Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

தீ மீது வீணை 3

அத்தியாயம் 3


"ஆ…" என்றலறியவளுக்கோ பயத்தில் கண்ணீர்க் கூட வெளிவர மறுத்தது.


உச்சக்கட்ட அதிர்ச்சியில் உடலோ கிடுகிடுவென நடுங்க, இதயமோ ஒரு நிமிடம் நின்று பின் படபடத்திட, கண்கள் இருண்டு இவள் மயங்கிச் சரியவிருந்த நேரம்…


இவளை மோதுவது போல அதீத வேகத்தில் வந்த அந்தக் கார், ஓரடி தூரத்தில் சட்டென நிறுத்தப்பட்டது.


திடீர் அதிர்வில் சமநிலை இழந்த ரீனா, கன்னம் இடிக்கப் பொத்தென கார்ப் பானட்டில் விழுந்தாள்.


அதன்பின் என்ன நடந்தது என்பதை அறியும் நிலையில் அவள் இல்லை.


மொத்தமாய் இருள் சூழ்ந்த உணர்வு… ஆனால் மனம் மட்டும் தனது குடும்பத்துடன் அவள் செலவிட்ட நிமிடங்களை நினைவு கூர்ந்து அசைப்போட்டது.


தாய் தந்தையை விட்டு பிரிய மனமின்றி அழுதபடியே முதன்முதலாகப் பள்ளி சென்ற அந்த நொடி… முதல் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்ததற்காக அப்பா வாங்கித் தந்த பார்பி பொம்மை… பூப்படைந்த அன்று நடந்த ஜெபக் கூட்டம்… என அனைத்தும் மனக் கண்முன்னால் நிழலாடின.


இறுதியாக விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற கனவில் வான்வெளி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தது வரை அனைத்தையும் நினைவுகளாக அசைப்போட்டபடி வந்தவளை, திடீரென யாரோ அவளின் முகத்தில் நீர்த் தெளித்து எழுப்பினர்.


குளிர்ந்த நீர்ப் பட்டவுடன் மயக்கம் களைந்திட, "ஹாங்…" என்று அதிர்ந்து கண் விழித்தாள், ரீனா.


தரையில் கிடந்தவாறே சுற்றிலும் இவள் தனது பார்வையை ஓட விட, அவளைத் தாக்கிய அதே அடியாட்கள் தான் இப்போதும் அவளுக்கு அருகில் நின்றிருந்தனர்.


"நா… நான் ஒன்னும் பண்ணல… ப்ளீஸ்… ப்ளீஸ்… என்ன விட்டுடுங்க…" பயத்தில் அலறியபடியே ஏதேச்சையாகத் தன்னை நோக்கினாள், ரீனா.


முன்பு அணிந்திருந்த மனநல நோயாளி உடைக்குப் பதிலாக, புதிதாக வேறு உடை அணிவிக்கப்பட்டிருந்தது.


காயங்களில் கூட மருந்திடப்பட்டிருக்க, ஒரு நிமிடம் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியாமல் விழி பிதுங்கினாள்.


'இவங்க எல்லாம் யாரு? எதுக்காக என்ன கட்டினாங்க? எதுக்காக என்ன நடுரோட்டுல நிற்க வைத்தாங்க? எதுக்காக என் மேல காரை ஏத்த பார்த்தாங்க? இப்ப எதுக்காக எனக்குப் புது டிரஸ்ஸெல்லாம் போட்டு விட்டிருக்காங்க?' குழம்பித் தவித்தவளுக்கு, உண்மையிலேயே தனக்குப் பைத்தியம் தான் பிடித்துவிட்டதோ என்ற அச்சம் வேறு.


நிச்சயமற்ற அடுத்த நொடியை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்று புரியாமல் இவள் அவர்களைப் பார்க்க, அவர்களோ அவள் கண்முன்னாடியே அவளின் குடும்பப் புகைப்படத்தைக் கீழே போட்டு உடைத்தனர்.


புகைப்படத்தின் மேலிருந்த கண்ணாடி சில்லுசில்லாக உடைவதைக் கண்டு இதயம் பதைபதைத்தது ரீனாவுக்கு.


கண்ணீரோ சாரைச் சாரையாய் வரிசைக் கட்டி நிற்க, "நோ…" எனப் பதறி அவள் அலற, உடைத்தவனோ அந்தப் புகைப்படத்தைத் தனது காலால் உதைத்து அவளுக்குப் பக்கவாட்டில் தள்ளினான்.


தள்ளிய வேகத்தில் வழுவி நழுவி செல்லும் அப்புகைப்படத்தின் பின்னால் மிரட்சியுடன் இவள் தனது விழிகளை அனுப்ப, அதுவோ நீள் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவனின் காலில் மோதி நின்றது.


நின்ற இடத்தில் ரீனாவின் பார்வையும் நிற்க, கண்ணாடி துண்டுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் புகைப்படத்தை மட்டும் தனது கையில் எடுத்தான், அவன்.


கையில் எடுத்தவன், சிகிரெட் லைட்டரால் அதைக் கொழுத்திவிட்டு அதே நெருப்பால் தனது சிகிரெட்டையும் பற்ற வைக்க, கலங்கிய விழிகள் கலங்கியபடியே இருக்க, மெல்ல இதழ் விரிய, "மைக்கேல்…" என வாய் அசைத்தாள், ரீனா.


அன்பான அக்குடும்பத்தின் புகைப்படத்தைத் திருப்தியுடன் உண்ட நெருப்போ, செரிமானம் செய்யும் பொருட்டு திகுதிகுவெனக் கொழுந்துவிட்டு எறிந்திட, அதன் வெட்பத்தை அனுபவித்தபடியே ஒரு கையில் சிகிரெட்டையும் மறு கையில் மது கோப்பையும் ஏந்தியிருந்தான், மைக்கேல்.


செம்மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும் நெருப்பும் அவன் அமர்ந்திருந்த சிம்மாசனம் போன்ற இருக்கையும், அவளுக்குப் பைபிளில் அவள் வாசித்த பிசாசின் தோற்றத்தை ஞாபகப்படுத்த, "மைக்கேல்… மைக்கேலா இது?" நம்பிக்கையின்றி ஒன்று நான்கு முறை விழிகளைக் கசக்கி அவனைப் பார்த்தாள், ரீனா.


அதே அலையலையான கேசம், அளவான செவ்வக நெற்றி, சீராக வளைந்த அடர்ப் புருவங்கள், நேராக உயர்ந்த நாசி, அழுத்தமான உதடுகள், யாரையும் சுலபத்தில் சுண்டி இழுக்கும் கவர்ச்சியான முக அமைப்பு அனைத்தும் தனக்கு முன்னால் இருப்பவன் மைக்கேல் தான் என அடித்துக் கூறினாலும், கையில் உள்ள சிகிரெட்டும் மதுவும் இவன் அவன் இல்லை எனச் சத்தியம் செய்தன.


அவள் அறிந்த மைக்கேல் சிகிரெட்டைக் கையிலும் தொடாதவன், மதுவின் வாடையைக் கூட மனதால் வெறுப்பவன்.


'அவனா? அவனா? தனக்கு முன்னால் அமர்ந்திருப்பது?' நம்பாமல் விழி விரித்தவளின் கண் முன்னால் கல்லூரியின் முதல் நாள் வந்து நின்றது.


ஏதோ சடங்கு போல் எல்லாக் கல்லூரியிலும் நடக்கும் ராகிங் தான் அவள் சேர்ந்த அந்தக் கல்லூரியிலும் நடந்து கொண்டிருந்தது.


சீனியர் மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கல்லூரி வளாகத்திற்குள் நுழையும் புதிய மாணவர்களைக் கேலி செய்துக் கொண்டிருந்தனர்.


"அண்ணா அண்ணா விட்டுடுங்கண்ணா ப்ளீஸ்ண்ணா!" எனப் பயத்தில் நடுங்கியபடியே கெஞ்சினான், ஜூனியர் மாணவன்.


அவன் கெஞ்சக் கெஞ்ச, "என்ன விட்டுடுங்கண்ணா? இன்னும் நாங்க ஆரம்பிக்கவே இல்ல." சீனியர் மாணவர்கள் சிலரோ அவனது வாயில் மதுவை ஊற்ற முயன்றனர்.


"ஹேய் அப்படித் தான் விடாத!" மற்றவர்களோ அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஆரவாரம் செய்திட, அவர்களின் செயலைக் கண்டு கோபம் கொண்டாள், ரீனா.


இறைவனுக்குப் பயந்து வாழும் பாதிரியாரின் மகளுக்கு அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் பாவமாகவே பட்டது.


'குடிப்பதே பாவம் இதில் அடுத்தவரைக் குடிக்க சொல்லி வற்புறுத்துவது மகா பாவம்.' என நினைத்தவள் அவர்களைக் கண்டிக்கும் பொருட்டு விரைந்துச் செல்ல, அவளுக்கு முன் அவர்களை அடித்து தண்டித்திருந்தான், மைக்கேல்.


"யூ…" கோபத்தில் பற்களை அரைத்தவன் அடித்த அடியில், அவர்களின் வாயோ கிழிந்து இதழோரம் இரத்தம் கசிந்தது.


"ஐய்யயோ மைக்கேல் சீனியரா?" அதுவரைக் கெத்துக் காட்டி சீனியர் மாணவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர்.


கால்களோ கிடுகிடுவென நடுங்கிட, "சா… சாரி சாரி சீனியர்… நீங்க காலேஜ் விட்டு போயிட்டத நி… நினைச்சுட்டோம்." அரண்டவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் தெரித்து ஓட, "எங்க டா போறீங்க? பிளாடி ராஸ்கல்ஸ்… மைக்கேல் காலேஜ் விட்டு போயிட்டான், இனிமே நாம நம்ம இஷ்டத்துக்கு ஆடலாம்னு நினைச்சிங்களா டா ஹாங்? சீனியரா போனவன் புரோபஸரா வந்திருக்கேன். இனி காம்பஸ்ல எங்கையாவது பாட்டிலையோ சிகிரெட் பாக்கெட்டையோ பார்த்தேன்… ஒருத்தனையும் விட மாட்டேன் உரிச்சு எடுத்திடுவேன்." என்றான் மிரட்டலாக.


கர்ஜனைப் போல் ஓங்கி ஒலித்த அவனது குரலில் அந்தக் கல்லூரி வளாகமே சுத்தமானது.


அன்று கோலாகலமாகத் திறக்கப்பட்ட மது கடைக் கூட சத்தமின்றி மூடி செல்லவதைக் கண்டவள், 'ம்ம் பரவாயில்லையே இந்தக் காலத்துல இப்படியொரு ஆளா?' என மெச்சிக் கொண்டதை இன்று நினைத்துக் கண்ணீர் சிந்தினாள், ரீனா.


நான்கு வருடங்கள்… மொத்தமாக நான்கு வருடங்கள், சிறந்த ஆசிரியருக்கு இலக்கணமாக, ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த மைக்கேலா இது? ஏனோ நம்ப முடியவில்லை அவளுக்கு.


ஆசிரியர் மாணவியைக் காதலிப்பது மற்றவர்களுக்குச் சரியான முன் உதாரணமாக இருக்காது எனக் கருதி, அவள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரைக் காத்திருந்து, பட்டம் பெற்ற வேளையில், "ரீனா… ஐ திங்க் ஐ லவ் யூ. ஐ வாண்ட் டூ மேரி யூ. உனக்கு… உனக்கும் என்ன பிடிக்கும்னா ப்ளீஸ் சொல்லு! நா.. நான் உங்க டாடிக்கிட்ட வந்து பொண்ணு கேட்கிறேன்." தயங்கித் தயங்கி அனுமதி வேண்டியவனா இன்று தனக்கு முன்னால் பேயென அமர்ந்திருப்பது? அதிர்ச்சியில் இருந்தாள், ரீனா.


ஆனால் அவனோ இறுகிய முகத்துடன் சிகிரெட்டைப் புகைத்தபடியே, "ஹாப்பி பெர்த்டே டூ யூ…" எனப் பாட்டு பாடி கைத் தட்ட, அவனோடு சேர்த்து அவனது அடியாட்களும் அறை அதிர, காது சவ்வு கிழிய, சத்தமாகப் பாடி கைத் தட்ட ஆரம்பித்தனர்.


'பெர்த்டேவா எனக்கா?' நடந்த நிகழ்வுகளால் தனது பெயர்க் கூட மறந்து இருந்தவளுக்கு பிறந்தநாள் மட்டும் எப்படி ஞாபகத்தில் இருக்கும்?


மிரண்டு விழித்தாள்.


சமீப காலமாகப் பல சோதனைகளைப் பார்த்து நொந்து போயிருந்தவளுக்குத் தனது பிறந்த நாள் இது தானா எனச் சோதித்துப் பார்க்கும் எண்ணம் கூட ஏனோ வரவில்லை.


'இன்னைக்கு தான் என் பிறந்தநாள் போல.' உடனே ஒத்துக் கொண்டவள், 'பரவாயில்லை மைக்கேலுக்கு இன்னும் என் பர்த்டே ஞாபகத்துல இருக்கு." என நினைத்துச் சிலாகித்து கொண்டவளுக்கு முன் பெரிய கேக் ஒன்று கொண்டு வரப்பட்டது.


அவளுக்குப் பிடித்த அதே ஆரஞ்ச் கேக் தான்.


தங்க நிறத்தில் ஜொலிக்கும் கேக்கில் மெழுகுவர்த்தியைச் சொருகி சிகிரெட் லைட்டரால் அதன் திரியைப் பற்ற வைத்தான், மைக்கேல்.


அதுவரை கலங்கிய விழிகளுடன் அவனைப் பார்த்தவள், அவன் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும், விழி மூடி இறைவனை வேண்டத் துவங்கினாள்.


"ஜீசஸ் ப்ளீஸ்… மைக்கேலோட கோபம் குறையணும். மாம், டாட், சார்லஸ் எல்லோரையும் நான் மறுபடியும் மீட் பண்ணனும். நாங்க எல்லோரும் முன்ன மாதிரியே சந்தோஷமா வாழணும். ப்ளீஸ் ஜீசஸ் நீங்கதான், என்னையும் என் பேமிலியையும் மைக்கேல்கிட்ட இருந்து சேவ் பண்ணனும்." கண்ணீர் மல்க, மனமுருகி வேண்டியவளின் காதில், "லொள் லொள்…" என நாய் குறைக்கும் சத்தம்.


அந்தச் சத்தத்தில் இவள் அதிர்ந்து கண் விழிக்க, 'உன்னை விட இந்த நாய் தான் முக்கியம்' என்பது போல் ஆரஞ்சு கேக்கை பதமாய் வெட்டி அவளுக்கு அருகில் அமர்த்தி வைக்கப்பட்ட சொறி பிடித்த நாய்க்கு ஊட்டினான், மைக்கேல்.


'இந்த நாயும் நானும் ஒண்ணா?' சுய கௌரவம் கூச்சலிட, "மைக்கேல் என்ன இது?" சத்தமிட்டே ரீனா கத்த, அவனது அடியாட்களோ அவளது இரு கரத்தையும் பற்றி அவனுக்கு முன் மண்டியிட வைத்தனர்.


"என்ன விடு விடு…" என்று இவள் கூச்சலிட, "என்னடி திமிரா?" ஒருவன் அவளது தலையைத் தட்ட, மற்றவன் அவளின் புஜத்தை நறுக்கெனக் கிள்ளி வைத்தான்.


வலி தாங்க முடியாமல் இவள், "ஆஆஆ…" என்று அலற, "இன்னும் உனக்குத் திமிரு குறையல இல்ல." ஓங்கி அவளின் வயிற்றில் மிதித்தான், மைக்கேல்.


அவன் மிதித்த வேகத்தில், "ஐயோ அம்மா…" என்ற அலறலுடன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டாள், ரீனா.


பெண்ணின் கண்ணீரைக் கண்டு பேயும் இறங்குமாம். ஆனால் அவன்? கிஞ்சித்தும் இறங்கவில்லை.


"உன்ன பார்க்கப் பார்க்க ஏதோ நெருப்பு பட்ட மாதிரி உடம்பெல்லாம் பத்தி எறியுது டி." கோபத்தில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன், "உன்ன என்ன பண்ணா என் கொதிப்பு அடங்கும்? ம்ம்… சொல்லு டி சொல்லு. உன்ன என்ன பண்ணா என் கொதிப்பு அடங்கும்?" எனக் கேட்டு அவளின் கூந்தலில் முடியைக் கொத்தாகப் பிடித்தான்.


"ஐயோ ப்ளீஸ் மைக்கேல்… என்ன விடு… நீ… நீ நினைக்கிற மாதிரி நா… நான் எந்தத் தப்பும் பண்ணல. ப்ளீஸ்… ப்ளீஸ்… என்ன நம்பு." பதிலுக்கு இவள் கெஞ்ச, "பொய் பொய் சொல்லாத! பிளான் போட்டது நீ, எக்ஸிகியூட் பண்ணது உன் அப்பன். இதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? ம்ம்… சொல்லு டி எத்தனை நாளா நீயும் உன் குடும்பமும் என்ன இந்த நிலைமைக்குக் கொண்டு வரணும்னு நினைச்சீங்க? ஹாங் சொல்லு. ம்ம் சொல்லு டி." குமுறினான்.


"இல்ல… இல்ல மைக்கேல்… உன்னோட இந்த நிலைமைக்கு நா… நான் காரணம் இல்ல. ப்ளீஸ் என்ன நம்பு." என்று இவள் கெஞ்சக் கெஞ்ச, "இவ்வளவு நடந்த பிறகும் உன் ஆஸ்கார் நடிப்பை விட உனக்கு மனசில்லைல்ல. ம்ம்ம்… ரைட்! உன் ஆசைய நான் நிறைவேத்துறேன். உனக்கு ஆம்பிளைங்க உடம்புனா ரொம்ப பிடிக்கும்ல. உன் பொறந்த நாள் அதுவுமா நான் அதையே உனக்கு கிப்ட் பண்றேன்." என்றவன் கைத் தட்ட, மூன்று நான்கு தடியார்கள் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றனர்.


"ஆறு மாசமா அந்த மெண்டல் ஹாஸ்பிட்டல்ல இருந்து நீ ரொம்பவே காய்ஞ்சு போயிருப்ப, ம்ம்ம்… இந்தா இது என்னோட பர்த்டே ட்ரீட்." எனக் கூறி அவனோ அந்த அறையை விட்டு வெளியேற, அவர்களோ அவளை அடையும் நோக்கத்துடன் அவளுக்கு அருகில் வர, "மைக்கேல் மைக்கேல் ப்ளீஸ் ப்ளீஸ்… எனக்கு இந்தக் கொடுமைய மட்டும் செய்யாத! ப்ளீஸ் நா… நான் சொல்றதக் கேளு. ப்ளீஸ்…" மிரண்டு அலறியபடியே தப்பிக்கும் வழியைத் தேடினாள், ரீனா.

தொடரும்..
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்