Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

தீ மீது வீணை 6

 அத்தியாயம் 6



கண்கள் இருளவும் பழைய நினைவுகள் எல்லாம் ஒவ்வொன்றாய் கனவுபோல் அவள் முன்னால் விரிந்தன.



அன்று, சரியாக இன்றிருந்து ஆறு மாதங்களுக்கு முன்பும், அதே தேவாலயத்தில், அவளுக்கும் மைக்கேலுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடாகியிருந்தது.



காலை ஒன்பது மணிக்குத் திருமணம் என்பதால் ஆறு மணிக்கே குளித்துக் கிளம்பி ஒப்பனையகம் சென்றுவிட்டாள், ரீனா.



அவளுக்குத் துணையாக ஒப்பனையக வரவேற்பறையில் காத்திருந்தான், சார்லஸ்.



அன்று அலர்ந்த மலருக்கு ஒப்பனை வேண்டுமா என்ன? ஒருவேளை அதற்கும் ஒப்பனை செய்தால், அழகுக்கு அழகு சேர்த்தால், கண் கூசும் அளவிற்கு அல்லவா அழகு மிளிரும்.



அப்படித்தான் இருந்தாள் ரீனா அன்று.



தரையை பரப்பும் வெள்ளைநிற நீள் அங்கியில் தேவதையாகக் காட்சியளித்தவளை இறைவியாகவே சமைத்துக் கொண்டிருந்தாள், ஒப்பனையாளர்.



படர்ந்து விரிந்த நதியைக் குழளையில் அடக்கிய அகத்தியர் போல் அந்தப் பெண் ஒப்பனையாளரோ அவளது நீள் கூந்தலை அடக்கிக் கொண்டையாகக் கட்டியிருந்தாள்.



இரவு வானத்தை அலங்கரிக்கும் நட்சத்திரம்போல் அவளது கொண்டை முழுவதும் வைர மணிகளை அங்காங்கே பதித்தவர், ஓவியத்திற்கு வண்ணமடிப்பது போல் அவளது முகத்தில் பல நிறங்களை நிரப்பி, அழகிற்கு அழகு சேர்த்தார்.



நகத்திற்கு சிவப்பு நிறமியை நிரப்பியவர், இறுதியாகக் கொட்டும் அருவிபோல் அவளது தலையை மறைக்கும் வெயிலை (முகத்திரையை) அணிவித்து அனுப்ப, அந்த அறை வாசலில் அவளுக்காகக் காத்திருந்தான், மைக்கேல்.



அவனைக் கவனிக்காமல் குனிந்தபடியே வந்தவளை “ஓய் மிஸஸ் மைக்கேல்!” என்று அழைத்தான், மைக்கேல்.



சத்தம் கேட்டு சட்டென நிமர்ந்தவள், ஆனந்த அதிர்ச்சியில், “மைக்கேல் நீங்களா?” என விழி விரித்தாள், ரீனா.



“மைக்கேலா அது யாரு?” விழிகள் சிரிக்க, கேள்வியால் இவனோ புருவம் உயர்த்த,


“ஐயோ போங்க மைக்கேல் விளையாடாதீங்க.” என அவனது மார்பை அடித்துச் சிணுங்கியவளுக்கோ கன்னம் இரண்டும் மருதாணியாய் சிவந்து விட்டன.



“ஹும்… இனிமே தான் விளையாடலாம்னு இருக்கேன்.” கேலியாக இதழ் வளைத்தவன், “ஆமா எங்க போற?” என அவளது வழியை மறித்து வினவ, “ப்ச்… என்ன கேள்வி இது? சர்சுக்கு போக வேணாமா? மேரேஜுக்கு டைம் ஆச்சுல.” பறந்தாள், ரீனா.



“ஓ மிஸஸ்ஸுக்கு மிஸ்டர மேரேஜ் பண்ணிக்க அவ்வளவு அவசரமா?” ஒரு புருவம் உயர்த்தி கேலி பேசியவன், “போலாம் போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன ஆப்ளிகேஷன்.” என்றான், தாழ்ந்திருக்கும் அவளது விழிகளைப் பார்த்தபடி.



“ஆப்ளிகேஷனா? என்ன?” சட்டென நிமிர்ந்து இவள் பார்க்க, “உம்… எப்படி கேட்கிறதுனு தெரியல. பட் கேட்டுத்தான் ஆகணும். ம்ம்ம்… அது… வந்து எனக்கு… ஒரு கிஸ் வேணும்.” தயங்கி தயங்கி அவன் கேட்க, “கிஸ்ஸா?” அதிர்ந்து வினவினாள், ரீனா.



அவளுக்கு மேல் அவன் அதிர்ந்து, “ஏய்… ஏய் பிடிக்கலனா விட்டுட்டு.” என்று பதற, “கிஸ்ஸா? அதுவும் இப்ப ஏன் கேட்கிறீங்க?” காற்றுக்கு வலிக்குமோ என நினைத்து இவளோ மெல்ல வினவ, “ப்ச்… ஏய்… நீ என்ன தப்பா எடுத்துக்காத! அக்ச்சுவலி உனக்கே தெரியும், மேரேஜுக்கு முன்னாடி இதெல்லாம் வேணாம்னு என்கேஜ்மெண்ட்ல கூட நான் அவாய்ட் பண்ணிட்டேன்.


பட், இப்ப சர்சுல கிஸ் பண்ணியே ஆகனும். அதான்? ம்ம்… சின்னதா ரீஹர்சல்… ஏய் கிஸ் மட்டும் தான் ஜஸ்ட் ஒன்லி ஒன் கிஸ்.” அதே தயக்கத்துடன் கோரிக்கை வைத்தான், மைக்கேல்.



ஆறரை அடி ஆடவனுக்கே அவ்வளவு தயக்கம் என்றால் பாவம் பெண், இவள் என்ன செய்வாள்? வெட்கமோ அவளைப் பிச்சி திக்க, பதில் பேச வார்த்தைகளின்றி தவித்தாள், ரீனா.



அவள் பேச, “ஆம்.”, “இல்லை” என்பதில் ஏதேனும் ஒரு வார்த்தை போதும். ஆனால் அதைப் பேச வேண்டுமே, நாக்கோ கூச்சத்தில் மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டது.



பேசா மடந்தையாகத் தனக்கு முன் காட்சியளிக்கும் பெண்ணவளின் உயரத்திற்கு தன்னை வளைத்து, “ஓகேவா?” என்று அவன் வினவ, இவளது இதயமோ குதிரை வேகத்தில் ஓடத் துவங்கியது.



காதல் கொண்ட மனமோ அவனது கோரிக்கையை உடனே ஏற்க கூறி வற்புறுத்த, நாணமோ அவளை அங்கிருந்து ஓடச் சொல்லி உத்தரவிட, எதை ஏற்பது எதை விடுவது என்ற குழப்பத்தில் மறுகி உறுகி நின்றாள், ரீனா.



அவளை அந்நிலையில் பார்த்தவன், அவளுக்கு அதில் உடன்பாடு இல்லையோ என நினைத்து, “இட்ஸ் ஓகே ரீனா. ஃபர்கெட் இட்.” என விலகி நடக்க, அவனது அச்சிறு விலகலையும் தாங்கிக் கொள்ள முடியாதவள் சட்டென அவனைப் பின்னோடு அணைத்தாள்.



வடித்து வைத்த கிரேக்க சிற்பமாய் இறுகியிருந்தவன் அவளது கரம் பட்டதும் பனியென உருக துவங்கினான்.



சட்டென அவளை முன்னால் இழுத்து, “உனக்கும் ஓகே வா?” என விழி விரிக்க, குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்வது போல், பேசத் தயங்கியவள் எங்கே அவன் கோபித்துக் கொள்வானோ என்ற பயத்தில் அவனது மார்பில் விழ, பூப்பந்து மோதிய அவஸ்தையில் அவனோ எச்சில் கூட்டி விழுங்கினான்.



உள்ளிருக்கும் மிருகமோ உடனே விழித்துக் கொண்டு இடம் பொருள் ஏவலின்றி அவளைக் கபளீகரம் செய்யத் தூண்ட, தனக்குள் நிகழும் புது வித மாற்றத்தை முதல் முறையாக உணர்ந்து திகைத்தான், பிள்ளை பாடம் படிக்கும் மாணவனாய்.



அவளது சுகந்த வாசமோ நாசியை நிறைத்து அவனைப் புதுவித போதைக்குள் தள்ள, இரு கரத்தில் அவளை ஏந்தி உண்பது போல் உற்று நோக்கினான், மைக்கேல்.



படர் நெற்றியில் தொடங்கி இமைகள், விழிகள் எனப் பார்த்துக் கொண்டே வந்தவன் செவ்விதழில் நின்றான்.



அவ்விதழோ மேலும் சிவந்து அவனை ‘வா வா…’ என்றழைத்திட, இவனது அதரங்களோ செவ்வாயில் குடிக் கொள்ள சொல்லித் துடியாய் துடித்தன.



இதயமோ, ‘லப் டப் லப் டப்…’ என மார்புக்கு வெளியே துடிப்பதை உணர்ந்தவன், வியர்வை துளி அரும்ப, அதரங்களை குவித்து, அவளது இதழை நோக்கிக் குனிந்தான்.



காந்தமென இரண்டும் ஒன்றோடு ஒன்று சேரும் நேரம், “ப்ரோ… என்ன பண்றீங்க?” எனக் கேட்டு இருவரையும் பதற வைத்தான், சார்லஸ்.



சட்டென விலகியவர்கள், “ஒன்னுமில்ல ஒன்னுமில்ல.” என்று கோரஸ் வாசிக்க, “என்ன ஒன்னுமில்ல? ஆமா… நான் வரும்போது நீங்க இரண்டுபேரும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” அதட்டினான், சார்லஸ்.



“அது… அது… ஹாங் உங்க அக்கா கண்ணுல தூ… தூசி இருந்துச்சு அதான். சரி நீங்க இரண்டு பேரும் பேசிட்டு வாங்க நான் முன்னாடி போறேன்.” என மைக்கேல் ஓட, “ரீனா! மேக் கப் முடிஞ்சுதா இல்லையா? மாம் அங்க டைம் ஆச்சுனு கத்திட்டு இருக்காங்க.” அரட்டியவன், “ஹுஹும்… என்ன மேக் அப் இது. நல்லா வீட்டுக்கு வெள்ள அடிச்ச மாதிரி.” என நக்கலடிக்க, “போ டா.” என முகம் சுளித்து சிணுங்கினாள், ரீனா.



“ஹாஹா… வா வா… டாட் உனக்குப் பேய் பிடிச்சிட்டதா நினைச்சு டெலிவரன்ஸ் பிரேயர் வச்சிட போறாரு.” என்றான் நக்கலாக.



“அப்படி வைக்கிறதா இருந்தா மொத உனக்குத் தான் வைக்கனும்.” பதிலுக்கு இவளோ பகடி பேச, இருவரும் ஒருவரை ஒருவர் காலை வாரியபடியே அந்த ஒப்பனையகத்தை விட்டு வெளியே வந்தனர்.



“டாட் எங்க டா?” விழிகளால் அவர்களது காரைத் தேடிய படியே ரீனா வினவ, “ம்ம்ம் சொல்ல மறந்துட்டேன் பாரு. இப்ப தான் டாட் கால் பண்ணார். அவரும் மாம்மும் ஹோட்டல்ல இருந்து நேரா சர்சுக்கு போயிடுவாங்களாம். உன்னையும் என்னையும் மைக்கேல் ப்ரோ கார்ல வரச் சொன்னாங்க.” தகவல் கூறியபடியே காருக்கு அருகே நிற்கும் மைக்கேலை கைக்காட்டினான், சார்லஸ்.



“இஸ் இட் சோ.” என்றவளுக்கோ அழையா விருந்தாளியாய் மறுபடியும் வெட்கம் வந்து ஒட்டிக் கொள்ள, உறைந்து நின்றவளை கைப்பிடித்து அழைத்துச் சென்று சார்லஸ் காரில் ஏற்ற, அவர்களுடன் அவர்களாகத் தானும் ஏறிக் கொண்டான், மைக்கேல்.



ஒருபக்கம் சார்லஸ் மறுபக்கம் மைக்கேல் என இருவருக்கும் இடையில் அமர வைக்கப்பட்டிருந்தாள், ரீனா.



அவனது மேனியில் கமழும் வாசனை திரவியமே இவளைப் போதை கொள்ள வைக்கப் போதுமானதாக இருக்க, ஏசி காற்றிலும் வியர்த்து விறுவிறுத்தது, அவளுக்கு.



போதாக்குறைக்கு சாலை வளைவுகளில் வாகனம் செல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டனர்.



அப்படி மோதும் போதெல்லாம் அவர்களது ஹார்மோன்ஸோ பல லட்சம் நியூரான்களை சுரந்து தள்ள, பஞ்சும் நெருப்புமாய் பற்றிக் கொள்ள நேரம் பார்த்து அவர்களோ காத்திருந்தனர்.



இருவரது உடல் சூடும் அந்தக் காரின் ஏசியை மேலும் வேலை வாங்க, உழைத்து உழைத்து இறுதியாக நின்றுவிடும் நிலைக்குச் சென்ற அந்த ஏசியின் உயிரை அவர்கள் இறங்க வேண்டிய தேவாலயம் காப்பாற்றியது.



மூவரும் மற்றவர்களை விழிகளால் தேடியபடியே இறங்க, “மைக்கேல் மைக்கேல்.” எனக் கூவியபடியே ரேச்சலுடன் வந்தான், தாமஸ்.



“ம்ம்ம் சொல்லுங்க தாமஸ். அப்பா எங்க?” என்று இவனோ புருவம் உயர்த்த, “அங்கிளும் ஆண்ட்டியும் இப்ப வந்திடுவாங்க மைக்கேல் அதுவரைக்கு உங்க மூணு பேரையும் பாஸ்டர் ரூம்ல வெயிட் பண்ண சொன்னாங்க.” என்றான் அவன்.



“பாஸ்டர் ரூமா அது எங்க இருக்கு?” என சார்லஸ் புருவம் உயர்த்த, “நான் அழைச்சிட்டு போறேன் சார்லஸ்.” என்ற மைக்கேலோ உரிமையுடன் ரீனாவின் கரத்தைப் பற்றினான்.



அவனது உரிமை கண்டு ஒருநிமிடம் திகைத்தவள் பின் வெட்க சிரிப்புடன் அமைதியாகிட, இருவரும் கைக்கோர்த்தபடியே பாதிரியாரின் அறை நோக்கி நடந்தனர்.



காருக்கும் பாதிரியாரின் அறைக்கும் சுமார் பத்தடி தூரம் தான் இருக்கும்.



அந்தப் பத்தடி பத்தாயிரம் காத தூரமாகிவிடாதா? என்ற ஏக்கத்தில் நத்தை போல் இருவரும் ஊர்ந்திட, அவர்களுக்குப் பின்னால் ராயப்பனின் கார் வந்து நின்றது.



சத்தம் கேட்டு இருவரும் மெல்ல திரும்பிட, ஜோசபின் காரோ, ‘ப்பா…” எனச் சத்தமிட்டபடியே வேகமாக வந்து ராயப்பனின் காரை மோதி நின்றது.



அது மோதிய வேகத்தில் ராயப்பனின் காரில் இருந்தவர்களோ திசைக்கு ஒன்றாய் தூக்கி வீசப்பட்டனர்.



ராயப்பனும், எஸ்தரும் அவ்விடத்திலேயே தங்களது இன்னுயிரை துறந்திட, மைக்கேலின் அக்கா மரியாவின் உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருந்தது.



இமைக்கும் நொடியில் அத்தனையும் நடந்தேறிட, தாமஸ் ஒருபக்கம் மரியாவின் உடலைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து செல்ல, மறுபக்கம் மூச்சுப் பேச்சுயின்றி அதிர்ச்சியில் சிலையென உரைந்து நின்றான், மைக்கேல்.



விழிநீரோ மெல்ல எழும்பிக் கன்னம் தொட்டது.



“ஐயோ அங்கிள்…” என்று இவள் அலறவும் உயிர் பெற்றவன், “அப்பாஆஆ அம்மாஆஆ…” என்று அலறியபடியே அவர்களை நோக்கி ஓடினான்.



அவனுடனே இவளும் ஓட, இருவரும் ஒருசேர ராயப்பன்,  எஸ்தரின் பிரேத உடல்களுக்கு அருகில் மண்டியிட்டு அமர்ந்தனர்.



இதயம் படபடக்க, “அப்பா…” என்றழைத்தவனின் கண்ணீரோ உடையை நனைத்தன.



இருவரும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்க, இவனது விரல்களோ மெல்ல நடுங்கின.



நடுக்கத்துடனே அவர்களின் உடலைத் தொட்டு பார்த்தான், “அம்மா அப்பா எந்திரிங்க.” எழுப்பிப் பார்த்தான், “அப்பா அப்பா…” என அவரின் தோளைத் தொட்டு குலுக்கிப் பார்த்தான், பின் அணைத்துக் கொண்டு, “அப்பாஆ…” எனக் கத்தி கதற, “அழாதீங்க மைக்கேல்! பிளீஸ் அழாதீங்க.” அழுதபடியே ரீனாவும் அவனைச் சமாதானம் செய்யப் போராட, ஜோசப்பும் ஸ்டெல்லாவும் நெற்றி காயத்துடன், “ம்மாஆ… ம்மாஆ” என முணங்கியபடியே கார் கதவைத் திறந்து விட்டு வெளியே விழுந்தனர்.



“டாட் டாட்… உங்களுக்கு… உங்களுக்கு என்னாச்சு?” என்று இவள் அவரைப் பார்த்துப் பதற, மைக்கேலின் தோளைத் தொட்டான், ராயப்பனின் உதவியாளன் பவுல்.



அவரைக் கண்டதும், “அங்கிள்…” என்று இவன் கதற, அவரோ கோப்பு ஒன்றை அவனிடம் நீட்டினார்.



யோசனையுடன் அவரைப் பார்த்தவன் அதே யோசனையுடன் அந்தக் கோப்பை திறந்தான்.



அந்தக் கோப்பில் அப்படி என்ன இருந்ததோ மெல்ல அவனது உடல் இறுகியது.



கோபத்தில் கண்கள் சிவக்க, விறுவிறுவென அவளிடம் வந்தவன், “யூ பிச்…” எனத் திட்டி அவளது கன்னம் பழுக்க ஓங்கி ஓர் அரையிட்டான்.



அது அவனது முதல் தீண்டல். அதுவும் வன்மையான தீண்டல்.



அவன் அடித்த அடியில் இவளுக்கோ பொறி கலங்கியது.



“மைக்கேல்…” அதிர்ந்தவள், கண்ணீருடன் அவனை ஏறிட்டு பார்க்க, “என்ன டி என்ன இது?” என்றபடியே ஒரு கைப்பேசியை அவளிடம் காட்டினான், மைக்கேல்.



அதில், அவளும் அவளது பெற்றோரும் அன்று துணியகத்தில் பேசிக் கொண்டது ஒளிப்பரப்பானது.



‘அவங்க பேமிலிய விடுங்க. நமக்கு மைக்கேல் தான முக்கியம்.’ என அன்று அவள் கூறிய வார்த்தைகள் மட்டும் மறுபடியும் மறுபடியும் ஒளிப்பரப்பாகிட, “அப்ப… அப்ப எங்க அப்பா அம்மா இருக்கிறது உனக்குப் பிடிக்கல அதான?” என்றான், மைக்கேல் பற்களை அரைத்து.



“அச்சச்சோ… இல்ல மைக்கேல் நான் அப்படி நினைக்கல்ல.” பதிலுக்கு இவளோ பதறி மறுக்க, “அப்ப இது என்ன டி?” என்றவன் அடுத்த விழியத்தை போட்டுக் காட்டினான்.



அதில், “எனக்கு இந்த மாமனார், மாமியார், நாத்தனர், கொழுந்தன் எல்லாம் சுத்தமா பிடிக்காது. அதெல்லாம் இல்லாத வீட்டுக்குத் தான் போவேன்.” என்று இவள் பேச, “இருந்தா என்ன பண்ணுவ?” பதிலுக்கு யாரோ குரல் கொடுத்தனர்.



“ம்ம்ம்…கொன்னுடுவேன்.” என ரீனா அழுத்திக் கூறவும் அந்த விழியம் முடிந்திட, “இது… இது காலேஜ் டிராமா ரிகர்ஸல் புட்டேஜ்.” என்றாள் ரீனா பதற்றமாக.



“ரீகர்ஸ்லா? ஹும் யார்கிட்ட பொய் சொல்ற? நானும் அந்தக் காலேஜ்ல தான வொர்க் பண்ணேன், எனக்குத் தெரியாம எப்ப இந்த டிராமா போட்டீங்க? எந்தப் பங்சன்ல இந்த டிராமா நடந்துச்சு?” என்று அவனோ புருவம் உயர்த்த, “இது இது… நாங்க மொத பிளான் பண்ண டிராமா, நல்லா இல்லைனு நாங்களே அதை மாத்தி வேற டிராமா போட்டோம்.” எனப் படபடத்தவள், வேடிக்கை பார்க்கும் தனது சக கல்லூரி மாணவர்கள் பார்த்து, “சொல்லூங்களே டா.” என்று அரட்ட, “என்ன ரீனா என்ன சொல்ற? எங்களுக்கு ஒன்னும் தெரியாது.” எனக் கை விரித்தனர்.



“டேய் உங்களுக்கு எல்லாம் என்னாச்சு? லதா… லதா நீ சொல்லு! அன்னைக்கு நீ தான என் கூட இருந்த? இது உன் வாய்ஸ் தான?” என ஒரு பெண்ணின் தோளைப் பிடித்துக் கேட்டாள், ரீனா.



“ரீனா பிளீஸ் என்ன இதுல இழுக்காத? அன்னைக்கே இந்த மாதிரி பேசாதனு சொன்னேன் நீ தான் கேட்கல. பேசுறதை எல்லாம் பேசிப்புட்டு இப்ப அதெல்லாம் டிராமா ரிகர்ஸல்னு ஏன் பொய் சொல்ற?” பதிலுக்கு அவளோ கத்தியின்றி முதுகில் குத்தினாள்.



“லதா…” என்று இவளோ அதிர்ந்து வாய் பிளக்க, “ம்ம்… இப்ப என்ன சொல்லப் போற?” என்றான் மைக்கேல் அவளை முறைத்து.



மகள் கஷ்டப்படுவதை சகியாமல், “மாப்பிள்ள பிளீஸ் என் பொண்ணு அப்படிப்பட்டவ இல்ல.” என ஈன ஸ்வரத்தில் ஜோசப்போ வாக்காளத்து வாங்க, “ஐயோ மைக்கேல் ஏன் இப்படி என்மேல பழி போடுறீங்க? நான் உங்க கூடத் தான வந்தேன்? நா… நான் எப்படி ஆண்ட்டி அங்கிள் டெத்துக்கு காரணமா இருப்பேன்? ஐ நோ மைக்கேல் ஆண்ட்டி அங்கிள் இறந்துப் போனது உங்களுக்குக் கஷ்டமா தான் இருக்கும். பட் இது தெரியாம நடந்த ஆக்சிடெண்ட்.” என்று இவளோ ஆறுதல் கூறிட, “நோ… இது ஆக்சிடெண்ட் இல்ல. மர்டர்…திட்ட மிட்டு நடத்தப்பட்ட மர்டர்.” எனக் கத்தினான், மைக்கேல்.



அதில் அதிர்ந்து இவள் விழிக்க, “எஸ்! எஸ்! இது மர்டர். மர்டர் தான். எங்க அப்பா அம்மா இருக்கறது உனக்குப் பிடிக்கல. நான் மட்டும் போதும்னு நினைச்ச, அதான் உங்க அப்பாவ விட்டு என் குடும்பத்தைக் கொன்னுட்ட.” என்று அவனோ குற்றம் சாட்ட, “மைக்கேல் பிளீஸ் எவிடன்ஸ் இல்லாம ப்ளேம் பண்ணாதீங்க. எங்க அப்பா சர்ச் பாஸ்டர்! அவர் எப்படி கொலை பண்ணுவார்?” பதில் கேள்வி கேட்டாள், ரீனா.



“ஹும்… முழு பூசணிக்காய சோத்துல மறைச்சிடலாம்னு நினைச்சியா ரீனா? உங்க அப்பா ஒரு கிரிமினல். அதுவும் டீன் ஏஜ்ல கொலைப்பண்ணிட்டு ரீபார்மனரி ஸ்கூல்ல பாஸ்டர் படிச்ச ஆளு.” என்றவனோ சில ஆவணங்களை எடுத்துக் காட்டினான், மைக்கேல்.



அதில் அவளது அப்பாவின் புகைப்படத்தோட கொலை வழக்கும், அதற்கான தீர்ப்பும் இடம்பெற்றிருக்க, “நோ… நோ… இது… இதெல்லாம் பொய்.” என்று அலறியபடியே ஜோசப்பை நோக்கினாள், ரீனா.



அவரோ கூனிகுறுகி போய் நிற்க, “டாட் சொல்லுங்க டாட் இதெல்லாம் பொய்யினு சொல்லுங்க டாட்.” என்று இவளோ கதற, பக்கென அவளது தோளைப் பற்றியவன், “அப்பாவும் மகளுமா சேர்ந்து என் குடும்பத்தையே நாசம் பண்ணிட்டீங்க இல்ல. நீ இவ்வளவு பெரிய விஷம்னு தெரியாம உன்ன போய் லவ் பண்ணேனே என்ன சொல்லணும்?” கொண்ட காதல் மொத்தமும் வெறுப்பாக மாறிட, “நான் மட்டும் தான் வேணும் என் குடும்பம் வேணாம்ல. ச்சைய் சைக்கோ டி நீயி. உன்ன… உன்ன போய்…” தலையில் அடித்துக் கொண்டான்.



அவன் பேசப் பேச இவளுக்கோ உடல் கூசியது, என்ன நம்ப மாட்டியா? என்ற ஏக்கத்தில், “மைக்கேல்…” என்று இவளோ ஈன ஸ்வரத்தில் அழைக்க, “பேசாத டி. உன்ன பார்த்தாலே கொல்லனும் போல இருக்கு. உன்ன மாதிரி ஆளுங்க எல்லாம்… ச்சே… வெளிய நடமாடவே கூடாது. கார்ட்ஸ்! இவள தூக்கிட்டு போய் மென்டல் ஹாஸ்பிட்டல போடுங்க.” என்றான் இவன் கட்டளையாக.



“பிளீஸ் மைக்கேல் நா… நான் சொல்றத கேளுங்க.” என்று இவள் கதற கதற அவனது ஆட்களோ அவளை இழுத்துச் சென்று மனநல மருத்துவமனையில் விட்டனர்.


தொடரும்.. 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்