தீ மீது வீணை 17
அத்தியாயம் 17
மேக கடலுக்கு நடுவே விமானம் மிதப்பது போல் தோன்றியது ரீனாவிற்கு.
மேலிருந்து பார்க்க, பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் சிறு வயதில் அவள் விளையாடிய பொம்மை வீடுகளாய் அவளுக்கு காட்சியளித்தன.
நதிகள் கூட பள்ளிக்கு அவள் அணிந்து சென்ற வெள்ளை நிற ரிப்பன் போல் தோற்றமளித்திட, பல நாட்களுக்கு பின் மெல்ல இதழ் விரித்து ரசனையாய் அவைகளை பார்த்தாள்.
நீல நிற கடலும், கடற்கரையும், அதற்கு அருகே செழித்து வளர்ந்திருக்கும் தென்னை மரங்களும், வயோதிக பெண்ணின் மேனி போல் சுருக்கம் விழுந்த மலைகளும், அதில் மோதி நிற்கும் வெண் மேகங்களையும் காண காண மன இறுக்கம் குறைந்து உடலோ தளர்ந்திட, கண்களோ ஆனந்த கண்ணீரில் மிளிர்ந்தன.
இறைவனின் உறைவிடம் இயற்கை தான் என்பதை அக்காட்சிகளோ சத்தமின்றி நிரூபித்திட, கடவுளை கண்ட பக்தன் போல் பரவசம் அடைந்து, அக்காட்சிக்குள் லயத்து இறுதியாக சோர்வில் பல நாட்கள் மூடாத விழிகள் நோகாத முறையில் அயர்ந்திட, கருந்தோகை சிரசோ மெல்ல அவனது தோளில் சரிந்து விழுந்தது.
அவ்வாறு சரிந்தவளை நோகடிக்காமல் குழந்தையென தனது தோள்களில் தாங்கிக் கொண்டான் மைக்கேல்.
அவனது விரல்களோ அவளின் பிறை முகம் மறைத்த கூந்தல் கற்றைகளை ஒதுக்கி காதிற்கு பின்னால் சொறுகின.
கருமை படர்ந்த விழிகளையும், காய்ந்து உலர்ந்த இதழ்களையும் கவலையுடன் பார்த்தவன் இறுதியாக அவளின் தாடையை பிடித்து கட்டை விரலால் அவளது இதழை வருடியபடியே நெற்றி பொட்டில் முத்தமும் இட்டான்.
எச்சில் முத்தம் பட்டதும் தனிச்சையாய் முகம் சுளித்தவள் அவனது தோளில் சிறு குழந்தையாய் நெளிந்திட, உடனே பதறி அவளின் கார்கூந்தலை வருடி விட்டான் மைக்கேல்.
வார்ப்பிரும்பில் வார்க்கப்பட்ட உளியாய் அவன் விரல்கள் இதுவரை வன்மையை காட்டி இருக்கின்றன.
முதன்முறையாக அவைகளோ மயில் தோகையின் மென்மையை தத்தெடுத்துக் கொள்ள, சுகமாய், சொகுசாய் அவனது உடலோடு ஒண்டினாள் ரீனா.
அவ்வாறு ஒண்டியவளை கழுத்து வளைவில் இவனோ புதைத்துக் கொள்ள, “சார்! வாட்டர்.” என சத்தமிட்டு அழைத்தாள் விமான பணிப்பெண்.
குறைந்த அளவிலேயே அவள் குரல் இருக்க, எங்கே அந்த குரல் தன்னவளை எழுப்பிவிடுமோ என பயந்து, “உஸ்…” என்று அதட்டி, ‘தள்ளி போ!’ என்பது போல் கை காட்டினான் மைக்கேல்.
அவனது சைகையை புரிந்துக் கொண்டு அவளும் பின் இருக்கைக்கு நகன்று சென்றிட, ரீனாவின் தோளை நிதானமாய் தட்டிக் கொடுத்தபடியே பின்னால் சாய்ந்து கண் மூடினான்.
மூடியவன் கண்களோ மெல்ல கலங்கின.
இரு சொட்டு கண்ணீர் கூட இமை தாண்டி காதை நோக்கி தனது பயணத்தை தொடங்கின.
கண்ணீர்…
தாய், தந்தை மரணத்தை பார்க்கும் வரை அவன் அறியாத ஒன்று.
வீட்டின் கடைக்குட்டி, ஆண் வாரிசு என்பதாலோ என்னவோ விளையாட்டிற்கு கூட அவனை அவனது பெற்றோர்கள் அடித்ததோ, அழ வைத்ததோ கிடையாது.
முதன்முறையாக ஒரு நாள் அழுதான். அந்த நாள் அவனது தாய் தந்தை மரித்த நாள்.
சிறுவயதில் அவன் தாய் அவனை “மிகி…” என செல்லமாக அழைப்பார்.
அவன் தந்தை அவனை, “பலியா…” என்பார். பலியா என்றால் கொடுவ மொழியில் “பெரியவன்” என்று பொருள்.
அவன் தமக்கையோ, “மைகா” என்பாள்.
நண்பர்களோ, “மைக்கேல்” என்பார்கள்.
மாணவர்களோ, “சார்…” என்பார்கள்.
இப்படி பல பெயரை எடுத்தவன் “அனாதை” என்ற பெயரையும் ஒரு நாள் எடுப்போம் என நினைத்திருப்பானா? குறைந்தபட்சம் கனவாவது கண்டிருப்பானா?
கனவிலும் கேட்காத, கேட்க துணியாத, “அனாதை” என்ற பெயரை அல்லவா அந்த நிகழ்வுக்கு பின் எடுத்துவிட்டான்.
நினைக்க நினைக்க நெஞ்சு பொறுமியது.
உடல் இறுகியது.
இதற்கெல்லாம் காரணமானவளை துண்டு துண்டாக வெட்டி கொன்றால் என்ன என்று கூட தோன்றியது.
ஆனால்… ஆனால்… கொல்ல முடியவில்லையே.
கொல்வது என்ன? கொல்ல நினைத்தாலே எங்கோ வலிக்கிறதே.
அது ஏன்? அப்படி என்ன இருக்கிறது இவளிடம்?
சிவந்த விழிகள் தூங்கும் அவளை ஆராய்ந்தன.
குழந்தை போல் கள்ளங்கடமற்ற மிருதுவான முகம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்களே? இவளது முகத்தில் அமைதியும் அன்பும் தானே தெரிகிறது.
அன்பும் அமைதியும் உள்ள இடத்தில் துரோகம் இருக்குமா? தனது சுய லாபத்திற்கா அடுத்தவரை சித்திரவதை செய்யவோ கொல்லவோ தோன்றுமா?
கேள்விகள் அனைத்தும் விடையின்றி அந்தரத்தில் தொங்கின.
உண்மையில் அன்று என்ன நடந்திருக்கும்? யார் இதையெல்லாம் செய்திருப்பார்கள்? விபத்தா? இல்லை சதி செய்து விபத்தாக ஜோடிக்கப்பட்டதா?
யோசிக்க யோசிக்க தலை சூடானது.
கையில் சிக்கும் பொருட்களை எல்லாம் உடைக்க தோன்றியது.
“ஆ…” என்று வானம் அதிர கத்த தோன்றியது.
மனித மிருகமாய் மாறி காணும் அனைவரையும் கொன்று புதைக்க தோன்றியது.
தோன்றியதெல்லாம் செய்ய முடியாது என்ற நிதர்சனத்தை அவனுக்குள் சாவின் விளிம்பில் இருக்கும் தேவனோ உரைத்துக் கொண்டே இருக்க, எதை ஏற்பது? எதை விடுவது? என்ற போராட்டத்தில் இவனோ தவித்துக் கொண்டிருக்க, “பாஸ்…” என மெல்ல அவனது கரத்தை தட்டி நடப்புக்கு கொண்டு வந்தான், கிரிஸ்டோபர்.
பதிலுக்கு இவனோ, “ஹாங்…” என அதிர்ந்து விழிக்க, “பாஸ்! பிளைட் லேண்டாக போகுது. சீட் பெல்ட் போட சொல்றாங்க.” அமைதியாக குரலில் அவனோ தகவல் கூற, யோசனையுடனே தனது தோளில் தூங்கும் ரீனாவை பார்த்தான் மைக்கேல்.
பல நாட்களுக்கு பிறகு அசந்தும் தூங்கும் அவளை எழுப்ப ஏனோ மனம் வரவில்லை. விமானம் தர இறங்கும் போது அப்படியே தூங்கட்டும் என்று விடவும் முடியாது.
என்ன பண்ணலாம்? ஒரு வினாடி யோசித்தவன் பின் அவளாக தூக்கம் களைந்து எழட்டும் என நினைத்து, பூப்போல் அசைந்து அவளது இடுப்பை சுற்றி பாதுகாப்புப் பட்டையை அணிவித்து விட்டான்.
அதன் பின் தன்னுடையதை அணிந்துக் கொள்ள, விமானமோ மெல்ல தரையிறங்கி ஓடு தளத்தில் ஓட தொடங்கியது.
ஓடும் போது ஏற்பட்ட அதிர்வில் அரண்டு விழித்தாள் ரீனா.
அவள் காணும் போது இவனோ தனது முகத்தை இறுக்கிக் கொள்ள, விமானமோ ஓடு தடத்தில் ஓடி ஒரு இடத்தில் நின்றது.
நின்றபின் விமான கதவோ மெல்ல திறந்திட, பயணிகளோ மெல்ல எழுந்து வெளியேறிட, மைக்கேல் மட்டும் ஏனோ முக சுளிப்புடன் மார்பை பற்றினான்.
“பாஸ்! என்னாச்சு?” அக்கறையுடன் கிரிஸ்டோபர் வினவ, “பிளைட் லேண்டாகும் போது, ஸ்டிச்சஸ் பிரிச்சிருக்கும்னு நினைக்கிறேன். இங்க பெயினாகுது.” அடிப்பட்ட இடத்தை தொட்டு இவன் பதில் பகிர்ந்திட, சட்டையை தாண்டி இரத்தம் கசிந்திருந்தது.
அதை பார்த்து, “ஐய்யோ…” பதறி வாய் விட்டே அலறினாள் ரீனா.
இவளது அலறல் சத்தம் கேட்டு சக பயணிகளோ சட்டென இவர்கள் பக்கம் திரும்பிட, “ப்ச்… உஷ்…” இதழ் குவித்து அவளை அடக்கினான் மைக்கேல்.
உடனே அவளும் அமைதியாகிட, ‘போலாம்’ என்பது போல் சைகை காட்டிவிட்டு மெல்ல மைக்கேல் நடக்க, அவனை முன்னால் போக விட்டு ரீனாவும் கிரிஸ்டோபரும் பின்னால் வந்தனர்.
“நல்ல தூக்கம் போல.” சிநேகமாய் புன்னகைத்து வினவினான் கிரிஸ்டோபர்.
“ம்ம்ம்… ஆமா நாம இப்ப எங்க இருக்கோம்? எங்க போறோம்?” பதிலுக்கு ஆர்வமுடன் வினவினாள் ரீனா.
“நாம இப்ப டர்க்கி கேப்பிட்டல் இஸ்தான்புல்ல இருக்கோம். இப்ப மார்னிங் செவன். நைட் லெவனுக்கு நமக்கு டிரைன் இருக்கு.” அவனோ விவரம் கூறிட, “டிரைனா? டிரைன்ல நாம எங்க போறோம்?” பதிலுக்கு இவளோ புருவம் உயர்த்தினாள்.
“ஸ்லோவேனியா தெரியுமா மேம்?” பூடாகமாய் அவன் ஆரம்பிக்க, “ஸ்லோவேனியாவா? அது எங்க இருக்கு?” இமை சுறுக்கினாள் ரீனா.
“அது ஐரோப்பால இருக்கிற ஒரு சின்ன கண்ட்ரி மேம். பெரிசா யாருக்கும் அந்த கண்ட்ரி பத்தி தெரியாது. நிம்மதியா கொஞ்ச நாளைக்கு அங்க இருக்கலாம்.” பதில் கொடுத்தான் கிரிஸ்டோபர்.
“யாருக்குமே தெரியாத கண்ட்ரினா, அப்ப அது புவர் கண்ட்ரியா? சரியான மெடிகல் ஃபெசிலிட்டி இல்லைனா மைக்கேல்… மைக்கேலுக்கு எப்படி ட்ரீட்மெண்ட் பார்க்கிறது?” கவலையுடன் ரீனா கேள்வி கேட்க, அதுவரை பின்னால் நடக்கும் சம்பாஷனைகளை கவனித்தபடியே வந்த மைக்கேலின் கால்கள் சட்டென வேர் பிடித்தன.
இடுக்கிய புருவத்துடன் இவனோ நின்ற இடத்தில் உறைந்திட, கிரிஸ்டோபரிடம் பேசியபடியே வந்து, அவன்மேல் மோதி கொண்டாள் ரீனா.
மோதிய வேகத்தில் நிலைதடுமாறி இவளோ விழ போக, இடையில் கை போட்டு அவளை தூக்கி நிறுத்தினான் மைக்கேல்.
“கண்ணு என்ன பொரணியிலையா இருக்கு? பாத்து வர மாட்டியா?” கடிந்தவன் இன்னும் இறுக்கமாய் அவளது இடையை பற்றிக் கொள்ள, அவனது கைகளில் நெளிந்து இடை பற்றிய அவனது கரத்தை யாருக்கும் தெரியாமல் இவளோ எடுக்க முற்பட, “ப்ச்… உஷ்… ஒழுங்கா வா.” அதட்டி அடக்கியவன், அவளை தனது நடைக்கு பழக்கிட, வேறு வழியின்றி அவனுடனே ஒட்டி நடந்தாள் ரீனா.
கிரிஸ்டோபரோ அவர்களுக்கு பக்கவாட்டில் நடந்தபடியே, “மேம்…” குறு நகையுடன், “ஸ்லோவேனியா சின்ன கண்ட்ரி தான். பட் ரொம்ப டெவலப்டு கண்ட்ரி. ஹாஸ்பிட்டல், மெடிகல் ஃபெசிலிட்டி, செக்யூரிட்டி எல்லாமே நல்லாவே இருக்கும்.” என்றான் விளக்கமாக.
“அப்ப ஓகே.” நிம்மதி பெருமூச்சு விட்டவள், “ஆமா சார்… ஸ்லோவேனியா எப்படி இருக்கும்?” அடுத்த கேள்வியை தொடுக்க, “ஹான்… ஸ்லோவேனியா…” புருவம் சுருங்க யோசித்தப்படியே, “ஆல்ப்ஸ் மலைகள் சூழ்ந்த நாடு மேம். நிறைய காடுகள் இருக்கும். லேக்ஸ் இருக்கும். ஹாங் அங்க நிறைய கேஸ்டில் இருக்கு மேம். ஈவன் கேவ் டெம்பிள் கூட இருக்கு.” தனக்கு தெரிந்தவைகளை எடுத்துக் கூறினான் கிரிஸ்டோபர்.
“ஓஹோ…” உன்னிப்பாய் அவன் கூறுவதை கேட்டபடியே வந்தவள், “ஆமா அங்க அக்கி ரொட்டி கிடைக்குமா?” இடைமறித்து வினவிட, வாய் மூடி கிணுங்க சிரித்தான் மைக்கேல்.
அவனது சிரிப்பு சத்தம் கேட்டு இவளோ அவன் புறம் திரும்ப, “ம்ஹும்ஹும்ஹாஹா…” இம்முறை வாய் விட்டே மைக்கேல் சிரித்திட, கிரிஸ்டோபரோ அவன் சிரிப்பதை கண்டு அதிசயத்தான்.
அவன் இவ்வாறு சிரித்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்திருக்கும்.
பல நாட்களுக்கு பிறகு அவனது சிரிப்பு சத்தத்தை இப்போது தான் கேட்கிறான் என்பதால் இவனோ விழி விரிக்க, “ஏன் சிரிக்கிறீங்க?” ஊடலுடன் சிணுங்கினாள் ரீனா.
“ஹும்ஹும் பின்ன? மத்தவங்களுக்கெல்லாம் என்னன்னமோ பிராபலம், உனக்கு அக்கி ரொட்டி தான் பிராபலம், இல்ல?” புன்னகைத்தபடியே மைக்கேல் வினவ, “அப்படி இல்ல. அதெல்லாம் கிடைச்சா நல்லா இருக்கும்ல அதான் கேட்டேன்.” அசடு வழிந்தபடியே முணுமுணுத்தாள் ரீனா.
“ஹுஹும்… அக்கி ரொட்டி கிடைக்க வழியில்ல. வேணா நைட்டு நீர் தோசை கிடைக்க ஏற்பாடு பண்றேன்.” கேலி சிரிப்புடன் இரட்டை அர்த்தத்தில் பதில் கொடுத்தான் மைக்கேல்.
அதன் பொருள் தெரியாமல், “நீர் தோசையா? அது மட்டும் கிடைக்குமா? அப்ப தொட்டுக்க… தொட்டுக்க தக்காளி தொக்கும் கிடைக்குமா?” வெகுளியாய் வினவினாள் ரீனா.
அவளுக்கு தெரியாத பொருள் கிரிஸ்டோபருக்கும் தெரியும் போல, “பாஸ் நானும் இங்க தான் இருக்கேன். எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல.” தனது இருப்பை ஞாபகப் படுத்தினான்.
“உன்ன யார் இங்க இருக்க சொன்னது? போ மொத டேக்ஸி புக் பண்ணு.” புன்னகைத்தபடியே விரட்டினான் மைக்கேல்.
“ம்ம்… ஓகே பாஸ்.” இழுவையாய் பதில் கொடுத்துவிட்டு அவ்விடமிட்டு நகன்றான் கிரிஸ்டோபர்.
“என்னாச்சு? ஏன் அந்த சார் வேகமா போறாரு?” புரியாமல் இவள் வினவ, “ஹும்… சாரா? அவனா? என்ன மட்டும் மைக்கேல் மைக்கேல்னு கூப்பிடுற? அவனுக்கு மட்டும் சாரா?” பொறாமையில் இடித்தான் மைக்கேல்.
அவன் குரலை உயர்த்தவும் இவளது இமைகளோ படபடத்தன.
“நீ… நீங்க தான மைக்கேலுனு முன்ன கூப்பிட சொன்னீங்க?” பயத்தில் குரல் கம்மியது இவளுக்கு.
“ஆமா நான் தான் அப்படி கூப்பிட சொன்னேன். இப்பவும் நான் தான் சொல்றேன் அவனை கிரிஸ்டோபர்னு கூப்பிடு.” அரட்டினான் மைக்கேல்.
“ம்ம்ம்…” பதிலுக்கு இவளோ தலையாட்ட, வாடகை காருடன் விமான நிலைய வாசலில் காத்திருந்தான் கிரிஸ்டோபர்.
அந்த காரில் அவளை பத்திரமாய் ஏற்றிவிட்டு தானும் ஏறிக் கொண்டான் மைக்கேல்.
வாகனமோ சிறிது நேரத்தில் அவர்களை ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்த்திட, உயரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டான் மைக்கேல்.
மாலை வரை நடந்த பரிசோதனைக்கு பின், “டிராவல் பண்ணலாம். பட் பாத்துக்கோங்க இன்ஃபெக்ஷன் வர வாய்ப்பு இருக்கு.” ஆங்கிலத்தில் எச்சரித்தார் மருத்துவர்
“ஓகே டாக்டர் நாங்க பாத்துக்கிறோம்.” என்று கூறி அவர் எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்கி வந்தான் கிரிஸ்டோபர்.
மைக்கேலும் ரீனாவும் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்திருக்க, “டாக்டர் பிர்ஸ்கிரைப்ப பண்ண டேபிளட்ஸ் எல்லாம் வாங்கிட்டேன். இப்ப உங்களுக்கு பரவாயில்லையா?” அக்கறையுடன் அவன் கரம் பிடித்து வினவினான் கிரிஸ்டோபர்.
பதிலுக்கு இவனோ “ம்ம்ம்…” என்று தலையாட்டிவிட்டு அவனது காதில் ஏதோ கிசுகிசுத்தான்.
“ம்ம்ம்… ஓகே பாஸ்.” சிரித்த முகமாய் தலையாட்டிவிட்டு அவர்களிடமிருந்து விலகி சென்றான் கிரிஸ்டோபர்.
“எங்க போறாரு?” போகும் அவனை பார்த்து ரீனா வினவ, “அது உனக்கு எதுக்கு? வா.” என்று அதட்டி இஸ்தான்புல் நகரில் கால் பதித்தான் மைக்கேல்.
பழைமை மாற நகர வீதிகளை ரசித்துப்படியே இவள் வர, அவளை மட்டும் ரசித்தப்படியே உடன் வந்தான் மைக்கேல்.
ஓர் இடத்தில் ஏனோ கூட்டம் அதிகமாக தெரிந்திட, “அங்க என்ன நடக்குது?” ஆர்வத்துடன் அவனது முகத்தை ஏறிட்டாள் ரீனா.
“வா பாக்கலாம்.” அவளை இழுத்துக் கொண்டு கூட்டத்திற்குள் நுழைந்தான் மைக்கேல்.
அது ஒரு கலையரங்கம். பெல்லி நடனம் நிகழ ஏற்பாடாகியிருந்தது.
கூட்டத்துடன் கூட்டமாக நுழைவு சீட்டை வாங்கிக் கொண்டு இருவரும் அரங்கத்திற்குள் நுழைந்தனர்.
அருகருகே அமர்ந்தும் கொண்டனர்.
அரங்கில் ஒரு பெண்ணோ இடுப்பை ஆட்டி ஆட்டி ஆடிக் கொண்டிருக்க, அவளது நடன அசைவுகளை விழி விரிய ரசித்தான் மைக்கேல்.
அவன் ரசிப்பதை கண்டு முகம் சுளித்தாள் ரீனா.
“ஹும்… இடுப்ப ஆட்டுறதெல்லாம் ஒரு டான்ஸா?” அவன் காதுபடவே இவள் முணுமுணுக்க, “இடுப்பு இருக்கு ஆட்டுறா உனக்கும் இருந்தா ஆட்ட வேண்டியது தான?” சிறு புன்னகையுடன் நக்கலடித்தான் மைக்கேல்.
“இடுப்பு இருந்தாலும் நாங்கெல்லாம் இப்படி ஆட்ட மாட்டோம்.” பொறாமையில் இவள் இடிக்க, “அப்ப இல்லனு நீயே ஒத்துக்கிற?” வேண்டுமென்றே இவனோ அவளை சீண்ட, ‘ஹும்…” நான்கு முழத்திற்கு முகத்தை திருப்பிக் கொண்டாள் ரீனா.
ஆட்டம் நிறைவு பெற்றதும் வெளியே வந்தவர்கள் நேராக கடற்கரை மணலில் சென்று அமர்ந்தனர்.
பெரிதாக அலைகளின்றி அமைதியாக இருந்த அக்கடலை பார்த்தபடியே இவர்கள் அமர்ந்திருக்க, கையில் சில பைகளுடன் அவர்களிடம் வந்தான் கிரிஸ்டோபர்.
கொண்டு வந்த பைகளை அவர்கள் அமர்ந்திருந்த இருக்கை மேல் வைத்தவன், “இந்தாங்க பாஸ்! நீங்க கேட்ட மாதிரியே உங்களுக்கும் மேடமுக்கும் ஈவன் எனக்கும் டிரஸ் வாங்கிட்டேன்.” என்று கூறி ஒரு பொட்டலத்தை எடுத்து அவளது கையில் திணித்தான் கிரிஸ்டோபர்.
“என்னது இது?” வினவியபடியே அப்பொட்டலத்தை இவள் பிரிக்க உள்ளே அக்கி ரொட்டியும் சாம்பார் சட்னியும் இருந்தது.
“அக்கி ரொட்டியா எனக்கா?” ஆனந்த அதிர்ச்சியுடன் இவளோ வாய் பிளக்க, “ம்ம்ம்… ஆமா உங்களுக்கு தான். எப்படியோ தேடி பிடிச்சி வாங்கிட்டு வந்துட்டேன்.” பெரிதாய் அலுத்துக் கொண்டான் கிரிஸ்டோபர்.
நன்றி உணர்ச்சியுடன் “தேங்கிஸ்…” என்றாள் ரீனா அடித் தொண்டையில்.
“மேடம் தேங்கிஸ பாஸுக்கு சொல்லுங்க. அவர் தான் அக்கி ரொட்டி இல்லாம வரவே கூடாதுனு ஆர்டர் போட்டாரு.” பதிலுக்கு கிரிஸ்டோபரோ மைக்கேலை கை காட்டிட, இவளது விழிகள் அனிச்சையாய் அவன் பக்கம் திரும்பியது.
அவனோ அங்கு நடப்பவைகளுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் கடலை வெறித்திட, “தேங்கிஸ்…” அவன் காது பட முணுமுணுத்துவிட்டு அக்கி ரொட்டியை பிரித்து உண்ணலானாள் ரீனா.
அன்று இரவே மூவரும் ஸ்லோவேனியாவின் தலை நகரமாம் லியூப்லியானா நோக்கி தனது தொடர்வண்டி பயணத்தை தொடங்கினர்.
இஸ்தான்புலிருந்து செர்பியா நாட்டின் தலை நகர் பெல்கிரேட்டிற்கு சென்று, அதன்பின் அங்கிருந்து லியூப்லியானா செல்லும் தொடர்வண்டியை பிடிக்க வேண்டும் என்பதே அவர்களின் திட்டமாக இருந்தது.
இரவு முழுவதும் பயணம் செய்யும் அந்த தொடர்வண்டியின் முதலாம் வகுப்பில் மூவருக்கும் இடம் கிடைத்தது.
மைக்கேலும் ரீனாவும் கீழ் இருக்கையில் படுத்துக் கொள்ள, மேல் இருக்கையில் படுத்துக் கொண்டான் கிரிஸ்டோபர்.
“தட தட…” என்ற சத்தத்துடன் பல மலைகள் ஏரிகளை கடந்து தொடர்வண்டியோ தொடர்ந்து தனது பாதையில் சென்றுக் கொண்டிருக்க, அடிப்பட்ட உடலோடு அதிக தூரம் பயணித்ததாலோ என்னவோ மைக்கேலின் உடல் மெல்ல நழிவுற துவங்கியது.
வேதனை தாங்காமல் அந்த பக்கம் இந்த பக்கமென புரண்டு படுத்தவன் ஒரு கட்டத்தில், “அம்மாஆஆ…” என்று அலற ஆரம்பித்தான்.
அவன் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள் ரீனா.
அவளை போலவே கிரிஸ்டோபரும் எழுந்து, “பாஸ் என்னாச்சு?” என்று பதற, யாருக்கும் பதில் சொல்லும் நிலையில் அவன் இல்லை.
“ஐயோ அம்மா…” வலியில் அவனோ துடித்திட, “ஐயோ மைக்கேல்… மைக்கேல் என்ன என்னாச்சு உங்களுக்கு?” வினவியபடியே நெற்றியில் கை வைத்தாள் ரீனா.
அவனது நெற்றியோ நெருப்பென சுட, “ஐயோ சுடுது.” என்று அலறியவள், “மைக்கேல் பிளீஸ் என்ன பயமுறுத்தாதீங்க.” தளதளத்த குரலில் கண்ணீர் சிந்த, “பாஸ் இந்தாங்க இந்த டேபிளட் போட்டுக்கோங்க.” மாத்திரையும் தண்ணீர் புட்டியுடனும் ஓடி வந்தான் கிரிஸ்டோபர்.
உடலோ பலவீனப்பட்டு போயிருக்க, கை கால்கள் கிடுகிடுவென நடுங்கின.
மாத்திரையை பிடிக்க கூட திராணியின்றி அவனோ தடுமாற, அவனது நிலை உணர்ந்தவளுக்கோ உவர்நீர் ஆறாய் பெறுக்கெடுத்தன.
“மைக்கேல் பிளீஸ் டேபிளட்ட சாப்பிடுங்க.” கண்ணீருடன் அவனது வாய்க்குள் மருந்தை திணிந்து நீரை ஊற்றினாள் ரீனா.
மருந்தை உண்டபின்பும் அவனது நடுக்கம் குறைந்தபாடியில்லை.
குளிரில் நடுங்கி படுக்கையில் சுருண்டான் மைக்கேல்.
அவனது நடுக்கம் தீர ஏசியின் அளவை குறைத்து பின் அணைத்தும் வைத்தனர்.
ஜன்னல் கதவுகளை அடைத்தனர்.
அப்படியும் அவனது நடுக்கம் தீர்ந்தபாடியில்லை.
இரு கைகளையும் மார்புக்குள் புதைத்துக் கொண்டு நடுங்கி சுருண்டான்.
அவனது நடுக்கம் தீர கிரிஸ்டோபர் ஒரு பக்கம் கால் பாதங்களை தேய்த்துவிட, ரீனாவோ அவனது கைகள் இரண்டையும் பரபரவென தேய்த்துவிட்டாள்.
“காட் பிளீஸ்… சேவ் ஹிம்…” கண்ணீருடன் இவள் கதற, அந்நிலையிலும் அவள் அழுவது பிடிக்காமல் சப்பென்று அவளது கன்னத்தில் அறைந்தான் மைக்கேல்.
போதாக்குறைக்கு “அழுறதா இருந்தா வெளிய போ டி.” என்று கத்தியும் விட, “நா… நான் அழுவல… அழுவல.” அவசரவசரமாய் கண்ணீரை துடைத்துவிட்டு மீண்டும் அவனது இரு கைகளை இவளோ தேய்த்துவிட, மைக்கேலின் உடலோ மெல்ல தளர்ந்தது.
விழி படலங்களோ இமைக்குள் சொறுகின.
உணர்வு இழந்த நிலையில் அவன் இருக்க, “ஐயோ பாஸ்…” அவன் நிலை கண்டு பதறி அலறினான் கிரிஸ்டோபர்.
“ஐயோ மைக்கேல்…” மறுபக்கம் ரீனா அலற, மைக்கேலின் கரமோ துவண்டு சரிந்தன.
“ஐயோ பாஸ்.” மைக்கேலின் சட்டை பிடித்து இவன் குலுக்க, சட்டென எழுந்து அவனது கரத்தோடு சேர்ந்து கிரிஸ்டோபரையும் தள்ளிவிட்டாள் ரீனா.
பலம் கொண்டு அவன் தள்ளிய வேகத்தில் அவனோ பொத்தென்று தரையில் விழுந்திட, எதையும் பற்றியும் யோசிக்காமல் மைக்கேலின் மேல் படர்ந்து அவனது இதழ் மேல் தனது இதழை பொறுத்தினாள்.
உடல் சூடோடு, சூடான மூச்சு காற்றையும் அவனுக்குள் இவள் செழித்திட, மாத்திரை செய்யாத வேலையை அவளது உடலும் மூச்சு காற்றும் செய்தனவோ என்னவோ தளர்ந்த அவனது உடல் மெல்ல இயல்புக்கு திரும்பியது.
கண்கள் கூட அதிர்ந்து விரித்தன.
பத்து விரல்களும் இறுக மடங்குவதை கண்டு காது மடல் சிவக்க அவ்வறையின் கதவை மூடி சென்றான் கிரிஸ்டோபர்.
அவன் சென்றதும் தான் தாமதம் அவளது பிடரியை முடியை பற்றி தன்னிடமிருந்து விலக்கி, அவளது விழிகளை பார்த்தான் மைக்கேல்.
அவளோ கலங்கிய விழிகளுடன் கீழ் நோக்க, “இதுக்காக நீ ரொம்பவே வருத்தபடுவ.” மிரட்டலாக கூறிவிட்டு வேங்கை போல் அவளது இதழை மீண்டும் கவ்விக் கொண்டான் மைக்கேல்.
தொடரும்...
விமர்சனங்கள் பெரிதாக வராததால இந்த கதையை தொடர விருப்பம் இல்லாமல் விடலாம் என்று நினைத்தேன். சில அன்பிற்கு இனிய வாசகர் கேட்டதால தான் மீண்டும் தொடர்கிறேன். நான் உங்களிடம் கேட்பது ஒன்று தான் படித்தவுடன் கருத்து சொல்லுங்க. அப்ப தான் படிக்கிறீங்களா இல்லையா? நான் சரியா தான் தொடர்கிறேனா என்கிற ஐயம் நீங்கும். எனக்கும் எழுத ஊக்கமாக இருக்கும். சோ பிளீஸ் கொஞ்சம் எழுத்தாளர்களோட உணர்வுகளை புரிந்துக் கொண்டு கருத்து கூறுங்க. அது நல்லதோ கெட்டதோ எதுவா இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கிறது. அதனால நம்பிக்கையுடன் பிளீஸ் ஒரு நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க.
தவறாக ஏதாவது கூறியிருந்தால் மன்னிக்கவும்.
அருமை
பதிலளிநீக்குரொம்ப நன்றி! கதையின் அடுத்தடுத்த திருப்பங்கள் உங்களுக்கு இன்னும் பிடிக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!
பதிலளிநீக்கு