Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

தீ மீது வீணை 24

அத்தியாயம் 24

“சார்லஸ்?” காற்றுக்கும் கேட்காவண்ணம் இவள் அதிர்ந்து வாய் அசைக்க, மீண்டும் ஒரு குண்டு அவர்களுக்கு அருகில் வெடித்தது.

காதை பிளக்கும் அதன் சத்தத்தில் அதிர்ந்தவள், “ஆஆஆ…” என்று அலறித் துடிக்க, சட்டென அவளை இழுத்துக் கட்டிலுக்குக் கீழ் பதுங்கினான் மைக்கேல்.

“மைக்கேல்! அங்க…” அரண்டு அவள் விளிக்க, “உஷ்…” இதழ் குவித்து, எதுவும் பேசாதே என்பதைப் போல் சைகை காட்டியவன், மெத்தைக்குக் கீழ் ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியை உருவி எடுத்தான்.

“என்ன ஆனாலும் வெளியே மட்டும் வரக்கூடாது.” என்ற கட்டளையுடன் அங்கிருந்து உருண்டு ஓடியவன், கதவின் பின்னால் மறைந்து நின்றவாறே அவர்களைச் சுட ஆரம்பித்தான். பதிலுக்கு அவர்களும் தாக்குதல் நடத்த, அவ்வறையில் இருந்த பொருட்கள் எல்லாம் திசைக்கொன்றாய் சிதறி நொறுங்கின.

“டமால் டூமில்…” என்று துப்பாக்கி வெடிக்கும் சத்தத்துடன், “க்ராஷ்…” எனப் பொருட்கள் நொறுங்கும் சத்தமும் கேட்க, ஒவ்வொரு முறை சத்தம் வரும்போதெல்லாம் ரீனாவிற்கு உடல் அதிர்ந்து நடுங்கியது.

ரோமக் கால்கள் நட்டுக்கொள்ள, விரல்கள் நடுங்க கட்டில் காலைப் பிடித்துத் தாக்குதல் நடத்தும் நபர்களை எட்டிப் பார்த்தாள்.

மொத்தம் மூன்று பேர் இருந்தனர்.

அதில் ஒருவனாக அவளது தம்பி சார்லஸும் இருக்க, ‘சார்லஸா? சார்லஸா இதெல்லாம் பண்றான்?” அவளால் நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

‘மத்தவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி பேசக்கூட அவனுக்குத் தெரியாதே. அவன்… அவன் எப்படி இப்படி?’ நினைக்கும் போதே துக்கம் தொண்டையை அடைத்தது.

‘சே… சே… இருக்காது, இருக்காது.’ தலையை குலுக்கிவிட்டுத் திரும்பவும் அவன் முகம் கண்டாள்.

அவனேதான்.

அவளின் உடன்பிறப்புதான்.

இவள் திண்ணை பிடித்து நடக்கும்போது அவளைப் பிடித்து நடந்தவன் தான், இன்று துப்பாக்கியுடன் வந்து நிற்கிறான்.

முன்பு வெள்ளை நிறத்தில் குளிர்ந்திருந்த அவனது விழிகள், இன்று இரத்தமெனச் சிவந்து நெருப்பைக் கக்கின.

‘ஏன் இப்படி? எப்படி இப்படி மாறிப்போனான்? அவனுக்கு என்னாச்சு?’ இதயம் பதைபதைக்க, புருவம் இடுங்க யோசித்தாள்.

‘கூட இருக்கிறவங்க எல்லாம் யாரு? பார்க்க ரொம்ப மோசமானவங்க மாதிரி தெரியுறாங்க? இவங்களோட இவனுக்கு எப்படி பழக்கமாச்சு?’ என்ற கேள்வி, குடும்பத்தை இழந்து, அனாதையாய் தெருவில் விடப்பட்டவனுக்கு இது போன்ற சகவாசம் ஒன்றும் புதிதில்லை என்ற நிதர்சனத்தை அவளுக்குப் புரிய வைக்க, அவளுக்கு தன்மீதே கழிவிரக்கம் தோன்றியது.

‘நான் தான் எல்லாத்துக்கும் காரணம்? என்னால தான் நம்ம குடும்பம் இப்படி நாசமா போச்சு.’ தன்னையே கடிந்து தலையில் அடித்துக்கொண்டாள் ரீனா.

‘சாரி… சாரி டா சார்லஸ்! நான் தான் உன்ன இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டேன். பிளீஸ் பிளீஸ் பிளீஸ் டா முடிஞ்சா அக்காவ மன்னிச்சிடுடா?’ மானசீகமாய் அவனிடம் மன்னிப்பு வேண்டி மன்றாடினாள். வெளியே தொடர்ந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

ஒவ்வொரு முறை துப்பாக்கி வெடிக்கும் போதும், யார் யாரைச் சுட்டுக் கொன்றார்களோ என்ற பயம் அவளை உலுக்கிட, “மைக்கேல்… சார்லஸ்…” ஈனஸ்வரத்தில் புலம்பினாள்.

இதயம் படபடவென அடித்துக்கொள்ள, “பிளீஸ் காட்… பிளீஸ் சேவ் தெம்…” என கதறியபடி இறைவனை வேண்டிக்கொண்டாள்.

அந்த நேரம், வீட்டிற்குள் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக நினைத்த மார்கோவும் துப்பாக்கியுடன் களத்தில் இறங்கினார்.

மாடிப்படியிலிருந்து மார்கோவும், அறைக்குள் இருந்த மைக்கேலும் மாறி மாறித் தாக்க, தாக்குதல் நடத்தியவர்கள் நிலைகுலைந்தனர்.

அதோடு, கால்பந்தாட்டத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய கிரிஸ்டோபரும் லூகாவும் அவர்களுடன் இணைந்தனர்.

நான்கு திசைகளிலிருந்தும் தாக்குதல் தொடர்ந்ததால், எதிரிகள் பின்வாங்க ஆரம்பித்தனர்.

ஆனால் பழிவெறி கொண்ட சார்லஸ் மட்டும் பின்வாங்க மறுத்தான்.

தனது குடும்பத்தை நிர்மூலமாக்கிய மைக்கேலைச் சுட்டு வீழ்த்த வேண்டும் என்ற வெறியுடன் வந்தவனை, உடன் வந்தவர்கள் கையைப் பிடித்து இழுத்துப் பார்த்தனர்.

“டேய்! இதுக்கு மேல இங்க இருக்க வேணாம்.” கத்தி அழைத்துப் பார்த்தனர்.

உஹும்… இம்மியளவு கூட அசையாமல் நின்றவன், தோரணையாய் துப்பாக்கியை நீட்டி மைக்கேலை நோக்கி குறிபார்த்தான்.

அவனைப்போலவே மைக்கேலும் அவனைச் சுட்டுக் கொல்ல நினைத்து, தனது துப்பாக்கியை உயர்த்தினான். 

“நோ...” என்று அலறியபடியே அவ்விருவருக்கும் இடையே புகுந்தாள் ரீனா.

“ரீனா! மூவ்! ஐ செட் மூவ்!” கோபத்தில் கத்தி அவளைத் தள்ளிவிட முயன்றான் மைக்கேல்.

அசைந்து கொடுக்காமல் மைக்கேலின் முன்னால் அரணாய் நின்றவள், கலங்கிய விழிகளுடன் சார்லஸைப் பார்த்து, “கோ... கோ... பிளீஸ் கோ...” என கத்திக் கதறினாள்.

ஒரு கணம் அவளை வெறித்துப் பார்த்த சார்லஸை, அவனுடன் வந்தவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

அவர்களைத் துரத்திக்கொண்டு கிரிஸ்டோபர் ஓட, “போடா... போ… போயிடு... ப்ளீஸ்... தயவு செஞ்சு போயிடு...” என உடைந்து அழுதவள், உடல் தளர மண்டியிட்டுத் தரையில் சரிந்தாள் ரீனா.

விழிநீரோ உடையை நனைக்க, உடைந்து அழுந்தவளின் கன்னத்தில் விரல் தடம் பதிய ஓங்கி ஒரு அறை விட்டான் மைக்கேல்.

அவன் அடித்த அடியில் விழிகளில் பூச்சி பறந்தது ரீனாவுக்கு.

நைந்த உடலோடு தரையில் விழுந்தவளின் பிடரியைப் பற்றித் தூக்கினான் மைக்கேல்.

வலி தாங்க முடியாமல், “மைக்கேல்…” என்று அவள் முணுமுணுக்க, “ச்சே… நீயெல்லாம் ஒரு பெண்ணா? இப்பதான்டி உன்னை முழுசா நம்புனேன். அதுக்குள்ள… அதுக்குள்ள எப்படிடி எனக்கு இப்படியொரு துரோகத்தை பண்ண உனக்கு மனசு வந்துச்சு?” குரல் உடைந்தது அவனுக்கு.

“மைக்கேல் ப்ளீஸ்… நா… நான் சொல்றத கேளுங்க.” நா தழுதழுக்க கெஞ்சினாள் ரீனா.

“எத கேட்கச் சொல்ற? ஹாங்! சொல்லு, எத கேட்கச் சொல்ற? முதல்ல அவன் யாரு? நல்லவனா அத சொல்லுடி பார்ப்போம்!” அவளது பிடரியை உலுக்கி அவன் கேட்க, தம்பியைக் காட்டிக்கொடுக்க விரும்பாமல் பேசாமடந்தையானாள் ரீனா.

“ஃப்**** பி****” எச்சில் உமிழக் கெட்ட வார்த்தை பேசி அவளை அழைத்தவன், “சொல்லுடி நாயே, அவன் யாரு?” என்று அதட்ட, பொங்கிய விழிநீரைத் துடைத்துக்கொண்டு, தன்னை மீறி வார்த்தைகள் வெளிவரக் கூடாது என நினைத்து இதழ் கடித்தாள் ரீனா.

தலைமுடியை இறுகப்பற்றி ஒரு உலுக்கு உலுக்கியவன், கண்ணோடு கண் பார்த்து, “நான் சொல்லட்டுமா?” என்று வினவ, இதயத்துடிப்போ மெல்ல அதிகரித்தது ரீனாவிற்கு.

‘ஐயோ சார்லஸ்.’ உள்ளுக்குள் பதறியவள் வெளியே அவனது விழிகளை ஊடுருவினாள்.

“வந்தவன் உன் தம்பி சார்லஸ், ரைட்?” என்ற கேள்வியுடன் அவளை விட்டான் மைக்கேல்.

ஒருவித கோபம் கலந்த வெற்றுப் புன்னகையுடன் அவன் நிமிர, “பிளீஸ் மைக்கேல் அவன ஒன்னும் செய்யாதீங்க?” என்று கதறியபடியே அவனது கால்கள் இரண்டையும் பற்றிக்கொண்டு மன்றாடினாள்.

அதே நேரம், “பாஸ்… உங்களுக்கு ஒன்னும் ஆகலையே?” பதறி வினவியபடியே அவ்விடம் ஓடி வந்தான் கிரிஸ்டோபர்.

அவன் குரல் கேட்டதும் கெஞ்சுவதை நிறுத்திவிட்டு இவளோ கண்ணீரைத் துடைத்துக்கொள்ள, இருவரையும் விழிகளால் அளந்தப்படியே, “அவனுங்க ஓடி போயிட்டானுங்க பாஸ்.” என்றான் கிரிஸ்டோபர்.

“வந்தவனுங்க யாருனு பாத்தியா?” வேட்டையாடக் காத்திருக்கும் வல்லூறுவாய் சிவந்த விழிகளுடன் வினவினான் மைக்கேல்.

“எல்லாம் ஆண்டனியோட ஆளுங்க பாஸ்.” என்றான் கிரிஸ்டோபர்.

“எப்படிச் சொல்ற?” ஆழமாய் கிரிஸ்டோபரைப் பார்த்தபடியே மைக்கேல் வினவ, “வந்தவன்ல ஒருத்தன் ஆண்டனியோட லெப்ட் ஹேண்ட் மார்க் பாஸ். எனக்கு நல்லாவே தெரியும்.” என்றான் கிரிஸ்டோபர் அழுத்தம் திருத்தமாக.

“உஹும்…” கசந்த புன்னகை இதழோரம் கசிந்திட, “ஆண்டனி ஆளுங்க கூட சேர்ந்துட்டானா...” முணுமுணுத்துக்கொண்டவன், மெல்ல ரீனாவை நோக்கி முகத்தைத் திருப்பினான்.

“இந்த ஆண்டனியும் அவன் ஆளுங்களும் யாருனு உனக்கு ஞாபகம் இருக்கா? அன்னைக்கு நீயும் நானும் பேசிட்டு இருக்கும்போது கோழை மாதிரி சுட்டானுங்க இல்ல, அவனுங்க… அவனுங்க கூட உன் தம்பிக்கு என்னடி வேலை? ஹாங்! சொல்லு, என்ன வேலை?” நிதானமாய் ஆரம்பித்து உச்சஸ்தானத்தில் மைக்கேல் கத்த, வெளவெளத்தது ரீனாவிற்கு.

தொண்டை வரண்டு நீருக்கு ஏங்க, “அது… அது…” என வார்த்தைகளை மென்று விழுங்கினாள்.

பதில் பேச வார்த்தைகள் இன்றி இவளோ தலை கவிழ, “இங்க பார் ரீனா! உன் குடும்பத்து ஆளுங்கள என்கிட்ட இருந்து காப்பாத்த நினைக்காத!” எச்சரிக்கும் தொனியில் அவன் பேச்சை நிறுத்த, சட்டெனத் தலை தூக்கினாள் ரீனா.

‘ஒரு சாதாரண விபத்தை கொலையாக்கி ஒரு குடும்பத்தையே குருவி கூட்டை கலைக்கிற மாதிரி கலைத்துவிட்டு என்ன பேச்சு இது?’ உள்ளக் கிடங்கில் புதைந்து கிடந்த ஆற்றாமை கோபமாய் உருமாறிட, “ஏன்? ஏன் நினைக்கக்கூடாது? ஏன் சார் நினைக்கக்கூடாது? ஆமா, அவன் ஆண்டனி ஆளுங்க கூடத்தான் இருக்கிறான். அதுக்குக் காரணம் யாரு? நீங்க?” முதன்முறையாக அவனது முகத்துக்கு நேராக விரல் நீட்டினாள் ரீனா.

“நானா? வாட்?” அவனோ அதிர்ந்து வினவ, “ஆமா…” அறை அதிர கர்ஜித்தாள் ரீனா.

“நீங்க… நீங்கதான்.” அவனது மார்புக்குக் குறுக்கே விரல் வைத்தவள், “என் குடும்பம் இன்னைக்கு நாலாப்பக்கமும் சிதறிக்கிடக்குதுனா அதுக்குக் காரணம் நீங்க. என் தம்பி இன்னைக்குச் சேரக்கூடாத இடத்துல இருக்கான்னா அதுக்குக் காரணமும் நீங்க. நான்… நான்… கண்ணீரே பார்க்காத என் கண்கள்…  இன்னைக்குக் கண்ணீர் நெருப்புல எரியுதுனா…” குரல் நடுங்க, “அதுக்குக் காரணமும் நீங்க.” என்று அவள் முடிக்க, இதயத்தில் எங்கோ வலி எடுக்க, மார்பைப் பற்றி நிற்க முடியாமல் தடுமாறினான் மைக்கேல்.

“ரீனா…” இதழ்களோ வலியுடன் அவளை அழைக்க, “இவ்வளவு தப்பையும் நீங்க பண்ணிட்டு… என் குடும்பத்தைப் பழிவாங்கப் போறீங்களா?” இதழ்கள் துடிக்க ஆற்றாமையில் பொறிந்தாள்.

“உங்க அப்பா அம்மா சாவுக்கு நானும் என் குடும்பமும் தான் காரணம்னு நினைச்சுக்கிட்டு எங்க அப்பாவைச் ஜெயில்ல போட்டீங்க, என்னை… மெண்டல் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்புனீங்க. அதே மாதிரி என் தம்பியும் அவன் அப்பாவுக்காவும் அக்காகாகவும் பழிவாங்கத் தப்பான வழிக்கு போயிட்டான்.” உள்ளமோ கொதிகலன் போல் கொதித்திட, உடைந்த குரலில் அவனை குற்றம் சாட்டினாள்.

அதுவரை அவளது வார்த்தைகளில் அனலில் இட்ட புழுவாய் துடித்துக்கொண்டிருந்தவன், அவள் அப்பாவையும் தம்பியையும் இழுக்கவும், ‘என்னை விட அவங்க தான் இவளுக்கு முக்கியமா போயிட்டாங்களா?’ என்ற எண்ணம் வர, “வேண்டா ரீனா! என்னை மிருகமாக்கிப் பார்க்காத!” என்று உறுமினான் எச்சரிக்கும் தொனியில்.

“யார யாரோட கம்பேர் பண்ற? நானும் உன் தம்பியும் ஒன்னாடி? எங்க அப்பா அம்மாவ உன் அப்பன் தான் திட்டம் போட்டு கொன்னானு தெரிஞ்சும் இன்னும் உன் அப்பனை நான் கொல்லாம இருக்கேன்ல… ஏன் நீ சொல்ல மாட்ட?” என்றான் சீற்றமாக.

“எங்க அப்பா யாரையும் கொல்லல.” அவன் வாய் மூடும் முன் இவள் வார்த்தை விட, அதுவரை இழுத்துப் பிடித்து வைத்திருந்த கோபமோ தலைக்கு மேல் ஏறி நிற்க, பக்கா மிருகமாகிப்போனான் மைக்கேல்.

“ஏய்…” உச்சஸ்தானத்தில் உறுமியவன், மீண்டும் ஒருமுறை அவளது கன்னம் பழுக்க ஓங்கி ஓர் அறைவிட, தூர போய் விழுந்தாள் ரீனா.

“நானும் கிளிப்பிள்ளைக்குச் சொல்ற மாதிரி சொல்றேன். கேட்கமாட்டியாடி? கோபத்தில் அவளை மிதிக்க இவனோ கால் ஓங்க, “பாஸ் பிளீஸ்…” அதுவரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்த கிரிஸ்டோபரோ இப்போது மைக்கேலின் இடையை இறுகப்பற்றி வெளியே இழுத்தான்.

“முட்டாள்! உன் அப்பனும் ஒருகாலத்துல ஆண்டனி ஆளு தான்டி. என் அப்பாவ கொல்லத்தான் உன் அப்பன் நம்ம கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிருக்கான்.” கிரிஸ்டோபரின் கரத்தில் திமிறியபடியே இவன் சொல்ல, “பொய்! பொய் சொல்லாதீங்க. எங்க அப்பா அப்படிப்பட்ட ஆள் கிடையாது.” சற்றும் நம்பாமல் அவனை எதிர்த்து நின்றாள் ரீனா.

“லூசு…” கையில் கிடைத்ததை எல்லாம் அவள்மேல் தூக்கி எறிந்தான்.

அவைகளோ அவளது உடலை சேதப்படுத்த, அவ்வளவு அடிகளை வாங்கிக் கொண்டும் சிறிது கலங்காமல் இமய மலையென நிமிர்ந்து நின்றாள் ரீனா. 

கிரிஸ்டோபர் தான் பயந்துப் போய், “பாஸ் பிளீஸ் கன்ட்ரோல் யுவர்செல்ஃப்.” கெஞ்சியபடியே மைக்கேலை அடக்க முயன்றான். 

அவன் அடக்க அடக்க திமிறியபடியே, “விடு கிரிஸ்டோபர். இன்னைக்கு நானா, அவளானு பாத்துடுறேன். என்னமோ நான்… நான் வேணும்னே பண்ண மாதிரி சொல்றா? நீயும் பார்த்ததான? எத்தனை தடவை விசாரிச்சிருப்பேன். எத்தனை பேர பார்த்திருப்பேன். இவ்வளவு ஏன் இவ அப்பன்… அவன் என்ன சொன்னான்? நான் தான் கொன்னேனு அவனே ஒத்துக்கிட்டானே. அப்புறமும் என்ன?” கொந்தளித்தான். 

“எங்க அப்பா அப்படி சொல்லிருக்க மாட்டார். ப்ளீஸ் பொய் சொல்லாதீங்க.” ஆடை நுனியை இறுகப்பற்றிப் பதில் கொடுத்தாள் ரீனா.

அவளின் நிதானம் இன்னுமே வெறியேற்றியது அவனுக்கு.

“F*** இடியட்! பிறவி பைத்தியமாடி நீ? உங்கப்பனுக்கு எதிரா இவ்வளவு எவிடன்ஸ் இருக்குனு சொல்றேன். கொஞ்சம் கூட காதுல வாங்காம…” என்று அவன் முடிக்கும் முன், “அதெல்லாம் குப்பையில தூக்கிப் போடுங்க! எவிடன்ஸாம் எவிடன்ஸ்… நான் அந்த சோ கால்ட் எவிடன்ஸ நம்புறவ இல்லை.” தனது இதயத்தைச் சுட்டிக்காட்டி, “இங்க… இங்க என்ன சொல்லுதோ அதை நம்புறவ.” தீர்க்கமாகக் கூறி அவள் தனது உரையை முடிக்க, இதயத்தை யாரோ குத்திக் கிழித்த உணர்வு வர, உடல் தளர்ந்தது மைக்கேலுக்கு.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்