வாவ்…” வாய் விட்டே இவள் அதிசயக்க, சிறு குழந்தையை இழுத்துச் செல்லவது அவளை இழுத்துக் கொண்டு விமானத்தில் ஏறினான், கிரிஸ்டோபர். 

இவளை ஜன்னலோரம் அமர்த்திவிட்டு ஆண்கள் இருவரும் அவளுக்கு அருகில் அமைதியாய் அமர்ந்துக் கொண்டனர்.  

விமானமோ வானில் பறக்க, எங்கு செல்கிறோம்? என்ன செய்ய போகிறோம்? போன்ற கவலைகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு அந்த நொடியை மெல்ல ரசிக்க துவங்கினாள், ரீனா. 

மேகங்களை கடக்கும் போதெல்லாம், “வாவ்…” என்று இவள் வாய் பிளக்க, மைக்கேலின் விழிகள் ஏனோ தன்னை மறந்து அவளை ரசித்துக் கொண்டிருந்தன.

தொடரும்.... 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்