நெருஞ்சி மலரோ?? என் மோக கானமோ?? 4
அத்தியாயம் 4
“ஐயோ எங்க என் பெட்டி?” பாரியோ பதறிட, “அட ஆமா என் பெட்டிக்குப் பக்கத்துல தான உன் பெட்டி இருந்துச்சு?” சுற்றும் முற்றும் நிதானமாக மாம்பழம் தேட, பாரியோ யோசனையுடன் அமரை நோக்கினாள்.
அவனோ கண்டும் காணாமல் கூலியாட்களுக்குப் பணப் பட்டுவாடா செய்துக் கொண்டிருக்க, “இவன் தான் என் கூடைய எடுத்து வச்சிருக்கான்.” அழுத்திக் கூறியவள் அதே அழுத்தத்துடன் அவனுக்கு முன் சென்று நிற்க, “அட வரிசையில வந்து நில்லும்மா.” விரட்டினான், கணக்கு பிள்ளை நாகராஜ்.
நாகராஜின் வார்த்தைகளை கிஞ்சிதமும் மதியாதவள், “என் பெட்டியை நீ எங்க எடுத்து வச்ச?” நேருக்கு நேராக அமரைப் பார்த்து குரலை உயர்த்த, “ஏய் இந்தா! என்ன வா போ னு ஒருமையில பேசுற வேலை எல்லாம் வச்சுக்காத! மிதிச்சுப் புடுவேன் மிதிச்சு.” கோபத்தில் மிரட்டியவன், கணக்குப் பிள்ளையைப் பார்த்து, “யோவ் கணக்குப் பிள்ள! இந்த மாதிரி ஆளை எல்லாம் ஏன்ய்யா உள்ள விடுற? அடிச்சு தொறத்து.” என்றான் அதிகாரமாக.
“யார? யாரப் பார்த்து என்ன வார்த்தைச் சொல்ற?” சண்டைக்கோழியாய் இவள் சிலிர்த்துக் கொள்ள, “ஏய் பாப்பா இங்கன வா.” வம்படியாக அவளது முழங்கையைப் பிடித்து தனியிடம் இழுத்து சென்றார், கணக்குப்பிள்ளை நாகராஜ்.
“என்ன பாப்பா நீயி? கொஞ்சக் கூட சூதனமா நடந்துக்கத் தெரியலையே உனக்கு. முதலாளிக்கிட்ட இப்படித் தான் சண்ட போடுவீயா? போம்மா போ… உன் பெட்டி இங்கனத் தான் எங்கையாவது இருக்கும். போய் தேடு.” அறிவுரைக் கூறி அவர் அனுப்ப, அவருடனே சக உழைப்பாளிகளும், “அட உன் பெட்டி இங்கனத் தான் எங்கையாவது இருக்கும் அவசரப்படாம தேடி பாரு பாப்பா.” என்றனர்.
மாம்பழம் கூட, “சண்ட வேணாம் டி. அவசரப்படாம மொதத் தேடி பார்ப்போம்.” என்றிட,
மற்றவர்களுக்காக இல்லை என்றாலும் தோழிக்காக மனம் இறங்கியவள் தனது பெட்டியைத் தேட, அதுவோ களத்து மேட்டுக்கு வெளியே தனியாகக் கிடந்தது.
“அதோ அங்க இருக்கு பார்.” முதலில் மாம்பழம் தான் பார்த்துக் கை காட்டினாள்.
“இது எப்படி இங்க போச்சு?” யோசனையுடன் பாரி புருவம் இடுக்க, “ப்ச்… இப்ப அது எதுக்கு? வா மொதப் பெட்டியை கொடுத்துச் சம்பள பணத்தை வாங்குவோம்.” அமருக்கு முன் பாரியை இழுத்து வந்தாள், மாம்பழம்.
அவனோ, ‘என்ன?’ என்பது போல் இருவரையும் பார்க்க, “ஹிஹிஹி… பெட்டி…” அவனுக்கு முன் அசடு வழிந்தாள், மாம்பழம்.
தலையைச் சொரிந்தபடியே வழியும் தோழியைப் பார்த்து பாரி முறைக்க, “கணக்குப்பிள்ள அளந்துப்போடு.” என்றான், அமர்ப் பாரியை முறைத்தபடியே.
அவனது கட்டளையை ஏற்று மாம்பழத்தின் பெட்டியை அளந்து கூறினான், நாகராஜ்.
“பத்து ரூபா கொடுங்க தம்பி.” என்ற நாகராஜின் சொல் கேட்டு மாம்பழத்திற்குச் சம்பளம் கொடுத்தவன், பாரியின் பெட்டியை அளக்கப் போன நாகராஜை, “கணக்குப் பிள்ள! இது ஒன்னு தான? இத நான் பார்த்துக்கிறேன். நீ… கத்தரி மூட்டைய எண்ணி வண்டியில ஏத்து.” எனக் கூறி அவனைத் தூர அனுப்பினான், அமர்.
கணக்குப் பிள்ளையும், “சரி தம்பி.” தலையாட்டியபடியே அவ்விடமிட்டு அகல, பாரியை மேலும் கீழும் பார்த்துவிட்டு, வேண்டுமென்றே தப்பு தப்பாக அளக்கத் துவங்கினான், அமர்.
முதல் பெட்டியில் கத்தரிக்காய்களைக் கோபுரம் போல் நிரம்பியவன், “ஒன்று.” என்க, அதிர்ச்சியில் பாரியின் விழிகளோ அகல விரிந்தன.
“நீ… நீ…” குறையா அதிர்ச்சியுடன் பாரி திக்க, “என்ன?” கேட்டபடியே அடுத்தடுத்து பெட்டியை அதே போல் அளந்திட, “இ… இப்படியெல்லாம் அளந்தா எப்படி?” வயிற்றெரிச்சலில் வாய் விட்டே இவள் அலற, அதை ஒரு சாக்காக வைத்து தப்பு தப்பாய் எண்ண துவங்கினான், அமர்.
ஏற்கனவே ஐந்து வரை எண்ணியிருந்தவன் இப்போது இரண்டில் இருந்து தொடங்க, “இல்ல இது ஆறு.” எனக் கத்தினாள், பாரி.
“ஆறு அந்தப் பக்கமா இருக்கு, இரண்டு…” மறுபடியும் அவன் இரண்டிலிருந்து ஆரம்பிக்க, “ஏய்… நீ வேணுமெனே என்ன பலிவாங்குற?” கோபத்தில் இவளோ விரலை நீட்ட, “யாரப் பார்த்து டி விரலை நீட்டுற?” நீண்டிய விரலை இவனோ நசுக்கிப் பிடிக்க, “ஆஆஆ…” என்றலறினாள், மாது.
“அண்ணா அண்ணா பிளீஸ்ண்ணா.” மாம்பழமோ இருவருக்கும் இடையில் கிடந்து கெஞ்ச, “ஆஆஆ… வி… விடு டா டேய்.” பாரியோ மிஞ்சினாள்.
“என்ன டி திமிரா? ஓசி சோறு உனக்கே இவ்வளவு திமிருனா எனக்கு எம்முட்டு இருக்கும்?” ஏதோ பூச்சியை நசுக்குவது போல் அமர் நசுக்க, “விடு விடுடா தற்குறி விடு.” வானம் அதிரப் பாரி அலற, நல்லவேளையாக அந்நேரம் பார்த்து அவளைக் காக்க அவ்விடம் வந்தார், ஞானசபை.
“டேய் டேய்… என்ன டா செய்ற?” ஞானசபையின் அலறல் சத்தம் கேட்டு அமரோ அவளது விரலை விட, இது தான் சாக்கென்று, “ஓ…” வென ஒப்பாரி வைத்தாள், பாரி.
“ஐயோ உங்க பையன் என் விரலை உடைக்கப் பார்க்கிறாரு.” அவரைப் பார்த்ததும் குற்ற பத்திரிகை இவள் வாசிக்க, “என்ன டா இதெல்லாம்?” மகனைப் பார்த்து அதட்டினார், தந்தை.
“ஒ… ஒன்னுமில்லப்பா.” அமரோ தந்தைப் பார்த்து நடுங்க, பாரிக்கோ இதழோரம் குறுநகை அரும்பியது.
அதை நயமாய் மறைத்து, “தப்பு தப்பா கணக்கு பார்க்கிறாரே, சரியா பாருங்கன்னு சொன்னேன். அதுக்கு போய் பொசுக்குனு கோபம் வந்து என் விரலை ஒடைக்கப் பார்க்கிறாருய்யா.” வராத கண்ணீரை வரவழைத்து இவள் பேச, “அப்பா இவ பேச்ச…” மறுத்து பேச வந்தவனை, கைக் காட்டி தடுத்தார், ஞானசபை.
“தெரியும் டே உன்ன பத்தி எனக்கு. உனக்குத் தான் படிப்பே ஏறாதே. பின்ன கணக்கு மட்டும் ஏறவா போகுது.” வெறுப்புடன் அவரோ மட்டம் தட்ட, மாம்பழமும் பாரியும் வாயிக்குள் சிரித்தனர்.
பாரியோ அவன் காது படவே சிரித்து வைக்க, பதிலுக்கு இவனோ அவளை முறைக்க, “யோவ் கணக்குப் பிள்ள! எங்கையா இருக்க?” எனக் கத்தினார், ஞானசபை.
அவர்ச் சத்தம் கேட்டுக் கணக்குப்பிள்ளையும் குடுகுடுவென அவ்விடம் ஓடி வர, “பெட்டி அளக்காம அங்கன என்னய்யா பண்ற? வா வந்து இந்தப் பிள்ளைக்கு பெட்டி அளந்துப் போடு.” கட்டளையிட்டவர் அங்கிருந்த நாற்கட்டிலில் அமர, “ஒன்று இரண்டு…” எனச் சரியாக அளத்து, “ஐயா இருபத்து அஞ்சு பெட்டி இருக்கியா.” என்றான், நாகராஜ்.
“இருப்பத்து அஞ்சு பெட்டினா எம்முட்டுக் காசு கொடுக்கனும் சொல்லுலே.” எல்லோரையும் வைத்துக் கொண்டு அமரை அவர் அரட்ட, “ப… பன்னிரண்டு ரூபா ஐம்பது பைசா வரும்ப்பா.” என்றவனுக்கோ அவமானத்தில் முகம் கருத்தது.
“சரிதானே பாப்பா?” பாரியைப் பார்த்து அவரோ அன்புடன் வினவ, “சரி தான்ய்யா.” தன்மையாகத் தலையாட்டியவள் சந்தோசமாகக் கூலி பணத்தை அவரிடம் வாங்கிக் கொண்டு கிளம்ப, போகும் அவளை வன்மத்துடன் பார்த்துப் பற்களை அரைத்தான், மார்கஸ் அமர்.
‘இரு டி என்னைக்காவது ஒரு நாள் என்கிட்ட மாட்டாமல போவ?’ என்று இவன் பற்களை அரைக்க, பாரியோ அவனை வென்ற களிப்பில் வீடு திரும்பினாள்.
சாப்பிடாமல் வேலைச் செய்த களைப்பில் பாரியின் முகமோ வாடி வதங்கி இருக்க,
வீட்டில் அப்போது தான் இசக்கி கேப்ப களி செய்துக் கொண்டிருந்தாள்.
அதற்குத் தொட்டுக் கொள்ள வேண்டி ரஞ்சிதம் கீரைக் கடைந்துக் கொண்டிருக்க, பாரியோ சோர்வுடன் அவளுக்கு அருகில் அமர, விறகு கட்டை ஒன்று பறந்து வந்து பாரியின் காலுக்குக் கீழ் விழ, ரஞ்சதமும் பாரியும் ஒருசேர, “ஐயோ…” எனப் பதறி அலறினர்.
தன்னைச் சுற்றி என்ன நடக்குது எனப் பாரி புரிந்துக் கொள்ளும் முன் அவளது உச்சி மூடியைப் பிடித்து, “எங்க டி போயிட்டு வந்த?” எனக் கேட்டு சுழற்றினாள், இசக்கி.
“ஐயோ அத்தா நா… நான் மாம்பழம் கூட வி… விளையாட போனேன்.” எங்கே வேலைக்குச் சென்றேன் என்றால் சம்பளப் பணத்தை தாய் கேட்பாளோ என நினைத்துப் பாரி பொய் உரைக்க, “ம்ம்… ஏழு கழுத வயசாகுது இன்னும் என்ன டி உனக்கு அவகூட விளையாட்டு.” உச்சி முடி ஒரு கையில் இருக்க, மறு கையில் விறகு கட்டையைப் பிடித்தவர்
“போவியா போவியா…” எனக் கேட்டுக் கேட்டே அடித்து விளாச, “ஐயோ ஆத்தா விடுத்தா.” முடிந்தமட்டும் அங்கும் இங்கும் அசைந்து அவரது அடியிலிருந்து தப்பிக்கப் போராடினாள், பாரி.
இவளுக்குத் துணையாக ரஞ்சிதமும், “ஐயோ பாவம் அவள விடு ஆத்தா.” என்று கெஞ்ச, “ஏன் டி வீட்டுல ஒத்து வேல பார்க்கிறது இல்ல வெளிய என்ன டி விளையாட்டு?” எனக் கேட்டுக் கேட்டுக் கை வலிக்க வலிக்க அடித்துவிட்டுச் சோர்ந்திட, கைக் கால்களை தடவியபடியே, “இ… இனிமே போகல ஆத்தா.” என்றாள் பாரி கண்ணீருடன்.
“போன அப்பறம் இருக்கு உனக்கு.” மிரட்டிவிட்டு இசக்கி தனது வேலைகளைக் கவனிக்க, “ஏன் டி இப்படி அடிவாங்கிச் சாகுற?” கண்ணீருடன் தமக்கை அவளது காயத்திற்குத் தேங்காய் எண்ணெய் இட, “டன்ட்டைன்…” மெல்லச் சிரித்தபடியே சம்பளப் பணத்தை தூக்கி காட்டினாள், பாரி.
“பன்னிரெண்டு ரூபாயா?” ஆனந்த அதிர்ச்சியில் ரஞ்சிதமோ வாய் பிளக்கு, “உஷ்… ஆத்தாளுக்குத் தெரிய கூடாது.” என மென் குரலில் ரஞ்சிதத்தை அடக்கினாள், பாரி.
“ஆமா ஏது? ஓ… மாம்பழம் கூட ஞானய்யா தோட்டத்துக்குக் கத்தரி பறிக்கப் போறேன்னு சொன்னீயே அங்க கொடுத்ததா?” அதே குரலில் ரஞ்சிதமும் கேட்க, “ம்ம்… ஆமா அக்கா! நான் மொத்தம் எத்தனப் பெட்டி பறிச்சேன் தெரியுமா இருபத்து அஞ்சு பெட்டி.” புன்முறுவலுடன் பாரி தற்பெருமைப் பேசிட, “ஏன் டி இத நீ ஆத்தாகிட்ட சொல்லிருந்தா இவ்வளவு அடி விழுந்திருக்காதுல.” என்றாள், ரஞ்சிதம் ஆற்றாமையுடன்.
“அடியும் விழுந்திருக்காது! அதே நேரம் இந்தக் காசையும் நமக்கு இருந்திருக்காது. ஆத்தா உடனே வாங்கிட்டுப் போயிருக்கும். அது வாங்கிட்டுப் போய்ட்டா சுந்தருக்கு எப்படிப் புது துணி வாங்குறது?” பாரியோ இதழ்ப் பிதுக்கிட, “ஆமா ஆமா நீ சொல்றதும் சரி தான். ஆனா எத்தன நாளைக்கு இந்த விசயத்தை நீ மறச்சி வைப்ப, நாளைக்கே ஊர்காரங்க யாராவது ஆத்தாகிட்ட விசயத்தைச் சொல்லிட்டா என்ன பண்ணுவ?” பதிலுக்கு ரஞ்சிதம் வினா எழுப்ப, “அதுக்குள்ள நாம புது துணி வாங்கிடுவோம்க்கா.” என்றாள் பாரி தோளைக் குழுக்கி.
“ஹாங்… அதுவும் சரி தான். ஆமா எப்ப நாம சந்தைக்குப் போவோம்?” என்ற ரஞ்சிதத்திற்கு, “நாளைக்கு காலையில கிளம்பி போலாம்க்கா.” என்று இவள் பதில் கொடுக்க, மாறி மாறி காதைக் கடிக்கும் சகோதரிகளைப் பார்த்து துணுக்குற்றாள், இசக்கி.
“ஏன் டி எனக்கிட்ட இருந்து எதையாவது
மறைக்கிறீங்களா?” இருவரையும் அளவிட்டபடியே இசக்கி கேட்க, “ச்சே ச்சே… அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆத்தா.” சகோதரிகள் இருவரும் கோரஸாய் மறுத்து, சந்தேகம் வராத வன்னம் விலகி அமர்ந்தனர்.
பேசி வைத்தது போல் அடுத்த நாள் காலை யாருக்கும் தெரியாமல் சந்தைக்குக் கிளம்பியவர்கள் ஒளித்து வைத்த பணத்தைத் தேட, அது எப்போதோ அண்ணாமலையின் கண்ணில் பட்டு, சினிமா தியேட்டர்க் கேஸ் கவுண்டருக்குள் சென்றிருந்தது.
தொடரும்...
கருத்துகள்
கருத்துரையிடுக
“உங்கள் கருத்துகள் எங்களுக்கு முக்கியம். கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.. தாராளமாய் பகிருங்கள் 😊