Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

நெருஞ்சி மலரோ? என் மோக கானமோ?? 5



அத்தியாயம் 5


ஒரு இடம் விடாமல் தேடியாகிவிட்டது. நெல் கொட்டி வைக்கும் குதிரிலிருந்து, துணிகள் போட்டு வைக்கும் டிரக்ப் பெட்டி வரை அனைத்தையும் பார்த்தாகிவிட்டது.


எப்போதோ ஓளித்து வைத்து பாழான முறுக்கிலிருந்து, தேய்ந்து போன அரையணா காசு வரை அனைத்தும் கிடைத்தது, ஆனால் அவர்கள் ஒளித்து வைத்த காசு மட்டும் இன்னும் கிடைத்தபாடியில்லை.


“எங்க டி எங்க போயிருக்கும்?” அஞ்சரைப் பெட்டியை ஆராய்ந்தபடியே ரஞ்சிதம் கேட்க, “தெரியலையேக்கா இங்க தான இருந்தது.” உப்பு பானைக்குள் கை விட்டு துழாவினாள், பாரி.


இவர்கள் சமையலறையில் உருட்டும் சத்தம் கேட்டு, “இங்க இரண்டு பேரும் என்ன பண்றீங்க?” கேட்டபடியே கவட்டுக் கட்டையின் உதவியுடன் அவ்விடம் வந்தான், மலையப்பன்.


அவனது குரல் கேட்டுத் திடுக்கிட்டவர்கள், “அண்ணாச்சி! அது…” என்று இழுக்க, “என்ன? என்ன அண்ணாச்சி? நீங்க இரண்டுப் பேரும் திருட்டு முழி முழிக்கிறதப் பார்த்தா எதோ தப்பு பண்ணியிருக்கீங்க போலயே.” தாடையைத் தட்டி புருவம் இடுக்கினான், மலையப்பன்.


பதில் பேச வழிவகையின்றி இவர்கள் இருவரும் திருட்டு விழி விழிக்க, “ஆமா எதுக்கு எல்லாத்தையும் களச்சி போட்டிருக்கீங்க? என்ன தேடுனீங்க?” புருவம் இடுக்கினான், அவன்.


“அண்ணாச்சி கேட்கிறார்ல சொல்லு.” மென் குரலில் ரஞ்சிதம் ஆணையிட, “அண்ணாச்சி கிட்டையா நா… நான் சொல்ல மாட்டேன்.” அதே குரலில் மறுத்தாள், பாரி.


“ஹும்… எல்லாத்துக்கும் பயப்படு.” முகத்தைக் காட்டி சிடுசிடுத்த ரஞ்சிதமோ,

மலையப்பனிடம், “அண்ணாச்சி அது வந்து… வச்சிருந்த காசக் காணும்.” தயங்கி ஆரம்பித்தவள் பின் சட்டென உண்மைகளைப் போட்டுடைத்தாள்.


“என்னது காசா? அதுவும் நீங்க வச்சிருந்தீங்களா? ஆமா ஏது?” இவனோ இமை இடுக்க, “காசா எது டி காசு?” இவர்களின் உரையாடலைக் கேட்டு அவ்விடம் வந்தாள், இசக்கி.


அவளைப் பார்த்ததும் இவர்கள் இருவரும் திருடனுக்குத் தேள் கொட்டியது போல் விழிக்க, “ம்ம்ம்… சொல்லுங்க டி என்ன காசு? யாரு காசு?” அதட்டினாள், இசக்கி.


அதில் திடுக்கிட்டு விழித்த பாரியோ “ஆத்தா அது…” பேசப் பயந்து திக்க, “பாரியோடது ஆத்தா.” சட்டென முடித்தாள், ரஞ்சிதம்.


“பாரியோடதா? இவ கிட்ட ஏது காசு? ஏய் எங்க டி எங்க இருந்து டி காசத் திருடின?” நம்பிக்கையின்றிப் பாரியின் தோளைத் தட்டி இசக்கி வினவ, “ஐயோ நா… நான் திருடல ஆத்தா.” விழிகள் தானாகக் கலங்க, பதறி மறுத்தாள், பாரி.


“திருடலனா எங்க இருந்து டி இவ்வளவு காசு வந்துச்சு?” பாரியின் பிடரியைப் பற்றிக் குழுக்கினாள், இசக்கி.


“ஐயோ ஆத்தா! அவள அடிக்காத நேத்து….” ரஞ்சிதமோ தங்கைக்காக வர, ‘வேணாக்கா பேசாத.’ விழிகளால் ஜாடைக் காட்டி அவளை அடக்கினாள், பாரி.


பதிலுக்கு ரஞ்சிதமும் விழிகளால், ‘ஏன் டி?’ என்று கேட்க, “அங்க என்ன டி பார்க்கிறீங்க? இரண்டு பேருக்கும் நடுவுல என்ன ஓடுது?” தாய் அல்லவா? இருவரின் முகத்தைப் பார்த்தே அவர்களின் கள்ளத்தனத்தைக் கண்டுபிடித்தாள், இசக்கி.


“ஆத்தா அது வந்து…” பயத்தில் இவர்களோ கோரஸ் பாட, “பாரி… அடியேய் பாரி! இன்னுமா டி கிளம்பாம இருக்க?” இங்கே நடக்கும் பிரச்சனைத் தெரியாமல், ராகம் பாடியபடியே அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றாள், மாம்பழம்.


அவளைக் கண்டதும், “அச்சச்சோ இவளா?” பாரியும் ரஞ்சிதமும் அதிர்ச்சியில் உறைந்திட, “எங்க? எங்க டி கிளம்புறீங்க?” மிரட்டுவது போல் இணைப்பு கை வைத்து விசாரித்தாள், இசக்கி.


“ஐயோ அயித்த நீங்களுமா சந்தைக்கு வர்றீங்க?” கேட்டபடியே உஹும் அவ்விருவரையும் போட்டுக் கொடுத்தபடியே வீட்டிற்குள் மாம்பழம் நுழைந்திட, “அடியேய்…” கோபத்தில் முறைத்து பற்களை அறைத்தாள், பாரி.


“என்ன ஏன் டி முறைக்கிற?” லூசு அதையும் போட்டுக் கொடுக்க, “சந்தைக்கு எதுக்குப் போறீங்க?” சகோதரிகள் இருவரையும் பார்த்துக் கிடுக்குபுடி போட்டாள், இசக்கி.


‘போச்சு போச்சு…’ உள்ளுக்குள் பதறியவர், வெளியே “அது… அது வந்து…” என்று சமாளிக்க முயல, “ஐயோ இது என்ன கேள்வி அயித்த? சுந்தருக்குப் புது துணி வாங்க வேண்டாம்? அதுக்காகத் தான நேத்து நானும் பாரியும் கத்தரிக்கா பறிக்க ஞானய்யா தோட்டத்துக்குப் போனோம்.” லூசோ தொடர்ந்து உலறிக் கொட்டிட, “ஹுக்கும்… சுத்தம்.” சகோதரிகள் இருவரும் தலையில் அடித்துக் கொண்டனர்.


போட்டு கொடுத்தெல்லாம் கொடுத்துவிட்டு, “என்ன நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?” பாரியைப் பார்த்து வாய் அசைத்தாள், மாம்பழம்.


“அதான் சொல்லிட்டீயே!” பதிலுக்குப் பாரியும் வாய் அசைக்க, “எவ்வளவு கொடுத்தாங்க?” நேருக்கு நேராக மாம்பழத்தைப் பார்த்து வினவினாள், இசக்கி.


இசக்கிக்குப் பின்னால் நின்ற பாரியை எக்கி பார்த்த மாம்பழமோ, “ஏன் டி சொல்வா?” நாசுக்காய் கேட்பதாக நினைத்துச் சத்தமாகவே கேட்டு வைக்க, “ஹுக்கும்… சனியன நாக்குலையே வச்சுக்கிட்டுச் சுத்துற இவ கூடலாம் கூட்டு சேர்ற பார்த்தியா உனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலேயும் வேணும்.” பாரியின் காதுக்குள் அங்கலாய்த்தாள், ரஞ்சிதம்.


“ஐயோ இந்தப் பைத்தியத்த வச்சுக்கிட்டு.” பாரியோ அவளை முறைத்து பற்களை அறைக்க, சட்டென இவள் புறம் திரும்பினாள், இசக்கி.


‘ஐயோ ஆத்தா.’ பாரியோ மிரண்டு விழிக்க, “ம்ம்ம்… சொல்லு டி, எவ்வளவு பணம் வாங்கின?” தீ பார்வையுடன் இசக்கி வினவ, “ஆத்தா அது வந்து…” பயத்தில் பாரிக்கோ நாக்கு மேல் அண்ணத்தை ஒட்டிக் கொண்டது.


இசக்கியோ தனது பார்வையை ரஞ்சிதம் பக்கம் திருப்பி, “ம்ம்… ரஞ்சிதம் நீ சொல்லு எவ்வளவு வாங்குனா?” என்றிட, “ப… பன்னிரண்டு ரூபா ஐம்பது பைசா வந்திருக்கு ஆத்தா.” என்றுவிட்டு முகத்தைத் தொங்கப் போட்டாள், ரஞ்சிதம்.


“பாரி இவ சொல்றது உண்மையா?” கூர்விழிகளுடன் இசக்கி வார்த்தைகளை அழுத்த,

“ம்ம்ம்…” பாரியோ மேலும் கீழும் தலையாட்டினாள்.


“அடி பாவி மவளே! சம்பாதிச்சப் பணத்த நீ என்கிட்ட இல்லக் கொடுத்திருக்கனும். அத விட்டுட்டு நீ எதுக்கு டி என்கிட்ட இருந்து ஒளிச்சு வச்ச?” பணம் போன கடுப்பில் இசக்கி கத்த, “உஷ் ஆத்தா நீ சும்மா இரு நான் விசாரிக்கிறேன். ஹாங் சொல்லுங்க! இரண்டு பேரும் காச எங்க ஒளிச்சு வச்சீங்க?” வார்த்தைகளால் தாயை அடக்கிவிட்டு மலையப்பன் இவர்கள் விசாரிக்க, ஒருவரை ஒருவர்ப் பார்த்தபடியே, “அதுவா? அத நான் குதிருக்குள்ள தான் ஒளிச்சு வச்சேன்.” என்றனர்.்


“குதிர்லையா? குதிர்ல வச்சது எங்க போகும்?” மலையப்பன் கேள்வியாய் இமை இடுக்க,

“அண்ணன் என்ன? தம்பி என்ன? சொந்தம் என்ன பந்தம் என்ன? சொல்லடி எனக்குப் பதிலை.” என்ற பாடலைச் சத்தமாகப் பாடியபடியே அவ்விடம் வந்தான், அண்ணாமலை.


ஒரு கையில் முறுக்கும் மறு கையில் ஐஸ்கிரீமைப் பிடித்த கொண்டு அவன் வர, “இவன் தான் இவனே தான். டேய் அண்ணாமலை நீ தான காலையில குதிருல நெல் எடுத்தது?” ஞாபகம் வந்தவனாய் அலறினான், மலையப்பன்.


“நானா? நான் ஒன்னும் பண்ணலையே! தேவையில்லாம என்மேல பழிய போடாத!” உடனே மறுத்தான், அண்ணாமலை.


“டேய் அண்ணாமலை அண்ணாச்சி சொல்றது உண்மையா? நெல் குதிருல இருந்த காசா நீ தான் எடுத்தியா?” வேல்விழிகளை உருட்டி ரஞ்சிதம் விசாரிக்க, “அக்கா தேவையில்லாம என்ன இழுக்காத! எனக்கு எந்தக் காசும் தெரியாது.” பதிலுக்கு அவனோ பொய் உரைத்தான்.


கெட்டிகாரியின் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கு என்பர் அது கெட்டிகாரிக்கு. இவன் அடி முட்டாள் இவனது பொய் மட்டும் நிலைத்தா நிற்கும் எட்டு நொடியில் பொய் என்பதைப் புரிந்துக் கொண்ட பாரியோ, “ஐயோ அண்ணாச்சி தயவு செஞ்சி என் காச என்கிட்ட கொடு. சுந்தருக்குப் புது துணி எடுக்கனும்.” தன்மையாகக் கெஞ்சினாள், பாரி.


“ஏய் சும்மா என்கிட்ட கேட்காத? நானெல்லாம் உன் காசத் தொடவே இல்லை.” வெடுக்கெனப் பாரியிடமிருந்து தனது கரத்தை உறுவினான், அண்ணாமலை.


“உஹும்… இவன் இப்படிக் கேட்டா சொல்ல மாட்டான், இவன்கிட்ட வேற மாதிரி தான் கேட்கனும். டேய் சொல்லுடா பாரி காச எடுத்தியா?” என்ற மலையப்பனோ அண்ணாமலையின் சட்டையைப் பிடித்து குழுக்கினான்.


அதில் அவனது கவட்டுக் கட்டைக் கீழே விழுந்திட,

“அத நான் ஏன்டா உன்கிட்ட சொல்னும்?” துச்சமென மலையப்பனை மதித்துக் கீழே தள்ளினான், அண்ணாமலை.


அதில் நிலைதடுமாறி மலையப்பன் கீழே விழ, “அண்ணாஆஆஆ…” அலறியபடியே சகோதரிகள் இருவரும் அவனைத் தாங்க, “ஹாஹா… நல்லா விழுந்தியா? வேணும் வேணும் உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணுடா சப்பாணி! சப்பாணி!” கைத் தட்டி சிரித்தான், அண்ணாமலை.


“தள்ளிவிட்டதும் இல்லாம என்ன பார்த்துச் சிரிக்கவா செய்ற?” கவட்டு கட்டையால் அண்ணாமலையின் காலை இவன் தட்டி விட, அண்ணாமலையோ பொத்தெனக் கீழே விழுந்து வாரினான்.


“ஐயோ…” பெண்கள் அனைவரும் ஒருசேர அலற, கால் இல்லாத புலியாய் அண்ணாமலையின் மேல் தாவி, அவனது முகத்தில் குத்தியபடியே, “பாரி காசு எங்க டா? எங்க வச்சிருக்க? ம்ம்ம்… சொல்லு எங்க வச்சிருக்க?” அதட்டி கேட்டான், மலையப்பன்.


“என்னய்யா அடிக்கிற இருடா உன்ன என்ன பண்றேன்னு பாரு.” பதிலுக்கும் இவனும் அடிக்க, சின்ன சண்டை யுத்தமானது.


இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொள்ள, அவர்களின் சத்தம் தெரு கோடி வரைக் கேட்க, டீ கடையில் இருந்த கருப்பசாமியோ விறுவிறுவென அவ்விடம் வந்து, “என்ன இது? வீடா வேற என்னதுமா?” கடுகடுத்தான்.


அவனைக் கண்டு, “ஐயாவா?” சகோதரிகள் இருவரும் பேய் அறைந்தாற்போல் விழித்திட, “அப்ப நான் வர்றேன்.” நைசாக நழுவினாள், மாம்பழம்.


“படுபாவி போட்டு கொடுத்துட்டு நழுவுது பாத்தியா?” ரஞ்சிதமோ பாரியின் காதிற்குள் கிசுகிசுக்க, “ஐயா பாருங்கய்யா இவன் என்ன அடிக்கான்.” மலையப்பனைச் சுட்டிக்காட்டி குற்ற பத்திரிகை வாசித்தான், அண்ணாமலை.


“டேய் என்ன டா நான் அடிச்சத மட்டும் சொல்ற? நீ பாரி பணத்த திருடினீயே அதையும் சேர்த்துச் சொல்லு.” பதிலுக்கு மலையப்பன் அதட்ட, “பாரி காசா? ஏது?” புருவம் இடுக்கினான், கருப்பசாமி.


“என்கிட்ட ஒரு வார்த்த கூட சொல்லாம ஞானய்யா தோட்டத்துக்கு வேலைச் செய்யப் போயிருக்கா.” இது தான் சாக்கென்று இசக்கியும் தன்பங்குக்குப் போட்டு கொடுக்க, “அப்படியா ஆத்தா சொல்றதெல்லாம் உண்மையா? ம்ம்… சொல்லு உண்மையா?” போலிஸ்காரன் போல் மாட்டை அடிக்கும் சவுக்கு கம்பை இறுகப்பற்றியபடி கருப்பசாமி விசாரிக்க, பாரிக்கோ பயத்தில் உடல் நடுங்கிச் சில்லிட்டது.


“ஐ… ஐயா அது அது வந்து…” பயந்தபடியே பாரி பின்னால் நகர, “மொத்தமா பன்னிரெண்டு ரூபா வந்திருக்கு. ஒரு வார்த்த சொல்லல்ல. யாருக்கும் தெரியாம குதிருல ஒளிச்சி வச்சிருக்கா.” கூட கொஞ்சம் இசக்கி ஏற்றிவிட, “ஓ… எங்களுக்குத் தெரியாம காசு சேர்க்கிற அளவுக்கு நீ பெரிய ஆளாகிட்டியா? ஹாங் ஆகிட்டியா?” எனக் கத்தியவன் ஓங்கி ஒரு அடிப்போட, பாரிக்கோ தோள் பிய்ந்து பனியாரமாய் வீங்கியது.


வலி தாங்காமல், “ஆஆ… ஐயோ…” என்று அவள் அலற, “ஐயா ஐயா தயவு செஞ்சு அவள அடிக்காதீங்கய்யா. அவ… அவ எனக்காகத் தான் வேலைக்குப் போனா. சுந்தருக்குத் துணி வாங்க தான் காச மறச்சு வச்சா.” பாரிக்காகப் பரிந்துப்பேசினாள், ரஞ்சிதம்.


“ஏய் வாய மூடு நீ யாரு என் வீட்டு விவகாரத்துல தலையிட?” வெடுக்கென முகத்தில் அடத்தாற் போல் கருப்பசாமி பேச, சுடு சொல் தாளாமல் விழி கலங்கின, ரஞ்சிதமிற்கு.


கணத்த இதயத்துடன், “ஐயா…” என்று இவள் வாய் அசைக்க, “புருசன ஒழுங்கா கைக்குள்ள போட்டுக்கத் துப்பில்ல, இவ எல்லாம் நியாயம் பேச வந்துட்டா.” தொடர்ந்து அவரோ பேசிக் கொண்டே போக, “அப்ப நான் பேசவே கூடாதா?” ஆற்றாமை மேவிட அடி தொண்டையில் வினவினாள், ரஞ்சிதம்.


“ஹும்… நீ இங்க இருக்கவே கூடாது.” கேட்டவள் வாயடைக்கும் வன்னம் கருப்பசாமி பதில் கொடுக்க, “ஐயா! நாம பேசுனச் சவரன அவளுக்குப் போட்டிருந்தா அவ எதுக்குய்யா இங்க இருக்கப் போறா?” மலையப்பனோ தங்கையாகப் பரிந்துப் பேசிட,

“தொடுற வரைக்கும் தான் என் கணக்கு. தொட்ட பொறவு இனி அவன் கணக்கு. பொருள உடைச்ச, உடைச்சவன் தான் காசு கொடுக்கனும். கடைக்காரன் இல்ல.” அவனுக்குப் புரியாத தத்துவங்களைப் பேசி அவனை அடக்கினான், கருப்பசாமி.


பிரம்மசாரிக்கு வேணா அவனின் வார்த்தைப் புரியாமல் போகலாம், ஆனால் பிள்ளப் பெற்ற அவள் அப்படி அல்லவே! கடைச் சரக்கோடு தனது கற்பை ஒப்பிட்டுப் பேசும் தந்தையை வேதனையுடன் இவள் பார்க்க, “ஏடி கோட்டிக்காரி! இன்னும் இங்கன எதுக்கு டி நிக்க? கூலு காச்சலையா? போ போய் வேலைப்பாரு.” இசக்கி விரட்டினான், கருப்பசாமி.


“ஹாங் இந்தா போறேன்ய்யா.” விறகு எடுக்க அவள் ஓட, தந்தையை எதிர்த்து பேசப் பண்பாடு தடுக்க, தங்கையின் கண்ணீரைத் தொடக்க வழிவகைத் தெரியாமல், தனது கையாலாகாத தனத்தை நொந்தபடியே மலையப்பனும் அங்கிருந்து விலக, எதைப் பற்றிய கவலையுமின்றி, காசு திருடி சினிமா பார்க்கச் சென்றது பெரிய தவறு என்ற குற்ற உணர்வுமின்றி, கையில் இருந்து குச்சி ஐஸை நிதானமாய் சப்பிக் கொண்டிருந்தான், அண்ணாமலை.


அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு, “ஏலே எடுப்பட்ட பயல! மாட்டுக்குக் கதர் அறுக்கச் சொன்னேனே பண்ணியா?” எனக் கேட்டான், கருப்பசாமி.


“ஹாங் இந்தா போறேன்ய்யா.” கொட்டி வைத்திருந்த சாணியில் ஐஸ் குச்சியை எறிந்துவிட்டு அவன் ஓட, “ஏலே பாரி! இந்தா பாரு! கடைசியா சொல்லுதே. பொட்டபிள்ளையா அடக்க ஒடுக்கமா வூட்டுல இருக்கப் பாரு. இந்த வூட்டுக்குத் தெரியாம வேலைக்குப் போறது, காச ஒளிச்சு வைக்கிறது இதெல்லாம் வேணாம்.” கடுமையான அவன் குரலில் எச்சரிக்க, “சரிய்யா…” பணிவுடன் மேலும் கீழும் தலையாட்டினாள், பாரி.


“ம்ம்ம்… போ மாட்டுக்குத் தீவனம் வையி.” அதட்டி விரட்டியவன், திகைந்து நின்ற ரஞ்சிதத்தைப் பார்த்து, “ஏதோ பெத்த கடனுக்கு சோறு போடுறேன். அம்முட்டுத் தான் என்னால பண்ண முடியும். அதுக்கு மேல என்கிட்ட எதையும் எதிர்ப்பார்க்கக் கூடாது.” கொஞ்சம் கூட பாசமே இன்றிக் கறாராகப் பேசிவிட்டு அவன் போக, மடைதிறந்த வெள்ளமாய் கண்ணீர்ப் பெருக்கெடுத்தது ரஞ்சிதத்திற்கு.


மருண்ட விழிகள் வெண்ணீரைத் தாரை வார்க்க, அகலிகையாய் அவள் உறைந்திட, “த்தா.. த்தா…” மழலை மொழியில் தாயை அழைத்தபடியே அவளின் சேலை நுனியைத் தொட்டான், சுந்தர்.


மகன் தொட்டதும் தாய் சிலைக்கோ உயிர் வர, கண்ணீரை அழுந்த துடைவிட்டு ஒட்டு துணியின்றிப் பிறந்த மேனியாய் திரியும் மகனை அள்ளி தூக்கி தனது இடுப்பில் வைத்தாள், ரஞ்சிதம்.


அவனோ, “த்தா…” எனக் கூறி அவளின் கன்னத்தில் அன்பு முத்தம் வைக்க, முத்தம் வைத்த தடத்தை அவளின் கண்ணீர் நனைத்தது.


அதே கண்ணீருடன், “இங்க ந… நமக்கு யாரும் இல்ல.” தாடை நடுங்க மகனிடம் பேசியவள், தனது கண்ணீரை அழுந்த துடைத்துவிட்டு, ஒரு முடிவுடன் வாசலைத் தாண்டி அவள் செல்ல, “அக்கா எங்க போற?” மாட்டு தீவனம் வைத்துவிட்டுத் திரும்பியவள் ரஞ்சிதம் வெளியே நடப்பதைப் பார்த்துவிட்டுக் கேட்க, பதில் இல்லைத் தமக்கையிடத்தில்.


நடைபிணமாய் காதில் எதையும் வாங்காமல் தொடர்ந்து அவள் நடக்க, “அக்கா அக்கா…” அழைத்தபடியே அவளுக்குப் பின்னால் நடந்தாள், பாரி.


தொடரும்.... 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்