தீ மீது வீணை 23
அத்தியாயம் 23
“நா... நான் ஒன்னும் பண்ணல... இது தானாவே கத்துது...” பதற்றத்தில் காதை மூடிக் கொண்டாள் ரீனா.
“தானாவே கத்ததுதா? எத தொட்ட?” சுற்றும் மூற்றும் பார்வையை ஓட விட்டபடியே விசாரித்தான் மைக்கேல்.
“நா… நான் ஜஸ்ட் கேஸ்… கேஸ் தான் ஆன் பண்ணேன்.” நடுக்கத்துடன் இவளோ ஒரு சிவப்பு நிற பொத்தானை சுட்டிக்காட்ட, “இதையா? இதையா அமுக்குன? இது என்ன தெரியுமா? பயர் அலாரம்.” குற்றம் சட்டம் தொனியில் பேசியவன், விறுவிறுவென அந்த பொத்தானை அழுத்தி அதன் சத்தத்தை நிறுத்தினான்.
“சாரி.” பள்ளி மாணவி போல இவளோ தலைக் கவிழ, “தெரியலன்னா என்னைக் கூப்பிட வேண்டியதுதானே?” உரத்த குரலில் கண்டித்தான் மைக்கேல்.
அவனது குரல் நடுக்கத்தை வரவழைக்க, இமைகள் படபடக்க, “பசிச்சுச்சு… அதான்.” வார்த்தைகளை இவளோ மென்று விழுங்க, “ஏன்? கிரிஸ்டொபர் செஞ்சு வைக்கலையா?” அதே குரலில் புருவம் இடுக்கினான் மைக்கேல்.
“தெரியல.” மறுப்பாய் தலையாட்டிவிட்டு மீண்டும் அவள் தலை கவிழ, “தெரியலையா? ஆமா அவன எங்க?” என்றவனின் விழிகள் கிரிஸ்டோபரை தேடின.
“லூகா கூட புட்பால் மேட்ச் பார்க்க போறேன்னு... நீங்க கூட பர்மிஷன் கொடுத்தீங்களே.” ஏற்ற இறக்கத்துடன் ரீனா பேசிட, “பர்மிஷன் கொடுத்தா சாப்பாடு கூட செஞ்சு வைக்காம போயிடுவானா? வர வர அவனுக்கு ரொம்பத்தான் குளிர்விட்டு போச்சு. வரட்டும்... வச்சுக்கிறேன்.” என கருவிக் கொண்டவன், குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தான்.
உள்ளே சில ரொட்டி துண்டுகளும், ஐந்து முட்டைகளும் இருந்தன.
“பிரட் ஆம்லெட் ஓகே?” என்றபடியே இரண்டு முட்டைகளை அவனோ கையில் எடுக்க, “இல்ல! நா... நானே பண்ணிக்கிறேன்...” தயக்கமோ பயமோ காற்றுக்கும் வலிக்கா வண்ணம் முணுமுணுத்தாள் ரீனா.
இடுப்பில் கை வைத்து தோரனையாய் ஒரு முறை அவளை ஏற இறங்க பார்த்தவன், “முதல்ல ஸ்டவ் எதுன்னு கண்டுபிடி. அப்புறம் சமைக்கலாம்.” என்றான் மட்டம் தட்டும் தொனியில்.
“ம்ம்… ரொம்ப தான்.” பதிலுக்கு இவளோ உதடு சுளிக்க, “என்ன அங்க முணுமுணுப்பு. போ! அந்த பிளேட்ட எடுத்துட்டு வா.” ஏதோ சிறு குழந்தையை அதட்டுவது போல் அதட்டிவிட்டு அடுப்பிலிருந்த பொத்தானைத் திருப்பினான் மைக்கேல்.
அடுத்த நொடியே, “பக்...” என்று நீல நிற நெருப்பு பற்றிக் கொண்டது.
நம்மூர் சாதாரண எரிவாயு அடுப்புகளை பார்த்து வளர்ந்தவளுக்கு அதிநவீன அடுப்பு வியப்பை நல்கியது.
பிங்காய் தட்டுடன் திரும்பியவள், “கேஸ் லைட்டர் வேணாமா?” என்றாள் விழி விரிய.
“ஹும்… எலெக்ட்ரிக் இக்னிஷன் ஸ்டவ்வுக்கு எதுக்கு லைட்டர்?” குறுநகையுடன் வாணலியை அடுப்பில் வைத்தவன், முட்டையை உடைத்து அதில் ஊற்றினான்.
“ஓ...” என்ற ஒற்றை வார்த்தையோடு அமைதியானாள் ரீனா.
சிறிதளவு உப்பும், மிளகுத் தூளும் தூவியவன், அதன் மேல் இரண்டு ரொட்டித் துண்டுகளை வைத்து பொன்னிறமாக வேக வைத்து எடுத்து அவளது தட்டில் போட்டான்.
“இந்தா போய் சாப்பிடு.” அன்பாய் கட்டளையிட்டவன் மீண்டும் வாணலியில் மூட்டை ஊற்றி தனக்காக சமைக்க ஆரம்பித்தான்.
‘சாப்பிடலாமா? சாப்பிட்டா ஒன்னும் ஆகாதே!’ என்ற யோசனையுடன் அவனையும் தட்டையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் ரீனா.
“அதுல என்ன பாய்சனா கலந்திருக்கு? இரண்டு முட்டை… இரண்டு பிரெட்… அவ்வளவுதான்.” கேலியாக உதடு வளைத்தவன், அவளது தட்டிலிருந்து ஒரு துண்டை எடுத்துத் தானே சாப்பிட்டுவிட்டு, “இன்னும் சாவல. சாப்பிடு.” என்றான் குத்தலாக.
“ப்ச்…” எரிச்சலுடன் அவனை முறைத்துவிட்டு, தயக்கத்துடன் ஒரு வாய் எடுத்து வைத்தவளின் கண்கள் அதன் ருசியில் விரிந்தன.
முட்டையின் மென்மையும், மிளகின் காரமும், வெண்ணெய் மணமும் கலந்து நாவில் கரைய, “வாவ்...” என தன்னையும் அறியாமல் கூச்சலிட்டாள் ரீனா.
“என்ன எப்படி இருக்கு?” கேட்டபடியே சாப்பிட தயாரானான் மைக்கேல்.
“ம்ம்… நல்லா இருக்கு. ஆமா உங்களுக்கு சமைக்கலாம் தெரியுமா?”
“சமைக்கிறதுக்கு என்ன? அது என்ன அவ்வளவு பெரிய டாஸ்கா?” தோளை குலுக்கிவிட்டு நிதானமாய் உண்டான் மைக்கேல்.
“அப்ப… அப்ப உங்களுக்கு பிரியாணி வைக்க தெரியுமா?” ஆர்வத்துடன் ரீனா வினவ, ஒரு நொடி அவளை பார்த்தவன், “தெரியும்.” என்றான் அழுத்தம் திருத்தமாய்.
“பிராமிஸா?”
“ஹும்… பிராமிஸா.” கேலியாக இவனோ உதடு வளைக்க, “பிளீஸ் பிளீஸ்… அப்ப எனக்கு இன்னைக்கு சிக்கன் பிரியாணி பண்ணி தாங்களேன்! பிளீஸ்.” ஒரு கண் போட்டு கெஞ்சினாள் ரீனா.
கெஞ்சியவளை உடனே கொஞ்ச தோன்றியது அவனுக்கு.
அதனுடனே அவளை சீண்டிப்பார்க்கும் எண்ணமும் தோன்றிட, “ம்ம்ம் பிரியாணி பண்ணலாம் தான். ஆனா பண்ண மாட்டேனே.” என்றான் நக்கலாக தோளை குலுக்கி.
“பிளீஸ் பிளீஸ்…” பல தடவை அவளை கெஞ்சவிட்டு வேடிக்கை பார்த்தவன், இறுதியாக, “ஓகே பட் ஒன் கண்டிசன்.” என்க, “என்ன மைக்கேல்? என்ன பண்ணனும்?” பிரியாணி சாப்பிடும் ஆசையில் வாய் விட்டாள் ரீனா.
“ம்ம்ம்... இன்னைக்கு நான் என்ன சொன்னாலும், ‘ஏன்? எதுக்கு?’ன்னு கேட்கக் கூடாது. மறுத்துப் பேசாம நான் சொல்றத மட்டும் செய்யணும். ஓகேவா?” ஏதோ ஒரு திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு புதிர் போட்டான் மைக்கேல்.
“ஏன்?” அவனது உள்குத்து புரியாமல் புருவம் உயர்த்தினாள் ரீனா.
“ப்ச்... இப்பத்தான் சொன்னேன். உடனே ‘ஏன்?’ன்னு கேட்டுட்ட? ம்ம்... போ. உனக்கு இன்னைக்கு பிரியாணியே கிடையாது.” என்று செல்லக் கோபம் காட்டி முகத்தைத் திருப்பிக் கொண்டான் மைக்கேல்.
உடனே, “அச்சச்சோ...” என பதறியவள், “சாரி... சாரி... தெரியாம கேட்டுட்டேன். இனிமே கேட்கல... ப்ளீஸ்... ப்ளீஸ்...” என்று அவனது கரத்தைப் பிடித்து ஆட்டியபடியே கெஞ்சினாள் ரீனா.
“ப்ச்... சரி, நீ இவ்வளவு கெஞ்சுறதால பிரியாணி செய்றேன். கிளம்பு.” என்றவன் விறுவிறுவென படி இறங்கி கீழே ஓட,
“எங்க? எங்க கிளம்பணும்?” அவசரமாக வினவியபடியே அவனுக்குப் பின்னால் ஓடி வந்தாள் ரீனா.
“இப்பத்தான் நான் என்ன சொன்னாலும் ‘ஏன்? எதுக்கு?’ன்னு கேட்க மாட்டேன்னு சொன்ன?” என்று அவளை வார்த்தைகளால் மடக்கியவன், மார்கோவிடம் இருந்து இருசக்கர வாகனம் ஒன்றை இரவல் வாங்கி வந்தான்.
வண்டியின் அக்சிலேட்டரை முறுக்கியபடியே, “ஏறு” என்று அவன் கட்டளையிட, “எல்லாம் இந்த சிக்கன் பிரியாணிக்காக...” வாய்க்குள் முணுமுணுத்தபடியே, அமைதியாக வண்டியில் ஏறி அமர்ந்தாள் ரீனா.
உடனே வண்டியை எடுத்தவன், சாலையில் தனது வேகத்தை கூட்ட, பின் இருக்கையில் பிடிமானம் இன்றி தத்தளித்தாள் ரீனா.
“பிடிச்சுக்க.” முன்னால் பார்த்தபடியே இவனோ கட்டளையிட, “எத?” வழக்கம்போல் கேள்வி கேட்க வாய் திறந்தவள், அவனது நிபந்தனை நினைவுக்கு வரவும், சட்டென்று வாயை மூடிக் கொண்டாள்.
அதைக் கண்ணாடியில் பார்த்து இவனோ இதழ் வளைக்க, தயக்கத்துடனே அவனது தோளைப் பற்றிக் கொண்டாள் ரீனா.
இருபுறமும் புல்வெளிகள், பூங்காக்கள், ஆப்பிள், திராட்சை போன்ற பழத்தோட்டங்கள் நிறைந்திருக்க, அனைத்தையும் விழி அகல ரசித்தபடியே வந்தவளுக்கு ஏனோ தந்தையின் ஞாபகம் மெல்ல எட்டிப் பார்த்தது.
“டாடி! இந்த மரங்கள் எல்லாம் ஏன் பின்னாடியே போகுது?” சிறுவயதில் இப்படித்தான் சம்பந்தமே இல்லாமல் கேள்வி கேட்டு அவரை நச்சரித்தபடியே வருவாள்.
அவரும் சலிக்காமல், “அதுவா? நாம முன்னாடி வேகமாப் போறோம்ல... அதான் அதெல்லாம் பயந்துப் பின்னாடியே போகுது.” என்று குறும்பாகப் பதில் சொல்வார்.
எதிர்காற்று முகத்தில் அடிக்கும் போதெல்லாம், “வாவ்... சூப்பரா காத்து வருது டாடி! இன்னும் கொஞ்சம் வேகமாப் போங்களேன்.” என்று அவசரப்படுத்துவாள்.
அவரும் அவளது சந்தோஷத்தை ரசித்தபடியே வண்டியின் வேகத்தைச் சற்றுக் கூட்டுவார்.
“ஏய்...” என இரு கைகளையும் விரித்து காற்றை அணைத்தபடி சிரித்த அந்தச் சிறுவயது நினைவுகள், ஒரு கணம் அவளது கண்முன்னால் விரிந்தன.
அறியாமலே அவளது கரங்கள் வானை நோக்கி விரிய, கண்ணாடி வழியே அதைக் கவனித்த மைக்கேல், எதுவும் பேசாமல் வாகனத்தின் வேகத்தை மெல்லக் கூட்டினான்.
எதிர் காற்றோ இன்னும் வேகமாய் முகத்தில் மோத கண் மூடி அதை ரசித்தவள், “வாவ்! சூப்பர் டாடி... சூப்பர்...” தன்னையறியாமல் கத்திவிட்டாள் ரீனா.
“டாடி…” என்ற வார்த்தையில் முகம் மாறியது மைக்கேலுக்கு.
தாடை இறுக, எதுவும் பேசாமல் அக்சிலேட்டரை மேலும் முறுக்கி அதன் வேகத்தை கூட்டினான் மைக்கேல்.
வேகம் திடீரென அதிகரிக்க, நிலைகுலைந்து அவனது தோளை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டாள் ரீனா.
“ஐயோ... ஏன் இவ்வளவு வேகமாப் போறீங்க? கொஞ்சம் மெதுவாப் போங்களேன், மைக்கேல்...” பயத்தில் இவள் கெஞ்ச கெஞ்ச படுவேகத்தில் முன்னேறியவன், கடைக்கு முன் சட்டென வாகனத்தை நிறுத்தினான்.
அவன் நிறுத்தியவேகத்தில் தனங்கள் அழுந்த அவனது முதுகில் இவளோ மோதி நிற்க, அதன் மென்மையில் தனது கோபத்தை மறந்தான் மைக்கேல்.
“ஏன் இவ்வளவு வேகம்?” கடிந்தபடியே வாகனத்தைவிட்டு இவளோ கீழே இறங்க, “ஹும்… நல்ல அப்பா.” முணுமுணுத்தபடியே வாகனத்தை சாவியால் பூட்டினான்.
அவனது முணுமுணுப்பு காதில் விழுந்தும் அதன் அர்த்தம் புரியாமல், புருவம் சுருக்கி இவள் அவனைப் பார்க்க, “இங்க என்ன பார்க்கிற போ! போய் கோழி வாங்கிட்டு வா.” வாகனத்தில் சாய்ந்து நின்று அலட்சியமாய் கட்டளையிட்டான்.
“வாட்? நானா?” அதிர்ச்சியில் இவளோ வாய் பிளக்க, “கேள்வி கேட்காம நான் சொல்றதை எல்லாம் செய்வேனு யாரோ சொன்னாங்க.” குறும்பு கண்களில் மின்னிட, பிடரியை வருடியபடியே சீண்டினான் மைக்கேல்.
“ஐயோ மைக்கேல் நானா? பிளீஸ் எனக்கு அதெல்லாம் தெரியாது.” தயக்கி சிணுங்கினாள் ரீனா.
“தெரிஞ்சுக்கோ... போ.” ஒற்றை வரியில் பதில் கொடுத்துவிட்டு அவனோ முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“ஐயோ...” என்று இதழ் சுளித்தபடியே கடைக்குள் நுழைந்தாள் ரீனா.
கோழிக் கடைக்குள் நுழைந்த ரீனா, ஸ்லோவேனிய மொழியில் அவளை வரவேற்ற கடையின் உரிமையாளரிடம்,
“சிக்கன்... சிக்கன்...” என்று கூறியபடியே, இரண்டு விரல்களை மடக்கி கோழி கொத்துவது போலச் சைகை காட்டினாள்.
ஆனால், அவள் காட்டிய சைகையைப் பாம்பெனத் தவறாகப் புரிந்துகொண்ட கடைக்காரர், கைகளை வளைத்து பாம்பு ஊர்வது போல சைகைக் காட்டி, “இல்லை... இல்லை...” என்பதுபோல் தலையசைத்தான்.
“ப்ச்... ஐயோ! இந்த மரமண்டைக்கு எப்படி புரிய வைக்க?” என்று வாய்விட்டே புலம்பியவள், “டேய் மடையா! கொக் கொக்குனு கத்துமே கோழி, சிக்கன்… சிக்கன் அத கொடு.” எரிச்சலில் தன்னை மறந்து தமிழில் பேசினாள் ரீனா.
“ஓகேய்... ஓகேய்...” ஏதோ புரிந்தவன் போலத் தலையாட்டிய கடைக்காரன், குளிர்சாதனப் பெட்டியிலிருந்து ஒரு வாத்தைத் தூக்கிக் காட்ட, “யோவ் மண்டையா? இது வாத்து. குவாக் குவாக் இல்லை. நான் கேட்டது கொக் கொக்.” மீண்டும் இவள் இருவிரலை மடக்கி கோழி போல் கத்திக் காட்ட, வினோதமாய் அவளை பார்த்து திகைத்து நின்றான் கடைக்காரன்.
“என்ன இன்னும் புரியலையா? அச்சோ இவனுக்கு புரிய வைக்கிறதுக்குள்ள.” அலுத்துக் கொண்டவள், ‘பார்’ என்பது போல் சைகை காட்டி, “கோழி வெட கோழி! என்ன கொத்து திக்கிற படுபாவி.” என்ற பாடலை பாடியபடியே ஆடி காட்ட, “ஹாஹாஹா...” அந்தக் காட்சியை இதுவரை ரசித்துக் கொண்டிருந்த மைக்கேல், சிரிப்பை அடக்க முடியாமல் அவளருகே வந்து நின்றான்.
“போங்க... எல்லாம் உங்களாலதான்.” என்ற செல்லச் சிணுங்கலுடன் இவளோ முகத்தைத் திருப்ப, “நான் என்ன பண்ணேன்? உனக்கு வாங்கத் தெரியல.” பதிலுக்கு இவனோ அலட்சியமாய் தோளைக் குலுக்கினான்.
“சரி... எனக்கு வாங்கத் தெரியல. நீங்க வாங்கிக் காட்டுங்க பார்ப்போம்.” அவளோ சவால் விட, அவளை நோக்கி ஒரு அடி முன்னேறியவன், “சப்போஸ் நான் வாங்கிட்டா... நீ எனக்கு என்ன தருவ?” புருவம் உயர்த்தி, அவளது விழிகளை ஊடுருவினான்.
“எ… என்ன? என்ன வேணும்?” அதிர்ந்து இவள் விழிக்க, “எனக்கு என்ன வேணும்ங்கிற நான் அப்பறம் சொல்றேன். இப்ப கோழி வாங்கலாம் வா.” என்று அழைத்தவன் கடைக்காரனிடம் ஸ்லோவேனிய மொழியில் பேசி கோழிகளின் தரம் பார்த்து பேரம் பேசி வாங்கினான்.
“ஆமா உங்களுக்கு எப்படி இவங்க லாங்வேஜ் தெரியும்?” நெடுநாள் சந்தேகத்தை இப்போது இவள் கேட்டு வைக்க, “ஒரு நாட்டுக்கு போறதுக்கு முன்னாடி அவங்க லாங்வேஜ, அட்லீஸ்ட் சமாளிக்கிற அளவுக்காவது கத்துக்கனும்.” என்றான் அறிவுரையாக.
“ம்ம்…” இதழ் பிதுக்கிவிட்டு கூடவே நடந்தாள் ரீனா.
சிறிது நேரத்தில் வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு இருவரும் வீடு திரும்பினர்.
அவனோ கோழிகளை சுத்தம் செய்து சமையலை கவனிக்க, வயிற்றை தடவியபடியே அவன் செய்யும் சமையலை கவனித்தாள் ரீனா.
வெங்காயம், தக்காளி என ஒன்றின் பின் ஒன்றாக அனைத்தையும் போட்டு அவன் சமைக்க சமைக்க வீடே கமகமத்தது.
“ம்ம்உஹும்…” மூச்சை இழுத்துவிட்டு பிரியாண வாசத்தை நாசியில் நிறைத்தவள், “எப்ப இதெல்லாம் கத்துக்கிட்டீங்க?” என்று வினவ, “ம்ம்ம்… நம்ம என்கேஜ்மெண்டுக்கு அப்பறம். உனக்கு இந்த மாதிரி செஞ்சிக் கொடுத்து அசத்தனும்னு தோணுச்சு அதான்.” குக்கரை மூடி வைத்துவிட்டு அவளை பார்த்தான் மைக்கேல்.
“ம்ம்… எங்க அம்மா கூட என்கேஜ்மெண்டுக்கு அப்பறம் அத கத்துக்கோ இத கத்துக்கோனு இம்சை பண்ணாங்க. ஆனா நான் தான்.” வார்த்தைகளை இவளோ மென்று விழுங்க, “ஆனா நான் தான் எதையும் கண்டுக்காம உங்களையே நினைச்சிட்டு இருந்தேன் மைக்கேல். அதானே?” புன்னகைத்தப்படியே அவள் பேச நினைத்தை பேசி முடித்தான் மைக்கேல்.
உடனே “உங்களுக்கு எப்படி தெரியும்?” விழிகள் விரிய இவள் வினவ, “ஏய் அப்ப நான் கரக்டா தான் கெஸ் பண்ணிருக்கேனா?” பதிலுக்கு அவனும் விழி விரித்தான்.
“அச்சசோ…” நுனி நாக்கை கடித்தவள், அங்கிருந்து நழுவி ஓட, “ஏய் எங்க டி போற?” புன்னகைத்தபடியே விரட்டி வந்தான் மைக்கேல்.
வெட்கத்தில் முகம் சிவக்க, குடுகுடுவென படுக்கையறைக்குள் ஓடி வந்தவளின் கரத்தை பற்றி தன்மீது மோத விட்டவன், “நான் என்ன கேட்டாலும் கொடுப்பேன்னு சொன்னல. எனக்கு இப்ப ஒரு கிஸ் வேணும் கொடு.” என்றான் கிசுகிசுப்பாய்.
“உஹும்…” மறுப்பாய் இவள் தலையாட்ட, அவளது இடையை சுற்றி கை போட்டவன், “அப்ப நோ சிக்கன் பிரியாணி.” என நஞ்சாய் மிரட்டினான்.
“நோவா? இதெல்லாம் டூ மச் மைக்கேல்.” ஊடலில் உதட்டைப் பிதுக்கியவள், அவனது பிடியிலிருந்து தப்பிக்க போராட, அவனது பிடியோ அவளை விடாமல் இறுக பற்றியது.
டூ மச்சா? நான் என்ன கேட்டேன்? ஒரு ஸ்மால் கிஸ். அவ்வளவு தான? பிரியாணி செஞ்சு தர்றவனுக்கு இத கூட செய்ய மாட்டியா?” செல்லமாய் குற்றம் சாட்டியவன் மேலும் அவளை நெருங்கி அவளது கழுத்து வளைவில் தனது சூடான காற்றை படர விட்டான்.
அதில் அவளது மேனியோ சிலிர்த்திட, விழிகளை தாழ்த்திக் கொண்டு, “போங்க மைக்கேல்! நீங்க என்ன பிளாக்மெயில் பண்றீங்க?” முணுமுணுப்பாய் அவனை குற்றம் சாட்டினாள்.
“பிளாக்மெயிலா? மேடம் ஒரு பிரியாணிவோட ரேட் என்ன தெரியுமா? அதுவும் ஸ்லோவேனியால பிரியாணி எங்கேயாவது கிடைக்குமா? கிடைக்காத ஒரு டிஸ்ஸா நான் உங்களுக்காக செஞ்சிக் கொடுத்திருக்கேன். அதுக்கு நீங்க எவ்வளவு வேணாலும் கொடுக்கலாம். ஒரே ஒரு கிஸ் கொடுக்க கூடாதா?” அவனோ நியாயம் கேட்க, “ஐயோ போங்க மைக்கேல்.” கூச்சத்தில் சிணுங்கியவள் அவனது கைகளில் குழைந்திட, “இப்ப நீயா கொடுக்கிறீயா? இல்லை நான எடுத்துக்கவா?” குரலை மெல்ல உயர்த்தி அவளை சீண்டினான் மைக்கேல்.
“உஹும்… போங்க.” மார்பைத் தட்டிவிட்டு, தலை கவிழ்ந்து கண்களை மூடிக்கொண்டாள் ரீனா.
அவளது தாடையை ஒரு விரலால் மென்மையாகத் தூக்கி, அவளது விழிகளில் எதையோ ஆராய்ந்தான் மைக்கேல்.
அவளின் கமல விழிகளோ சிவந்திருக்க, கன்னத்தின் சிவப்பழகை ரசித்தபடியே, இதழை வருடியவன் மெல்ல அவளது இதழ் நோக்கி குனிந்தான்.
அடுத்த நொடி, “டூமில்…” என்ற சத்தத்துடன் துப்பாக்கி ஒன்று வெடிக்க, அவர்களுக்கு எதிரே இருந்த கண்ணாடிச் சன்னல் சுக்குநூறாகச் நொறுங்கியது.
சத்தம் கேட்டு அதிர்ந்தவள், துப்பாக்கி வெடித்த திசையை நோக்கிட, அங்கே கொலைவெறி விழிகளில் தெரிய துப்பாக்கியுடன் நின்றிருந்தான் அவளது தம்பி சார்லஸ்.
தொடரும்...
கருத்துகள்
கருத்துரையிடுக
“உங்கள் கருத்துகள் எங்களுக்கு முக்கியம். கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.. தாராளமாய் பகிருங்கள் 😊