Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

தீ மீது வீணை 7

 அத்தியாயம் 7



முற்றிலும் திருத்தி எழுதப்படவேண்டிய அப்பொல்லா பழைய நிகழ்வுகளை அசைப்போட்டு கொண்டிருந்தவளின் நினைவுகள், சத்தமாக ஓங்கி ஒலித்த தேவாலய மணியோசையில் சட்டென நடப்புக்கு திரும்பின.



அன்பான தாய் தந்தையால் கண்ணாடி பதுமையாய் வளர்க்கப்பட்ட பெண்ணவளின் மேனியை,



பல வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட சாளரத்தின் வழியே உட்புகுந்த சூரிய கதிர்களின் உஷ்ணம் என்னும் பேராயுதம் தாக்கிட, எதிர்வினையாற்ற திராணியின்றி, இமை தட்டி தட்டி மெல்ல விழி திறந்தாள், ரீனா.



திறந்தவள் முன் வெய்யோனின் செங்கதிர்களோ ஒளிப்பிழம்பாய் காட்சியளித்திட, விழிகள் கூசின மெல்லிடையாளுக்கு.



குடையென தனது சிறு கரம் கொண்டு பரந்த அவனது ஒளிக்கீற்றை மறைத்தவள், தயக்கத்துடனும் சிறு பயத்துடனும் கரம் தந்த சிறு நிழலில் தன்னை சுற்றி இருப்பவைகளை பார்வையால் ஆராய்ந்தாள்.



சுற்றிலும் முக்காடு அணிந்த பெண்கள், அவர்களுக்கு அருகில் நீல நிற சூட் அணிந்த ஆண்கள், அவர்களை கடந்தால் வெள்ளை நிற சுவர், அச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த ரோஜாக்கள், அதற்கு மேல் மல்லிகை பூ தோரணங்கள் என தனது பார்வையை நகர்த்திக் கொண்டே வந்தவளின் நாசியில் மலரின் சுகந்த நறுமணமும் மெழுகுவர்த்தியின் புகையும் ஒருசேர நுழைந்தது.



முத்து தோடு செவிகளில் திருமண வாழ்த்து பாடலும், அதை பாடும் பாடகர்களின் இனிமையான குரலும் நிறைக்க, ஒரு நிமிடம் தன்னை மறந்து இரசித்தவள் பின் மேடை வரை வந்து நின்று விட்ட தனது திருமணத்தை எண்ணி கண் கலங்கினாள்.



அன்று அந்த விபத்து மட்டும் நிகழாமல் இருந்திருந்தால்… இந்த உள் அலங்காரங்களை எல்லாம் அன்றே கண்டிருப்பாளே.



அது மட்டுமா? தாயும் தம்பியும் குதூகலிக்க, தந்தையின் கரம் கோர்த்து சிவப்பு கம்பளத்தில் அல்லவா நடந்து வந்திருப்பாள்?



அவரும் ஆனந்தக் கண்ணீருடன் தனது அன்பு மகளான அவளை மாப்பிள்ளையான மைக்கேலிடம் மனமாற ஒப்படைத்திருப்பாரே?



அவனும் ஆசையுடன் அவளது செங்காந்தள் கரத்தை இறுக பற்றி, “இன்பத்திலும் துன்பத்திலும், உடல்நலத்திலும் நோயிலும், இளமையிலும் முதுமையிலும் மாறாமல், ரீனா ஜோசப் என்ற இந்த பெண்ணை மனைவியாக ஏற்றுக் கொண்டு, அவளை நேசித்து, காத்து, வாழ்நாள் முழுவதும் உற்ற துணையாக இருப்பேன்” என வாக்களித்திருப்பானே? அது மட்டுமா அவளது வெண்டை விரலை ஆசையுடன் பற்றி வைர மோதிரத்தை அல்லவா அணிவித்திருப்பான்?



நினைக்க நினைக்க ஏக்கம் கூடியது.



நாசியில் சூடான காற்று கிளம்ப, தீரா ஏக்கத்துடன் தன்னவனை, தான் உயிரென விரும்பியவனை காண நாலாபக்கமும் விழிகளை ஓடவிட்டாள், ரீனா.



வந்திருந்த உற்றார் உறவினர்கள் மலர் தூவ, சிவப்பு கம்பளத்தில் கம்பீரமாய், ஆணுக்கான இலக்கணமாய், வீறுநடை போட்டு தேவாலயத்திற்குள் நுழைந்தான், மைக்கேல்.



வெள்ளை நிற பிளேசரில் கிரேக்க சிற்பமாய் நடந்து வரும் தன்னவனை இமை கொட்டாமல் பார்த்தவள், பின் வெட்கப்பட்டு தலை தாழ்த்திக் கொள்ள, மைக்கேலோ அவளை பார்த்தும் பாராமல் பாராமுகம் காட்டி பாதிரியாருக்கு அருகில் சென்று நிற்க, “இப்போது மணப்பெண் முன் வருக.” என சத்தமாக அழைத்தார், பாதிரியார்.



அவர் அவ்வாறு அழைக்கவும், சந்தோசத்தில் மனம் குறுகுறுக்க, வெட்கம் அவளை பிச்சி திங்க, அவனுக்கு அருகில் செல்ல மறுகியவள், யாரெனும் தன்னை அவனிடம் சேர்க்க முன் வரமாட்டார்களா? என்ற ஏக்கத்தில் சுற்றும் முற்றும் பார்த்தபடியே இவளோ தயங்கி நிற்க, மணப்பெண் அலங்காரத்தில், வெள்ளை நிற கவுனில், தந்தையின் கரம் பற்றி திருச்சபைக்குள் மெல்ல நடந்து வந்தாள், ரீனாவின் கல்லூரி தோழியும், அறை தோழியுமான செரீனா.



“செரீனா? நீயா?” பூமி காலுக்கு கீழ் நழுவியது ரீனாவிற்கு.



‘இது செரீனா தானா? நல்லா பார்த்தியா?’ ஒன்றுக்கு இரண்டு முறை விழிகள் இரண்டையும் இவளோ கசக்கி பார்க்க, மணப்பெண்ணாய் அந்த திருச்சபைக்கு நுழைந்தது சாட்சாத் செரீனாவே தான். ‘உனக்காக உயிரையும் தருவேன்.’ என பலமுறை அவளிடம் கூறிய அவளது உயிர் தோழி செரீனாவே தான்.



‘ச்சே ச்சே… இருக்காது இருக்காது நோ வே.” உடனே நம்ப மறுத்தவள், ‘ரீனா! நீ இன்னும் தூக்கத்துல இருந்து எழுந்திக்கலனு நினைக்கிறேன். ம்ம்ம்… வேக்கப் வேக்கப். செரீனாவாது உனக்கு துரோகம் பண்றதாவது? சான்ஸ்லெஸ்.’ என தன்னை கடிந்தவள், காண்பது யாவும் கனவோ என நினைத்து தன்னை தானே கிள்ளிப் பார்த்தாள்.



“ஆஆவுச்…” வலி அவள் காண்பது யாவும் நிஜம் என்பதை புரிய வைத்திட, அதிர்ச்சியுடன் தலை தூக்கியவளுக்கு முன்னால் செரீனாவின் கரம் பற்றி பாதிரியாரிடம் அழைத்துச் சென்றான், மைக்கேல்.



பாதிரியாரோ இருவரையும் இன்முகமாய் வரவேற்று, சபையினரை பார்த்து, “இந்த திருச்சபையின் முன்பாக, மறைந்த தொழிலதிபர் இராயப்பன் அவர்களின் மகன் திரு மைக்கேல் இராயப்பன் அவர்களுக்கும், எம்எல்ஏ வில்லியம்ஸ் அவர்களின் மகள் செரீனா வில்லியம்ஸ் அவர்களுக்கும் திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமண உடன்படிக்கைக்கு எதிராக யாருக்காவது ஏதேனும் காரணம் இருந்தால், இப்போதே தெரிவிக்கவும். இல்லையெனில் மௌனமாக காக்கவும்.” இவ்வாறு அறிவிக்க, மறுப்பை தெரிவிக்க உயர்ந்த குரலை பற்களுக்குள் அடக்கினாள், ரீனா.



“இந்த கல்யாணத்துல எனக்கு உடன்பாடு இல்ல. பிளீஸ் நிறுத்துங்க.” என்று கத்த சொல்லி மூளையோ கூச்சலிட, இதயமோ பேச வார்த்தைகளின்றி காதலனும் தோழியும் சேர்ந்து செய்த துரோகத்தில் நொறுங்கி இரத்த கண்ணீர் வடித்தது.



விழி திரையை மறைத்த உவர்நீரை துடைக்க கூட மனமின்றி கேள்வியுடன் அவ்விருவரையும் இவள் பார்க்க, பாதிரியாரோ அனைவரும் அமைதியாக இருப்பதை சம்மதமாக கருதி, “இப்போது நாம் இந்த திருமணத்தை முன்னெடுக்கலாம்.” என கூறி சடங்கை தொடர்ந்தார்.



‘இன்னும் ஏன் அமைதியா இருக்க? கேளு.’ நேற்று தொலைந்த பெண்மைக்கு நியாயம் கேட்க வேண்டி, மூளையோ தொடர்ந்து கூச்சலிட்டு கொண்டே இருக்க, இதழ் துடிக்க, கண்ணீரோ கன்னம் தாண்டி உடையை நனைக்க,, “எ… எனக்கு இந்த கல்யாணத்துல உ… உடன்பாடு இல்ல.” ஒருவழியாக திக்கி திணறி மனதில் உள்ளதை போட்டுடைத்துவிட்டு, உடல் குலுங்க கண்ணீர் வடித்தாள், ரீனா.



ஏனோ இவளின் கண்ணீரையும் கதறலையும் கண்டும் காணாமல் சடங்குகளை தொடர்ந்தார், பாதிரியார்.



அவரை போலவே அந்த தேவாலயத்தில் உள்ள ஏனையவர்களும் ரீனாவின் கதறலை காதில் வாங்காமல் அமைதியாக இருக்க, “எனக்கு இந்த கல்யாணத்துல உடன்பாடு இல்ல. பிளீஸ் இந்த கல்யாணத்தை நிறுத்துங்க.” என இம்முறை குரலை உயர்த்தி சத்தமிட்டாள், ரீனா.



அவளது குரல் பாதிரியாரின் காதில் விழுந்ததற்கு ஆதாரமாக அவரது முகம் தானாக உயர்ந்து, அவளை பார்த்து பின் அவனை பார்த்தது.



பதிலுக்கு அவன் என்ன சைகை செய்தானோ கண்டும் காணாமல் மேற்கொண்டு அவர் சடங்குகளை கவனிக்க, அவளது குரலை மங்க செய்யும் விதமாக கூட்டத்தினர் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.



“பிளீஸ் சொல்றத கேளுங்க. இந்த கல்யாணத்தை நிப்பாட்டுங்க.” என்று இவள் கதற கதற, மைக்கேலும் செரீனாவும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.



“இல்ல… இது… இது நடக்க கூடாது. நடக்கவே கூடாது.” இருபக்கமும் வேக வேகமாய் தலையாட்டியவள், நிகழும் திருமணத்தை தடுக்க வேண்டி அவர்களை நோக்கி இவள் ஓட, மைக்கேலின் ஆட்களோ அவளை போகவிடாமல் தடுத்து அமுக்கி பிடித்தனர்.



“மைக்கேல் பிளீஸ்… இ… இந்த தப்ப மட்டும் பிளீஸ் பண்ணாத. ஐயோ என்னால இதை பார்க்க முடியலையே! பிளீஸ் சொன்னா கேளு. இந்த கல்யாணத்தை உடனே நிறுத்து.” அவர்களின் கரத்தில் திமிறியபடியே இவள் கத்த, புன்னகைத்தபடியே செரீனாவின் கன்னத்தில் முத்தமிட்டு திருமண சடங்குகளை முடித்து வைத்தான், மைக்கேல்.



பாதிரியாரும், “நான் இப்போது உங்களை கணவன்–மனைவி என அறிவிக்கிறேன்” என கூறி திருமணத்தை நிறைவு செய்ய, நீர் வற்றிய குளமாய் விழி இருக்க, மூட்டி மடங்க தரையில் விழுந்தாள், ரீனா.



ஒரு நிமிடம் உலகமே ஸ்தம்பித்து நின்ற உணர்வு அவளுக்கு.



இதயம் கூட ஒரு நிமிடம் நின்று பின் துடித்திட, வலி தாங்க முடியாமல், “ஆஆஆஆ.” என்று இவளோ ஓலமிட, எங்கிருந்தோ வந்து அவளை ஓங்கி ஒரு மிதி மிதித்தான், மைக்கேலின் அக்கா மாப்பிள்ளை டேவிட்.



அவன் மிதித்த வேகத்தில் தூர போய் விழுந்தவள், “அம்மா…” என்று அலற, அவளை கொல்ல வேண்டி துப்பாக்கியை எடுத்தான், டேவிட்.



“என் குடும்பத்த சின்னாபின்னமாக்கின உன்ன கொன்னா தான் டி எனக்கு நிம்மதி.” கோபத்தில் வார்த்தைகளை கடித்து துப்பியவன், டிரிக்கர் மேல் ஆள்காட்டி வைக்க, ‘டூமில்…’ என்ற சத்தத்துடன் எங்கிருந்தோ விரைந்து வந்த தோட்டா ஒன்று, விரலோடு சேர்த்து அவனது கரத்தையும் பதம் பார்த்தது.



துப்பாக்கி வெடித்த சத்தத்தில் ரீனாவோ மயங்கி சரிய, மறுபக்கம் வலி தாங்க முடியாமல் “ஆஆஆ…” என்று டேவிட் அலற, புகையும் துப்பாக்கியை தோரணையாய் ஊதினான், மைக்கேல்.


தொடரும்..

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்