Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

3 அழலின் அர்த்தம் நீயே

என்ன நடந்தது? யார்? ஏன்? என்ற எந்த கேள்வியும்  இல்லாது தன்னை திட்டுவிட்டுச் செல்லும் தாயையும் தந்தையையும் எந்த கணக்கில் சேர்க்க என்று தெரியாது அறையில் விட்டத்தைப் பார்த்து படுத்திருந்தாள் தாரா. 

வழக்கம் போல பாண்டிக் கடை பரோட்டாவோடு ஞானமூர்த்தி மகளைத் தேடி வந்தார். 

"சாயங்காலம் அப்பா ஏசிட்டேன்னு கோபமா தாராம்மா?" என்றவர் மகளின் தலையைக் கோதி விட வர.

அவர் கையில் இருந்த பார்சலை வாங்கிக் கொண்டு அவர் பேசுவதை காதில் வாங்காது டைனிங் டேபிள் நோக்கிச் சென்றாள் அவள். 

அவரும் ஒரு பெருமூச்சுடன் அவளைப் பின்தொடர்ந்து அவளது இருக்கைக்கு அருகில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவர் "பசங்க கூடவே பேசக் கூடாதுனு எல்லாம் அப்பா சொல்லல. கூட படிக்குற பையன், சந்தேகம் அது இதுனு கேட்டுக்க பேச தான் செய்யனும். இருந்தாலும் இப்படி கூப்பிட்டு தெருவுல பேசிட்டு வரது எல்லாம் நல்ல இல்லை. நாலு பேரு பார்த்தா உன்னைய தானே தாராம்மா தப்பா பேசுவாங்க" என்றார் அவர் தன்மையாக. 

தாரா எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்க.

"உன்கிட்ட தானே தாரா அப்பா பேசிட்டு இருக்காரு இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?" என்று கண்டிப்போடு அங்கே வந்தார் மனோகரி.

இருவரையும் சலிப்பாகப் பார்த்தவள் "நீங்க இப்படி எல்லாம் பேசுறதைக் கேட்கும் போது தான் செய்யாத தப்புக்கு பேச்சு வாங்குறதை விட செஞ்சுட்டு அடி வாங்கிக்காலாம்னு தோணுது" என்று பாதி சாப்பாட்டிலேயே கை கழுவி விட்டு எழுந்து சென்று விட்டாள் தாரா. 

"நம்ப அவளை ரொம்ப கட்டுப்படுத்துறோமோ?" என்று மனோகரி தன் கணவனிடம் கேட்க. 

"பொட்டைப் புள்ளையை அடக்கித் தான் வளர்க்கனும்" என்றார் ஞானசேகரன். 

அறைக்குள் வந்த தாராவோ 'எதுக்கு தேவையில்லாத தலைவலி இனி அந்த அர்ஜூன் கூட பேசக் கூடாது' என்ற முடிவுடன் உறங்கினாள். 

அதற்கு அடுத்த அவள் கல்லூரி நாட்கள் பெரிதாக ஆரவாரம் இல்லாது அமைதியாகச் சென்றது. 

கயலுடன் அவளது நட்பு உறுதியாகிக் கொண்டே சென்றது. 

அர்ஜூனிடம் இருந்து தாரா விலகியே இருந்தாள். கல்லூரியில் கூட அவனிடம் பேசுவது இல்லை. இப்பொழுதெல்லாம் ட்ரைவருடன் தான் அவள் கல்லூரிக்கு வருவதும் போவதும். 

அர்ஜூனும் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. 'தாரா பள்ளி நாட்களிலும் அப்படி தானே' என்று கடந்து விட்டான். 

அன்று கயலின் பிறந்த நாள். தாரா வகுப்பறைக்குள் நுழைந்ததும் "தாரா இந்தா கேக் எடுத்துக்கோ" என்று கயல் அவளிடம் கொடுக்க. 

"இன்னைக்கு என்ன ஸ்பெஷல் கேக் எல்லாம் குடுக்குற?" என்றாள் தாரா. 

அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்த கயலோ "இன்னைக்கு என் பர்த் டே. அதுக் கூட உனக்கு தெரியாதா?" என்ற கயல் கோபமாக அங்கிருந்து சென்று விட்டாள். 

'இதுக்கு ஏன் இவ இப்படி கோபப்பட்டு போறா? நாங்க ஒன்னும் பர்த் டே எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்க அளவுக்கு இன்னும் க்ளோஸ் ஆகலையே' என்று தாரா யோசித்தபடி கயல் சென்ற திசை நோக்கி நடந்தாள். 

அவளை எதிர்பட்ட அர்ஜூனோ "என்னாச்சி தாரா? கயல் கேன்டின்ல அழுதுட்டு இருக்கான்னு என் ப்ரெண்ட் சொன்னான். அவளைத் தான் தேடிப் போறேன். பிறந்த நாள் அதுவும் அவ எதுக்கு அழுகுறா?" என்று கேட்டான் புரியாதவனாய். 

தாராவும் நடந்ததைச் சொல்ல. 

"ப்ச் இந்த கயல் ஒரு செல்லக் கிறுக்கு. அவளோட பிறந்த நாளுக்கு நீ அவளை சர்ப்ரைஸ் பண்ணுவ அப்படி இப்படினு காலையில காலேஜ் வரும் போது புளம்பிக் கிட்ட வந்தா. உனக்கு அவ பிறந்த நாள் நியாபகம் இல்லைனதும் பயபுள்ள பொக்குனு போய்ருக்கும்" என்றான் அவன். 

"பர்த் டே நியாபகம் வச்சி சர்ப்ரைஸ் பன்ற அளவுக்கு நாங்க இன்னும் க்ளோஸ் ஆகலையே" என்றவள் புரியாது கேட்க.

"க்ளோஸ் ஆகாதது நீ. அவ இல்லை" என்ற அர்ஜூனோ சரி நீ க்ளாஸ் போ நான் அவளை சமாதானம் பண்ணி அனுப்பி வைக்குறேன்" என்ற அர்ஜுன் கேன்டின் நோக்கி நடந்தான். 

தாராவிற்கு எல்லாம் புதிதாக இருந்தது. அவளது நட்பு வட்டத்தில் எல்லாம் சில நாட்களுக்கு முன்பே பர்த் டே பார்ட்டி என்று சம்பந்தப்பட்டவரே அழைப்பு கொடுத்து விட்டு செல்வர். அவளது மற்ற நண்பர்கள் யாரும் இப்படி நடந்தது இல்லை. ஆனால் கயல் திடீரென வந்தாள் என் பிறந்த நாள் நினைவில்லையா என்று அழுது கொண்டே செல்கிறாள். இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றே தாராவிற்கு முதல் புரியவில்லை. 

தலையை உலுக்கிக் கொண்டு வகுப்பறைக்குள் சென்று அமர்ந்துக் கொண்டாள். 

சற்று நேரத்தில் கயலும் வந்தாள். ஆனால் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்து விட்டாள். 

தாராவிற்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. கயலிடம் பேச முற்பட்டாள் ஆனால் முடியவில்லை. 

ஏனோ அவளது முகத்திருப்பம் இவளை பாதித்தது. யாரிடமும் அவளிற்கு கெஞ்சிப் பழக்கமில்லை. அவளிற்கு அது வரவும் செய்யாது. ஒரு பெருமூச்சுடன் அமைதியாக அமர்ந்திருந்தாள். 

கயல் எப்பொழுதும் துருதுருவென செய்து கொண்டும் பேசிக் கொண்டும் இருப்பாள். வகுப்பில் ஆசிரியர் பாடம் நடந்தும் போது கூட குசுகுசுவென எதாவது கதை பேசிக் கொண்டும் ஆசிரியர் கண் மறைவில் எதாவது ஒளித்து வைத்து சாப்பிடுவது இடையில் தாராவிற்கு வேறு ஊட்டி விட்டு அவளையும் தன்னுடன் சேர்த்துக் கொள்வாள். 

இன்று கயல் எதுவும் பேசாது அமைதியாக இருப்பது ஒரு மாதிரி இருந்தது. 

ப்ரேக் டைமிலும் கயல் தனியாக கேன்டின் சென்று விட வகுப்பில் தனியாக இருக்க ஒரு மாதிரி இருக்கவும் அவளும் கேன்டின் நோக்கி சென்றாள். அவளிற்கு கயலை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை. 

இப்பொழுது தாராவிற்கு இங்கிருக்கும் ஒரே துணை அவள் மட்டுமே. 

அவளும் பேசாது சென்று விட மனம் ஏதோ செய்தது. ஒரு கூல்டிரிங்க்ஸை வாங்கிக் கொண்டு அமைதியாக கயலுக்கு பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள். 

சட்டென ஒரு கும்பல் அவர்கள் இருவரும் இருந்த மேஜையைச் சுற்றி வளைத்தது.

இருவரும் எதுவும் புரியாமல் விழிக்க... 

கூட்டத்தைப் பிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் அர்ஜுன். 

கூட்டம் மொத்தமும் 'ஹாப்பி பர்த்டே டூ யூ. ஹாப்பி பர்த்டே டூ யூ கயல்' என்று கோரசாகப் பாட கயலின் முன் கேக்கை நீட்டியவன் "ஹாப்பி பர்த் டே அரலூசு" என்று சொன்னான்.

அவளோ சிரித்த படி "தேங்க்ஸ்டா வளர்ந்த மாடே" என்று சிரிக்க. 

"தேங்க்ஸ் எனக்கு இல்லை உன் ட்ரென்டுக்கு சொல்லு" என்றவன் சட்டென தாராவின் கையைப் பிடித்து இழுத்து கயலின் முன் நிறுத்த. 

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். 

"சாரி தாரா, நேத்து நீ கேக் கட் பண்ணி கயலுக்கு சர்ப்ரைஸ் பண்ணனும்னு சொன்னதை மறந்துட்டேன்" என்றான் அர்ஜுன் அசடு வழிந்த படி. 

"அது தானே பார்த்தேன். வளர்ந்த மாடு, எல்லாம் உன் வேலை தானா?. நான் கொஞ்ச நேரத்துல தாராவை தப்பா நினைச்சிட்டேன்" என்று அர்ஜுனிடம் மல்லு கட்டிய கயல், தாராவிடம் "சாரி" என்றாள். 

தாராவும் என்ன சொல்ல என்று தெரியாது தலையசைத்து வைத்தாள். 

"சரி வாங்க கேக் கட் பண்ணலாம்" என்று கயல் அதில் பிஸியாகி விட.. 

பக்கவாட்டில் திரும்பிய தாரா, அர்ஜூனிடம் "ஏன் இப்படி?" என்று கேட்க. 

"பாவம் ரொம்ப ஆசைப்பட்டா பொக்குனு போய்டுவா. இதெல்லாம் அவ ஆசைப்படலை நீ ஜஸ்ட் விஸ் பண்ணியிருந்த கூட அவளுக்கு எதுவும் தெரியாது. மறந்துட்டேன்னு சொன்னதும் ரொம்ப ஹட் ஆகிட்டா" என்றான் அவன். 

"அதுக்கு பொய் சொல்லலாமா?" என்று தாரா கேட்க. 

"கயல் ஹப்பியா இருக்கா. இந்த பொய் யாரையும் காயப்படுத்தலையே அப்போ தப்பில்லை. வேணும்னா நீ ஒரு ஐந்நூறு ரூபாய் கொடு உன் காசுலையே எல்லாம் செஞ்ச மாதிரி ஆதிடும் பொய்யும் உண்மையாகிடும். அப்போ உனக்கு ஓகே தானே?" என்றான் அவன்.

இரு பக்கமும் தலையசைத்தவள் கண்களில் அவன் வித்தியாசமாக தெரிந்தான். 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்