தீ மீது வீணை 25
அத்தியாயம் 25
“இங்க என்ன சொல்லுதோ அத நம்புறவ?” ரீனா, இவ்வார்த்தைகளை சுலபத்தில் சொல்லிவிட்டாள்.
ஆனால் அவ்வார்த்தையின் வீரியம் அவள் அறியவில்லை. அதுவோ பிரம்மாஸ்திரமாய் மாறி அவனது நெஞ்சத்தைக் குத்திக் கொல்லாமல் கொன்றது.
பின்ன குற்றமுள்ள நெஞ்சல்லவா அது? குறுகுறுக்க தானே செய்யும்.
மனசாட்சி ஆயிரம் முறை ரீனாவிற்காகப் பரிந்துப் பேசியும், வெறும் காகிதங்கள் சொன்னதை நம்பி தானே அவளை கிட்டத்தட்ட ஆறு மாத காலம் மனநல காப்பகத்தில் அடைத்தான்?
அந்த குற்றம் சும்மா விடுமா? நிமிர்ந்து கூட பார்க்க முடியாத அளவிற்கு அவனை குனிகுறுக வைத்தது.
நாக்கை அசைய விடாமல் கட்டி வைத்தது.
அமிலம் உண்ட குரங்காய் அல்லாட வைத்தது.
அல்லாடினான், அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் உயிர்க்காற்றுக்கு ஏங்கும் நாசியாய் திண்டாடினான்.
நிற்க முடியவில்லை, பேச முடியவில்லை இவ்வளவு ஏன் அவளை பார்க்க கூட முடியவில்லை.
கண்கள் கூசின.
காதுகள், திரும்ப திரும்ப, ‘இங்க என்ன சொல்லுதோ, அத நம்பறவ?’ என்ற வார்த்தைகளை ஒலிப்பரப்பிக் கொண்டே இருக்க, மனம் முற்றாக உடைந்து, அங்கிருக்க திராணியின்றி அவ்விடத்தை விட்டு வெளியேறினான் மைக்கேல்.
மைக்கேலின் மனநிலையை உணர்ந்த கிரிஸ்டோபருக்கு உள்ளம் பதறியது. எங்கே தனியாக மதுவிடுதிக்குச் சென்று, குடிபோதையில் ஏதேனும் விபரீதத்தில் சிக்கிக்கொள்வாரோ என்ற பயத்தில், “பாஸ்... எங்க போறீங்க?” என்று பதறி அவனது தோளைப் பற்றினான்.
“லீவ் மீ அலோன் கிரிஸ்டோபர்.” சோர்வாக பதில் கொடுத்தான் மைக்கேல்.
“பாஸ் பிளீஸ்… இந்த நேரத்துல நீங்க தனியா இருக்கிறது அவ்வளவு சரியா இருக்காது. பிளீஸ் என்னையும் கூட்டிட்டு போங்க.” அக்கறையில் கிட்டத்தட்ட கெஞ்சினான் கிரிஸ்டோபர்.
மைக்கேலோ கண்களை மூடி ஆழ பெருமூச்சை இழுத்துவிட்டு, “ப்ச்… கிரிஸ்டோபர்! என்ன கொஞ்ச நேரம் தனியா விடு. நான் எங்கேயும் போகல. ஜஸ்ட் வாக்கிங் தான் போறேன்.” என்றான் அமைதியாக.
“பாஸ் இருந்தாலும்…” ஏதோ சொல்ல வந்த கிரிஸ்டோபரை கை காட்டி தடுத்தவன், “என்ன பத்தி கவலப்படாத கிரிஸ்டோபர்! நீ… நீ அவள பாரு. கோபத்துல வேற இருக்கா, தப்பா ஏதாவது செஞ்சுக்க போறா.” என்று மட்டும் கூறி திரும்பிப் பார்க்காமல் முன்னோக்கி நடந்தான்.
நடந்தான்… நடந்தான் கால்கள் வலித்து ரணமாகும் வரை நடந்தான்.
உடல் ஏதோ ஒரு பெரும் பாறாங்கல்லை சுமப்பது போலவே கணத்தது.
இதமான கால நிலையோ, குளிர் தென்றலோ, மலர்களின் வாசமோ, பட்சிகளின் கீதமோ எதுவுமே அவனது காயத்திற்கோ, ரணவலிக்கோ மருந்தாக அமையவில்லை.
மாறாக அவை எல்லாம் அவனை குற்றவாளி என்றே பறைசாற்றின.
‘தப்பு பண்ணிட்டேனோ?? அவள முழுசா நம்பியிருக்கனுமோ??’ முதன்முறையாக தான் செய்தது அனைத்தும் தவறோ? பாவமோ? குற்றமோ? என யோசிக்க ஆரம்பித்தான்.
யோசிக்க யோசிக்க இதயம் எங்கும் சீல் பிடித்தது.
கண்கள் கலங்கின.
பூங்காவில் அமர்ந்து வானத்தை வெறித்தான்.
நீலநிறக் குடையாய் அவனது கண் முன் விரிந்த வானத்தின் அமைதியை மெல்ல அவனது உடல் கிரகித்திட, மூச்சின் வேகம் சற்றே சீரானது.
ஆனால் மனம்? வானத்து அமைதியை சுவீகரித்துக் கொள்ள மறுத்தது.
“கோபத்துல இருக்கா, தப்பா ஏதாவது செஞ்சுக்க போறா.” சற்று நேரத்திற்கு முன் கிரிஸ்டோபரிடம் அவன் கூறிய வார்த்தைகள் தான். அந்த வார்த்தை இப்போது அவனையே துரத்தியது.
‘தப்பா ஏதாவது பண்ணிக்கிட்டான்னா?’ நினைக்கும் போதே வியர்த்துக் கொட்டிட, பதறியவன், பூங்கா இருக்கையை விட்டு சட்டென எழுந்தான்.
“சே…” கேசத்தை அழுந்த கொதியவன், அங்கிருக்க முடியாமல் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தான்.
அதோ கதியில் விட்டு வந்த வீட்டை சுத்தம் செய்துக் கொண்டிருந்தான் கிரிஸ்டோபர்.
ஆசை ஆசையாய் இவன் செய்து வைத்த கோழி பிரியாணி துப்பாக்கி வெடித்ததில் பாத்திரத்துடன் பழாகியிருந்தது.
கமகம வாசத்துடன் அதுவோ குப்பையில் கிடக்க, முகம் துக்கத்தில் வெளுத்தது மைக்கேலுக்கு.
“பாஸ்…” இவனை கண்டதும் நன்றியுள்ள நாய் போல் வாலாட்டி வந்தான் கிரிஸ்டோபர்.
“எங்க அவ?” வீட்டிற்குள் நுழைந்ததுமே விழிகள் அவளைத் தேட, அவசரமாய் வினவினான் மைக்கேல்.
“பாஸ்! மேடம் ரூம்ல இருக்காங்க.” நிதானமாய் கிரிஸ்டோபர் பதில் கொடுக்க, அதுவரை உள்ளத்தை அழுத்திய பாரம் குறைவது போல் இருக்க, நிம்மதி பெருமூச்சு விட்டான் மைக்கேல்.
“சாப்பிட்டளா?” என்ற மைக்கேலின் விழிகளோ கூர்மை பெற, “இல்ல பாஸ்! எவ்வளவோ கூப்பிட்டுப் பார்த்தேன். முடியாதுனு சொல்லிட்டாங்க.” என்றான் கிரிஸ்டோபர் வருத்தமாக.
“நீ சாப்பிட்டியா?” அடுத்த கேள்வி இவன் கேட்க, “இல்ல பாஸ் நீங்க சாப்பிடாம…” தயங்கத்துடன் அவனோ வார்த்தைகளை மென்று விழுங்கினான்.
“ஹும்…” வெற்றுப் புன்னகை இதழ்களில் தவழ, “சாப்பாடு ஏதாவது செஞ்சியா?” சினேக புன்னகையுடன் வினவினான் மைக்கேல்.
“ஹாங்… பாஸ்தா செஞ்சேன் பாஸ்.” உற்சாகமாய் பதில் கொடுத்தான் கிரிஸ்டோபர்.
“ம்ம்... எனக்கும்... அவளுக்கும் சேர்த்து எடுத்துட்டு போறேன். நீயும் போய் சாப்பிடு.” கட்டளையாய் கூறிவிட்டு ஒரு தட்டில் பாஸ்தா வைத்துக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தான் மைக்கேல்.
அங்கே எப்போதும் அவள் படுக்கும் சாய்விருக்கையில் இன்று பூனைப் போல் முழங்கால்களை அணைத்தப்படி சுருண்டு கிடந்தாள் ரீனா.
அவளை அந்நிலையில் பார்த்தவனின் இதயம் ஏதோ பெரும் பாரத்தை சுமப்பது போல் கணத்தது.
கண்களோ சிவந்து கலங்கிட, மெல்ல அவளுக்கு அருகில் சென்றான்.
அவளோ அழுது அழுது ஓய்ந்த களைப்பில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
உணவு தட்டை அருகில் உள்ள மேசையில் வைத்துவிட்டு, மெதுவாக அவளருகே மண்டியிட்டான்.
அழுது வீங்கியிருந்த கண்கள்... கன்னத்தில் இன்னும் மங்காமல் பதிந்திருந்த அவனது ஐந்து விரல் தடங்கள்... நெற்றியில் சிறிதாய் கீறி உறைந்திருந்த இரத்தக்கோடு...
ஒவ்வொன்றும் அவனை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தின.
நடுங்கிய விரல்களால், அவளது கன்னத்தைத் தொடாமல் வருடினான்.
“உனக்கு வரவர ரொம்ப கோபம் வருதுடா மிகி. கோபம் வந்தா நீ நீயாவே இருக்க மாட்ற?” அம்மா முன்பு கடிந்தது இப்போது ஞாபகத்திற்கு வந்தது.
“ம்மா…” உடைந்த குரலில் முணுமுணுத்தவன், மெல்ல தலை கவிழ்ந்து விழிகளை இறுக மூடினான்.
அவனையும் மீறி இரு சொட்டு கண்ணீர் ரீனாவின் கைமேல் விழுந்திட, எங்கே விழித்துக் கொள்வாளோ என்ற பதற்றத்தில் விரைவாய் துடைத்தவன், “ரொம்ப வலிக்குதா டி.” என மெல்ல வினவினான்.
பதில் பேச வேண்டியவளோ சிறு குழந்தை போல் இதழை மட்டும் சப்பிவிட்டு தூக்கத்தை தொடர, “ஹும்…” பெருமூச்சுடன் மெல்ல எழுந்து முதலுதவி பெட்டியுடன் மீண்டும் அவளுக்கு அருகில் மண்டியிட்டு அமர்ந்தான் மைக்கேல்.
நெற்றியில் உரைந்த இரத்த துளிகளை துடைத்துவிட்டு, விரல் படாமல் மெதுவாய் மருந்திட்டான்.
அவளது தூக்கம் களையாத வண்ணம் பார்த்து பார்த்து நடந்துக் கொண்டவன் கண்ணீர் கோடுகள் நிறைந்த அவளது கன்னத்தில் மென் முத்தமிட்டு குளிர் களிம்பை பூசிவிட்டான்.
இவனது விரல் பட்டதோ, இல்லை குளிர் களிம்பின் குளிர் தாக்கியதோ, “ப்ச்…” என்று அரை தூக்கத்தில் நெளிந்து சத்தமிட்டாள் ரீனா.
உடனே பதறி, “உஷ்ஷ்..” என உச்சிக் கொட்டியவன், அவளது தோளை மெதுவாக தட்டி தூங்க வைத்தான்.
அவன் செய்யும் அனைத்தும் அவளுக்கு அவளது தகப்பனை நினைவு படுத்தியதோ என்னவோ? தூக்க கலக்கத்தில், “டாட்…” என முணுமுணுத்து புன்னகைத்தாள் ரீனா.
அறையின் அமைதியில் அவளது குரல் தெளிவாக இவனுக்கு கேட்டிட, ஒரு நிமிடம் கைகள் இறுகின.
தாடை நெறிந்தன.
பற்களை அரைத்தவன் பின் ஏனோ அமைதியானான்.
விழிகளை சிமிட்டி தன்னை சமன் செய்துக் கொண்டவன், ‘எழுப்பினாள், சாப்பிட மாட்டாள்.’ என்று கருதி, தூங்கும் அவளுக்கு ஊட்டிவிட துவங்கினான் மைக்கேல்.
அவளும் அப்பா தான் ஊட்டிவிடுகிறார் என்ற நினைப்பில் தூங்கியபடியே உண்டாள்.
இறுதியாக அவளது இதழை மெல்ல துடைத்துவிட்டவன், அவளை அலேக்காக தூக்கி படுக்கையில் நேராக படுக்க வைத்தான்.
கழுத்துவரை போர்வையால் அவளை போர்த்தியவன், சிறிது நேரம் கன்னத்தில் கை வைத்து அவளையே வெறித்தான்.
முதல் முறையாக அவளை பார்த்தபோது, அவளது முகத்தில் துள்ளித் திரிந்த குறும்பும், எப்போதும் இதழோரம் தங்கியிருந்த புன்னகையும் இப்போது எங்கோ காணாமல் போயிருப்பதை உணர்ந்தவன், இதயம் கனத்துப் போனது.
‘எல்லாத்துக்கும் காரணம் நீதான்.’ என மனசாட்சி குத்திட, யாரோ பொளீரென சாட்டையால் அடித்த உணர்வு.
சுளீரென வலித்தது. இதழ் கடித்தான்.
கண்ணீர் துளிகள் கன்னத்தில் படர, சட்டென துடைத்துக் கொண்டவன் அவளது நெற்றி மறைத்த கூந்தல் கற்றைகளை காதோரம் ஒதுக்கிவிட்டான்.
ஒதுக்கும் போது தெரியாமல் அவனது விரல் அவளது காயத்தில் பட்டுவிட்டது போலும், “ஸ்ஸ்… வலிக்குதுப்பா.” மெல்ல அவளோ முணுமுணுக்க, பொங்கியது கண்ணீர் இவனுக்கு.
நா தளதளக்க, “சா… சாரி டி.” என்று உரைந்தவன் கண்ணீரை துடைத்தபடியே அங்கிருக்க முடியாமல் விறுவிறுவென வெளியே ஓடி வர, தொலைக்காட்சியில் படம் பார்த்தபடியே பாஸ்தா உண்டுக் கொண்டிருந்தான் கிரிஸ்டோபர்.
மைக்கேலை பார்த்ததும் அவனோ எழுந்து நிற்க, “ப்ச்… அட! உட்காந்து சாப்பிடு.” அலுப்புடன் கூறிவிட்டு மெது இருக்கையில் பொத்தென விழுந்தான் மைக்கேல்.
“ஓகே பாஸ்!” சமத்தாய் தலையாட்டிவிட்டு, அவனோ மீண்டும் உண்ண, சிறிது நேரம் தொலைக்காட்சியை பெட்டியையே வெறித்துக் கொண்டிருந்த மைக்கேல், “நாளைக்கே இந்தியா போகனும் பிளைட் ரெடி பண்ணு.” என்று கட்டளையிட, கையில் எடுத்த உணவை வாயில் வைக்காமல், “நாளைக்கேவா பாஸ்?” அதிர்ந்து வினவினான் கிரிஸ்டோபர்.
“ம்ம்ம்…” என்று மட்டும் இவன் தலையாட்ட, “ஆனா பாஸ் உங்க உடம்பு…” வார்த்தைகளை முடிக்காமல் புருவம் இடுக்கினான் கிரிஸ்டோபர்.
ஒரு பெருமூச்சுடன், “அது கிடக்கு கிரிஸ்டோபர்.” என தோளை குலுக்கியவன், “இனிமே நாம இங்க இருக்க வேணாம். இந்தியாவுக்கே போயிடலாம். ஹாங்… டெஸ்டினேஷன் பாயிண்ட் டில்லிக்கு கொடுத்துடு.” என்ற கட்டளையுடன் எழுந்துக் கொண்டான்.
“டில்லியா? ஏன் பாஸ்? மும்பை தான நமக்கு பக்கம்?” இமை இடுக்கிய கிரிஸ்டோபரிடம், “ஜெயிலர் கிட்ட பெர்மிசன் வாங்கிடு கிரிஸ்டோபர். ரீனா அவ அப்பாவப் பார்க்கனும்.” இறுகிய முகத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான் மைக்கேல்.
தொடரும்...
கருத்துகள்
கருத்துரையிடுக
“உங்கள் கருத்துகள் எங்களுக்கு முக்கியம். கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.. தாராளமாய் பகிருங்கள் 😊