தீ மீது வீணை 14
அத்தியாயம் 14
“மைக்கேல்…” உறக்க கத்தியவள், அதன்பின் மூச்சுப் பேச்சின்றி அமைதியானாள்.
அவள் நினைத்திருந்தால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தப்பித்திருக்கலாம்.
அவனோ மூச்சும் பேச்சுமின்றி கிடக்கிறான்… அவனது ஆட்களோ எதிரிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது கம்பி நீட்டினால், அரை நொடி கூட அவளுக்கு ஆகாது.
இருப்பினும் ஏன் அவள் தப்பிக்க முயற்சிக்கவில்லை?
தேடிய சுகந்திரம் கிட்டியபின்பும் அதை பெற்றுக் கொள்ள அவளை எது தடுத்தது? யார் தடுத்தார்கள்?
கூண்டை தூக்கி செல்லும் பறவை போல்… தப்பி செல்ல ஆயிரம் பாதை இருந்தும் பனியென அவ்விடத்தில் ஏன் உறைந்தாள்?
எந்த கேள்விக்கும் பதில் இல்ல அவளிடத்தில்.
சொல்லப் போனால் கேள்விகள் கூட செத்துவிட்டன.
படபடத்த இதயம் மெல்ல மெல்ல தனது இயக்கத்தை குறைத்துக் கொண்டே செல்ல, உயிரற்ற பதுமைக்கு விழிநீர் மட்டும் வழிந்துக் கொண்டே இருந்தது.
பசுமை நிறைந்த அவ்விடத்தில்… உயிருள்ள ஓவியமாய் அவர்கள் வீற்றிருக்க,
“ஐயோ பாஸ்…” என்று அலறியபடியே அவ்விடம் வந்தான் கிரிஸ்டோபர்.
“ஐயோ… இரத்தம்… எப்படி நடந்துச்சு? யார் சூட் பண்ணா?”
எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ரீனாவிடம் பதற்றத்துடன் வினவினான், கிரிஸ்டோபர்.
சுயநினைவின்றி அமர்ந்திருந்தவளிடம் ஏது பதில்?
அவளோ பேசாமல்… அசையாமல் கல்லென அமர்ந்திருக்க,
“கேட்கிறேன்ல? சொல்லுடி!” ஆத்திரத்தில் கத்தி அவளது கன்னத்தை பற்றித் தன்பக்கம் திருப்பினான், கிரிஸ்டோபர்.
அப்போதும் பதில் பேசாமல் அவனை வெறித்துப் பார்த்தவளை கண்டு,
“கேட்டா சொல்ல மாட்டியா?” என கடுப்பில் கத்தி அவளது கன்னம் பழுக்க அறைந்தான், கிரிஸ்டோபர்.
நியூட்டனின் இரண்டாம் விதிக்கு உட்பட்ட சடப் பொருளைப் போல, அவன் அடித்த விசைக்கு அவளது முகம் செல்ல, விழிநீரோ காற்றில் பறந்து மைக்கேலின் முகத்தில் பட்டு தெறித்தது.
அடுத்த நொடி… ஏனோ எதற்கோ மைக்கேலின் விரல் மட்டும் தானாய் அசைந்திட,
“பாஸ்! பாஸ்! ஆர் யூ ஃபைன்?” ஆனந்த அதிர்ச்சியில் மைக்கேலின் தோளை பற்றி உலுக்கியான், கிரிஸ்டோபர்.
அதுவரை அசையாமல் இருந்தவள், காதலனின் ஸ்பரிசம் தன்னிடமிருந்து விலகுவதை உணர்ந்து சட்டென சுயநினைவு பெற்றாள்.
கைகள் தானாய் தன்னவனின் கரத்தை இறுகப் பற்ற,
“எங்க… எங்க கொண்டு போக போறீங்க?” பதறி வினவினாள், ரீனா.
“ஹாஸ்பிட்டல் மேடம்… பாஸை உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்.” பதற்றத்துடன் பதில் அளித்தான், கிரிஸ்டோபர்.
“நா… நானும் வருவேன்…” உடனே அவனது கரத்தை இன்னும் இறுக பற்றிக் கொண்டாள், ரீனா.
அவளது பிடியில் இருந்த நடுக்கத்தை உணர்ந்த கிரிஸ்டோபர், ஒரு நொடி அவளை ஆழமாக பார்த்தான்.
பரிதவிப்புடன் நிற்கும் அவளை பார்த்தபடியே, “சீக்கிரம் வந்து பாஸை தூக்குங்க டா!” என தனக்கு பின்னால் நின்ற ஆட்களிடம் கத்தினான், கிரிஸ்டோபர்.
உடனே இருவர் மைக்கேலை தூக்க,
“பாத்து… பாத்து…” இவளோ மைக்கேலின் சிரத்தை தனது கரத்தில் தாங்கிக் கொண்டு அவர்களுடன் நடந்தாள்.
போகும் வழிநெடுக, எதிரிகளின் தாக்குதலை சமாளித்தபடியே மைக்கேலின் ஆட்கள் முன்னேறினர்.
எங்கு நோக்கினும் “டூமில்… டூமில்…” என்ற துப்பாக்கிச் சத்தம் தான்.
வெடித்த குண்டுகளின் புகைமூட்டம் அவர்கள் செல்ல வேண்டிய பாதையை மறைத்தது.
சிலர் குண்டடிபட்டு அலறியபடி கீழே சரிந்தனர். சிலர் காயங்களுடன் கூட பற்களை கடித்தபடி முன்னேறினர். வேறு சிலரோ எதிரிகளை குறிப்பார்த்து சுட்டபடியே வந்தனர்.
அந்த துப்பாக்கிச் சத்தத்தில் உடல் அதிர்ந்தாலும், கண்ணாடி கிழித்த கீறல்கள் நெருப்பாய் எரிந்தாலும், தன்னவனை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் உடலை இழுத்துக் கொண்டு வந்தாள் ரீனா.
அதற்குள் கிரிஸ்டோபரோ காருடன் அவர்களுக்கு முன் வந்து நின்றான்.
“க்விக்… க்விக்… சீக்கிரம் ஏறுங்க!” அவசரப்படுத்தினான், கிரிஸ்டோபர்.
முதலில் ரீனா ஏறிக் கொள்ள, மைக்கேலின் ஆட்களோ கவனமாக அவனை காருக்குள் ஏற்றினர்.
ரீனாவோ பரிதவிப்புடன் அவனை தனது மார்பில் தாங்கிக் கொள்ள, காரோ காற்றை கிழித்துக் கொண்டு சாலையில் பறந்தது.
நொடிக்கு நொடி அவனது உடல் குளிர்வதை உணர்ந்தவள், “சீக்கிரம்… சீக்கிரம் போங்க… ப்ளீஸ்…” என்று கதறினாள், ரீனா.
“பாஸ்… பாஸ்… உங்களுக்கு ஒன்னும் இல்ல… தயவு செஞ்சு கண்ண முழிச்சு பாருங்க…” காரின் வேகத்தை அதிகரித்தபடியே பதறி அலறினான், கிரிஸ்டோபர்.
அந்த நேரம், கிரிஸ்டோபரின் அருகில் அமர்ந்திருந்தவனின் கைப்பேசி சத்தமாய் ஒலித்தது.
திரையில் தெரிந்த பெயரை பார்த்தவன், “டேவிட் சார்…” என்றான்.
“ம்ம்ம்… சீக்கிரம் அட்டெண்ட் பண்ணி பேசு.” அவசரமாக கூறினான் கிரிஸ்டோபர்.
உடனே அழைப்பை ஏற்றவன், “ஐயயோ… அப்படியா?” என்று அதிர்ச்சியடைந்து, “சரி சார்… நான் கிரிஸ்டோபர் சார்கிட்ட சொல்றேன்…” என்றவாறு முகவாட்டத்துடன் அழைப்பை துண்டித்தான்.
“ஏன்? என்னாச்சு?” புருவம் சுருக்கி கேட்டான் கிரிஸ்டோபர்.
“சார்… அது வந்து…” தயக்கத்துடன் தொடங்கியவன், “இப்ப நம்மல அட்டாக் பண்ணது வேற யாரும் இல்ல… மார்க் ஆண்டனியோட ஆளுங்களாம் சார். லாஸ்ட் இயர் ஆர்கன் ட்ராஃபிக்கிங்க்ல ஈடுபட்டிருந்த ஆண்டனியோட பையன் விக்டர, நம்ம ராயப்பன் பாஸ் கொன்னாருல்ல? அதுக்கு பழி வாங்க தான் இப்ப இந்த அட்டாக். அது மட்டுமில்ல… கூர்க்ல இருக்குற எல்லா ஹாஸ்பிட்டலையும் அவங்க ஹைஜாக் பண்ணி வச்சிருக்காங்களாம். எந்த ஹாஸ்பிட்டல் போனாலும் நம்ம பாஸுக்கு சேஃப் இல்லன்னு டேவிட் சார் சொன்னாரு…” என்று கடகடவென ஒப்பிக்க, “வாட்?” என அதிர்ந்து கூச்சலிட்டான், கிரிஸ்டோபர்.
“ஐயோ… ஜீசஸ்…” உடனே பதறியவள், “நோ… நோ… மைக்கேலுக்கு ஒன்னும் ஆகாது… ஓ மை காட்… ப்ளீஸ்… ப்ளீஸ்… அவர காப்பாத்துங்க…” என பயத்தில் அரண்டு முணுமுணுக்க, சிறிதும் தாமதிக்காமல் தனக்குத் தெரிந்த மருத்துவருக்கு கைப்பேசியில் அழைப்பு விடுத்தார், கிரிஸ்டோபர்.
அழைப்பு ஏற்கப்பட்டதும், “நான் சொல்ற லொக்கேஷனுக்கு உடனே ஒரு ஹைடெக் ஆம்புலன்ஸ் அனுப்புங்க. அதுல ஒரு சர்ஜனும், அவருக்கு ஹெல்ப் பண்ண டாக்டர்ஸும் இருக்கணும். இது எமர்ஜென்சி!” என்று கட்டளையிட்டு அழைப்பை துண்டித்தான், கிரிஸ்டோபர்.
அவனது கட்டளைபடி சரியாக பத்து நிமிடங்களில் அவர்கள் சென்ற சாலையோரத்தில் அவசர ஊர்தி ஒன்று அவர்களுக்காக காத்திருந்தது.
“நான் சொன்ன மாதிரி எல்லாம் ரெடியா?” கேட்டபடியே காரிலிருந்து இறங்கினான், கிரிஸ்டோபர்.
அவனது ஆட்களும் கவனமாக மைக்கேலை காரிலிருந்து இறக்கி அவசர ஊர்திக்குள் கொண்டு சென்றனர்.
“டோன்ட் வொர்ரி மிஸ்டர்… நாங்க பார்த்துக்கிறோம்.” மருத்துவர் தைரியம் கூற, அடுத்த நொடியே அவசர சிகிச்சை தொடங்கப்பட்டது.
அவசர ஊர்திக்குள் மருத்துவர்களோ வேகமாக இயங்கினர்.
ஒருவர் ரத்தப்போக்கை கட்டுப்படுத்த, மற்றொருவர் கருவிகளை தயார் செய்தார்.
“பல்ஸ் ட்ராப் ஆகுது!”
“ம்ம்… குவிக்… ஆக்சிஜன் இன்க்ரீஸ் பண்ணுங்க!”
“புல்லட் லொக்கேஷன் கிளியரா தெரியல…” பதற்றமான குரல்கள் தொடர்ந்து உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்க, இதயம் படபடக்க கண்ணீருடன் அவசர ஊர்திக்கு வெளியே நின்றாள், ரீனா.
கிரிஸ்டோபரோ பதற்றத்தில் நகம் கடித்தபடியே காத்திருக்க, கிட்டத்தட்ட, அரை மணி நேர போராட்டத்திற்கு பின் அவசர ஊர்தியின் கதவு சட்டென திறக்கப்பட்டது.
“மைக்கேல்… மைக்கேல் இப்ப எப்படி இருக்காரு?” பரிதவிப்புடன் கேட்டாள் ரீனா.
“புல்லட் எடுத்துட்டீங்களா?” பதற்றத்தில் படபடத்தான், கிரிஸ்டோபர்.
“எஸ் மிஸ்டர்… பை காட்ஸ் கிரேஸ், புல்லட் அவரோட ஹார்ட்டை டச் பண்ணல. பட்… இது ரொம்ப கம்ப்ளிகேட்டட் சர்ஜரி. எப்படியோ ஸ்கேன் இல்லாம, ரிப்போர்ட் இல்லாம ரிஸ்க் எடுத்து புல்லட்டை ரிமூவ் பண்ணிட்டோம்.” என்றார் மருத்துவர்.
அவர் சொல்லி முடிப்பதற்குள், “டடடடட் டூமில்…!” என மீண்டும் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் காற்றை கிழித்தது.
அதில் அனைவரும் பதறி விழிக்க, அதற்குள் ஆண்டனியின் ஆட்களோ அவர்களை சுற்றி வளைத்துவிட்டனர்.
தனது ஜீப்பில் அமர்ந்தபடியே, “ஒருத்தனையும் விடாதீங்க! சூட் பண்ணுங்க!” என்று வெறியோடு கட்டளையிட்டான் ஆண்டனி.
அடுத்த நொடியே குண்டுகள் மழை போல அவர்கள் மேல் பொழியத் தொடங்கின.
அதில் சிலர் சரிந்து விழ, “இனி இங்க இருக்கிறது சேஃப் இல்ல! ஜஸ்ட் கோ!” என கத்தியபடி அனைவரையும் நகர்த்தினான் கிரிஸ்டோபர்.
அவனது ஆட்கள் உடனே கார்களில் ஏறிக் கொள்ள, மருத்துவர்களுடன் கிரிஸ்டோபரும் ரீனாவும் அவசர ஊர்திக்குள் ஏறினர்.
பின்னால் ஆண்டனியின் ஆட்கள் துப்பாக்கியால் துரத்த, அவசர ஊர்தியோ மின்னலென சாலையில் சீறிப் பாய்ந்தது.
தொடரும்....
கருத்துகள்
கருத்துரையிடுக
“உங்கள் கருத்துகள் எங்களுக்கு முக்கியம். கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.. தாராளமாய் பகிருங்கள் 😊