நெருஞ்சி மலரோ என மோக கானமோ 2
அத்தியாயம் 2
“ஆஆஆஅம்மா…” வலியில் துடித்தவள் அடித்தவன் யார் எனக் குனிந்துப் பார்க்க, ஆறரை அடி விடலை.
வயது தோராயமாகப் பத்தொன்பது இருக்கும். அரும்பு மீசை இதழுக்கு மேல் அப்போது தான் அரும்பி இருந்தது.
கேசம் காற்றில் குதிக்க, படர் நெற்றிச் சுருங்கி இருக்க, மாநிறம் கோபத்தில் சிவந்திட, “இறங்கு டி கீழ.” அவளின் வாழைத் தண்டு கெண்டைக் காலில் ஓங்கி ஒரு அடிப்போட்டான், மார்கஸ் அமர்.
ஆம் அந்த விடலைப் பெயர் அது தான். ஊராட்சி தலைவர் ஞானசபையின் இளைய மகன். ராஜ வீட்டு கன்னுக்குட்டி.
கட்டம் போட்ட அரைக் கைக் காட்டன் சட்டையின் முதல் இரண்டு பித்தான்கள் திறந்திருக்க, அதற்குள் அழகாய் மின்னியது சிலுவைப் போட்ட தங்க சங்கிலி.
அதனோட அவனது தங்க நிற கைக் கடிகாரம் போட்டிப்போட, ஒரு நிமிடம் திகைத்துப் போய் அவனைப் பார்த்தவள், அடித்த இடத்தைத் தடவிய படியே கிளையிலிருந்து கீழே குதித்தாள்.
அவளுடனே அவள் மடியில் கட்டிய கொய்யாக்களும் கீழே குதிக்க, “அவ்வ்… எம்முட்டுப் பழம்.” வாயிலும் வயிற்றிலும் அடித்தவன் அவளது காதை நறுக்கெனப் பிடித்து திருக்கியபடியே, “இதெல்லாம் என்ன உன் புருசன் வீட்டு சொத்தா டி! நீ பாட்டுக்கு தூக்கிட்டு போற?” அரட்டிட, “ஆஆஆஆ விடு டா என்ன!” வலி தாங்க முடியாமல் அலறினாள், பாரி.
“டா வா? கொன்னு புடுவேன். கொன்னு… யார்கிட்ட? அடுத்த வேளச் சொத்துக்கு வழி இல்லாத சிறுக்கி நீ. நீ என்ன டா னு கூப்பிடுறீயா? ஓசி சோறு ஓசி சோறு.” கொத்தாக அவளது கூத்தலைப் பிடித்து அமர்க் குலுக்க, “ஆஆ… விடு விடு டா தற்குறி.” லவமாக முகத்தைத் திருப்பி அவனது கரத்தை நறுக்கெனக் கடித்தாள், இவள்.
“ஆஆஆ…” இப்போது அலறுவது அவன் முறையானது.
அலறியபடியே அவளது கூந்தலில் இருந்து அமரோ தனது கரத்தை எடுக்க, “ஹாங் வேணும் வேணும். நல்லா வேணும்.” விரலை ஆட்டி கேலி செய்தாள், பாரிஜாதம்.
“ஏய் என்ன பார்த்தா சிரிக்கிற? இரு டி உன்ன…” அமரோ அடிக்கப் பாய, லவகமாய் அவனிடமிருந்து தப்பித்தவள், “வவ்வவ…” என வலிப்புக் காட்டியபடியே ஓட, “அடிங்க ஓசிச்சோறுக்கு எகத்தாளத்த பாரு.” அங்கலாய்த்தபடியே கீழே விழுந்த கொய்யா பழங்களைப் பொறுக்கத் துவங்கினான், அமர்.
பாரியோ தூரமாக நின்று, “போ டா தற்குறி.” எனக் கூறி இடுப்பை வெட்டிவிட்டு ஓட, “என்ன டி சொன்ன?” கோபத்தில் விரட்டினான், அமர்.
“ஏய் ஏய்… இரண்டு பேரும் எங்க ஓடுறீங்க?” மாட்டு வண்டியில் வந்த சிலர் அரட்ட, “பாத்தியா டி காலம் எப்படிக் கெட்டுப் போயிடுச்சுனு.” பாட்டிகள் சிலர் அங்கலாய்த்திட, அவர்களின் அரட்டலையும் அங்கலாய்பையும் கேட்கக் கேட்க அமரின் கோபம் இரட்டிப்பானது.
“ஏய் ஓடாத டி…” கல்லைத் தூக்கி அவன் எறிய, சாலையில் சிவனேன்னு சென்றுக் கொண்டிருந்த பால் விற்கும் பாட்டியின் பானையைப் பதம் பார்க்க, “ஐயோ…” என்று பாட்டி அலற, இரண்டும் விடு சூட் என ஆளுக்கு ஒரு திசையில் மறைந்துக் கொண்டனர்.
மூணு லிட்டர்ப் பால், மண் தரையில் கொட்டி வீணானதைக் கண்ட கிழவியோ நடு ரோட்டு என்றும் பாராமல், “ஐயோ போச்சே போச்சே…” என ஒப்பாரி வைக்க, எங்கிருந்து தான் அத்தனைப் பேரும் கூடினார்களோ மொத்த ஊரும் அவ்விடத்தில் கூடிவிட, “என்ன பிரச்சன இங்க?” கேட்டபடியே கூடத்திற்குள் நுழைந்தார், அமரின் அப்பா ஞானசபை.
“வாய்யா ஞானோம் வா… வா… நீ ஊருக்கெல்லாம் படி அளக்குற, உன் மவன் என் சொத்த நாசமாக்குறான்.” மூக்கைச் சிந்தி கண்டாங்கி புடவையில் துடைத்தாள், கிழவி.
“யார சொல்ற கிழவி? டேவிட் செல்வனையா சொல்ற?” புருவம் இடுக்கி அவர் விசாரிக்க, “ஐய்யோ! செல்வம் தம்பி பேரச் சொன்னா என் நாக்கு அழுகிப்போவும். அது தங்கம். நான் அத சொல்வேனா? நான் சிறுசு அமர சொல்றேன்.” கிழவியோ விளக்கம் கொடுக்க, “சரி கிழவி நீ எழுந்துரு. நான் அந்தக் கழுதைய பார்த்துக்கிறேன்.” வாக்கு கொடுத்தவர்க் கிழவியைத் தூக்கியும் விட்டார்.
“ஆமா ஐயா! சிறுசு கொஞ்சம் தெனாவெட்டா தான் திரியுது.” இது தான் சாக்கென்று ஊர்காரர்கள் வேறு ஒன்னுக்கு நாலு போட்டு கொடுக்க, “ம்ம்… போங்க நான் அவனக் கவனிச்சிக்கிறேன்.” பதில் கொடுத்து அவர்களைக் களைத்தார்.
அவர்களும் ஆளுக்கு ஒரு திசையில் களைந்துச் செல்ல, அருகில் நின்றிருந்த காவக்காரன் முனியாண்டியைப் பார்த்து, “எங்களே அவன்?” என்றார்க் கோபமாக.
பதிலுக்கு அவனோ, “எதுக்குய்யா தம்பிய தேடுறீங்க? பாவம் அது விளையாட்டு பிள்ள?” தலையைச் சொறிந்தபடியே பேச, தீயாய் அவனை முறைத்து, “ஏலே எங்கலே இருக்க?” வானம் அதிரக் கத்தினார், ஞானசபை.
அவர்க் கத்தவும் தென்னை மரத்திற்குப் பின்னாலிருந்து அமர் வெளிபட, “என்ன டே இது? ஹாங்… என் பேரக் கெடுக்கவே பொறந்திருக்கீயா?” பற்களை அரைத்தவர், அவனது காதைப் பிடித்து தன்பக்கம் இழுத்தார்.
“அப்பா அப்பா… நா… நான்.” பயத்தில் அமரின் கால்களோ வெடவெடத்தன.
உடல் கூட குப்பென வியர்த்துவிட, “படிச்சு மார்க் வாங்க துப்பில்ல. நாலு வருசமா ஒன்பதாம் க்ளாஸ்லேயே உட்காத்து இருக்கியே உனக்கு வெட்கமா இல்ல.” காது மடல் சிவக்கும் வன்னம் திருகினார், ஞானசபை.
பதிலுக்கு, “ஆஆஆ…” என்று வலியில் இவன் அலற, தூரத்திலிருந்து அதை ரசித்துப் பார்த்தாள், பாரி.
“வாங்கு டா வாங்கு.” சந்தோசத்தில் பாரியோ குத்தாட்டம் போட, அவளை முறைத்தபடியே, “அப்பா அப்பா நா… நான் இல்ல. நான் இல்ல.” என்றலறினான், அமர்.
“என்னடா? என்ன? அம்மா இல்லாத பையனு கொஞ்சம் செல்லம் கொடுத்தா ரொம்ப தான் போற நீ.” காவக்காரன் தடியைப் புடுங்கி அவரோ இவனை வெளுத்துவிட, “இரு டி இரு உன்ன நான் அப்பறம் கவனிச்சிக்கிறேன்.” மனதிற்குள் பாரியைக் கருவினான், அமர்.
பாரியோ வெற்றிக் களிப்பில் தனது மாட்டைத் தேடி சுடலை மாட சுவாமி கோயிலுக்குப் போக, அவைகளோ அமைதியாக அங்கிருக்கும் புற்களை மேய்ந்துக் கொண்டிருந்தன.
ஆலமரத்தடியில் படுத்திருந்த மாம்பழமோ கொட்டாவி விட்டபடியே எழுந்தமர்ந்தாள்.
“என்னடி நல்லா தூங்குனீயா?” பாரியோ கேலியாய் விசாரிக்க, “பசிக்குது டி.” வயிற்றைத் தடவினாள், மாம்பழம்.
“ம்ம்… எனக்கும் தான் பசிக்குது, என்ன பண்ண?” பதிலுக்கு இவளும் வயிற்றைத் தடவினாள்.
“ஆமா உங்க வீட்டுல இன்னைக்கு என்ன டி சாப்பாடு?” மாம்பழம் கேட்க, “என்னத்த பெரிசா இருந்திட போவுது? பழைய கஞ்சி தான் அதுவும் இருக்கோ இல்லையோ? ஆமா உங்க வீட்டுல?” பதிலுக்கு இவளும் வினவினாள்.
“அட போ டி! என் ஆத்தா மட்டும் என்னத்த வச்சிருக்கப் போற? முந்தாநேத்து வச்சக் கேப்ப களி இருக்கும்.” மாம்பழமோ பஞ்சப்பாட்டுப் பாட, “இப்ப என்ன தான் டி செய்றது?” பாரியோ இதழைப் பிதுக்கினாள்.
இருவரும் பசியில் வாடிய முகத்தோடு ஒருவரை ஒருவர்ப் பார்த்துக் கொள்ள, சுவாமி கோயில் மணியோ அந்நேரம் பார்த்து “டிக் டாக்.” என ஒலித்தது.
அந்தச் சத்தத்தில் இருவரது முகத்திலும் தௌசன் வாட்ஸ் பல்ப் எறிய, “பாரிஇஇஇ…” அளவுக்கு மீறி சந்தோசத்தில் பல்லைக் காட்டினாள், மாம்பழம்.
இரண்டும் திருட்டு பார்வையுடன் பதுங்கி பதுங்கி கோயிலுக்குள் செல்ல, அங்கே சிலர்ச் சுவாமிக்குப் படையல் போட்டுக் கொண்டிருந்தனர்.
“சுடல மாடா என்னய்யா இது? இப்படிப் பண்ணிட்ட? பாவம் பிரதமரு தமிழ் நாட்டுக்குள்ள வந்தவர இப்படிக் கொன்னுப்புட்டியே ஐயா. பாவம் இனி நாட்டு மக்க என்ன செய்யப் போறாங்க?” பெரியவர் ஒருவர் நாட்டு நடப்புகளைக் கூறி சுடலை மாடனுடன் வாக்குவாதம் செய்ய, “அதான் சாமிக்கிட்ட சொல்லிட்டீல. சாமி பாத்துக்கும்.” அந்தப் பெரியவரின் மனைவி அரட்ட, இருவரும் கண்ணை மூடி கடவுளை வேண்டினர்.
அந்தச் சிங்கிள் கேப்பைப் பயன்படுத்தி இழையோட படையல் சோற்றைப் பாரியும் மாம்பழமும் அட்டைய போட, கண் விழித்துப் பார்த்த பெரியவரின் மனைவியோ, “ஏங்க படையலைச் சாமி ஏத்துக்குச்சிங்க.” என்று மெய் சிலிர்க்க, “ஆமா புள்ள! சுடல மாடா! நீ எங்க சாப்பிட போறனு நினைச்சு உப்ப கொஞ்சம் கம்மியா போட்டுட்டேன். மன்னிச்சிடுப்பா.” என அந்தப் பெரியவர் மன்னிப்பு வேண்ட, “உப்பு கொறவா இருந்தாலும் கறி சோறு செமையா இருக்குடி.” எனச் சப்புக் கொட்டினாள், மாம்பழம்.
“ஏய் வாய் பேசாம சாப்பிடு டி.” ஒவ்வொரு விரலாய் பாரி சப்பிட, ஐந்தே நிமிடத்தில் இருவரும் சேர்ந்து இழையை வழித்தனர்.
“வ்வாப்…” காடோஜ்கசனாய் ஏப்பம் விட்டவர்கள் மாடுகளை ஓட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்ப, களத்துமேட்டில் நண்பர்களுடன் சீட்டாடிக் கொண்டிருந்தான், குருசாமி.
ரஞ்சித்தின் கையலாகாத கணவன். சூதாட்ட வெறியன்.
இணைந்த புருவம் மேல் எழும்ப, ஒரு விழி தனது சீட்டைப் பார்க்க, மறு விழி அடுத்தவனை ஆராய, சிவப்பு பனியனும், பட்டாப்பட்டி டவுசருமாக அமர்ந்திருப்பவனைக் காணும் போதே எச்சில் கூட்டி விழுங்கினாள், பாரி.
“ஆத்தி! எப்படி அத்தான்கிட்ட இதக் கொடுக்க.” பயத்தில் பாரியோ நடுங்க, “இந்தா நான் ஜெவிச்சிட்டேன்.” சீட்டை நடுவில் போட்டான் குருசாமியின் சூதாட்ட நண்பன்.
“ப்ச்… அட ச்சே.” பதிலுக்குக் குருமூர்த்தியோ முகத்தைச் சுளித்துக் கையிலிருந்த சீட்டைக் கீழே எறிய, “ம்ம்… எடு எடு…” என்றான் ஜெவித்தவன்.
“அட போப்பா.” அங்கலாய்த்தபடியே அனைவரும் பந்தயக் காசை நடுவில் போட, ஜெவித்தவனோ சந்தோசமாக அனைத்தையும் அள்ளினான்.
“ம்ம்… இனி என்னத்த ஆட?” கூட்டமோ மெல்லக் களைந்திட, “அத்தான்…” என்றவாறு அவனுக்கு முன் வந்து நின்றாள், பாரி.
“நீயா வா வா…” அவளை அழைத்த குருசாமியோ, “டேய் எங்க டா போறீங்க? இன்னொரு ஆட்டம் போடலாம், வாங்க.” என்றழைக்க, “இன்னொரு ஆட்டமா? எங்கப்பா காசு இருக்கு?” தலையைச் சொறிந்தபடியே போனவர்கள் அனைவரும் அவனுக்கு முன் வந்தமர்ந்தனர்.
“இங்க பாரு குரு. காசு இருந்தா கூப்பிடு இல்லனா விடு.” ஜெவித்தவன் பிகு பண்ண, “யோவ் வெள்ளசாமி பொறுய்யா. காசு மட்டும் தான் பந்தயத்துக்கு வைக்கனுமா? ஆள வச்சா ஏத்துக்க மாட்டியா?” குருசாமியோ இவ்வாறு கேட்ட, “காசத் தவிர உன்கிட்ட பந்தயம் கட்ட என்ன இருக்கு?” அங்கலாய்ந்தான், வெள்ளசாமி.
“ஏன் இல்ல இதோ இவ இருக்காளே.” கொழுந்தியாளைக் குழந்தையாய் பாராமல் பந்தயப் பொருளாய் அவளை வைத்தான், குருசாமி.
அதைக் கேட்டு, “அத்தான்…” என்று இவள் அலற, “பின்ன என்ன வெள்ளசாமி பந்தயப் பொருள் நல்லா தான இருக்கு. ஏத்துக்கிட்டு ஒரு ஆட்டத்த போடு.” அருகில் இருப்பவன் ஏற்றிவிட, குறுகுறுவென அவளைப் பார்த்தபடியே வெள்ளசாமி சீட்டைக் குலுங்க, பாரியின் இதயமோ பயத்தில் “லப் டப் லப் டப்…” என வேகக் கதியில் துடிக்கத் துவங்கியது.
கருத்துகள்
கருத்துரையிடுக
“உங்கள் கருத்துகள் எங்களுக்கு முக்கியம். கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.. தாராளமாய் பகிருங்கள் 😊