தீ மீது வீணை 21
அத்தியாயம் 21
“வ் ரெது... வ் ரெது...” பரவாயில்லை என்பதுபோல் ஸ்லோவேனிய மொழியில் கூறிய லூகா, இரு கரங்களையும் விரித்துக் காட்டி, குறும்பாய் புன்னகைத்து மெதுவாய் பின்னோக்கி நகர, அங்கே என்ன நடந்துக் கொண்டிருந்திருக்கிறது என்பது புரியாமல் இமை இடுக்கினாள் ரீனா.
“என்ன? என்ன நடக்குது? அவர் என்ன சொல்றாரு?” இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடியே அடுக்கடுக்காகக் கேள்விகளை இவள் அடுக்க, ‘எங்கே பதில் சொல்ல வேண்டிய நிலை வந்துவிடுமோ?’ என்ற பயத்தில் அவளை பார்ப்பதையே தவிர்த்தான் கிரிஸ்டோபர்.
ரீனாவின் குறுகுறுப் பார்வையிலிருந்து தப்பிக்க வேண்டி, “எக்ஸ்க்யூஸ் மீ... என்ன அடிக்க வர்றேன்னு சொன்னீங்க, ஏன் இன்னும் வரல?” சம்பந்தமே இல்லாமல் யாரையோ பார்த்து உளறி காட்டினான் கிரிஸ்டோபர்.
போதாக்குறைக்கு, “கிரிஸ்டோபர்… கிரிஸ்டோபர்…” என்று இவள் அழைக்க அழைக்க காதில் வாங்காமல் அவனோ நழுவி ஓட, “ஆமா இந்த கிரிஸ்டோபருக்கு என்னாச்சு?” விவரம் தெரிய வேண்டி மைக்கேலிடம் வினவினாள் ரீனா.
அவளது வெகுளிதனத்தை உள்ளூர ரசித்தபடியே, “உஹும்…” என இதழ் பிதுக்கி தோளை குலுக்கினான் மைக்கேல்.
“ஒன்னுமில்லையா? ஆனா...” தீராத குழப்பத்துடன் இவளோ மீண்டும் வாய் திறக்க, “உஷ்...” என மெல்ல அதட்டி, அவளது இதழ்களின் மீது ஆள்காட்டி விரலை வைத்தான் மைக்கேல்.
அந்த செல்ல அதட்டலில் ரீனா அடங்க, அவளை ஆழ்ந்து நோக்கியவன் மெதுவாய் தனது விரலை விலக்கிக் கொண்டான்.
அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சுக்காற்றோ, அவன் விரல் விலகிய அடுத்த நொடி பெருமூச்சாக வெளிப்பட்டது.
அதையும் கவனித்தவன் குறுநகையுடன் அவளது காதருகே குனிந்து, “டான்ஸ் ஆடப் போகலாமா?” என்று வினவ, ஏற்கனவே அவனது நெருக்கத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தவள், அவனது கேள்வியில் இன்னும் அதிகமாய் தடுமாறிப் போனாள்.
இதயமோ மார்புக்கு வெளியே படபடத்தன.
கூந்தல் தீண்டும் அவனது மூச்சுக் காற்றில் இவளுக்கோ குப்பென்று வியர்த்துக் கொட்ட, நாக்கோ வரண்டு நீருக்கு ஏங்க, அதிர்ந்து முகமாய் எச்சல் கூட்டி விழுங்கினாள்.
அவளது தடுமாற்றத்தை ரசித்தபடியே, இடையை வளைத்திருந்த கரத்தை விலக்காமல் அவளை தன்னோடு அழைத்துச் சென்றான் மைக்கேல்.
கால்கள் தரையில் பதிந்தனவா என்பதே தெரியாத நிலையில், அவனோடு சேர்ந்து நடன மேடையை அடைந்தாள் ரீனா.
அந்நேரம் ஃப்ராய்டோனர்சாவின் துள்ளலான இசை காற்றில் பரவ, அங்கிருந்த ஜோடிகள் அனைவரும் உற்சாகமாக நடனமாடத் தொடங்கினர்.
“எனக்கு டான்ஸ் ஆட தெரியாது...” தயக்கத்தில் ரீனா பதற, மெல்ல புன்னகைத்து, “உனக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்ல.” என்றான் மைக்கேல்.
“ஏன்?” இவளோ இமை இடுக்கி, “நான் பாத்துக்கிறேன்.” தைரியம் கூறியவன், அவளது வலது கரத்தோடு தனது கரத்தை பிணைத்தான்.
இவள் சுதாரிப்பதற்குள் இடையில் இருந்த கரத்தை சற்றும் விலக்காமல் இசையின் தாளத்திற்கு ஏற்ப அவளை ஆட்டுவித்தான் மைக்கேல்.
ஆரம்பத்தில் அவனது காலடிகளைப் பின்பற்றுவதற்கே தடுமாறியவள், போக போக அவனது அசைவுகளோடு ஒன்றிப் போனாள்.
அவன் முன்னேறினால் அவளும் முன்னேறினாள்.
அவன் பின்னோக்கி நகர்ந்தால் அவளும் பின்னோக்கி நகர்ந்தாள்.
ஒருகட்டத்தில் அவளை தன்னிடமிருந்து விலக்கி சுழலவிட்டவன், அடுத்த நொடியே மீண்டும் இழுத்து தன் அருகில் நிறுத்திக் கொண்டான்.
காற்றில் பறந்த கூந்தல் அவனது கன்னத்தை உரசி செல்ல, காரணமேயின்றி இருவரின் இதயங்களும் படுவேகமாகத் துடிக்கத் தொடங்கின.
“லப்... லப்...”
இருவரின் இதயங்களும் ஒன்றாய் துடித்திட, சுற்றியிருந்தவை எல்லாம் மங்கிப் போக, அவனது உலகமாக அவளும், அவளது உலகமாக அவனும் மாறிப் போயிருந்தனர்.
விழி அகலாமல் ரீனா அவனைப் பார்க்க, அவளது உள்ளத்து உணர்வுகளை அவளது விழிகளில் படித்தவாறே தானும் ஆடி, அவளையும் ஆடவைத்தான் மைக்கேல்.
இறுதியாக இசை தனது உச்சத்தை அடைந்திருக்க, அவளது இடையைப் பற்றியபடி பின்னோக்கி சாய்த்தான்.
எங்கே விழுந்துவிடுமோ என்ற பயத்தில் இவளோ அவனது தோளை இறுகப் பற்றிக் கொள்ள, ஒரு கையால் அவளைத் தாங்கிப் பிடித்தவன், காதலுடன் அவளது கண்ணோடு கண் கலந்தபடியே அவளை நோக்கிக் குனிந்தான்.
இருவருக்குமிடையான தூரம் வெகுவாகக் குறைந்துபோக, அவனது சூடான மூச்சுக்காற்றோ அவளது பட்டுக் கன்னத்தை மோதிப் படர்ந்தது.
அதுவரை விழிகளைத் தீண்டிய பார்வையோ மெல்ல இதழ்களை நோக்கி இறங்க, மூச்சுவிட மறந்தவளாய் அவனையே பார்த்தாள் ரீனா.
இன்னும் ஒரு அங்குலம்...
இன்னும் ஒரு நொடி...
இருவரது இதழ்களும் ஒன்றிணைந்துவிடும் என்ற தருணத்தில்...
ஏனோ அந்த நொடி… அந்நொடி… அவனது வன்மையான தீண்டல்கள் அனைத்தும் கண்முன்னே வந்துபோயின.
அவனால் சிவந்து வீங்கிய காயங்கள் அனைத்தும் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை அவளுக்கு ஞாபகப்படுத்திட, மாநிறத்தாளின் முகமோ சட்டென வெளிறியது.
கண்ணீரோ விழிகளில் திரண்டு நிற்க, உடைந்த பார்வையுடன் அவனைப் பார்த்தாள் ரீனா.
அந்த பார்வையும், பாவையின் விழிகளில் மின்னிய ஒற்றை கண்ணீர்த்துளியும் உருவமில்லா ஆயுதமாய் அவனைத் தாக்கிட, உயிர் போகும் வேதனையில் துடித்தவன் விழி கலங்கியவாறே அவளை நேராக நிமிர்த்திவிட்டு, விலகி நின்றான்.
கணநேரத்தில் இவை அனைத்தும் நிகழ்ந்தேறியிருக்க, நடந்தவற்றை புரிந்து கொள்ளும் முன்பு கைதட்டும் ஓசையோ அவளது செவிகளை நிறைத்தது.
அடுத்த நொடியில் ஓடி வந்து கட்டியணைத்தார் எலினா.
போதாக்குறைக்கு அவளது தலையில் கை வைத்து ஏதோ கூறிட, பேந்த விழித்தபடி மைக்கேலை பார்த்தாள் ரீனா.
அவனும் மார்கோவும் கை குலுக்கியபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
லூகா கூட மைக்கேலின் தோளைத் தட்டி ஏதோ சொல்ல, பதிலுக்கு பற்கள் தெரிய சிரித்தான் மைக்கேல்.
இவளுக்கோ ஏதோ வேற்று மொழிப் படத்தை சப்டைட்டில் இல்லாமல் பார்ப்பது போல இருந்தது.
‘என்ன சொல்றாங்க ஒன்னுமே புரியலையே!’ என்று இவள் விழிக்க, உணவுத் தட்டுடன் தானாகவே ஆஜராகி, “மேடம், இப்ப அவங்க என்ன சொல்றாங்கன்னா...” என்று ஆரம்பித்தான் கிரிஸ்டோபர்.
அவன் குரல் முதுகு பின்னால் கேட்கவும், ‘க்கும்… இதுக்கு மட்டும் கத்துதா இந்த பல்லி? எங்க அது?’ என்பது போல் எரிச்சலுடன் கிரிஸ்டோபர் பக்கம் இவளோ தனது முகத்தைத் திருப்ப, “நீங்க அவங்க ஊர் டாஸ் நல்லா ஆடுனீ...ங்கனு...” என்று பேசிக் கொண்டே வந்தவன், அவள் தீயாய் முறைக்கவும் பற்கள் தெரிய அசடு வழிந்தான்.
“ஹாஹா…” என்று ஈளித்தவனை, “தூ...” என துப்புவது போல் சைகை செய்து விரட்டினாள் ரீனா.
பதிலுக்கு, “அடியாத்தி!” என வாய்விட்டே அலறியவன் அங்கிருந்து தெறித்து ஓட, “ஹுஹும்...” என இவளோ தன்னை மறந்து சிரித்தாள்.
நாட்கள் இப்படியே அழகாய் நகர்ந்தன.
மார்கோவின் குடும்பத்தினர் மட்டுமல்ல, ஸ்லோவேனியாவே அவர்களுக்கு மிக நெருக்கமானதாக மாறிப் போனது.
அவர்களின் மொழியைக் கூட மெல்ல கற்றுக்கொள்ளத் தொடங்கினாள் ரீனா.
“ஹாய் என்றால் ழிவ்யோ... பை என்றால் அடியோ... நன்றி என்றால் ஹ்வாலா...” என்று குழந்தை போல மனப்பாடம் செய்தவள், எலினாவை கண்டதும் பெருமையாக,
“ழிவ்யோ!” என்று சொல்ல,
“பிராவோ!” என்று கைதட்டி பாராட்டினார் எலினா.
அவர்களுடன் லேக் பிளெட் செல்வது, அங்கிருந்த நீல நிற ஏரியில் படகுச் சவாரி செய்வது, அதன் நடுவே அமைந்திருந்த சிறிய தீவில் சிறிது நேரம் இளைப்பாறுவது, அங்கிருந்த பழமையான தேவாலயத்தில் கண் மூடி தனது குடும்பத்தினரின் நலனுக்காக இறைவனை வேண்டுவது என அவளது நாட்கள் அழகாக நகர்ந்தன.
அது மட்டுமா?
காலையில் கண் விழித்தால் பனித்துளி படர்ந்த மலைகள்...
மதியம் சென்றால் கண்ணாடி போல தெளிந்த ஏரிகள்...
மாலையில் நடந்தால் ஓவியமாக விரிந்திருந்த திராட்சைத் தோட்டங்கள்...
எங்கு பார்த்தாலும் இயற்கை தன் அழகை வாரி வழங்க, அதன் பேரழகில் தன்னை மறந்தாள் ரீனா.
மைக்கேல் மற்றும் கிரிஸ்டோபருடன் அடிக்கடி லியூப்லியானா நகரின் பழமையான தெருக்களை சுற்றிப் பார்ப்பாள்.
கற்களால் அமைக்கப்பட்ட சாலைகள்...
நூற்றாண்டுகள் பழமையான கட்டிடங்கள்...
தெரு ஓவியர்கள்...
இசைக் கலைஞர்கள்...
வண்ணமயமான சிற்றங்காடிகள்...
அனைத்தையும் பார்க்கப் பார்க்க, அதுவரை மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் விலகத் தொடங்கின.
பல நாட்களுக்குப் பிறகு, எதையும் நினைத்து கவலைப்படாமல் சிரிக்கக் கற்றுக் கொண்டாள்.
சில நேரங்களில் தெருவோர இசைக் கலைஞர்களின் இசைக்கு ஏற்றவாறு குழந்தையைப் போல தலையசைத்து ரசிப்பாள்.
சில நேரங்களில் ஓவியர்கள் வரைந்த படங்களைப் பார்த்து வியப்பில் மூழ்குவாள்.
இன்னும் சில நேரங்களில், கையில் ஐஸ்கிரீம் ஏந்தியபடி சுற்றுலாப் பயணியைப் போல அங்குமிங்கும் சுற்றித் திரிவாள்.
ஒரு நாள் அப்படித்தான், மார்கோ அவர்களை தனது தேனீப் பண்ணைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வண்ணமயமான மரப்பெட்டிகளை பார்த்து,
“இது என்ன கிரிஸ்டோபர்?” என புருவம் உயர்த்தினாள் ரீனா.
“மேடம்... இது பீ ஹவுஸ்.” என்றான் கிரிஸ்டோபர்.
“ஓ...” என்றவளுக்கோ தேனீ எங்கே தன்னை கொட்டிவிடுமோ என்ற பயம்.
சிறப்பு பாதுகாப்பு உடை அணிந்த பின்னும் உள்ளே செல்ல இவள் தயங்கிட, எலினா தான் அவளை கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்று, அங்கிருந்த தேனீக்களைப் பற்றியும், அவற்றின் வாழ்க்கை முறை பற்றியும் பொறுமையாக விளக்கிக் கூறிட, பயம் மெல்ல விலகி வியப்பாக மாறியது ரீனாவிற்கு.
‘ஆயிரக்கணக்கான தேனீக்கள் ஒன்றாய் ஒரே கூட்டில் எந்த வித சலசலப்பும் இன்றி ஒற்றுமையாய் வாழ்கின்றன.
ஆனால் மனிதர்கள்?
உறவுகள் அதிகரிக்க அதிகரிக்க மனங்களுக்கிடையேயான தூரமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.’ என்ற எண்ணத்துடன் அவற்றை பார்த்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை கலைத்தார் மார்கோ.
புகையை மெதுவாகக் காட்டியபடி தேன்கூட்டை திறந்தார்.
பொன்னிறமாக மின்னிய தேன் அடுக்குகளை கண்டவள், “வாவ்...” என்று வாயைப் பிளந்தாள்.
சூரிய ஒளி பட்டதும் அந்த தேனடைகள் தங்கமென மின்னின.
சிறிய கத்தி போன்ற கருவியால் தேனடையின் மேல் இருந்த மெழுகு மூடியை நீக்கிய மார்கோ, அதிலிருந்து சொட்டிய தேனை ஒரு கரண்டியில் எடுத்து ரீனாவிடம் நீட்டினார்.
தயக்கத்துடன் அதைச் சுவைத்தவள், “வாவ்... டெலிஷியஸ்!” என்று விழிகளை விரித்தபடி குழந்தையைப் போல் குதூகலித்தாள். அவளது மகிழ்ச்சியைக் கண்டு லூகாவும் எலினாவும் மெல்லப் புன்னகைத்தனர்.
“மேடம்... இதுக்குத்தான் ஒரிஜினல் ஹனின்னு பேர். நம்ம ஊர்லயும் கிடைக்குதே! அது ஹனியா, சுகர் சிரப்பானு விக்கிறவனுக்குத்தான் வெளிச்சம்.” என்றான் கிரிஸ்டோபர் இதழ் பிதுக்கி.
“ஏன்டா, நீ சாப்பிடுறதுக்குத்தான் இங்க வந்தியா? இல்ல சுத்திப் பார்க்க வந்தியா?” அவனது தலையில் பொளீரென தட்டிக் கேலி செய்தான் மைக்கேல்.
“பாஸ்... ஒரு நாட்டைப் புரிஞ்சுக்கணும்னா, அந்த நாட்டோட உணவுல இருந்துதான் ஆரம்பிக்கணும்.” தலையை தடவியபடியே தத்துவம் பேசினான் கிரிஸ்டோபர்.
“ஸ்ப்பா... மிடியல! நாராயணா! இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலடா. எங்க போனாலும் பின்னாடியே வருது. மருந்து அடிச்சு கொல்லுங்கடா.” எரிச்சலுடன் பேசி தலையில் கை வைத்தாள் ரீனா.
பதிலுக்கு கிரிஸ்டோபரோ, “மேடம்! கொசுவா நானா? யூ மீன் ஐ ஆம் அ மஸ்கிட்டோ? மஸ்... கி... ட்டோ... யூ வான்ட் டு கில் மீ? அய்யோ!” என நெஞ்சைப் பிடித்து அழுவது போல் பாவனை செய்திட, “கொசுவ தானே! இந்த அடிச்சிடுவோம்.” என்று கூறி கிரிஸ்டோபரின் பிட்டத்தில் ஓங்கி ஒரு மிதி மிதித்தான் மைக்கேல்.
“பாஸ்…” என்று அலறியபடியே கிரிஸ்டோபர் பின்னோக்கி தடுமாறி, நேராக ஒரு தேன்கூட்டின் மீது போய் விழுந்தான்.
அவ்வளவுதான்!
தேனீகளோ, “கீங்…கீங்…” என ரீங்காரமிட்டபடியே படையெடுத்து கூட்டைவிட்டு வெளியே வந்தன.
தொடரும்....
கருத்துகள்
கருத்துரையிடுக
“உங்கள் கருத்துகள் எங்களுக்கு முக்கியம். கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.. தாராளமாய் பகிருங்கள் 😊