Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

தீ மீது வீணை 19


எல்லைப் பாதுகாப்புப் படையினரின் சோதனை முடிந்ததும், மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கியது தொடர்வண்டி.  

அதன் சீரான அசைவு, தொட்டில் போலவும், அதன் தடதட தண்டவாள சத்தம் தாலாட்டு போலவும் மாறிப் போக, அமர்ந்த நிலையிலேயே ரீனாவை அணைத்தபடி உறங்கி போனான் மைக்கேல். 

அவனுக்கு மேல் படுக்கையில் கிரிஸ்டோபரும் படுத்துறங்க, பனி சூழ்ந்த இரவின் கருமையை கிழித்துக் கொண்டு முன்னேறியது தொடர்வண்டி.  

ஜன்னலுக்கு வெளியே அடர்ந்திருந்த வனங்களும், தொலைதூர மலை தொடர்களும், நிலவொளி வெளிச்சத்தில் மங்கலாய் காட்சியளித்தன. 

அவ்வப்போது கடந்து சென்ற சிற்றூர்களின் விளக்குகள் இருளில் சிதறிய மின்மினிப் பூச்சிகளைப் போல் ஒளிர்ந்து மறைந்தன. 

அமைதியாக நின்றிருந்த மரங்களும், உறக்கத்தில் மூழ்கியிருந்த வீடுகளும் தொடர்வண்டியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்னோக்கி நகர்ந்தன.

அதற்கு நேர்மாறாக நேரமோ வேகமாக முன்னோக்கி நகர, கண் பாவைகள் அங்கும் இங்கும் இமைக்குள் ஓட, பஞ்சணையில் கிடப்பதாய் நினைத்து அவனது மார்பில் கன்னம் வைத்து தேய்த்தவள், மருத்துவ கட்டின் சொரசொரப்பை உணர்ந்து சட்டென விழி திறந்தாள். 

திறந்த விழிகள் முதலில் கண்டது என்னவோ அவனது திண்ணிய மார்பை தான். 

ரோமங்கள் நிறைந்த மார்பின் மீது தனது கன்னம் அழுந்தியிருப்பதை உணர்ந்தவள், ஒரு கணம் திகைத்து, பின் வெடுக்கென எழ, அவளை எழ விடாமல் அவனது கரமோ இன்னும் இறுக்கமாய் அவளை அணைத்துக் கொண்டது. 

அவனது தடித்த அதரங்களோ அவளது  நெற்றி வகிடில் முத்தமிட்டு, “ம்ம் தூங்கு.” என்றன மிகவும் மென்மையாக. 

அவனது செய்கையில் திடுக்கிட்டவள், ‘சொன்னது அவனா? தன்மீது கோபத்தை மட்டுமே காட்டு மைக்கேலா இப்போது அன்பாய்த் தூங்கச் சொல்கிறான்?’ என்ற கேள்வியுடன் அவனது முகத்தை இவள் ஏறிட்டுப் பார்க்க, இமைகள் சுருங்க கண் மூடி கிடந்தான் மைக்கேல். 

‘தூங்குறானா? இல்ல தூங்குற மாதிரி நடிக்கிறானா?’ என்ற சந்தேகம் வர, விழிகளால் அவனை இவள் ஆராய, “ப்ச்… தூங்கு டி.” தலையை தட்டி மீண்டும் தனது மார்பு கூட்டில் புதைத்துக் கொண்டான் மைக்கேல். 

‘என்ன திடீருனு ஓவர் பாசமா தெரியுது?’ யோசித்தவள், தூங்காமல் அதே நேரம் எழவும் செய்யாமல் அமைதியாக வர, வினாடிகள் மெல்ல நிமிடங்கள் ஆகின. 

நேரம் செல்ல செல்ல பயணிகளின் நடமாட்டமும் அதிகரிக்க தொடங்கியது.

அதன் உச்சமாக, "லேடீஸ் அண்ட் ஜென்டில்மென், த ட்ரெயின் டு பெல்கிரேட் வில் ஷார்ட்லி அரைவ் அட் பிளாட்ஃபார்ம் நம்பர் டூ. பிளீஸ் மைண்ட் த கேப் பிட்வீன் த ட்ரெயின் அண்ட் த பிளாட்ஃபார்ம்." என்ற தொடர்வண்டி நிலைய அறிவிப்பில் கண் விழித்தான் மைக்கேல். 

அவன் விழிப்பதை உணர்ந்து சட்டென விலகி ஜன்னலோரம் அமர்ந்துக் கொண்டாள் ரீனா. 

அவளின் செய்கையில் மனம் நொந்தவன்  ‘ப்ச்… ரொம்ப படுத்திட்டேன் போல.’ என்ற வருத்தத்துடன் ஆதூரமாய் அவளின் கேசத்தை வருட வேண்டி தனது கரத்தை தூக்க, சிவ பூஜை கரடியாய், “குட் மார்னிங் பாஸ்.” கொட்டாவி விட்டபடியே எழுந்தமர்ந்தான் கிரிஸ்டோபர். 

அவன் சத்தம் கேட்டு தூக்கிய கரத்தை இவனோ மெல்ல கீழே இறக்க, அவளோ இன்னும் விலகி சுவரோடு சுவராக ஒட்டினாள்.   

அந்த கடுப்பை, “ஹாங் மார்னிங் மார்னிங்.” என வார்த்தைகளில் மைக்கேல் காட்ட, ‘ஐயோ! தப்பா ஏதாவது பண்ணிட்டோமா?’ என்ற யோசனையுடன் மேல் படுக்கையை விட்டு கீழ் இறங்கினான் கிரிஸ்டோபர். 

ஜன்னல் ஓரத்தில் அவளும், மறு ஓரத்தில் மைக்கேலும் முக இறுக்கத்துடன் அமர்ந்திருக்க, ‘ஏன்? என்னாச்சு இவங்களுக்கு?’ இருவருக்கும் இடையே இருக்கும் இடைவெளியை பார்வையால் அளந்தபடியே “ஸ்டேஷன் வந்துடுச்சு போல.” என பேச்சுக் கொடுத்தான் கிரிஸ்டோபர்.  

“ம்ம்.” விட்டேற்றியான பதில் மைக்கேலிடத்திலிருந்து வரவும், ‘ஆஹா… மறுபடியும் ஏதோ பிரச்சன போல இருக்கே!’ என  நினைத்தவன், நடந்ததை அறிந்துக் கொள்ளும் நோக்கத்தில், “உங்களுக்குள் ஏதாவது பிரச்சனையா?” மெல்ல வாய் அசைத்து ரீனாவிடம் வினவினான் கிரிஸ்டோபர்.  

“உஹும்…” அவசரமாய் ரீனா தலையாட்ட,  “ப்ச்… அங்க என்ன  பார்த்துட்டு இருக்க? ம்ம்… போ! ரீனாவுக்கும் எனக்கும் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வா.” அதிகார தோரணையில் கட்டளையிட்டு கிரிஸ்டோபரை துரத்தினான் மைக்கேல்.

‘கன்பார்ம்! பாஸ் பயங்கர டென்சன்ல இருக்கார்! டேய் கிரிஸ்!  இப்படியே எஸ்கேப் ஆயிடுறா.’ உள்ளுக்குள் அலறியவன், வெளியே “ஓகே பாஸ்…” என பல்லை காட்டிவிட்டு வெளியே ஓட, மைக்கேலும் அவளும் தனியாக இருந்தனர். 

அவனோ குறுகுறுவென அவளை பார்க்க, அவனது பார்வை துளைத்த இவளது மேனியோ மெல்ல நடுங்கியது. 

போதாக்குறைக்கு “ரீனா…” என்று அவன் அழைக்க, “நா… நான் ஃபிரஷ் ஆப் ஆகிட்டு வரேன்.” என படபடத்துவிட்டு விறுவிறுவென உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கி அவள் ஓட, இவனுக்கோ கண்கள் கலங்கின. 

கரிசனத்துடன் போகும் அவளை பார்த்தபடியே இவன் அமர்ந்திருக்க,  தொடர்வண்டியின்  வேகமோ மெல்ல மெல்ல குறைய தொடங்கியது.  

வெளியே நடைமேடையின் விளக்குகளும், அவசரமாக அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்த பயணிகளும் தென்பட ஆரம்பித்தனர்.

விட்டால் போதுமான ஓடி வந்தவளோ குளியலறையின் கண்ணாடியில் தனது முகத்தை பார்த்தாள். 

வீக்கிய விழிகளும், களைத்து பொலிவிழந்த முகமும் அவளின் துயர நிலையை பறை சாற்றினாலும், நேற்று முத்தமிட்டு சிவந்த இதழ்கள் மட்டும் ஏனோ ஆயிரம் காதல் கவிதைகளை சத்தமின்றி எழுதித் தள்ளின. 

ஒரு நிமிடம் சிவந்து தடித்த அவ்விதழ்களை மெல்ல வருடியவள், கவிதை காண விருப்பமின்றி குளிர்ந்த நீரை அள்ளி முகத்தில் அடித்துக் கொண்டாள். 

“ஏன் டி எனக்கு துரோகம் செஞ்ச?” தூக்கத்தில் மைக்கேல் புலம்பிய வார்த்தைகள் மட்டும் மீண்டும் மீண்டும் காதில் விழ, மனம் கனத்திட, உடலோ அழுகையில் குழுங்கியது. 

ஒரு நிமிடம் உணர்ச்சியுடன் அழுதவள் தொடர்வண்டி அசைவதை உணர்த்து, “பிளீஸ் ரீனா அழாத! சொன்னா கேளு! இது அழ வேண்டிய நேரம் இல்ல.” தன்னை தானே சமாதானம் செய்ய முயன்று தோற்றுப் போனாள் ரீனா. 

பல முறை முகத்தில் தண்ணீர் அடித்தப்போதும் கண்ணீர் மட்டும் குறைந்தபாடில்ல. 

துக்கமுமோ தொண்டையை அடைக்க, நீரோடு கண்ணீரையும் சேர்த்து துடைத்தபடியே குளியலறை விட்டு வெளியே வந்தாள் ரீனா.  

மறுபக்கம் மைக்கேலும் தனது காயத்திற்கு பாதிப்பு வராதவாறு கவனமாக முகம் கழுவிவிட்டு வெளியே வர, இரண்டு காகிதப் பைகளுடன் பெட்டிக்குள் நுழைந்தான் கிரிஸ்டோபர்.

“பாஸ்... பிரேக்பாஸ்ட் வாங்கிட்டேன்.” புன்னகை முகம் மாறாமல் வாங்கி வந்த உணவு பொட்டலங்களை மேசை மேல் அவன் வைக்க, “நீ ஃபிரெஸ் ஆப் ஆகிட்டியா?” முகத்தை துடைத்தபடியே அவனிடம் விசாரித்தான் மைக்கேல்.  

“ஓ அப்பவே பண்ணிட்டேன் பாஸ்.” தலையாட்டியவன் அவர்கள் இருவருக்கும் உணவை எடுத்து வைத்துவிட்டு தானும் எடுத்துக் கொள்ள, துவலையை மடித்தபடியே அவ்விடம் வந்தாள் ரீனா. 

வந்தவள் அமைதியாக ஜன்னலோர இருக்கையை பிடித்துக் கொள்ள, கிரிஸ்டோபர் வாங்கி வந்த ரொட்டி, முட்டை, பழச்சாறு ஆகியவற்றை அவளுக்கு முன் நீட்டினான் மைக்கேல். 

‘என்ன?’ என்பது போல் இவள் அவனை பார்க்க, “சாப்பிடு.” பதிலுக்கு அவனோ மென்மையாக கட்டளையிட்டான். 

“இல்ல எனக்கு பசிக்கல.” அவன் இறங்கி வருவும் இவளோ ஏறி நின்றாள். 

“ப்ச்… நான் சாப்பிட சொன்னேன்.” வார்த்தைகளை அவன் அழுத்த, “வேணாம்...” ஜன்னலை வெறித்தபடியே பதில் கொடுத்தாள் ரீனா. 

“ரீனா.” இம்முறை அவனோ அழுத்தி அழைக்க, பதில் சொல்ல விருப்பமின்றி இவளோ தலை கவிழ,     “சாப்பிடாம என்ன பண்ணலாம்னு இருக்க?” அக்கறையை கூட அதட்டி தான் காண்பித்தான் மைக்கேல்.  

“எனக்கு பிடிக்கல...” பதிலுக்கு அவன் முகம் பார்த்து வார்த்தைகளை அழுத்தினாள் ரீனா. 

“பிடிக்கனும்.” அவளுக்கு மேல் வார்த்தைகளை அழுத்தியவன், அவளது கையில் ரொட்டியை திணித்து, “நான் பத்து எண்ணுறதுக்குள்ள நீ சாப்பிட்டுற.” என்று கட்டளையிட்டு மிரட்ட, அவனது அதட்டலில்  மிரண்டு விழித்தாள் ரீனா. 

அவளது விரிந்த விழிகளை கண்டவாறே, “ஒன் டூ…” என்று அவன்  எண்ணவும் துவங்க, விழிகள் படபடக்க, விறுவிறுவென ரொட்டி துண்டுகளை வாயில் வைத்து திணித்தாள் ரீனா. 

அவைகளோ தொண்டைக்குள் செல்லாமல் பாதி வழியில் நின்று மறியல் செய்ய, பொறை ஏறிக் கொண்டது ரீனாவிற்கு. 

‘ஏப்ப…” என்ற சத்தத்துடன் மூச்சு வேறு முட்டிக் கொள்ள,  கண்களோ சிவந்து கலங்கின. 

மேற்கொண்டு உண்ண முடியாமல் திணறியவளிடம், “ப்ச்… மெதுவா சாப்பிடு டி.” என்று அரட்டி, தலையை தட்டியபடியே தண்ணீர் புட்டியை அவளிடம் நீட்டினான் மைக்கேல். 

நீட்டியதுடன் நிறுத்தாமல் தயங்கி நின்றவளின் வாயிலும் இவன் ஊற்றிவிட, “லபக் லபக்…” என்ற சத்தத்துடன் நீரோ அவளது தொண்டைக்குள் மெல்ல இறங்கியது. 

தண்ணீரோடு உணவையும் இவள் விழுங்க, “இப்ப சாப்பிடு.” என்று கூறி அவளின் முதுகை தடவினான் மைக்கேல்.  

அதன் பின் அவளோ நிதானமாய் உண்ண துவங்க,  அவள் இரண்டு மூன்று வாய் சாப்பிட்டதை உறுதி செய்த பிறகே தனது உணவை எடுத்துக் கொண்டான் மைக்கேல். 

மறுபக்கம் கிரிஸ்டோபரோ,  “இதெல்லாம் மனுசன் திண்பானா?” என்று புலம்பியபடியே வெறுப்பாய் ரொட்டி துண்டுகளை பிய்த்து  வாயில் போட, “சாப்பிடுற நாங்க எல்லாம் யாரு?” கிரிஸ்டோபரை முறைத்து குரலை உயர்த்தினான் மைக்கேல். 

‘மறுபடியும் மாட்டினேனா? கிரிஷ் உனக்கு வாய் தான் பிரச்சனையே.’ தன்னை தானே கொட்டிக் கொண்டவன், “சாரி பாஸ்! உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.” என்றான் அசடு வழிய. 

“உக்கும்… உணர்ச்சி வசத்தை அடக்கிட்டு ஒழுங்கா தின்னு மேன்.” அதட்டினான் மைக்கேல். 

“ம்ம்…” பாவமாய் தலையாட்டிவிட்டு திங்க முடியாமல் திணறும் கிரிஸ்டோபரை கண்டு தன்னை மறந்து புன்னகைத்தாள் ரீனா. 

அவளது புன்னகை கண்டு மைக்கேலும் புன்னகைக்க, ‘ஹப்பா! எப்படியோ பாஸ் சிரிச்சிட்டாரு.’ என நினைத்து நிம்மதி அடைந்தான் கிரிஸ்டோபர். 

சிறிது நேரத்தில் மூவரும் முக்கி முணங்கி வாங்கிய உணவு பொட்டலங்களை எல்லாம் காலி செய்தனர். 

சாப்பிட்ட பின் கை கழுவி வந்த மைக்கேலிடம், “பாஸ்... டேப்லெட்ஸ்.” மருத்துவர் கொடுத்த மருந்துகளை அவனிடம் நீட்டினான் கிரிஸ்டோபர். 

“ஹாங் கொடு.” மாத்திரைகளை வாங்கியவன், ஒவ்வொன்றாய் தண்ணீருடன் விழுங்கிவிட்டு, காய்ச்சல் மாத்திரை மட்டும் எடுத்து ரீனாவிடம் நீட்டினான்.

“இது எதுக்கு?” ரீனாவோ புருவம் உயர்த்த, “நேத்து நைட்டு குளிர்ல கிடந்திருக்க. உடம்பு வேற சூடா இருக்கு. ஒழுங்கா சாப்பிடு.” என்றான் அதட்டலாக. 

‘க்கும்… எனக்கு இது ஒன்னு தான் குறை?’ மனதிற்குள் புகைந்தவள் வெளியே,   “எனக்கு வேணாம்.” என்றாள் விட்டேற்றியாக. 

அவளது வெறுப்பை கண்டு மனம் கொதித்தவன்,  “ரீனா...” பல்லை கடித்து அழைத்தான்.

அப்போது இவள் முரண்டு பிடிக்க, “ஒழுங்கா சாப்பிடு டி.” இம்முறை மிரட்டிப் பார்த்தான். 

உஹும்… நோ யூஸ்… பதில் பேச பிடிக்காமல் முகத்தை திருப்பினாள் ரீனா. 

அதில் கடுப்பானவன்,  “ஏய் இப்ப நீயா சாப்பிடுறீயா? இல்ல நான் சாப்பிட வைக்கனுமா?” என்று கத்த, தானாய் உடல் அதிர்ந்தது ரீனாவிற்கு.  

மிரண்ட விழி பார்வையுடன் இவள் அவனை பார்க்க, மாத்திரையை அவளது வாயில் திணித்து தண்ணீர் புட்டியை அவளிடம் நீட்டினான் மைக்கேல். 

“ம்ம்… குடி.” மீண்டும் அவன் விரட்ட, நடுங்கிய விரல்கள் மெல்ல எழுந்து அவனிடமிருந்த தண்ணீர் புட்டியை வாங்கி வாயிக்குள் சரித்தன. 

நீருடன் மாத்திரையும் தொண்டைக்குள் செல்வதை கண்டு திருப்தியடைந்தவனாய், “ம்ம்… பேசாம தூங்கு.” என்று விட்டு நகர, அவனது சொல்லுக்கு கட்டப்பட்ட உடலோ தானாய் படுக்கையில் சரிந்தது. 

இஸ்தான்புல்லிலிருந்து பெல்கிரேட் செல்ல கிட்டத்தட்ட பதினெட்டு மணிநேரம் எடுக்கும் என்பதால், மீண்டும் சிறிது நேரம் அந்த தொடர்வண்டியிலேயே மூவரும் ஓய்வெடுத்துக் கொண்டனர்.

நேரம் நகர நகர வெளியே இருந்த காட்சிகளும் மாறின.

பசுமை நிறைந்த சமவெளிகள், பழமையான கிராமங்கள், இடையிடையே தென்பட்ட ஆறுகள் என அனைத்தையும் கடந்து தொடர்வண்டியோ தனது பயணத்தை நிறைவு செய்ய, மாலையின் மஞ்சள் வெளிச்சத்தில் பெல்கிரேட் நகரம் அவர்களை வரவேற்றது.

"பாஸ்... வந்துடுச்சு." என கிரிஸ்டோபர் சுமைகளை தோளில் மாட்டிக் கொள்ள, "ம்ம்... எல்லாத்தையும் எடுத்துக்கோ." என்றான் மைக்கேல்.

ரீனாவோ அமைதியாக தனது சிறிய பையை மட்டும் எடுத்துக் கொண்டு எழுந்தாள்.

தொடர்வண்டியில் இருந்து இறங்கியவுடன் குளிர்ந்த காற்று முகத்தில் அறைந்தது.

நடைமேடை முழுவதும் பல மொழிகளில் பேசிக்கொண்டிருந்த மக்களின் சத்தம் நிறைந்திருக்க, சில நொடிகள் அந்த புதிய நகரத்தை சுற்றி பார்த்தாள் ரீனா.

"வா." என்ற ஒற்றை வார்த்தையுடன் அவளது கரத்தை பற்றிக் கொண்டான் மைக்கேல்.

உடனே அவள் கரத்தை இழுத்துக் கொள்ள முயல, "கூட்டத்துல தொலைஞ்சிடுவ." என்றான் அவன் எந்த உணர்வையும் காட்டாமல்.

அவனுக்கு நேர்மாறாக அவனது பிடி மட்டும் அவள் மேல் அவன்  கொண்ட காதலை எடுத்துக் கூறின. 

இறுக பற்றியவன், நடைமேடை இருக்கையில் அவளை அமர்த்தி அவளுக்கு அருகில் தானும் அமர்ந்துக் கொண்டான்.

“பாஸ்... அடுத்த ட்ரெயின் இன்னும் நாற்பது நிமிஷத்துல கிளம்புமாம்." என்று கைபேசியை பார்த்தபடி கூறினான் கிரிஸ்டோபர்.

"டிக்கெட் ரெடி தானே?"

"ரெடி பாஸ்."

"குட்."

அதற்கு மேல் எதுவும் பேசாமல் ரீனாவை ஒரு பார்வை பார்த்தான் மைக்கேல்.

அவன் பார்ப்பது தெரிந்தும் கண்டும் காணாமல் அமைதியாக இருந்தாள் ரீனா. 

அவளது கோபம் இவனை ஏதோ செய்ய, கலங்கியவன் தனது முகத்தை வந்து போகும் தொடர்வண்டி மேல் வைத்து தனது கவனத்தை திருப்ப முயன்றான். 

இப்படியே நிமிடங்கள் நகர, சிறிது நேர காத்திருப்புக்குப் பின், ஸ்லோவேனியா நோக்கிச் செல்லும் அதிவேகத் தொடர்வண்டி நடைமேடைக்கு வந்து நின்றது.

பயணிகள் அவசரமாக ஏறத் தொடங்க, மைக்கேலும், ரீனாவும், கிரிஸ்டோபரும் தங்களுக்கான பெட்டியை நோக்கி விரைந்தனர்.

புதிய தொடர்வண்டி முந்தையதை விட வசதியாக இருந்தது.

அகலமான இருக்கைகள், பெரிய கண்ணாடி ஜன்னல்கள், மென்மையான வெளிச்சம் என நீண்ட பயணத்திற்கு ஏற்றவாறு அமைந்திருந்தது.

தங்களது இருக்கைகளில் அமர்ந்த சில நிமிடங்களிலேயே, பெல்கிரேட் நிலையத்தை விட்டு மெல்ல நகரத் தொடங்கியது அந்த தொடர்வண்டி.

வெளியே நகர விளக்குகள் பின்னோக்கி ஓட, மீண்டும் தொடங்கிய அவர்களது பயணம் இந்த முறை அமைதியாகவே சென்றது.

ரீனாவோ பெரும்பாலான நேரம் ஜன்னலோரம் அமர்ந்தபடி வெளிக்காட்சிகளை வெறித்துக் கொண்டிருக்க, மைக்கேலோ அவளை கவனித்தபடியே அமைதியாக இருந்தான்.

கிரிஸ்டோபர் மட்டும் இடையிடையே பேசிப் பார்த்தும், இருவரிடமிருந்தும் ஒற்றை வார்த்தை பதில்களே கிடைத்தன.

நாடுகளின் எல்லைகளையும், பசுமை நிறைந்த சமவெளிகளையும், மலைப் பாதைகளையும் கடந்து சென்ற தொடர்வண்டி, இறுதியாக மறுநாள் காலை ஸ்லோவேனியாவின் எல்லைக்குள் நுழைந்தது.

ஜன்னலுக்கு வெளியே தெரிந்த காட்சிகள் மெல்ல மாறின.

பனிப்போர்வை போர்த்திய மலைச்சிகரங்கள், பச்சை கம்பளம் விரித்தது போல் தோன்றிய பள்ளத்தாக்குகள், கண்ணாடி போல தெளிந்த ஏரிகள் என இயற்கை தனது அழகை தாராளமாக வாரி வழங்கியிருந்தது.

"பாஸ்... லியுப்லியானா வந்துடுச்சு." என்று உற்சாகமாக கூறினான் கிரிஸ்டோபர்.

“இது எங்க இருக்கு?” கேள்வியுடன் அவனை பார்த்தாள் ரீனா. 

“மேடம் இது தான் ஸ்லோவேனியாவோட கேபிட்டல். வாங்க மேடம்... இங்கிருந்து நாம தங்கப் போற இடம் பக்கம் தான்.” என்றவாறு பெட்டியை தூக்கிக் கொண்டான் கிரிஸ்டோபர்.

தொடர்வண்டி நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன், ரீனாவின் பார்வை தானாகவே சுற்றிலும் ஓடியது.

அவள் இதுவரை பார்த்த எந்த நகரத்தைவிட மிகவும் அழகாகவே தெரிந்தது லியுப்லியானா.

சாலைகளின் இருபுறமும் வரிசையாக நின்றிருந்த பழமையான கட்டிடங்கள், செந்நிற ஓடுகளால் வேயப்பட்ட கூரைகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜன்னல்கள் என அனைத்தும் ஓவியத்தில் இருந்து எடுத்து வைத்தது போல தோன்றின.

காலை சூரியனின் மெல்லிய பொன்னிற ஒளி நகரத்தின் மீது பரவியிருக்க, குளிர்ந்த காற்று முகத்தை வருடிச் சென்றது.

“வாவ்...” என்று அவளையும் அறியாமல் முணுமுணுத்தாள் ரீனா.

அவளது முகத்தில் பல மணி நேரங்களுக்குப் பிறகு தோன்றிய அந்தச் சிறிய வியப்பை கண்ட மைக்கேலின் இதழ்களும் மெல்ல மலர்ந்தன.

“பாஸ்... கார் ரெடி.” என்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை சுட்டிக் காட்டினான் கிரிஸ்டோபர்.

“ம்ம்...” என்றவன், ரீனாவை நோக்கி, “வா.” என்றான்.

இந்த முறை அவளோ மறுக்காமல் அமைதியாக அவர்களுடன் நடந்தாள்.

சில நிமிடங்களில் அவர்கள் ஏறிய மகிழுந்து மெல்ல நகரத் தொடங்கியது.

ஜன்னல் வழியே பார்த்தபடி அமர்ந்திருந்த ரீனாவின் விழிகளில் ஒன்றன் பின் ஒன்றாக புதிய காட்சிகள் விரிந்தன.

நகரத்தின் நடுவே வெள்ளி நாகம் போல வளைந்து ஓடிய லியுப்லியானிகா நதி, அதன் மீது கட்டப்பட்டிருந்த அழகிய பாலங்கள், சைக்கிள்களில் பயணித்த மக்கள், தொலைவில் தெரிந்த பசுமையான மலைகள் என அனைத்தும் அவளது கவனத்தை கவர்ந்தன.

“வாவ்… எல்லாமே சூப்பரா இருக்கு.” காணும் காட்சிகளில் திகைத்து முணுமுணுத்தாள் ரீனா. 

அவளது வார்த்தைகளை காதில் வாங்கி, “உனக்கு பிடிச்சிருக்கா?” கிசுகிசுத்த குரலில் வினவினான் மைக்கேல்

சட்டென அவன்புறம் திரும்பியவள் தயங்கியபடியே “ம்ம்...” என்று மட்டும் தலையசைக்க, ஆறுதல் அடைந்தவனாய் மெல்ல இதழ் வளைத்தான் மைக்கேல். 

அவனது பற்களோ சூரிய வெளிச்சத்தில் வைரமென மின்ன, ‘இந்த டாஸ்ல தான் நான் விழுந்துத் தொலைச்சேன்.’ தலையை குழுக்கிவிட்டு மீண்டும் சாலையில் பார்வை பதித்தாள் ரீனா. 

ஏறக்குறைய முப்பது நிமிட பயணத்திற்குப் பிறகு, நகரத்தின் பரபரப்பு குறைந்து, மரங்கள் சூழ்ந்த அமைதியான பகுதியொன்றிற்குள் வாகனம் நுழைந்தது.

“பாஸ்... வந்துடுச்சு.” என்று கிரிஸ்டோபர் பரபரக்க, மகிழுந்தின் வேகம் மெல்ல குறைந்து, ஒரு சிறிய இரண்டு அடுக்கு வீட்டின் முன் வந்து நின்றது.

வீட்டின் முன்புறத்தில் வெள்ளை நிற மரவேலியும், அதை ஒட்டி பல வண்ண மலர்ச்செடிகளும் வளர்ந்திருந்தன.

சிறிய தோட்டத்தின் நடுவே கற்களால் அமைக்கப்பட்ட நடைபாதை நேராக வீட்டின் வாசலுக்கு சென்றது.

அந்த இடத்தின் அழகை கண்டு மெய் மறந்தாள் ரீனா. 

அவளின் முகபாவனைகளை ரசித்தபடியே “இறங்கு…” என்றான் மைக்கேல். 

கீ கொடுத்த பொம்மை போல் அவனது கட்டளைக்கு இணங்கி மெல்ல இவள் தனது வலது காலை தரையில் பதிக்க, அவளை வரவேற்பது போல செர்ரி மரங்களின் இளஞ்சிவப்பு மலர்கள் காற்றோடு கலந்து அவள்மேல் சொரிந்தன.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்