Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

அழலின் அர்த்தம் நீயே

செங்கதிரோனின் கூரிய ஒளி, அலைகளின் மீது பட்டு உருகும் தங்கம் போல் பளபளத்தது.


வெயிலின் தாக்கத்தால் கரையில் நின்றவர்கள் கண்ணை மிதமாகச் சிமிட்டினர். அவ்வளவு பிரகாசம், அவ்வளவு தீட்சை!


மணலின் மேல் நடக்கும் ஒவ்வொரு அடியும்

வெப்பத்தை உணர்த்தினாலும், அலைகள் வந்து தழுவும் ஒவ்வொரு முறையும் அந்த வெப்பம் கரைந்து போயிற்று.


அந்த உச்சிப் பொழுதில், வானமும் கடலும் ஒரு கோட்டில் இணைந்து தெய்வத்தின் முகம் போல ஒளிர்ந்தன.


ஒவ்வொரு முறை அலைமகள் கரைத் தொடும் பொழுதும் உற்சாக கூச்சல் ஒன்று அந்த கடற்கரையையே திரும்பிப் பார்க்க வைத்தது. 


அங்கே பள்ளிச் சிறுமிகள் ஐவர் ஒன்று சேர்ந்து கடல் அலையில் விளையாடிக் கொண்டிருந்தனர். 


இன்றுடன் அவர்களது பள்ளிப் படிப்பு முடிய, தோழிகளைப் பிரியப் போகும் வலி ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தாலும் அந்த நொடியை அழகாக ஆழ்ந்து அனுபவித்தனர். 


ஐவரின் கைகளும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு இருந்தது. 


என்னவானாலும் சரி எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சரி இந்நட்பு என்றும் நீங்காமல் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டனர். 


ஒருவாறு கடல் அலையில் விளையாடி முடித்தவர்கள் பனங்கிழங்கை வாங்கி கொரித்துக் கொண்டே நாழி கிணறு நோக்கி நடந்தனர். 


"ஹே கோவில் உள்ள எல்லாம் வேணாம்டி, ரொம்ப நேரமாகும். வெளியில் நின்னு சாமி கும்பிட்டு வீட்டுக்கு கிளம்பலாம். அடுத்து எப்போ பஸ்னு வேற தெரியலை நேரமாகுது" என்று உருண்டுக் கொண்டே வந்தாள் அவள் தாரா. பின்னே வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் வந்து விட்டாள். எந்நேரமும் கெதக்கென்று இருந்தது. 


யார் கண்ணிலும் பட்டு விடக் கூடாது என்று. 


"ஹே கம்முனு வாடி. அதெல்லாம் ஒன்னும் நேரமாகாது. சாயங்காலம் நாலு மணிக்கு தான் பஸ். அதுவரை பஸ் டான்ட்ல நின்னு என்ன பண்றது? கொஞ்சம் கம்முனு இரு சும்மா நசநசனு" என்று அவள் மேல் எரிந்து விழுந்தாள் மேகலா. 


"ஏய் ஏன்டி அவ மேல எரிஞ்சு விழுகுற? நேரம் ஆகுதுனு தானே சொல்றா" என்று மஞ்சு அவளுக்கு பரிந்து பேச. 


"எங்களுக்கு மட்டும் நேரம் ஆகலையாடி? என்னைக்காவது எங்கையாவது கூப்பிட்டா வராளா? இன்னைக்கு தான் வந்துருக்கா அதுவும் கால்ல சுடுதண்ணி ஊத்தன போல படபடத்தா நாங்க என்னடி பண்றது? கொஞ்மாவது என்ஜாய் பண்ண விடுறாளானு பாரேன்" என்று மேகலா குறைபட. 


"ஹே உங்க வீட்ல எல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க. எங்க வீட்ல அப்படியா? உங்களுக்காக தானே நான் வீட்ல பொய் சொல்லிட்டு வந்து நிற்கிறேன். பயமா இருக்குடி. யாராவது பார்த்துட்டு போய் அப்பாகிட்ட எதையாவது சொல்லிட்டா என்ன பண்றது?. எனக்கு பயத்துல பொய் சொல்லக் கூட வராதுடி" என்றாள் தாரா பாவம் போல.


மற்றவர்களுக்கும் அவள் நிலை புரிய தான் செய்தது. 


ஒரு பெருமூச்சுடன் "சரி அப்போ கூட்டமா இருந்தா வெளியே நின்னு சாமி கும்பிட்டு போய்டலாம். உங்க வீட்ல ஏன் லேட்டுனு கேட்டா என் வீட்டுக்கு வந்தேன்னு சொல்லு. அப்படியே என்கிட்ட கேட்டாலும் நான் உன் வீட்ல சமாளிச்சிடுறேன் ஓகேவா?" என்றாள் மேகலா. 


அதன் பிறகு சாதாரண நாளாக இருந்தாலும் கோவிலில் கூட்டம் அதிகமாகவே இருக்க பிள்ளையார் கோவிலில் சாமியை கும்பிட்டு விட்டு அங்கிருந்த வளையல் கடை ஹோட்டல் என்று சுற்றி விட்டு அத்தனை பேரும் வீடு திரும்பவே மாலை ஆறு மணி நெருங்கி விட்டது. 


இங்கே தாராவிற்கு உயிரோ இல்லை. தாரா வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். தாய் சொந்தமாக புட்டிக் வைத்திருக்க தந்தை ரியல் எஸ்டேட் நகைக் கடை என்று பிசியாக இருப்பார். வீட்டில் அதிக செல்லம் கொடுத்து வளர்த்தாலும் தங்கக் கூண்டில் வளர்க்கப் படும் சிட்டுக் குருவி அவள். 


வீடு விட்டா ஸ்கூல் ஸ்கூல் விட்டா வீடு எது வேண்டும் என்றாலும் அவளது தந்தை ஞானமூர்த்தி தான் செய்வார். அவளது வீட்டின் மெயின் கேட் அருகில் செல்லக் கூட அவளுக்கு அனுமதி கிடையாது.


பள்ளி தவிர்த்து அவள் செல்ல அனுமதி கிடைக்கும் ஒரு இடம் மேகலாவின் வீடு தான். அதற்கு காரணம் மேகலாவின் தந்தையும் தாராவின் தந்தையும் நெருங்கிய நண்பர்கள். மற்றைய நேரங்களில் தாயின் புட்டிக்கில் தான் அவளது நேரம் போகும். 


இன்று கூட பள்ளி கடைசி நாள் பிள்ளைகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து திருச்செந்தூர் கோவில் செல்கிறோம் என்று சொன்னதற்கு முடியவே முடியாது என்று மறுத்து விட்டார் ஞானமூர்த்தி. 


அவளால் தான் இருப்புக் கொள்ளவே முடியவில்லை. கடைசியாக "சரி நான் அப்போ ஸ்கூல் முடிச்சி மேகலா வீட்டுக்கு போய்ட்டு சாயங்காலம் வரேன்ப்பா" என்று சொல்ல.


நண்பன் வீடு அதுவும் பள்ளிக்கும் அவர்கள் வீட்டிற்கும் இடையில் தான் மேகலாவின் வீடு என்பதால் ஒப்புக் கொண்டார். 


ஆனால் அவளோ தந்தைக்கு தெரியாது பரீட்சை முடிந்த கையோடு தோழிகளுடன் திருசெந்தூர் கிளம்பி விட்டாள். 


என்ன தான் வெளியில் சிரிப்பது போல இருந்தாலும் உள்ளுக்குள் அவளுக்கு பயமாகவே இருந்தது. 


படபடத்த இதயத்தோடு வீட்டிற்குள் அவள் நுழைய அவளது வரவிற்காகத் தான் காத்திருந்திருப்பார் போல ஞானமூர்த்தி. 


அவளோ அவரைக் கண்டு கொள்ளாது அவளது அறை நோக்கி நடக்க. அவளது நடையை தடை செய்தது ஞானமூர்த்தியின் "பாப்பா" என்ற அழைப்பு.


சட்டென நின்றவள் "என்னப்பா" என்றவர் அருகில் வர. 


"பரீட்சை எல்லாம் எப்படிம்மா எழுதுன?" என்றார் அவர் மகளை மடியில் அமர்த்தி. 


'ஹப்பா அப்பாவுக்கு திருசெந்தூர் போனது தெரியலை' என்று நிம்மதி பெருமூச்சு ஒன்றை விட்டவள். 


"ஓஓஓ சூப்பரா எழுதியிருக்கேன்ப்பா சென்டம் கன்பார்ம்" என்றாள் அவள் சிரித்த படி. 


"ரொம்ப சந்தோஷம்மா" என்றவர் மகளின் தலையை தடவிக் கொடுத்தார். 


"அப்புறம் திருச்செந்தூர் முருகன் கோவில்ல இன்னைக்கு செம கூட்டம்னு சொன்னாங்க அப்படியா?" என்றவர் கேள்வியாக மகள் முகம் பார்க்க.


"ஆமாப்பா கோவில் உள்ளவே போக முடியலை செம கூட்டம்" என்றவள் சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டு அவரிடமிருந்து சற்று தள்ளி நிற்க. 


"அடிங்க வீட்ல பொய் சொல்லிட்டு ப்ரெண்ட்ஸோட ஊர் சுத்துரு அளவுக்கு பெரிய மனுஷியாகிட்டியோ" என்று கோபத்தில் இடுப்பில் கிடந்த பெல்ட்டை கழற்றி தாராவை அடிக்க ஆரம்பித்து விட சத்தம் கேட்டு அவளது தாய் மனோகரியும் அங்கு வேலை செய்யும் பெண்களும் வந்து விட்டனர். 


"ப்பா வேணாம்ப்பா வலிக்குது ப்ளீஸ் ப்பா இனி ப்ரென்ஸேட எங்கையும் போக மாட்டேன். விடுப்பா எல்லாரும் பார்க்குறாங்க" என்றாள் அவள் அழுத படி. 


"நல்லா வலிக்கட்டும் எல்லாரும் பார்க்கட்டும். இப்போ அடிக்குறது நீ ப்ரெண்ட்ஸோட ஊர் சுத்துனதுக்கு இல்லை. என்கிட்ட பொய் சொல்லிட்டு போய்ட்டு வந்ததும் இல்லாம அதை என்கிட்டையே மறைச்ச பாத்தியா அதுக்கு தான்" என்றவர் மேலும் இரு அடிகளைப் போட.


அங்கிருந்த அத்தனைப் பேரும் அவளை ஒரு மாதிரி கேவலமாக பார்ப்பது போல உணர்வு. கண்ணில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது. 


"ப்ளீஸ்ப்பா இனி இப்படி பண்ண மாட்டேன் சாரி" என்றாள் அவள் கண்ணீரோடு. 


"ஏங்க அது தான் அவ இனி பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாளே விடுங்களேன்" என்று மனோகரி சொல்ல.


அவரோ கோபத்தில் கையிலிருந்த பெல்ட்டை எறிந்தவர் "வந்து புள்ளையைப் பாரு" என்று மனைவியிடம் சொன்னவர் அங்கிருந்து கிளம்பி விட்டார். 


தாரா தேம்பி தேம்பி அழுது கொண்டிருக்க. 


அவளைக் கட்டிக் கொண்ட மனோகரி "உன் அப்பாவுக்கு தான் பொய் சொன்னா பிடிக்காதுனு தெரியும்ல. அப்புறம் ஏன்டி பொய் சொன்ன?" என்ற படி மகளின் கண்ணீரைத் துடைக்க. 


"பிரெண்ட்ஸ் எல்லாரும் கம்பெல் பண்ணாங்கம்மா. எனக்கும் ஆசையா இருந்தது. அப்பாகிட்ட கேட்டேன் அப்பா தான் போகக் கூடாதுனு சொன்னாரு. அதனால தான் பொய் சொல்லிட்டு போனேன்" என்றாள் அவள் தேம்பலுடன்.


"உனக்கு என்னடி வயசு இப்போ? வெறும் பதினாறு தான். பொட்டைப் புள்ளைங்க தனியா போய் ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிட்டுனா என்ன பண்றது. அதுவும் கடல்ல, விளையாட்டுதனமா யாருக்காவது எதாவது ஆகிருந்தா? அம்மான்னா வருமா அப்பான்னா வருமா? அப்படியே உங்களுக்கு பிரெண்ட்ஸோட சுத்தனும்னா பெரியவங்க யாராவது ஒருத்தராவது துணைக்கு வேணாமா? நீ பண்ணது தப்பு தாராம்மா. பொய் சொன்னதும் இல்லாம அதை நியாயப்படுத்துறது அதை விட தப்பு" என்றார் மனோகரி மகளின் கன்னம் பிடித்து அவளிற்கு புரிய வைக்கும் நோக்கில். 


அவளோ சுற்றி நின்று தங்களை வேடிக்கைப் பார்க்கும் பணியாளர்களை ஓர்ப் பார்வை பார்த்தவள் "உங்களுக்கு தெரியாம வெளியப் போனது என் தப்புனா. இப்படி வேலை செய்றவங்க முன்னாடி வச்சி பெத்த புள்ளையை அடிச்சது உங்க தப்பு. தப்புக்கு தப்பு சரியாப் போச்சு" என்று தாயின் கையைத் தட்டி விட்டவள் தன்னறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள். 


இரவு சாப்பிட கூட அறையை விட்டு வெளியில் வரவில்லை அவள். 


இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஞானமூர்த்தியோ மனைவியிடம் முதலில் கேட்டது என்னவோ "பாப்பாவுக்கு மருந்து போட்டியா? பாப்பா சாப்பிட்டாளா?" என்று தான். 


"எங்க? வேலை செய்றவங்க முன்னை அவளை அடிச்சிட்டீங்கனு கோபம்... ரூமை விட்டே வெளிய வரலை. சாப்பாடு குடுத்து விட்டேன். அதையும் வேணாம்னு திருப்பி அனுப்பிட்டா" என்றார் அவர் சோர்ந்து போய். 


"புள்ளை கோவத்துல அப்படி தான் பண்ணும் அதுக்குனு அப்படியே விட்டுடுவியா?" என்று மனைவியை அதட்டியவர் "பாப்பாவுக்கு பிடிக்கும்னு பாண்டி கடையில பரோட்டோ வாங்கிட்டு வந்தேன். இப்போ பாரு என் புள்ளையை எப்படி சமாதானம் செய்யுறேன்னு" என்றவர் மகள் அறை கதவை தட்டினார். 


"பாப்பா கதவை திறடா இங்க பாரு அப்பா உனக்கு என்ன வாங்கிட்டு வந்துருக்கேன்னு. உனக்கு பிடிச்ச பரோட்டா வாங்கிட்டு வந்துருக்கேன். வா சேர்ந்து சாப்பிடுவோம்" என்று சொல்ல எதிர்முனையில் எந்த பதிலும் இல்லை. 


"இன்னும் அப்பா மேல கோவமாடா? நீ பண்ணது தப்பு தானே? அப்பா வேணாம்னு சொல்லியும் பண்ணியிருக்க. சரி எதோ ஆசைப்பட்டு பண்ணிட்ட, வந்ததும் அப்பாகிட்ட சொல்லியிருக்கனுமா வேண்டாமா? என் புள்ளை என்கிட்ட பொய் சொல்லுதானு கோபம் அதான் அடிச்சிட்டேன். சாரிடா பாப்பா வா வந்து சாப்பிடு" என்றவர் அழைக்க அப்பொழுதும் பதிலில்லை. 


"தாரா அப்பா தான் கூப்பிடுறாங்க இல்லை. என்னனு பதில் சொன்னா குறைஞ்சிடுவியா என்ன? முதல் வெளிய வா கதவைத் திற" என்று அதட்டினார் மனோகரி.


"ப்ச் விடு மனோ பாப்பா என் மேல கோவத்துல இருப்பா. அது போனதும் அவளே அப்பானு ஓடி வருவா பாரு" என்று மனைவியிடம் சொன்னவர் "பாப்பா பரோட்டா வெளிய இருக்கு எடுத்து சாப்பிடு" என்றவர் தளர்ந்த நடையுடன் அங்கிருந்து அகன்றார். 


அவர் அப்பொழுது அறிந்திருக்கவில்லை இது அன்றுடன் முடியப் போவது இல்லை என்று.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்