நெருஞ்சி மலரோ என மோக கானமோ 3
அத்தியாயம் 3
“ஐயோ வேணாத்தான் வேணா.” மிரண்டு பாரி அலற, “ஐயோ ஐயோ! என்ன பண்றீங்க அவள?” சத்தம் கேட்டுப் பற்றி வந்தாள், மாம்பழம்.
பெதும்பைகளின் கதறலையும் அலறலையும் கண்டுக் காணாமல் குருவும் அவனது நண்பர்களும் சீட்டாத்தைத் தொடர்ந்தனர்.
அவர்கள் தொடரத் தொடரப் பாரியின் பதற்றமோ நொடிக்கு நொடி கூடிக்கொண்டே போனது.
“வேணாத்தான்.” இவள் கெஞ்சிட, “பாவம் பாரி அவள வுடுவீங்களா இல்லையா?” மறுபக்கம் மாம்பழம் மிஞ்ச, அவர்களோ தொடர்ந்து ரம்மி விளையாடிக் கொண்டிருந்தனர்.
“டேய்… டேய் அத போடாத?” “ஜோக்கர் அவன்கிட்ட போயிருச்சு போல.” “இந்த வாட்டியும் வெள்ளசாமி தான் ஜெவிக்கப் போறான்.” தொடர்ந்து இப்படியான குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்க, இறுதியாக “ஹாஹா…” எனச் சிரித்தபடியே தனது கையிலிருந்த மொத்த சீட்டையும் கீழே வைத்தான், குருசாமி.
பாரியோ நிம்மதியுடன் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, “அச்சோ!” வெள்ளசாமியோ தலையில் கை வைக்க, “கொடு கொடு மொத்த காசையும் கொடு.” கறாக வசூலித்தான், குரு.
அடுத்து பணையம் வைக்கக் காசு இல்லாதவர்கள் விரக்தியுடன் அங்கிருந்து நகர, “ஹாஹா… நீ வந்த நேரம் எனக்கு இருநூறு ரூபா கிடைச்சிருக்கு.” எனப் பல்லைக் காட்டியவன் ஒரு இரண்டு ருபாயை அவளிடம் நீட்டி,
“இந்தா இது உனக்குத் தான்.” என்றான்.
“வே… வேணாத்தான்.” என்று இவள் மறுக்க மறுக்க அவளது கையில் பணத்தைத் திணித்தவன், “அட சும்மா வச்சுக்கோ.” என வற்புறுத்திட,
தர்ம சங்கடத்துடன் அந்தப் பணத்தைத் தனது கரத்தில் பொதித்துக் கொண்டாள்.
அவனோ அமர்ந்திருந்த துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்ப, “அத்தான்…” சிறிது தயக்கத்துடன் கூவி அழைத்தான், பாரி.
முகத்தை மட்டும் திருப்பி, ‘என்ன?’ என்பது போல் அவன் பார்க்க, “அக்கா… உங்க கிட்ட இதக் கொடுக்கச் சொன்னா.” இழுவையாகச் சொன்னவள் ரஞ்சிதம் கொடுத்த கடிதத்தை அவனிடம் நீட்டினாள்.
“ப்ச்… என்னது இது?” எரிச்சலுடன் அந்தக் கடிதத்தைப் பிரித்தான், அவன்.
எழுதப் படிக்க தெரியாததால் காகிதத்தில் கோயில் படத்தை வரைந்து அனுப்பியிருந்தாள், அவனின் மனையாள்.
படத்தைப் பார்த்ததும் மனைவியின் எண்ணம் அறிந்தவன், “என்ன ஒக்காவுக்கு நான் அவளக் கோயில வந்துப் பார்க்கனுமா? உஹும்… முடியாதுனு சொல்லிடு.” முகத்தில் அடித்தாற் போல் கூறிச் செல்ல, பேசா மடந்தையாய் திகைத்து நின்றாள், பாரி.
“ஏய் என்ன டி இப்படிச் சொல்லிட்டுப் போறாரு?” சிலையான பாரியைத் தட்டினாள், மாம்பழம்.
அதன்பின்பே சிலைக்கு உயிர் வர, “ஹாங்…” அதிர்ந்து மாம்பழத்தைப் பார்த்தவள் விழி கலங்க, “அக்காக்கிட்ட என்ன டி சொல்றது?” பதறி வினவினாள், பாரி.
அதே பதற்றத்துடன் பாரி எருமையை ஓட்டிக் கொண்டு தனது ஓட்டு வீட்டிற்கு வர, செண்பகமும் மல்லிகாவும் திண்ணையில் அமர்ந்து கம்ப கூழ்க் குடித்துக் கொண்டிருக்க, மலையப்பனோ விளக்கெண்ணெய்க்கு ஆமணக்கு முத்துகளை உரசிக் கொண்டிருந்தான்.
ரஞ்சிதமோ சுந்தருக்கு உணவு புகட்டிக் கொண்டிருக்க, எருமை மாடுகளைத் தொழுவத்தில் கட்டிவிட்டு அவர்களிடம் வந்தாள், பாரி.
அவளைக் கண்டதும் “வா வா பாரி, அத்தான பார்த்தியா? நான் கொடுத்ததக் கொடுத்தியா?” ஆர்வத்தில் ரஞ்சிதம் வினவ, “ஹாங் பார்த்தேன்க்கா. நீ கொடுத்ததக் கொடுத்தேன்க்கா.” வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் பதில் கொடுத்தாள், பாரி.
“ஹாங் பதிலுக்கு என்ன சொன்னாரு? என்ன பார்க்க வர்றேன்னு சொன்னாரா? சு… சுந்தரப் பத்தி ஏ… ஏதாவது கேட்டாரா?” ஏக்கத்தில் கேட்கும் ரஞ்சிதத்தைக் காண்கையில் பாரிக்கோ விழி நீர்ப் பெருகியது.
என்ன சொல்வாள்? பார்க்கப் போன தனக்கு நேர்ந்த கஷ்டத்தைச் சொல்வாளா? கொடுத்து அனுப்பிய கடிதத்தை அவன் வாங்கிய பாங்கைச் சொல்வாளா? அனைத்திற்கும் மேல் அவன் கணவனுக்கு மகனைப் பற்றிய நினைப்பே இல்லை என்று சொல்வாளா? என்ன சொல்வாள் பேதை?
இதையெல்லாம் சொன்னால் தமக்கைத் தாங்கிக் கொள்வாளா? யோசித்தவள் பொய் கூற முடிவெடுத்து, “ஹாங் அவருக்கும் உன்ன பார்க்கனும்னு ஆசத் தான்க்கா ஆனா, அத்த திட்டும்னு சொன்னாருக்கா. ஹான் சுந்தரக் கூட கேட்டாரு. அவனுக்கு எதாவது வாங்கிக் கொடுக்கச் சொல்லி இந்தா இந்த இரண்டு ரூபாயக் கொடுத்திருக்காரு பாரு.” கரத்தை விரித்துக் குரு அவளுக்குக் கொடுத்த காசைக் காட்ட, எங்கிருந்து தான் அண்ணாமலை வந்தானோ, சரியாக அந்நேரத்திற்கு அவ்விடம் வந்து பாரியின் கையிலிருந்த காசைப் பக்கெனப் பறித்தான்.
ஏமாற்றம் தாங்காமல், “அண்ணா!” எனப் பாரியும், “டேய்…” என ரஞ்சிதமும் பதற, “ஹப்பா! தர்மதுரைப் படம் பார்க்கக் காசு வேணும்னு நினைச்சேன் கெடச்சிருச்சு.” என்றான், அண்ணாமலை நிம்மதி பெருமூச்சுடன்.
“டேய் அது அத்தான் கொடுத்தது டா? குழந்தைக்காகக் கொடுத்திருக்காரு. கொடு டா.” ரஞ்சிதம் அரட்ட, “டேய் ஒரு தடவ சொன்னா கேட்க மாட்டியா? அத்தான் கொடுத்ததுனு சொல்றாள்ல கொடுடா. ” அரட்டிய மலையப்பனோ ஆமணுக்கு முத்தை அண்ணாமலை மேல் எறிந்திட, “ஆஆஆ…” சுளீரென என வலித்திருக்கும் போல, அலறினான், அண்ணாமலை.
“டேய் ஏன் டா என் மேல தூக்கி எறிஞ்ச? சப்பாணி பயலே.” தோளைத் தடவியபடியே அண்ணாமலைச் சிடுசிடுக்க, “யாரப் பார்த்து டா சப்பாணினு சொன்ன?” பதிலுக்கு மலையப்பனும் சீற, “அப்படித் தான் டா சொல்வேன் சப்பாணி சப்பாணி.” வேண்டுமென்றே வம்பு வளத்தான், அண்ணாமலை.
“என்ன சொன்ன? என்ன சொன்ன?” கோபத்தில் அடிக்கப் பாயந்தான், மலையப்பன்.
“ஐயோ வேணாம் விட்டுடுங்க.” ரஞ்சிதமும் பாரியும் ஒரு பக்கம் பதற, மறுபக்கம் மல்லிகாவும் செண்பகமும் பயத்தில் அழுதுக் கொண்டிருக்க, மலையப்பனும், அண்ணாமலையும் ஒருவரை ஒருவர்த் தாக்கி தரையில் உருண்டு புரண்டனர்.
“ஐயோ விடுங்க விடுங்க.” என்று இவர்க் கெஞ்சக் கெஞ்ச அவர்களோ தொடர்ந்து ஒருவரை ஒருவர்த் தாக்கிக் கொண்டிருக்க, விளக்கமாறு கட்டையுடன் அவ்விடம் வந்தாள், இசக்கி.
“அடிங்க இங்கன என்னங்கடா நடக்குது.” மாறி மாறி அவ்விருவரையும் அவர் அடிக்க, “ஐயோ ஆத்தாஆஆ… விடுத்தா விடு.” தங்களுக்குள் நடக்கும் சண்டையை நிறுத்திவிட்டுச் சகோதரர்கள் இருவரும் ஒருசேர அலறினர்.
“செத்த நேரம் படுக்க முடியலையே அதுக்குள்ள இங்கன என்னடா சண்ட?” கேட்டுக் கேட்டு அவளோ அவ்விருவரையும் துவைத்து எடுக்க, “ஐயோ அத்தா அவங்கள விடுத்தா.” எங்கே உடன்பிறந்தவர்களைத் தனது தாய் அடித்தே கொன்றுவிடுவாளோ என்ற பயத்தில் பெண் குழந்தைகள் நால்வரும் இசக்கியின் காலில் விழுந்து கதறினர்.
அதற்கு இசக்கியோ, “சனியங்க இதுங்க வேற! போங்க டி அங்கன.” விழுந்தவர்களைக் காலால் எட்டி உதைத்தாள்.
அதில் பெண்கள் நால்வரும், “ஓஓஓ…” என்று ஒப்பாரி வைக்க, இசக்கி அடித்த அடியில் அண்ணாமலையின் டவுசர்ப் பாக்கெட் கிழிந்து, பாரியிடம் பறிந்த இரண்டு ருபாய் காசு பொத்தெனக் கீழே விழுந்தது.
தரையில் மின்னும் வெள்ளி காசைப் பார்த்து, “ஏய் எது டா இது?” அவர்களை அடித்து பிய்ந்த விளக்கமாறு கட்டையைச் சட்டெனத் தரையில் போட்டுவிட்டுக் காசை எடுக்க, “ஐயோ ஆத்தா! அது என் காசு, இங்க கொடு.” அண்ணாமலையும் ரஞ்சிதமும் ஒருசேர பதறினர்.
“கொடுக்கலாம் கொடுக்கலாம்.” காசைச் சேலை முந்தியில் முடிந்தபடியே அங்கிருந்து இசங்கி விலகிச் செல்ல, ஏமாற்றத்துடன் ரஞ்சிதமும் அண்ணாமலையும் ஒருவரை ஒருவர்ப் பார்த்துக் கொண்டனர்.
“எல்லாம் ஒன்னால தான்.” ரஞ்சிதம் அண்ணாமலையைத் திட்ட, “எல்லாம் இந்தச் சப்பாணியால தான்.” ஏமாற்றம் கோபமாகிட, மலையப்பனை முறைத்து, நறநறவெனப் பற்களை அறைத்தான்.
விடாகண்டன் கொடாகண்டனாக மலையப்பனும் அண்ணாமலையை முறைக்க, “ஐயோ போதும் இரண்டுபேரும் நிறுத்துக்க! சத்தம் கேட்டுச்சுனா ஆத்தா மறபடியும் எல்லாரையும் அடிக்கும் பேசாம போங்க.” இருவரையும் விலகிவிட்டாள், பாரி.
அவர்களும் அன்னையின் அடிக்குப் பயந்து ஆளுக்கு ஒரு திசைச் செல்ல, “ப்ச்… இப்படியாகிடுச்சே!” வருத்தத்துடன் தரையில் சாய்ந்தமர்ந்தாள், ரஞ்சிதம்
தமக்கையில் வருத்தம் பாரியைத் தாக்கிட, “ஏன்க்கா?” ஆறுதலாய் அவளுக்கு அருகில் அமர்ந்து அவளின் தோளைப் பற்றினாள், பாரி.
சுந்தரோ தவிழ்ந்தபடியே தாயிடம் வர, அவனைத் தூக்கி தோளில் போட்டபடியே, “நம்ம வீட்டுல நாலு எரும மாடு இருக்கு இருந்தும் ஆத்தா நமக்கு ஒரு டம்ளர்ப் பால் கொடுத்திருக்கா? நமக்குக் கூட வேணாம் டி. இதோ இவன் பேரன் தான? இவனுக்காவது ஒரு சங்கு பால் கொடுத்திருக்கா?” என்றவளுக்கோ கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.
பாரியோ கவலையுடன் தமக்கையை ஏறிட்டுப் பார்க்க, “நீயும் பார்க்கிற தான இவன் போட்டுக்க ஏதாவது இருக்கா? எத்தனை நாளைக்கு எல்லாரும் கிழிஞ்சிப்போட்ட துணி இவன் போடுவான். யாராவது இவனுக்கு ஒரு புது துணி வாங்கிக் கொடுக்கிறாங்களா? என் பையனுக்கு ஒரு நல்ல துணி வாங்கிப் போட்டு அழகு பார்க்கனும்ங்கிற ஆசை எனக்கும் இருக்காதா? சரி மத்தவங்க தான் வாங்கித் தர மாட்றாங்க நாமே வாங்கிக்கலாம்னு பார்த்தா பத்து பைசா கையில இல்ல. சரி கிடைக்கிற காசையாவது சேர்த்து வச்சி வாங்கலாம்னு பார்த்தா அதையும் புடுங்கிட்டுப் போய்ட்டாங்க.” ஆதங்கத்துடன் ரஞ்சிதம் பேச, “எவ்வளவு வேணும்க்கா.” பட்டெனக் கேட்டாள், பாரி.
“தெரியல டி. என்ன ஒரு பத்து ரூபா தேவைப் படுமா?” கடைப் பக்கமே போகாதவள் என்பதால் தோராயமாக ரஞ்சிதம் பதிலளிக்க, “அவ்வளவு தான அக்கா நான் எப்படியாவது காசுக்கு ஏற்பாடு பண்றேன்.” தீர்க்கமாகப் பாரி சொல்ல, “எப்படி டி?” புருவம் உயர்த்தினாள், ரஞ்சிதம்.
“ப்ச்… அதெல்லாம் எதுக்கா? நான் பார்த்துக்கிறேன். நீ எதுக்கும் கவலப்படாம இரு.” அன்பாய் கூறிவிட்டுப் பாரி எழ, “சாப்பிட்டியா டி?” பதிலுக்கு ரஞ்சிதமும் அன்பாய் விசாரிக்க, “ஹாங் சாப்பிட்டேன்க்கா இங்க பார்.” வலது கரத்தை ரஞ்சித்தின் முகத்தில் இவள் வைக்க, “ஹ்ம்ஹா… என்ன டி கறி குழம்பு வாடை அடிக்குது. எங்க சாப்பிட்ட?” விழி விரித்து வினவினாள், ரஞ்சிதம்.
“அதுவா மாடன் கோயில போட்டாங்கக்கா. சரி நான் கிளம்புறேன். ஆத்தா கேட்டா மாம்பழம் கூட போயிருக்கேன்னு சொல்லிடு.” என்றவள் ஓலைப்பெட்டியைக் கையில் எடுக்க, “வேலைக்கா போற?” ரஞ்சிதமோ குரலை உயர்த்திட, “உஷ்… எதுவும் பேசாதக்கா. ஆத்தா காதுல விழுந்துச்சு, அவ்வளவு தான் ஒத்த பைசா கூட நமக்குக் கிடைக்காது.” மென் குரலில் இவளோ தமக்கையை அடக்கினாள்.
“அதுக்கு?” மறந்துப்போய்ச் சத்தமாக ஆரம்பித்தவள், பின் நிதானித்து “அதுக்காக நீ வேலைக்குப் போகனுமா?” கிசுகிசுத்தாள், ரஞ்சிதம்.
“சின்ன வேல தான்க்கா, ஞானய்யா தோட்டத்துல… கத்தரிக்கா பறிக்கனுமாம். பெட்டிக்கு எட்டன்னா தர்றத மாம்பழம் சொன்னா. குறைஞ்சது நாலு பெட்டி பறிச்சாலும் இரண்டு ருபா கிடைக்கும். நான் எப்படியும் இருபது பெட்டி பறிச்சிட மாட்டேன்?” தற்பெருமைப் பேசியவள், மாற்று உடையைப் பெட்டியில் போட்டுக் கொண்டு வெளியே வர, இவளுக்காகத் தெரு முனையில் காத்திருந்தாள், மாம்பழம்.
“என்ன டி போலாமா?” என்று அவள் கேட்க, “ம்ம்…” நாலாபுறமும் தலையாட்டிவிட்டு நடந்தாள், பாரி.
இருவரும் கொடிநடையாய் ஞானசபையின் தோட்டத்திற்கு வர, இவர்களைப் போலவே பலர் அவ்விடம் குழும்பியிருந்தனர்.
“ஏத்தா பாரி! உன் ஆத்தா எங்க?” சின்னதாய் கிழவி இவ்வாறு விசாரிக்க, “ஆத்தா வீட்டுல படுத்திருக்கு.” பதிலளித்தாள், பாரி.
“ஆமா… மாசமா இருந்தாளே பிள்ளப் பெத்துட்டாளா?”
“செத்துப்போச்சு கிழவி.”
“அட…! என்ன பிள்ளப் பெத்தாளாம்?” சின்னதாயோ தாடையில் கை வைத்து வினவ, “அது தெரியல கிழவி.” என்று இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கணக்குப் பிள்ளை நாகராஜனோ, “என்ன எல்லோரும் இங்கன நின்னு கதை அடிக்கிறீங்க. போங்க போய் வேலைய பாருங்க.” விரட்டினான்.
“வந்துட்டான் கழுதை மூக்கு வெர்த்த மாதிரி… அட வாங்க டி வேலைய பார்ப்போம்.” சின்னதாய் அனைவரும் கூப்பிட, அவர்களோடு அவர்களாகப் பாரியும் மாம்பழமும் தோட்டத்திற்குள் நுழைந்தனர்.
சற்று பெருத்த தண்டில் சிறு சிறு முற்கள் இருக்க, கவனமாய் பறித்து இடுப்பில் இருந்த சிறு கூடையில் போட்டு, பின் அவளுக்கென ஒதுக்கப்பட்ட பெரிய கூடையில் போட்டு நிரப்ப, நேரமோ பிற்பகலைத் தாண்டியது.
“ஐயோ பசிக்குது டி.” மாம்பழமோ வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிணுங்க, “ப்ச்… அட இரு டி காச வாங்கிட்டு வீட்டுக்குப் போய் சாப்பிடலாம். இப்ப வா குளிப்போம். கை எல்லாம் அரிக்குது.” கத்தரி செடியின் பால் பட்டு அரிப்பெடுக்க மணிகட்டைச் சொரிந்த படியே பதில் கொடுத்தாள், பாரி.
“ம்ம்… வா.” என்ற மாம்பழமும் பாவாடையை மார்பு வரைத் தூக்கி கட்டிக் கொண்டு கிணற்றுக் குளித்தனர்.
“ஹப்பா சில்லுனு இருக்கு.” நீருக்கு வெளியே முகம் காட்டி பாரி அங்கலாய்க்க, “ஏன் டி நீ ஒரு பத்து பெட்டி எடுத்திருப்பியா?” கிணற்று நீரை அள்ளி குடித்தபடியே வினவினாள், மாம்பழம்.
“உஹும் பத்தா? மொத்தம் இருப்பத்து அஞ்சு பெட்டி பொறுக்கினேன்.” பாரியோ மொத்த விரலை விரித்துக்காட்ட, “ஆஆஅப்பா பன்னிரெண்டு ரூபா கிடைக்குமா?” தோராயமாய் கேட்டு மாம்பழமோ புருவம் உயர்த்த, “பன்னிரெண்டு ரூபாய் ஐம்பது பைசாவும் கெடக்கும் டி.” சொல்லும் போதே பாரியின் முகத்தில் பல்ப் எரிந்தது.
“ம்ம்ம்…” மெச்சுதலுடம் மாம்பழம் தலையாட்ட, “முதலாளி வந்துட்டாரு. சீக்கிரம் உடுப்பு உடுத்திட்டு வாங்க டி.” கிணற்று வெளியே இருந்தவாறே கட்டளையிட்டாள், சின்னதாய்.
“இந்தா வர்றோம் கிழவி.” எரிச்சலுடன் பதில் கொடுத்த பெண்களோ விறுவிறுவெனக் குளித்துவிட்டுத் தென்னை மரத்திற்குப் பின்னால் உடை மாற்றிக் கொண்டு களத்து மேட்டிற்கு வர, சம்பளப் பணத்தை எண்ணி எண்ணி வேலையாட்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தான், மார்கஸ் அமர்.
அவனைப் பார்த்ததும் பாரியின் முகமோ வெறுப்பில் சுருங்கிட, “இவனா? இந்தக் குரங்கு எதுக்கு இங்க வந்தான்?” மாம்பழத்தின் காதில் சிடுசிடுத்தபடியே இவள் தனது ஓலைப் பெட்டியைத் தேட, அவள் ஓலைப் பெட்டி மட்டும் மாயமாய் மறைந்துவிட்டது.
தொடரும்....
கருத்துகள்
கருத்துரையிடுக
“உங்கள் கருத்துகள் எங்களுக்கு முக்கியம். கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.. தாராளமாய் பகிருங்கள் 😊