Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

பூ ஒன்று புயலானது 🐦‍🔥

 அத்தியாயம் ¹



நீதிமன்ற அறை பரபரப்பானது. கூரையில் இருந்த மின்விசிறிகள் மெதுவாக சுழன்றன. சுவர்களின் வெளிர் நிறமும், மர நாற்காலிகளின் கரும் பழுப்பு நிறமும் நீதிமன்றத்தின் கனமான அமைதியை உணர்த்தியது. குற்றம் சாட்டப்பட்ட சித்தார்த், ஒரு விலையுயர்ந்த சஃபாரி உடையில், தன் அதிகாரித் தந்தையுடன் அமர்ந்திருந்தான். எதிரே, பாதிக்கப்பட்ட அஞ்சலி, வழக்கறிஞர் சுதாவுடன், தன் முகத்தை இறுக்கிக் கொண்டு, கண்ணீரை அடக்கிக்கொண்டு இருந்தாள்.


வழக்கு எண்: 457/2025. பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 69 (திருமணப் பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றி உடலுறவு கொள்ளுதல்), பிரிவு 318(4) (ஏமாற்றுதல்).


நீதிபதி இருக்கையில் இருந்து, நீதிபதி திரு. இராமநாதன் வழக்கை விசாரிக்கத் தொடங்கினார்.


நீதிபதி: "வழக்கறிஞர் சுதா, வாதத்தைத் தொடங்கலாம்."


வழக்கறிஞர் சுதா: 

"மாண்புமிகு நீதிபதி அவர்களே, இன்று நான் நிற்பது ஒரு குற்றவாளிக்கு எதிராக மட்டுமல்ல, 'அதிகாரம்' என்ற போர்வையில், 'காதல்' என்ற பெயரில் ஒரு அப்பாவியான பெண்ணின் வாழ்க்கையைச் சிதைத்த வஞ்சகத்திற்கு எதிராக!


என் கட்சிக்காரர், அஞ்சலி, ஒரு கிராமத்தில் இருந்து வந்து, பெரும் கனவுகளுடன் இந்தக் கல்லூரியில் சேர்ந்த மாணவி. குற்றம் சாட்டப்பட்ட சித்தார்த், இவருடைய தந்தையின் பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அஞ்சலியின் அப்பாவித்தனத்தையும், அவளுடைய எளிய பின்புலத்தையும் தனக்குச் சாதகமாக்கி, தன் 'காதல்' வலையில் வீழ்த்தினான்.


மாண்புமிகு நீதிமன்றம் கவனிக்க வேண்டும். இவன், தன்னுடைய திருமணம் குறித்த உண்மையான எண்ணத்தை மறைத்து, அஞ்சலியிடம் பலமுறை, 'நாம் திருமணம் செய்து கொள்வோம், நீதான் என் மனைவி' என்று வாக்குறுதி கொடுத்துள்ளான். 


இந்த வாக்குறுதியை முழுமையாக நம்பித்தான், என் கட்சிக்காரர் இவனுடன் பழகினார். திருமணம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான், அவனுடைய பாலியல் உறவுக்குச் சம்மதித்தார். திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே குற்றவாளிக்கு இல்லாவிட்டாலும், திருமண வாக்குறுதியைக் கொடுத்து ஒரு பெண்ணின் சம்மதத்தைப் பெறுவது, 


புதிய பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 69-ன் கீழ் மிகக் கடுமையான குற்றம் என்பதை நான் இங்கே அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்."



சித்தார்த்துக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர், திரு. வரதராஜன், கம்ப்யூட்டர் கம்பெனி அதிபரின் வழக்கறிஞர் போல, சற்றுப் அலட்சியமான பாவனையுடன் எழுந்தார்.


வழக்கறிஞர் வரதராஜன்: "மாண்புமிகு நீதிபதி அவர்களே, இது ஒரு 'ஏமாற்றப்பட்ட காதல்' என்று என் சகோதரி (சுதாவைக் குறிப்பிட்டு) கூறுகிறார். காதல் என்பது இரு தரப்பினரின் சம்மதத்தின் பேரில் நடக்கும் ஒரு உறவு. என் கட்சிக்காரர் சித்தார்த், அஞ்சலியின்மீது உண்மையான காதல் கொண்டிருந்தார். அவர்களுடைய உறவு முற்றிலும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் நடந்தது. ஒரு உறவு தோல்வியடைந்தால், அதற்காகச் சட்டம் பேசுவது நியாயமில்லை.


பாலியல் உறவுக்கு அவராகச் சம்மதம் கொடுத்த பிறகு, இப்போது திருமணத்தை மறுத்தால், அதை 'பாலியல் வன்முறை' என்று கூறுவது சட்டத்தின் தவறான பயன்பாடு. அவள் ஒரு கல்லூரி மாணவி, அவளுக்குச் சம்மதம் என்றால் என்னவென்று தெரியும்!"


சுதா இதைக் கேட்டு ஒரு நிமிடம் அமைதியானார், ஆனால் அவரது முகம் கோபத்தால் சிவந்தது.


வழக்கறிஞர் சுதா:"சம்மதம்! மாண்புமிகு நீதிபதி அவர்களே, எந்த ஒரு சம்மதமும் 'திருமணம்' என்ற பொய்யான வாக்குறுதியின் அடிப்படையிலும், ஏமாற்றத்தின் அடிப்படையிலும் பெறப்பட்டால், அது சட்டப்படி 'சம்மதம்' ஆகாது . ஒரு மாணவியின் எதிர்காலம், அவள் கொண்டிருக்கும் உயர்ந்த அதிகாரி மகன் மீதான காதல் நம்பிக்கை ஆகியவற்றைச் சுரண்டி, இந்தச் சம்மதத்தைப் பெற்றுள்ளான் சித்தார்த்.


நான் என் கட்சிக்காரரைக் கூப்பிட விரும்புகிறேன்."


அஞ்சலி சாட்சிக் கூண்டில் ஏறியவள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.


வழக்கறிஞர் சுதா: "அஞ்சலி, சித்தார்த்துடன் பழகிய போது, உங்களுக்கு இடையே நடந்த உரையாடலில், அவர் எப்போதாவது திருமணம் பற்றிப் பேசினாரா?"


அஞ்சலி: (அழுதபடி,) "ஆம், பேசினார். 'நம் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றாலும், நாம் திருமணம் செய்துகொண்டு எங்காவது சென்று விடுவோம்' என்று என்னிடம் பலமுறை கூறினார். அவருடைய பெற்றோர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், என்னை அவர் உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகவும், ஒரு வருடத்திற்குள் திருமணம் செய்து கொள்வோம் என்றும் நம்ப வைத்தார். அவர் என் நெற்றியில் ஒரு பொட்டு வைத்ததுகூட, 'இது நம் திருமணத்தின் ஆரம்பம்' என்றுதான் சொன்னார். அவர் உயர் பதவியில் இருந்ததால், நான் ஒருபோதும் சந்தேகம் கொள்ளவில்லை."


வழக்கறிஞர் வரதராஜன்: (குறுக்கிட்டு) "நீங்கள் ஏன் ஆரம்பத்திலேயே புகார் கொடுக்கவில்லை? உறவு முறிந்த பிறகல்லவா புகார் கொடுத்தீர்கள்?"


வழக்கறிஞர் சுதா: (வேகமாகப் குறுக்கிட்டு) "மாண்புமிகு நீதிபதி அவர்களே! என் கட்சிக்காரரின் அப்பாவியான நம்பிக்கையைத் துஷ்பிரயோகம் செய்யும் முயற்சி இது. அவர் விவாகரத்து பெற்ற கணவன் போல, பல மாதங்கள் தன் தந்தையின் அதிகாரத்தைக் காட்டி அஞ்சலியை மிரட்டி, காலம் கடத்தி வந்தார். தன் உயிருக்கு ஆபத்து வரும் என்ற அச்சத்திலும், குடும்ப கௌரவம் கருதியும் ஒரு ஏழைப் பெண் உடனடியாகப் புகார் கொடுக்கத் தயங்கியது குற்றமா?  BNS பிரிவு 351 (குற்றவியல் மிரட்டல்) பிரிவும் இதில் சேரும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்."



நீதிமன்றத்தில் முழு அமைதி நிலவியது. சுதா நிதானமாகத் தனது இறுதி வாதத்தை முன்வைத்தார்.


வழக்கறிஞர் சுதா: "மாண்புமிகு நீதிபதி அவர்களே, இந்த வழக்கு 'காதல் முறிவு' அல்ல. இது நம்பிக்கை துரோகம், அதிகாரத் திமிர் மற்றும் ஏமாற்றுதல் ஆகியவற்றின் கலவை.


சித்தார்த், ஒரு அரசு அதிகாரியின் மகன் என்ற தனது சமூகப் பலத்தைப் பயன்படுத்தி, அஞ்சலியின் எதிர்காலத்தின்மீது ஒரு விஷப் பரீட்சையை செய்துள்ளார். திருமண வாக்குறுதியைக் கொடுத்து, தனது காமப் பசியைத் தீர்த்துவிட்டு, இப்போது பணத்தையும் அதிகாரத்தையும் கொண்டு தப்பிக்க நினைக்கிறார். இது வெறும் BNS 69 மற்றும் 318(4) பிரிவுகள் மட்டுமல்ல, அரசியலமைப்பு சட்டம் 21-ன் படி, வாழ்வுரிமையைப் பறித்ததற்கும் சமம்.


இந்த நீதிமன்றம், நீதிக்கும் நியாயத்திற்கும் நிற்கும். பணம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் கொடூரமான நிழல்கள், நீதித்துறையின்மீது படரக் கூடாது. அஞ்சலியின் நம்பிக்கையையும், அவளுடைய வாழ்க்கையையும் சூறையாடிய சித்தார்த்துக்குச் சரியான தண்டனை கிடைக்காவிட்டால், இந்த நாட்டில் 'காதல்' என்ற வார்த்தை, அப்பாவிப் பெண்களுக்கு ஒரு பொறி  ஆகிவிடும்.


திருமணம் என்ற வாக்குறுதியைக் கொடுத்து, திட்டமிட்டு ஏமாற்றி, உடல் உறவு கொண்ட இந்தக் குற்றவாளி, BNS 69 பிரிவின் கீழ் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


நன்றி, மாண்புமிகு நீதிபதி அவர்களே."


சுதா தனது வாதத்தை முடித்தவுடன், நீதிமன்ற அறையில் ஒரு கனமான அமைதி நிலவியது. நீதிபதி இராமநாதன் சற்று நேரம் தன் முன் இருந்த ஆவணங்களைப் புரட்டினார். சுதாவின் துணிச்சலும், தெளிவான வாதங்களும் அவர் மனதில் ஆழமாகப் பதிந்தன. அவர் தன் கண்ணாடியை சரி செய்து...


நீதிபதி: "இரு தரப்பு வாதங்களையும் கேட்டோம். சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களையும் பரிசீலித்தோம். இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் குற்றம் நிரூபிக்கப்பட்டதா இல்லையா என்பதை நீதிமன்றம் அறிவிக்கும்."


சித்தார்த்தும் அவன் தந்தையும் பெருமூச்சு விட்டனர். ஆனால் சுதாவோ, அஞ்சலியின் கையைப் பிடித்துக் கொண்டு, "நீதி கிடைக்கும் அஞ்சலி, நாம் போராடுவோம்" என்று உறுதியாகச் சொன்னார். 


சுதாவின் வார்த்தைகள் அஞ்சலியைச் சற்றுத் தேற்றினாலும், அதிகாரத்தின் பிடியும், சமூகத்தின் பயமும் அவளை அழுத்திக் கொண்டிருந்தது. அவள் அழுது கொண்டே..... சுதாவிடம் 


"எனக்கு ரொம்பப் பயமா இருக்கு, மேடம் இப்போதான் புரியுது, இந்த கேஸ் கொடுத்தது எவ்வளவு பெரிய தப்புன்னு. அவிங்க பெரிய இடத்துக்காரங்க. பணத்தையும், அதிகாரத்தையும் வெச்சு எங்களை என்ன வேணா செய்வாங்க. என்னால தாங்க முடியாது."



"கோர்ட்ல இவ்வளவு பேர் முன்னாடி என்னோட வாழ்க்கை வெளிச்சத்துக்கு வந்திருச்சு.  என்னோட மானமே போயிடுச்சு மேடம்... ஊருல, என் சொந்தக்காரங்க முன்னாடி எல்லாம் நான் எப்படித் தலை காட்டுவேன்?


அவங்க பேசுற பேச்சு, என்னைப் பெத்தவங்க மூஞ்சில நான் எப்படி விழிப்பேன்? எங்க குடும்பத்தோட கௌரவம்..."


அஞ்சலியின் இயலாமையைக் கண்ட சுதாவுக்குக் கோபம் கலந்த வருத்தம் வந்தது. தான் நம்பி போராடும் பெண், இப்படித் துவண்டு போவதைச் சுதாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


வழக்கறிஞர் சுதா: "அஞ்சலி! நான் கூட உன்னை தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன். இவ்வளவு துணிச்சலா கோர்ட் வரை வந்து நின்னியேன்னு பெருமைப்பட்டேன். ஆனா, நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி கோழையா பேசுற. உன் உடம்புக்குக் காயம்ன்னா மருந்து போட்டு ஆத்திடலாம். ஆனா, உன் மனசுல இருக்கிற இந்தத் தாழ்வு மனப்பான்மைதான் உண்மையான காயம். அதை நீதான் சரி செய்யணும்."


"யாரோ ஒரு சுயநலவாதி பண்ண தப்புக்காக, 

ஏன் நீ உன் வாழ்க்கையையும், உன்னோட எதிர்காலத்தையும் தொலைக்கணும்னு நினைக்கிற? உன்னைப் பயன்படுத்திய அவன் தான் மானங்கெட்டவன். பாதிக்கப்பட்ட நீ இல்ல. உன் மானத்தை எடுத்தவன் அவன், நீ இல்ல!"


"நீங்க சொல்றது சரி மேடம், ஆனா சமுதாயம் ஏத்துக்காதே..." என்று அஞ்சலி மீண்டும் ஏதோ சொல்ல வர, சுதா அதை மறுத்து 


"சமுதாயமா? அஞ்சலி! உன்னைப் மாதிரி ஏமாற்றப்பட்டு, அவமானப்பட்டு, வெளியே சொல்லத் தைரியமில்லாம, வீட்டுக்குள்ளேயே அழுதுட்டு இருக்கிற நிறையப் பேர் இருக்காங்க. 


அவங்க எல்லாருக்கும் நீதான் முன் உதாரணமாக இருக்கணும்! நீ இந்த வழக்கைத் துணிச்சலா எதிர்த்து நின்னாதான், நாளைக்கு இன்னொரு பொண்ணு ஏமாற்றப்படும்போது, 'அஞ்சலி மாதிரி நாமும் நீதி கேட்போம்'னு அவங்களுக்கு நம்பிக்கை வரு

ம். அதை விட்டுட்டு, இப்படித் துவண்டு போய், கோழை மாதிரி பேசாத!"


வழக்கு தொடரும்....


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்