Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

தீ மீது வீணை 5

 அத்தியாயம் 5



கருநிற இரவுடையையை களைந்துவிட்டு பொன்னாடை போர்த்திய புதுப் பெண்ணாய் வானம் காட்சியளிக்க, உயர்ந்த அடர்ந்த மரங்களோ பனியெனும் வெண்பட்டை தமது மேனியில் போர்த்திக் கொண்டன.



வெள்ளிச் சரிகையுடைய பச்சைப் பட்டாடைபோல், அலைஅலையாய் மலைச்சரிவுகளில் வளர்ந்திருக்கும் மரங்களும் புதர்களும் பிகாசோ ஓவியங்களை நினைவூட்டின.



மழையெனும் சீருடை அணிந்த சிறுமிகளாய் காபி இலைகள் அங்கே வரிசைகட்ட, வனப்பும் யௌவனமும் கொண்ட குடகு பெண்ணின் அழகில் மயங்கி நின்றான் ஆதவன்.



நித்தம் நித்தம் பார்த்தாலும் அவள்மேல் அவன் கொண்ட காதல் குறையாது என்பதை நிரூபிப்பதுபோல், பிற இடங்களில் நெருப்பாய் காயும் அவன், அவளிடம் மட்டும் தனது மென்மையை காட்டினான்.



தனது செவ்விரலால் அவனோ அவளை வருட, அவர்களின் காதலை வாழ்த்திப் பறவைகளோ தமது இனிய குரலில் பண் பாட, அந்தப் பாடலுக்கு ஏற்றவாறு சிம்போனி வாசித்தது குளிர்காற்று.



அதன் இன்னிசை கச்சேரியும், அத்துடன் கலந்து வரும் ஏலக்காய் வாசமும் அவளை மெல்ல எழுப்பிட, தீரா அசதியுடன் மெல்ல விழிகளைத் தட்டி தட்டி விழி விரித்தாள், ரீனா.



விரும்பியவனை கண்டாகிவிட்டது இனி கவலையும் கண்ணீரும் மெல்ல குறையும் என்ற நம்பிக்கையில் பல மாதங்களுக்குப் பின் அசந்து தூங்கியவளுக்கு அலுப்பு தான் இன்னும் குறைந்தபாடியில்லை போலும், கைகளை உயர்த்தி பெருதாய் நெட்டி முறித்தவள், பின் பதறி இரு கையால் தனது பொக்கிசங்களை மூடினாள்.



தரையில் கூடி கிடந்தவளை மெத்தையில் படுக்கப் போட்டுவிட்டு வேறு எங்கோ அவன் சென்றிருக்க, போர்வையை உடையாகச் சுற்றிக் கொண்டு மெல்ல இறங்கினாள், அவள்.



அவளின் செவ்விதழ்கள் இரண்டும் சிவந்து கனத்து போயிருந்தன.



அதிகம் உழைத்ததால் மெல்லிடையோ சோர்ந்திருக்க, உடலெங்கும் கவிதையென அவன் கிறுக்கிய வன்காதலை வருடிய படியே குளித்தவள், துவலையை உடலில் சுற்றிக் கொண்டு அறைக்குத் திரும்ப, மெத்தை மேல் வெள்ளை நிற திருமண அங்கி ஒன்று அவள் உடுத்த வேண்டிக் காத்திருந்தது.



அதைக் கண்டதுமே அந்த அங்கி அவளின் திருமண அங்கி என்பதும் அதை வாங்க சென்றபோது நடந்த நிகழ்வுகளும் கண் முன்னால் வந்து நிழலாடின.



கிருத்துவ திருமண உடைகளை விற்கும் விற்பனையகம் அது.



விதவிதமான வெள்ளை நிற அங்கிகள் அங்கே வாடிக்கையாளரின் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.



மைக்கேலின் அப்பா ராயப்பனும், அம்மா எஸ்தரும் அந்த அங்காடி முதலாளியின் அறையில் அவருடன் அளவளாவிக் கொண்டிருந்தனர்.



மைக்கேலும் அவனது அக்கா மாப்பிள்ளை தாமஸும் அவர்களுடன் ரீனாவின் தம்பி தாமஸும் டக்ஸிடோ என்று அழைக்கப்படும் திருமணத்திற்கு அணியும் கோட், சூட்டை பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.



ரீனாவும், மைக்கேலின் அக்கா மரியாயும் வெள்ளைநிற அங்கியை பார்வையிட்டுக் கொண்டிருக்க, மரியாவின் ஆறு வயது மகள் ரேச்சல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தாள்.



“ரேச்சல் ஒரு இடத்துல அமைதியா உட்காரு.” அரட்டியபடியே மரியா ஒவ்வொரு அங்கியாய் பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்க, ரீனாவின் கவனமோ தூரத்தில் ஒரு ஓரமாய் அமர்ந்திருக்கும் ஜோசப் மற்றும் ஸ்டெல்லாவின் பக்கம் சென்றது.



அவ்விருவரும் வாடிய முகத்துடன் ஏதோ தங்களுக்கு பேசிக் கொள்வதை பார்த்தவள் மெல்ல எழுந்து அவர்களிடம் சென்றாள்.



“டேட், மாம் ஏன் இங்க இருக்கீங்க?” என்றவாறு அவர்களுக்கு அருகில் இவள் அமர, “ஏய் அங்க போ டி உன் இன் லா ஏதாவது சொல்லப் போறாங்க?” என அவளை ஸ்டெல்லா விரட்ட, “ஸ்டெல்லா என்ன பேச்சு இது? நம்ம பொண்ணு நம்மகிட்ட இருக்கிறது தப்பா?” மனைவியை அரட்டினார், ஜோசப்.



“உக்கும்… உங்களுக்கு நான் பேசுறது தான் பிரச்சனை.” ஸ்டெல்லாவோ முகத்தைத் திருப்ப, “டாட் என்ன பிரச்சன? ஏன் நீங்க இரண்டு பேரும் ஒரு மாதிரி இருக்கீங்க? பிளீஸ் எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க.” ஸ்டேல்லாவின் கரத்தை ஆறுதலாகப் பற்றி ஜோசப்பிடம் வினவினாள், ரீனா.




“ச்சே ச்சே… அதெல்லாம் ஒன்னும் இல்ல டா.” உடனே அவர் மறைக்க, “ஜோசப் ஏன் பொய் சொல்றீங்க? அவளுக்கு எல்லாம் தெரியணும் தான?” என அவரை அரட்டியவர், ரீனாவிடம் திரும்பி, “ஜோசப்புக்கும் எனக்கும் இந்தச் சம்பந்தம் சரியா வருமானு பயமா இருக்கு.” என்றார் ஸ்டெல்லா கவலையாக.



“வாட்? வாட் ஹாப்பன் மாம்? நல்லா தான போச்சு? வெட்டிங் டிரஸ் கூட எடுக்கப் போறோம்? இப்ப… இப்ப ஏன் இப்படி சொல்றீங்க?” பதறி வினவினாள், ரீனா.



பதில் பேசத் தயங்கி இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, “ஏன் டாட்? என்னாச்சு? மைக்கேலை உங்களுக்குப் பிடிக்கலையா?” என்று இவள் வினவ, “ச்சே ச்சே அப்படி இல்ல டா. மைக்கேல் நம்ம வீட்டுக்கு வந்து உன்ன பொண்ணு கேட்டப்ப எங்க எல்லோருக்குமே அவர ரொம்ப பிடிச்சது. ஈவன் அவர மட்டும் இல்ல அவங்க பேமிலியையும் எங்களுக்கு ரொம்ப பிடிக்கப் போய்த் தான் உன்ன அவருக்கு மேரேஜ் பண்ணி வைக்கச் சம்மதிச்சோம். பட்.” என வார்த்தைகளை இழுத்தார், ஜோசப்.



“பட்? பட் என்ன டாட் இப்ப என்னாச்சு?” என்று இவள் புருவம் உயர்த்த, “ஊருக்குள்ள இவங்கள பத்தி என்னன்னமோ சொல்றாங்க டா, கட்டபஞ்சாயத்து, அடி தடி இவங்க மேல ஏற்கனவே பல கேஸ் இருக்குதுனு சொல்றாங்க. நாம ஜிசஸுக்கு பயப்படுறவங்க் நம்ம பேமிலிக்கு இவங்க சரிப்பட்டு வருவாங்களா டா?” கவலையுடன் அவர் தனது உரையை முடிக்க, “டாட் இதெல்லாம் எனக்குத் தெரியாதுனு நினைக்கிறீங்களா? எப்ப நான் இங்க காலேஜுக்கு படிக்க வந்தானோ அப்பவே ராயப்பன் அங்கிள் பத்தி நல்லவே தெரிஞ்சிக்கிட்டேன். நீங்கச் சொல்ற மாதிரி அவங்க அடி தடி பண்ற பேமிலி தான் பட், தப்பானவங்க இல்ல டாட். நாட்டுக்காகச் சண்ட போடுற ஆர்மி மேன் மாதிரி இவங்க இந்த ஊருக்காகச் சண்டை போடுறாங்க.” மைக்கேல் குடும்பத்திற்காகப் பரிந்துப் பேசினாள், ரீனா.



“சரியோ தவறோ அதுவும் ஒரு பாவம் தான டா?” என்றார் தந்தை நிதானமாக.



“எஸ் டாட். பட் அந்தப் பாவத்துல மைக்கேலுக்கு என்ன பங்கு இருக்கு? நல்லா படிச்சிருக்காரு. அவர் நினைச்சிருந்தா அவங்க அப்பா வேலைய அவரும் பார்த்திருக்கலாமே, அத விட்டுட்டு எதுக்காக அவங்க காலேஜ்ல அவரே ஒரு லெக்சரரா வேலை பார்க்கனும்? ஹி இஸ் டிஃபரண்ட் டாட். அவருக்கும் இந்த அடி தடி எல்லாம் புடிக்காது. அவர் பேமிலிய விடுங்க அவங்க எப்படியும் போறாங்க. நமக்கு மைக்கேல் தான முக்கியம்.” என அன்று பேசியதை இன்று நினைத்தபடியே அந்த அங்கியை அணிந்து மணப்பெண் போல் ஒப்பனையும் செய்துக் கொண்டாள், ரீனா.



“ஹும்…” ஒரு பெரும் மூச்சுடன், ‘அன்னைக்கு இதெல்லாம் செய்யப் பியூட்டிசன் இருந்தாங்க. இன்னைக்கு… இதெல்லாம் நானே செய்ய வேண்டியதா இருக்கு.’ என அலுத்துக் கொண்டவள், ‘பட் மைக்கேல் நேத்து லிவ் இன் தான சொன்னான். தென் எப்படி மேரேஜுக்கு ஒத்துக்கிட்டான்?’ என்று யோசித்தாள்.



“ப்ச்…” என இதழ் பிதுக்கி, ‘ரொம்ப யோசிக்காத ரீனா. என்ன நடந்தாலும் சரி அவன பழைய மாதிரி அடி தடிக்கு போகாதவன மாத்தனும்.’ என நினைத்துக் கொண்டவள் கிளம்பி அந்த அறையை விட்டு வெளியே வர, “மேம்… பிளீஸ் கம். பாஸ் உங்கள உடனே கூட்டிட்டு வரச் சொன்னாரு.” என்றான் மைக்கேலின் உதவியாளன் கிரிஸ்டோபர்.



“ம்ம்…” உடனே ஒப்புதலாய் தலையாட்டியவள் அவனுடனே நடக்க, கிரிஸ்டோபரோ அவளை அழைத்துக் கொண்டு தேவாலயம் வந்தான்.



அந்தத் தேவாலயத்தில் தான் அவர்களின் திருமணம் முன்பு ஏற்பாடாகியிருந்தது.



அதே தேவாலயம்… அதே அலங்காரம்… வண்ண வண்ண பலூன்களை வைத்து நுழைவாயில் அமைத்திருந்தனர் அன்று போலவே.



காரில் இருந்தவாறே அந்தத் தேவாலயத்தைப் பார்த்தவளுக்கு ஏனோ உடல் நடுங்கியது. உள்ளம் பதைபதைத்தது.



இதயம் வேறு படபடவெனத் துடிக்கத் துவங்க, விழிகளோ தானாகக் கலங்கின.



இதழ்களோடு சேர்த்து தாடையும் துடிக்க, ‘டாட்! அன்னைக்கு அந்த இன்சிடண்ட் மட்டும் நடக்காம இருந்திருந்தா, இன்னைக்கு நீங்க, நான், நம்ம பேமிலி, மைக்கேல் எல்லோரும் ஒன்னா ஒத்துமையா, ரொம்ப ஹாப்பியா இருந்திருப்போம் இல்ல.’ என நினைத்தவளுக்கு கண்ணீர் கோடுகள் கன்னத்தை நனைத்தன.



அவள் வந்த கார் சரியாகத் தேவாலய வாசலில் போய் நிற்க, “மேம் பிளீஸ்…” எனக் கூறி இறங்குங்க என்பதை சைகையில் காட்டினான், கிரிஸ்டோபர். 



மிரட்சியுடன், “ம்ம்ம்…” எனத் தலையாட்டியவள் அந்தக் காரிலிருந்து இறங்க தயாராக, கார் ஒன்று அவர்களை நோக்கி விரைந்து வந்தது.



“ப்பா…” எனச் சத்தம் கொடுத்தபடியே அது வர, சட்டென நிமிர்ந்தவளின் விழிகள் அப்படியே ஒரு நிமிடம் உரைந்து நின்றன.



அந்தக் கார் பார்க்க அவளது அப்பா ஜோசப்பின் கார் போலவே இருக்க, விழிகளை நன்கு துடைத்துவிட்டு திரும்பவும் அதைப் பார்த்தாள், ரீனா.



ஆம், அது தான், அவர் வேலை செய்யும் தேவாலயம் அவருக்குப் பரிசாகக் கொடுத்த அதே வெள்ளை நிற கார். “அந்தக் கார் எப்படி இங்க?” முணுமுணுத்தவளுக்கோ அதில் யார் இருக்கிறார்கள் எனப் பார்க்க ஆர்வம் கூடியது.



ஜன்னல் வழியாகத் தலையை விட்டு இவளோ எட்டி பார்க்க, அந்தக் காரோ வேண்டும் மென்று அவர்களை இடிப்பது போல் படு வேகமாக வர, சட்டென இருக்கையில் விழுந்தவளுக்கு விழிகள் இருண்டன.



இதயமோ வேக கதியில் “லப் டப் லப் டப்” எனத் துடித்துப் பின் அடங்க, “டாட்…” என்று அலறியவாறு சட்டென மயங்கிச் சரிந்தாள், ரீனா.


தொடரும்...  


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்