Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

2 அழலின் அர்த்தம் நீயே

அன்று முதல் ஞான சேகரனோடு பேசுவதையே நிறுத்திக் கொண்டாள் தாரா. 

அவரும் பலவாறு முயற்சி செய்து பார்த்து விட்டார் அவள் கொஞ்சமும் அசையவில்லை. 

அவரும் 'எத்தனை நாட்கள் கோபத்தை இப்படி பிடித்து வைத்திருப்பாள் கொஞ்ச நாள் போனா அவளே சரியாகிடுவா' என்று விட்டு விட்டார். 

தாராவோ விடுமுறை முழுவதையும்  தாயின் புட்டிக்கில் வேலை செய்யும் அவள் வயது பெண்களுடன் அரட்டை அடித்தபடி கழித்தாள். அவளுக்கும் இதேப் போல சொந்தமாக புட்டிக் ஆரம்பிக்கும் ஆசை சிறுவயது முதலே உண்டு. 

அடுத்து எப்படியாவது சென்னையில் அவளது தோழிகளுடன் சேர்ந்து பேஷன் டிசைனிங் படிக்க வேண்டும் என்று அவள் திட்டமிட்டு இருந்தாள். 

மேகலா தான் "அங்கிள் அதுக்கு எல்லாம் அலோ பண்ண மாட்டாங்கடீ தேவையில்லாத கனவு காணாதே. இங்கையே ஏதாவது ஆட்ஸ் க்ரூப் எடுத்து படி. பேஷன் டிசைனிங் ஆன்டிகிட்டவே கத்துக்கோ" என்று சொல்ல. 

தாராவிற்கு நிதர்சனம் புரிந்தாலும் உள்ளுக்குள் தோன்றும் ஆசையை அடக்க முடியவில்லை. 

எப்படியாவது வெளியூரில் தங்கி படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் வலுத்துக் கொண்டே இருந்தது. அந்த மூன்று ஆண்டும் எந்த கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. 

அவர்கள் அனைவரும் எதிர்பார்த்த அந்நாளும் வந்தது. தாராவின் தேர்வு முடிவுகள் தான். நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தாள் தாரா. 

அவளுக்கு உள்ளுக்குள் படபடபப்பு அடுத்து கல்லூரி சேர்க்கைப் பற்றி தந்தையிடம் பேசியாக வேண்டிய கட்டாயம். எப்படியும் ஞானசேகரன் அவளது ஆசையை நிறைவேற்ற போவது இல்லை, இருந்தாலும் ஒரு நப்பாசை. ஒரு மாதம் கழித்து தந்தையிடம் பேசச் சென்றாள் தாரா. 

அவள் பேசத் துவங்கும் முன்னே "நல்ல மார்க் எடுத்துருக்கனு அம்மா சொன்னா ரொம்ப சந்தோஷம் தாராம்மா...  அது தான் ஸ்வீட் வாங்கிட்டு நம்மூரு காலேஜ்ல  பாரமும் வாங்கிட்டு வந்தேன். நீ இந்த இங்கிலீஷ்ல நல்ல மார்க் எடுத்துருக்கியாமே. அது தான் அந்த பாடத்துக்கே பாரம் வாங்கிட்டு வந்துட்டேன். நிரப்பி குடு அப்பாவே எல்லாம் பார்த்துக்கிறேன்" என்றவர் வேலையாட்களுக்கு இனிப்பு வழங்க சென்று விட்டார். 

'எனக்கு எது விருப்பம் என்று கூட அப்பா என்னிடம் கேட்கவில்லையே' என்று கோபமும் அழுகையும் அவளிற்கு சேர்ந்தே வந்தது. 

சற்று நேரத்தில் மனோகரி மகளைத் தேடி வந்தார். 

"பாப்பா பார்ம் எல்லாம் பில் பண்ணிட்டியாடா?" என்றவர் கேட்க. 

'தாயிற்கும் தன் மேலும் தன் விருப்பத்தின் மேலும் அக்கறை இல்லையே'  என்று நினைத்தவள் அதை வார்த்தையாக அவரிடமே கேட்க. 

"உனக்கு பேஷன் டிசைனிங் தானே ஆசை? அது தான் நான் இருக்கனே. நானே உனக்கு சொல்லிக் கொடுத்துடுவேன். இதுக்கு எதுக்கு தனியா படிப்பு. அதுவும் இல்லாம இப்போ நீ லிட்ரேசர் படிச்சா அடுத்து ஒரு பிஎட் முடிச்சா டீச்சரா வேலை செய்யலாம் கௌரவமான வேலை" என்று சொன்னவர் "நடேசன் அண்ணனும் அது தான் சொன்னார். புள்ளையை டீச்சருக்கு படிக்க வைங்க. எதிர்காலம் நல்லா இருக்கும்னு" என்றவர் சொல்ல. 

'என்னோட எதிர்காலத்தை யாரோ ஒரு நடேசன் அண்ணன் எப்படி தீர்மானிக்க முடியும்?' என்று ஆத்திரமாக வந்தது. ஆனால் எதுவும் கேட்கவில்லை. 

மீண்டும் அமைதியையே கையில் எடுத்தாள். யாரிடமும் எதுவும் செய்யவில்லை. அவளது நண்பிகள் அனைவரும் வெளியூரில் தங்கிப் படிக்க கிளம்பி விட்டனர். அதிலும் மேகலா வெளிநாடு செல்வதை தாராவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 

தாராவின் கல்லூரி முதல் நாள், திக்குத் தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டதைப் போல விழித்தாள் அவள். 

யாரோ பின்னால் இருந்து தன்னை பார்த்துக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்த தாரா சட்டென திரும்பிப் பார்க்க "ஹாய்" என்று கடைசி வரிசையில் இருந்து கையசைத்தாள் கயல்விழி. 

அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்த தாராவிற்கு அப்பொழுது தான் மூச்சே வந்தது. கயல்விழி யாருமல்ல தாராவின் பள்ளியில் அவளுடன் படித்தப் பெண் தான். 

தாரா அவளைப் பார்த்து சிநேகமாக புன்னகைக்க, கயல்விழி அவளை கடைசி வரிசைக்கு வரும்படி அழைத்தாள். 

தாராவும் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் கயல்விழியோடு சென்று அமர்ந்துக் கொண்டாள். "நல்ல வேலை தாரா, எங்க நாங்க மட்டும் வந்து தனியா மாட்டிகிட்டோமோனு பயந்துட்டே இருந்தேன்" என்று கயல்விழி சொல்ல தாரா "இரண்டு பேரா? யாரு?" என்று கேட்டாள். 

"அது நம்ப க்ளாஸ்மேட் அர்ஜீன். அவனும் இந்த காலேஜ் தான். ஐடி டிபார்ட்மென்ட் அப்புறம் ப்ரேக்ல போய் பார்க்கலாம்" என்று கயல்விழி சொல்ல.

'அவனைப் போய் நான் ஏன் பார்க்கனும்?' என்று நினைத்தவள் அறிந்திருக்கவில்லை. இனி ஒவ்வொரு நாளும் அவனைக் காண்பதற்காகவே அவள் காத்திருக்கப் போகிறாள் என்பதை. 

கயல்விழி சொன்னது போலவே ப்ரேக் டைமில் அர்ஜூனை சந்திக்க சென்றனர் இருவரும். கேன்டினில் அமர்ந்து சற்று நேரம் கல்லூரி பற்றிப் பேசியவர்கள் இன்று கல்லூரி முடிந்த பின் ஒன்றாக தான் கிளம்பினார். 

கயலும் அர்ஜூனும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசிக்க அவர்களுக்கு அடுத்த ஏரியாவில் தாராவின் வீடு அமைந்திருந்தது. கல்லூரியும் நடந்து செல்லும் தொலைவிலே அமைந்து விட மூவருமாக வீட்டிற்கு கிளம்பினர். 

தாராவை அழைப்பதற்கு ட்ரைவர் வந்திருந்தார். அவரை மறுத்து விட்டு நண்பர்களுடன் கதை பேசிக் கொண்டே வீட்டிற்கும் வந்து சேர்ந்து விட்டாள். 

அவள் எதிர்பார்த்தது போலவே ஞானமூர்த்தி கோபமாக அமர்ந்திருக்க. 

மனோகரியோ "என்ன புதுப் பழக்கம் இது?" என்று கண்டிப்பான குரலில் கேட்க. 

அவளோ எதையும் கண்டுக் கொள்ளாது தன் அறை நோக்கி நடக்க.

"ப்ரெண்ஸோட வீட்டுக்கு நடந்து வரது ஒன்னும் குத்தமில்லை. அந்த ப்ரெண்டு பையனா இருக்குறது தான் தப்பு. நாலு பேரு பார்த்தா என்ன நினைப்பாங்க. ஞானம் புள்ளை வளர்த்துருக்கான் பாரு புள்ளை, ரோட்டுல ஆம்பளை பையனோடு சிரிச்சி பேசிட்டு போகுதுனு தப்பா பேச மாட்டானா? பார்த்து சூதனமா நடந்துக்க. செல்லம் எல்லாம் திங்கறதுக்கும் குடிக்குறதுக்கும் மட்டும் தான்" என்றவர் இதற்கு மேல் இருந்தால் கோபத்தில் பேசி விடுவோம் என்று அங்கிருந்து அகன்று விட. 

"டிகிரி முடிக்கனும் தானே?" என்ற தாயும் வேலையைப் பார்க்க சென்று விட்டார்.

இருவர் சென்ற திசையைப் பார்த்த தாராவின் எண்ணங்களோ தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தது. 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்