4 அழலின் அர்த்தம் நீயே
அன்றைய நாள் யாருக்கு எப்படியோ ஆனால் தாராவிற்கு ஒரு வித்தியாசமான உணர்வு. கயலுடன் ஒரு நெருங்கிய பந்தம் அர்ஜூனுடன் ஏதோ ஓர் ஈர்ப்பு கலவையான உணர்வுகளோடு வீடு திரும்பினாள் அவள்.
வீட்டில் வழக்கம் போலத் தான், இன்றாவது மகள் தன்னுடன் பேச மாட்டாளா? என்று அவளது முகத்தையேப் பார்த்து அவளையே சுற்றி வந்தார் ஞான சேகரன்.
தாராவோ இப்பொழுது தான் தன் எதிரில் இருப்போரின் உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துக் கொள்ள ஆரம்பிக்கிறாள்.
அடுத்தடுத்து நாட்கள் வழக்கம் போல நகர்ந்தன.
முன்பு போல இல்லாது இப்பொழுது அர்ஜூனுடனும் தாரா அவ்வப்பொழுது பேசிக் கொள்வாள்.
அன்றும் அப்படி தான், கயலும் தாராவும் வகுப்பிற்கு செல்லாமல் ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
கயலோ கலங்கிய கண்களோடு அமர்ந்திருந்தாள். வழக்கம் போல தாரா என்ன செய்வது என்று புரியாது விழித்தபடி கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருக்க, "இங்க என்ன பண்றீங்க க்ளாஸ் போகாம?" என்றபடி அங்கே வந்தான் அர்ஜூன்.
"ஹே அரலூசு அழறியாடீ? உனக்கு வேற வேலையே இல்லையா எப்போ பாரு ஒரே அழுகாச்சி தானா?" என்று கயலிடம் வம்பிழுத்தவன் அவளுக்கு என்னவானது என்று தாராவிடம் சைகையாகக் கேட்க.
தாராவோ தெரியாது என்பது போல உதடுகளைப் பிதுக்கினாள்.
"என்னடி?" என்ற அர்ஜூன் சலிப்பாக கயலிடம் கேட்க.
"நானும் ரொம்ப நேரமாக கேட்குறேன் பதிலே சொல்ல மாட்டேங்குறா. க்ளாசுக்கு அவளும் வர மாட்டேங்குறா என்னையும் போக விட மாட்டேங்குறா" என்றாள் தாரா சலிப்பாக.
"இப்போ சொல்லப் போறியா இல்லையா?" என்றவன் அதட்டலாகக் கேட்க.
அவனை முறைத்த கயலோ "நீ எதுக்குடா க்ளாஸ் போகாம சுத்திட்டு இருக்க?" என்று திருப்பிக் கேட்க.
"ப்ச் க்ளாஸ் ஒரே போர். ஒரே தூக்கம் அதான் ஒரு டீ அடிச்சிட்டு போலாம்னு நானும் ப்ரெண்டும் வந்தோம்" என்று தூரத்தில் நின்ற தனது தோழனைச் சுட்டிக் காட்டி அவன் சொல்ல.
"ம்ம்" என்றாள் சுதா சுரத்தே இல்லாது.
"நீ இப்போ சொல்லு" விடுவேனா என்று நின்றான் அர்ஜூன்.
"நைட் அப்பா குடிச்சிட்டு வந்து ஒரே சண்டை அம்மா கூட" என்றாள் அவள் மீண்டும் கசிந்த கண்ணீரைத் துடைத்த படி.
"இது என்ன புதுசா? வழக்கமா நடக்குறது தானே?" என்று அர்ஜூன் கேட்க.
"நேத்து ஒரு குடிகாரனை கூட்டிட்டு வந்து இவனைத் தான் நீ கல்யாணம் பண்ணனும்னு ஒரே ரகளை. அந்த குடிகாரன்... அவன்" என்றவள் பேச முடியாது திக்க.
"உன்கிட்ட எதுவும் பிரச்சனை பண்ணானா சொல்லு கயல். பசங்களைக் கூட்டிட்டு போய் அவனை ஒரு வழி பண்ணிடுறேன்" என்றான் அர்ஜூன் அடக்கபட்ட கோபத்தோடு.
"இல்லை நானே விளக்கமாத்த வச்சி நல்லா சாத்தி விரட்டி விட்டுட்டேன் அந்த குடிகார நாயை" என்றவளோ ஏங்கி ஏங்கி அழ.
என்னடா நடக்குது இங்க என்பது போல பார்த்து வைத்தாள் தாரா.
"விடுடீ அதுதான் கோபம் தீர அடிச்சிட்ட இல்லை. அப்புறமும் ஏன் அழற?" என்றவன் கேட்க.
"இல்லை எனக்கு என் வருங்காலத்தை நினைச்சா ரொம்ப பயமா இருக்குடா" என்றவள் பொது இடம் என்றும் பாராமல் அர்ஜூனின் தோள் சாய தாராவிற்கு உள்ளுக்குள் ஏதோ பதட்டம்.
என்ன நினைத்தாளோ சட்டென இருவரின் இடையில் புகுந்து கயலை தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.
"ப்ச் அதெல்லாம் நினைச்சி பயப்படாத. இப்போ நீ எவ்வளவு கஷ்டப்படுறியோ அதை விட பல மடங்கு வருங்காலத்துல சந்தோஷமா இருக்கப் போறனு அர்த்தம். வேணும்னா பாரு உன்னை ராணி மாதிரி கையில வைச்சி தாங்குற ஒரு புருஷன் தான் வருவான்" என்றான் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு.
"அப்படியா? நீ சொல்றது உண்மையா? இப்போ கஷ்டப்பட்டா ப்யூச்சர் நல்லா இருக்குமா?" என்று ஆர்வமாகக் கேட்டது என்னவோ தாரா தான்.
"அது தானே உலக நியதி" என்றான் அவன்.
'இவன் என்ன பெரிய மனுஷன் போல பேசுறான்' என்று அவள் நினைத்தாலும் 'அப்படி நடந்தா நல்லாத் தான் இருக்கும்' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
"அழுதது போதும் போய் முகத்தை கழுவிட்டு க்ளாஸ்கு போ" என்று அர்ஜூன் கயலை அதட்ட.
"என்னவோ சொல்ற" என்ற சலித்துக் கொண்ட கயல் "சரி நீ கேன்டின் தானே போற எனக்கும் ஒரு டீ சொல்லு நான் போய் ப்ரெஸ் ஆகிட்டு வரேன்" என்று அங்கிருந்து அகன்று விட்டாள்.
"நீயும் வரியா டீ குடிக்க?" என்று அர்ஜூன் தாராவிடம் கேட்க.
"பழக்கமில்லை" என்றாள் அவள்.
"அட பழகிக்கலாம் வா" என்றவன் தாராவை அழைத்துச் செல்ல... நூலறுந்த காத்தாடியாய் அவன் பின்னே நடந்தாள் அவள்.
அவள் மனதில் ஒரு விஷயம் மட்டும் உறுத்திக் கொண்டே இருக்க. கேட்கலாமா வேண்டாமா? என்று உள்ளுக்குள் பட்டிமன்றம் வைத்தவள் ஏதோ உந்துதலில் "கயலுக்காக இப்படி பார்த்து பார்த்து செய்யுறீங்க இரண்டு பேரும் லவ்" என்று வேகமாக ஆரம்பித்து இழுவையாக முடிக்க.
"கயலுக்கு பதில் நீ இருந்தா கூட இதைத் தான் பண்ணியிருப்பேன். அப்போ நம்ப இரண்டு பேரும் லவ்வர்ஸா?" என்ற அர்ஜூனின் கேள்வியில் திகைத்துப் போனாள் தாரா.
"அது" என்றவள் தடுமாற.
"சில் தாரா, ப்ரெண்ட்ஸ்குள்ள இதெல்லாம் சாதாரணம். ஸ்கூல் டைம்ல உன்னோடதும் பெரிய கேங் தானே. பொண்ணுங்களுக்குள்ள பண்ணிக்கிட்ட ப்ரெண்டிஷிப். இதுவே பையன் பொண்ணுக்கோ, இல்லை பொண்ணு பையனுக்கோ பண்ணா மட்டும் லவ்வா? படிச்ச பொண்ணு தானே நீ. அதுவும் எங்க கூடவே தான் இந்த ஒரு வருஷமா இருக்க. அவ்வளவு தான் நீ எங்களைப் புரிஞ்சிக்கிட்டதா?" என்று கேட்டவன் பதிலுக்கு காத்திருக்காமல் முன்னால் நடந்தான்.
தாராவிற்கு தான் ஏன் கேட்டோம் என்றாகி விட்டது.
அவன் சொல்வதில் தவறு எதுவும் இல்லை.
ஆனால் அவன் கயலைக் காதலிக்கவில்லை என்ற உண்மை ஏனோ அவள் மனதிற்கு நிம்மதியைக் கொடுத்தது. அந்த நிம்மதிக்கான காரணம் மட்டும் அவளுக்குப் புரியவில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக
“உங்கள் கருத்துகள் எங்களுக்கு முக்கியம். கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.. தாராளமாய் பகிருங்கள் 😊