தீ மீது வீணை 20
அத்தியாயம் 20
ஸ்லோவேனியாவிற்கு அவர்கள் வந்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆகியிருந்தது.
கற்களால் கட்டப்பட்டிருந்த அந்த வீட்டின் மேற்கூரையோ செந்நிற ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. எளிமையாக இருப்பினும், தொலைவில் இருந்து பார்க்கும்போது சிறிய மெடிவல் கால கேஸ்டலை நினைவூட்டும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
அதன் மேல்தளத்தில் மைக்கேல், ரீனா, கிரிஸ்டோபர் ஆகியோர் தங்கியிருக்க, கீழ்தளத்தில் அந்த வீட்டின் உரிமையாளரான மார்கோ பெட்ரோவிச்சும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர்.
கீழ்தளம் எப்படியோ, மேல்தளமோ ஒரேயொரு படுக்கையறை கொண்டதாக இருந்தது.
கூடத்தை கிரிஸ்டோபர் ஆக்கிரமித்துக் கொள்ள, மைக்கேலுடன் படுக்கையறையை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ரீனாவிற்கு ஏற்பட்டது.
வேண்டுமென்றே அந்த வீட்டைத் தேர்ந்தெடுத்தார்களோ என்னவோ, படுக்கையறையிலும் ஒரே ஒரு படுக்கை மட்டுமே இருந்தது.
அதை மைக்கேல் பயன்படுத்திக் கொள்ள, ரீனாவின் நிலைமையோ ஜன்னலோரம் இருந்த மெத்தையிட்ட நீள்சாய்விருக்கையில் ஒண்டிக் கிடக்க வேண்டியதாய் போயிற்று.
மைக்கேலுடன் ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத வரை, நீள்சாய்விருக்கையில் தூங்குவது பெரிய பிரச்சனையாக தோன்றவில்லை ரீனாவிற்கு.
சொல்லப் போனால், நிம்மதியாகவே உணர்ந்தாள்.
காலையில் எழுவது, கிரிஸ்டோபருக்கு உதவியாக சில வேலைகளை செய்வது, அவன் சமைத்து தரும் உணவை உண்பது, சிறிது நேரம் தோட்டத்தில் உலவுவது என அவளது அன்றாட வாழ்க்கை எந்தவித சலனமும் இன்றி அமைதியாகவே சென்றது.
அந்த அமைதி புயலுக்கு முன் வரும் அமைதியா? இல்லை புயலுக்கு பின் வந்த அமைதியா? என்பதே இறைவன் ஒருவனே அறிவான்.
இருக்கியா? நானும் இருக்கேன் என்பது போல் தாமரை இலைத் தண்ணீர் போல் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்தனர்.
அவளின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து அவன் விலகி இருக்க, அவளோ அவனை வெறுக்கவும் முடியாமல், மன்னிக்கவும் முடியாமல் இரண்டுக்கும் நடுவே சிக்கித் தவித்தாள்.
இதற்கிடையில் மனம் அடிக்கடி தனது குடும்பத்தை நினைத்து பரிதவிக்கும்.
அன்றும் அப்படிதான். ‘செயில அப்பா என்ன சொய்றாரோ? அம்மாவோட ஹெல்த் கண்டிசன் இப்ப எந்த நிலைமையில இருக்குனு தெரியலையே! சார்லஸ் எங்க போயிருப்பான்? ஏன் அவன் இன்னும் என்ன பார்க்க வரல?’ போன்ற கேள்விகள் மனதை துளைக்க, மன அமைதி வேண்டி தோட்டத்தில் அமர்ந்தாள்.
விழிகள் தூரத்தில் வரிப்பந்து விளையாடிக் கொண்டிருந்த மார்கோ பெட்ரோவிச்சின் குடும்பத்தின் மேல் பதிந்திருந்தன.
அவரும் அவரது மகன் லூகாவும் எதிரெதிரே நின்று வரிப்பந்தை அடித்துக் கொண்டிருக்க, எலேனாவோ புன்னகையுடன் இருவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாள்.
ஒருகட்டத்தில் லூகா ஏதோ கூறி முகத்தை சுருக்க, அவனது கேசத்தை வருடி ஏதோ கூறினார் எலேனா.
அக்காட்சியை கண்ட ரீனாவிற்கு, குடும்பத்தினருடன் தான் கழித்த இனிமையான நாட்கள் நினைவுக்கு வந்தன.
இதுபோலவே சார்லஸும் ஜோசப்பும் விளையாடும் போது, நடுவராக இருந்து இருவரையும் உற்சாகப்படுத்தியிருக்கிறாள் ரீனா.
அந்த நாள் நினைவுகள் செல்லரித்த புகைப்படங்களைப் போல ஒன்றன்பின் ஒன்றாக கண்முன் வந்து போக, அவளது இதழ்கள் மெல்ல விரிந்தன.
அவளையும், அவள் அமர்ந்திருந்த அந்த அமைதியான சூழலையும், அவளது முகத்தில் மலர்ந்திருந்த இயல்பான புன்னகையையும் தூரத்தில் நின்று ரசித்துக் கொண்டிருந்த மைக்கேலுக்கு, அக்காட்சி ஏதோ பாப்லோ பிக்காசோவின் அரிய ஓவியத்தை நேரில் கண்ட பரவசத்தை தந்தது.
உடலெங்கும் மெல்லிய சிலிர்ப்பு பரவ, ஒரு கணம் மெய்மறந்து நின்றான்.
ஏன் இந்த பரவசம்? எதற்கு இந்த சிலிர்ப்பு?
புரியவில்லை அவனுக்கு.
இதுவரை தோன்றாத புதுவித உணர்வு ஏன் இன்று அவளை கண்டதும் தோன்றுகிறது?
இது தான் காதலா?
இது காதல் என்றால், அவளை திருமணம் செய்து கொள்ள நினைத்தது என்ன?
அது... அது காதல் இல்லையா?
குழம்பிய மனமோ விடை தேடி சடுதியில் காலப்பயணம் செய்து, அவளை முதன்முதலாக சந்தித்த அந்த நாளுக்குச் சென்றது.
"நாம எல்லோரும் தான இந்த இன்டர் காலேஜ் மீட்டுக்காக ஹார்ட் வொர்க் பண்ணோம். அது என்ன எல்லா கிரெடிட்டையும் ஒரே ஆளுக்கு கொடுக்கிறது?"
அன்று ரீனா அவ்வாறு பேசியபோது, கோபத்துடன் தான் அவளை பார்த்தான் மைக்கேல்.
தனியாக இருக்கும் போது யாராவது இப்படிப் பேசியிருந்தால், பேசியவர்களின் வாயையே உடைத்திருப்பான்.
அதில் அவளும் விதிவிலக்கல்ல.
ஆனால் அத்தனை பேரின் முன்னிலையிலும், சபை நடுவிலும் அல்லவா அவள் அவ்வாறு பேசி விட்டாள்?
சபை நாகரிகம் கருதியே, கையில் இருந்த பரிசுக் கோப்பையை அவளிடம் திணித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
போதாக்குறைக்கு அவனது அக்கா மரியா வேறு, “ஏன் டா மைகா! ஏதோ நடந்துச்சாம். பசங்க சொன்னாங்க, ரொம்ப பெருமையா இருக்கு.” என்று ஆரம்பித்து, “சம்பவம்... சம்பவம்னு சொல்வாங்களே, அப்படியொரு சம்பவம் உன் வாழ்க்கையில நடந்துருச்சாம்! காலேஜே அதைப் பத்தித்தான் பேசிக்கிட்டு இருக்காம்.” தொடர்ந்து கலாய்த்து தள்ளி வெறுப்பேற்றினாள்.
“ப்ச்... என்ன டி எதுக்கு மிகிய டார்ச்சர் பண்ற?” என்று கடுப்புடன் கேட்ட ஸ்டெல்லாவிடம், “அம்மா... உனக்கு விஷயமே தெரியாதுல? வா வா... சொல்றேன்.”என்று அவளை அருகில் இழுத்தவள், “இவன ஒரு பொண்ணு சும்மா சும்மா கிழி... கிழி... கிழின்னு கிழிச்சிட்டாளாம்மா. அதுவும் நாலு பேருக்கு முன்னாடி!” என்று கூறி வெடித்து சிரித்தாள் மரியா.
தமக்கை நக்கல் அடிக்க அடிக்க இவனது கோபமோ பன்மடங்கானது.
'எப்படி அவ என்னைத் தப்பா பேசலாம்?’ கோபத்தில் உறுமியவனுக்கு அவளை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதினுள் தோன்றாமல் இல்லை.
ஆத்திரம் பொங்கிட, 'இவளை எல்லாம் சும்மாவே விடக் கூடாது. இன்டர்னல் மார்க்ல கை வைக்கணும். இன்டர்னல் மார்க் போச்சுனா அரியர் வைக்கத்தான் இவ லாயிக்கு.' என கருவிக் கொண்டான்.
விடைத்தாள்களை திருத்தும் போது கூட,
'இந்த மாதிரி அதிகப் பிரசங்கி எல்லாம் எங்க படிச்சிருக்கப் போகுது?'
என்ற மெத்தப்புடன்தான் அவளது விடைத்தாளை முதலில் எடுத்துப் பார்த்தான் மைக்கேல்.
எடுத்தபின் தான் அவள் யார் எப்படி பட்டவள் என்பதை புரிந்துக் கொண்டான்.
அந்த வழியில் அவளை பலிவாங்க நினைத்தவனுக்கு, விடைத்தாள் மூலமாக ஏமாற்றத்தையே பரிசளித்தாள் ரீனா.
முதல் கேள்விக்கான பதிலே பாடப்புத்தகத்தில் இருந்ததை விட தெளிவாகவும், நேர்த்தியாகவும் எழுதப்பட்டிருந்தது.
'ஹ்ம்ம்...' என நெற்றியை சுருக்கியவன் அடுத்த பக்கத்தை புரட்டினான்.
அடுத்தடுத்த கேள்விகளுக்கும் தவறு கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பதில்கள் மிக தெளிவாக இருந்தன.
எங்காவது ஒரு இடத்தில்… ஒரே ஒரு இடத்தில் மதிப்பெண் குறைக்க வாய்ப்பு கிடைக்குமா என்று தேடியவனுக்கு, குறை சொல்ல ஒரு வரி கூட சிக்கவில்லை என்பது தான் அந்தோ பரிதாபம்.
இறுதிப் பக்கத்தை அடைந்தபோது, 'ச்சே...' என எரிச்சலடைத்தான்.
'நல்லா படிக்கிற பொண்ணு தான் போல...'
என்று ஒரு மனம் அவளுக்காகப் பரிந்து பேச,
'படிச்சா மட்டும் போதுமா? பண்பாடு வேணாமா? பெரியவங்க முன்னாடி எப்படி பேசணும்னு கூட தெரியல. வாய்க்கு வந்ததெல்லாம் பேசுறா.'
என்று மறுமனம் ஏனோ முரண்டு பிடித்தது.
'ஒருவேளை என் மேலயும் தப்பு இருக்கா என்ன?'
என்ற எண்ணம் ஒரு கணம் தலைதூக்க,
'ச்சே... நான் என்ன தப்பு பண்ணேன்? பசங்க வற்புறுத்தினாங்கன்னு அந்த ட்ராபிய வாங்கினேன். இதுல என் தப்பு என்ன இருக்கு?'
என்று நினைத்து தோளை குலுக்கிக் கொண்டான்.
இறுதியாக,
'ச்சே... நான் எதுக்கு அவளைப் பத்தியே யோசிச்சுட்டு இருக்கேன்?'
என்று எரிச்சலுடன் விடைத்தாளை மூடிவைத்தவன், அடுத்த மாணவனின் தாளை எடுத்து திருத்தத் தொடங்கினான்.
இருந்தும் என்னவோ...
அந்த நாளுக்குப் பிறகு அவளது பெயர் கண்ணில் பட்டாலோ, தூரத்தில் அவளைப் பார்த்தாலோ, அவளது குரல் காதில் விழுந்தாலோ, மனம் தானாகவே அவளிடம் சென்று நின்றது.
இதற்கு பெயர் மரியாதையா? ஆசையா? காதலா?
இது என்ன? என்ன மாதிரியான உறவு என்று அவனுக்கு விளங்கவில்லை.
இருப்பினும் அவளைப் பற்றி நினைக்க பிடித்தது.
ஸ்டெல்லா கல்யாணப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் ஏனோ அவள் முகமே வந்து போனது.
'நல்லா படிக்கிறா... அமைதியா போறா... இனிமையா எல்லோர்கிட்டயும் பேசறா... இவள விட நமக்கு பெர்ஃபெக்ட்டான பொண்ணு வேற எங்க கிடைக்கும்?' கணக்கு வாத்தி அல்லவா? கணக்கு போட்டே அவளிடம் தனது விருப்பத்தை கூறினானே தவிர, மனதார விரும்பி பேசவில்லை.
அவள் அருகில் இருந்தால் உலகமே மறந்து போகும் என்று சொல்லும் அளவுக்கு பெரிதாய் அவளிடம் அவனுக்கு அன்று தோன்றவில்லை.
அவள் சிரித்தால் காரணமில்லாமல் சிரிக்க வேண்டும் என்ற ஆசையும் இல்லை.
அவள் அழுதால் தானும் அழ வேண்டும் என்ற தவிப்பும் இல்லை.
சொல்லப் போனால்,
'இவள் என் வாழ்க்கைக்கு சரியான துணை.'
என்று தான் யோசித்தான்.
'இவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது.'
என்று ஒருநாளும் யோசித்ததில்லை.
ஆனால் இன்று...
தோட்டத்தில் அமர்ந்து தூரத்தை வெறித்துக் கொண்டிருந்த அவளை பார்க்கும்போது, ஏதோ விவரிக்க முடியாத உணர்வு ஒன்று நெஞ்சுக்குள் தோன்றி மறைந்தது.
அது சந்தோஷமா, தவிப்பா, காதலா என்று கூட அவனால் பிரித்தறிய முடியவில்லை.
அவளோ தனது குடும்பத்தினரை நினைத்து கண்ணீர் சிந்த, கன்னத்தில் பட்டு தெறிக்கும் கண்ணீர் துளிகளை கண்டு மனம் வெதும்பினான் மைக்கேல்.
அவளருகே சென்று அந்த கண்ணீரை துடைத்து ஆறுதல் கூற வேண்டும் என்ற உந்துதல் உள்ளம் முழுவதும் பரவிட, அடுத்த நொடி… யோசிக்காமல் கிடுகிடுவென மாடியிலிருந்து கீழிறங்கி, விறுவிறுவென அவளை நோக்கி நடந்தான் மைக்கேல்.
அந்தோ பரிதாபம்!
அவன் வருவதற்குள் எலினா அவ்விடம் வந்து சேர்ந்திருந்தார்.
அவளது கேசத்தை வருடியபடி, தாடையை மெதுவாக நிமிர்த்தி ஸ்லோவேனிய மொழியில் எதையோ அவர் பேசிக் கொண்டிருக்க, ஒரு வார்த்தை கூட புரியாத போதிலும், எல்லாம் புரிந்தவள் போல, “ம்ம்ம்...” என தலையசைத்து சமாளித்தாள் ரீனா.
அவர் சென்றபின் கிரிஸ்டோபர் அவ்விடம் வர, “அந்த ஆண்ட்டி என்ன சொல்லிட்டு போறாங்க?” ஆர்வமுடன் விசாரித்தாள்.
“ஓ... அதுவா மேடம்? அவங்களுக்கு இன்னைக்கு வெட்டிங் அனிவர்சரியாம். ஈவினிங் ஒரு சின்ன பார்ட்டி வச்சிருக்காங்களாம். நாம கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டு போறாங்க.” விளக்கம் கொடுத்தான் கிரிஸ்டோபர்.
“ஓ... ஆமா, அவங்க என்ன லாங்குவேஜ் பேசுறாங்க? அவங்க பேசுறது உனக்கு எப்படி புரியுது?” ஆர்வ மிகுதியில் அடுக்கடுக்கான கேள்விகளை அள்ளி வீசினாள் ரீனா.
“மேடம்... இது டெக்னாலஜி யுகம் மேடம். அவங்க பேசுறத கூகுள் டிரான்ஸ்லேட்ல போட்டுப் பார்த்தேன். அவங்க பேசுறது ஸ்லோவேனியனாம்.” என்று தனது கைப்பேசியை பெருமையாக உயர்த்திக் காட்டினான் கிரிஸ்டோபர்.
“ஹ்ம்ம்...” என்று தலையசைத்தவளின் பார்வை மீண்டும் மார்கோவின் குடும்பத்தை நோக்கிச் சென்றது.
மாலை வந்தது…
சூரியன் மலைகளுக்கு பின்னால் மறையத் தொடங்கியிருக்க, குளீர் காற்று மலர்களின் சுகந்த வாசத்தோடு வீச தொடங்கியது.
கீழ்தள தோட்டத்தில் வண்ண விளக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒளிரத் தொடங்கின.
வீட்டின் உரிமையாளரின் திருமண நாள் கொண்டாட்டம் என்பதால் மூவருமே தயாராகிக் கொண்டிருந்தனர்.
கிரிஸ்டோபரோ வழக்கம் போல நீல நிற ஜீன்சும், வெள்ளை நிற முழுக்கை சட்டையும் அணிந்து கண்ணாடி முன் நின்று தனது தலைமுடியை சரி செய்துக் கொண்டிருந்தான்.
மைக்கேலோ அடர்ந்த கருநிற கால்சட்டையுடன் சாம்பல் நிற சட்டையை அணிந்திருந்தான்.
காயம் காரணமாக இன்னும் அவன் முழுமையாக குணமடையவில்லை என்றாலும் அவனது கம்பீரம் மட்டும் ஏனோ இன்னும் குறைந்தபாடில்லை.
எளிய உடையில் கூட அரசன் போல் தான் காட்சியளித்தான்.
ரீனாவோ நீண்ட நேரம் என்ன அணிவது என்று யோசித்த பிறகு, அடர் நீல நிற முழுநீள உடையைத் தேர்ந்தெடுத்தாள்.
எளிமையான உடைதான்.
முகத்தில் கூட எந்த ஒப்பனையும் செய்துக் கொள்ளவில்லை.
இருந்தும் ஏனோ பார்க்க தேவதை போலவே தெரிந்தாள்.
கிரிஸ்டோபர் கூட அவளை கண்டதும், “வாவ் மேடம்... சூப்பரா இருக்கீங்க!” என கண்களை விரித்தான்.
“ப்ச்... ஓவரா பில்டப் கொடுக்காத.” என்று அவள் சிரிக்க,
“நான் உண்மையைத்தான் சொல்றேன் மேடம்.” என்றான் அவன்.
ஆனால் மைக்கேல் ஒரே ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு, “போலாமா?” என்று மட்டும் வினவினான்.
‘ஒருவேள இவருக்கு இந்த கலர் பிடிக்கலையோ?’ என்ற எண்ணம் திடீரென முளைத்திட, ‘யார் என்ன நினைச்சா என்ன? எனக்கு பிடிச்சிருக்கு.’ அவ்வெண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிந்தவள், “ம்ம்...” என தலையாட்டிவிட்டு அவர்களுடன் கீழ்தளத்தை நோக்கி நடந்தாள்.
நடந்தவள் தோட்டத்தை கண்டதும் ஸ்தம்பித்து நின்றாள்.
ஏதோ தேவலோகத்தையே பூமிக்கு இறக்கி வைத்தது போல அந்த இடம் வண்ண விளக்குகளாலும், மலர் அலங்காரங்களாலும் ஜொலித்தது.
மரக்கிளைகளில் தொங்கவிடப்பட்டிருந்த மஞ்சள் நிற விளக்குகள் விண்மீன்களைப் போல மினுங்கிக் கொண்டிருக்க, தோட்டம் முழுவதும் மென்மையான இசை பரவியிருந்தது.
குளிர்ந்த மாலை காற்றோடு மலர்களின் நறுமணமும் கலந்து வீச, அங்கிருந்த ஒவ்வொரு மூலையும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
“வாவ்…” வியப்பில் தன்னை மறந்து முணுமுணுத்தாள் ரீனா.
அவளைப் போலவே கிரிஸ்டோபரும், “வாவ்…” என்றான்.
ஆனால் என்ன... இவள் அங்கிருந்த அலங்காரங்களில் தன்னைத் தொலைத்து “வாவ்…” என்றாள்.
அவனோ மேசை மேல் குவிந்திருந்த உணவுகளைப் பார்த்து “வாவ்…” என்றான்.
அவ்வளவுதான் இருவருக்கும் இடையிலான வித்தியாசம்.
ஒருத்திக்கு கண்கள் நிறைந்தது.
அவனுக்கு எச்சில் வாயை நிறைத்தது.
ஏதோ காணாததை கண்டவன் போல் கிரிஸ்டோபரோ உணவு மேசையை கண்டு வெறிக்க,
“ப்ச்... சோற பார்த்த போதுமே உனக்கு உலகமே மறந்துடுமே!” அவனது தலையை தட்டி நக்கலடித்தான் மைக்கேல்.
“பாஸ்... இது சும்மா சோறு இல்லை பாஸ். இது கலாச்சாரம்... இது பாரம்பரியம்... இது ஒரு நாட்டோட ஹெரிடேஜ்!” விழிகளை அகல விரித்து தத்துவம் பேசியவன், “அதுவும் அந்த கேக்... அந்த கிரில் சிக்கன்... அந்த பாஸ்தா... ஐயையோ!” என மார்பை பிடித்துக் கொண்டான்.
“பேசாம உனக்கு அதுங்களை தான் டா கட்டி வைக்கனும்.” மைக்கேலோ முகம் சுளித்து கடுப்படிக்க,
“பாஸ்… எனக்கு ஓகே பாஸ். நான் வேணா இப்பவே புரபோஸ் பண்ணவா?” தீவிரமாக வினவினான் கிரிஸ்டோபர்.
அவனது பேச்சில் ரீனாவையும் மீறி சிரிப்பு வெடிக்க, அவள் சிரிப்பதை கண்டு மைக்கேலின் இதழ்களும் தன்னையறியாமல் விரிந்தன.
‘ஆமா இப்ப என்ன சொல்லிட்டேன்னு இவங்க இரண்டுபேரும் இந்த சிரிப்பு சிரிக்கிறாங்க?’ புரியாமல் கிரிஸ்டோபரோ திருதிருவென விழிக்க, விறுவிறுவென அவ்விடம் ஓடி வந்து, “டோப்ரோதோஷ்லி, டோப்ரோதோஷ்லி!” என்று உற்சாகமாக கூறி மைக்கேலின் கரத்தைப் பற்றி குலுக்கினார் மார்கோ.
அவர் என்ன பேசுகிறார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், “டிரான்ஸ்லேட் பிளீஸ்...” என கிரிஸ்டோபரிடம் கிசுகிசுத்தாள் ரீனா.
“வெல்கம்... வெல்கம்...” என்று உடனே மொழிபெயர்த்து கூறினான் கிரிஸ்டோபர்.
“ஓ…” என்று இவள் இதழ் குவிக்க, அதே வார்த்தையை கூறி ரீனாவின் பட்டுக் கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றாள் எலினா.
அவர்களின் அன்பில் மனம் நெகிழ்ந்தவளாய் புன்னகைத்தாள் ரீனா.
மொழி புரியவில்லை.
ஆனால் அந்த பாசம் புரிந்தது.
அறிமுகமே இல்லாத நாட்டில், அறிமுகமே இல்லாத மனிதர்களிடம் இருந்து கிடைத்த அன்பும் பாசமும் ரீனாவை நெகிழ வைத்தது.
எலினா கைப்பிடித்து அழைத்துச் செல்ல, தனது தாயின் சாயலை அவரிடம் கண்டாள்.
அங்கிருந்தவர்களும் புன்னகையுடன் அவளை வரவேற்று, கட்டியணைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.
மொழி புரியாவிட்டாலும், அவர்களின் பாசம் மட்டும் தெளிவாகப் புரிந்தது.
அவரது மகன் லூகாவோ ஒருபடி மேலே சென்று,
“பி ப்ளேசாலி ஸ் மனோ?”
என்னுடன் நடனமாடுகிறீர்களா? என ஸ்லோவேனிய மொழியில் கேட்டு வலது கரத்தை நீட்டினான்.
‘இந்த ஆளுக்கு என்ன வேணுமாம்?’
மொழி புரியாமல் திருதிருவென விழித்தாள் ரீனா.
தெரிந்து கொள்ள வேண்டி,
“கிரிஸ்டோபர்...” என்று பற்களுக்கு இடையில் வார்த்தைகளை அழுத்தி அழைத்தாள்.
கிரிஸ்டோபரோ,
“மேடம்... அது...” என்று பதில் சொல்ல வாய் திறந்த அடுத்த நொடி, வேண்டாம் என்பது போல் கோபத்துடன் கைநீட்டி அவனைத் தடுத்தான் மைக்கேல்.
உடனே கிரிஸ்டோபரும் திறந்த வாயை இறுக மூடிக் கொள்ள,
விறுவிறுவென ரீனாவின் அருகில் வந்த மைக்கேல், அவளது இடையை வளைத்துப் பிடித்தபடி,
“ஓனா யே மோயா.”
இவள் என்னுடையவள்.
என ஸ்லோவேனிய மொழியில் அழுத்தமாகக் கூறினான்.
‘இவருக்கு இந்த லாங்குவேஜ் எல்லாம் கூட தெரியுமா?’ ரீனாவோ வியப்பில் ஆழ்ந்து அவனை பார்க்க, மைக்கேலும் அவளது விழிகளுக்குள் மூழ்கிப்போனான்.
இருவரையும் ஒருசேர பார்த்த கிரிஸ்டோபரோ, “ஓகே ஒகே…” மைக்கேலின் மனதில் உள்ளதைப் படித்தவனாய், என்று கூறி, இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
🥰
பதிலளிநீக்கு