தீ மீது வீணை 1
அத்தியாயம் 1
பேய்கள் உலவும் நடுநிசி அது.
மண்ணைப் பொன்னாக்கும் பொன்னி நதியின் பிறப்பிடமாம் குடகு மலையின் அழகையும் வனப்பையும் அந்தக் காரிருள் தனக்குள் ஒளித்துக் கொண்டது.
ஒளித்துக் கொண்டதைச் சரக்கொன்றை மலர்களும், கடம்ப மலர்களும் தனது சுகந்த வாசத்தால் காட்டிக் கொடுத்தன.
காட்டிக் கொடுத்த அக்குடகு மலையோ பல நூறு ஏக்கர்க் காபி எஸ்டேட்டுகளால் நிறைந்திருந்தது.
நெற்றிக்கு நடுவே குங்குமம் போல் அந்தக் காபி தோட்டங்களுக்கு நடுவே அமைத்திருந்தது அந்த மன நல காப்பகம்.
உள்ளே இருப்பவர்கள் எக்காரணம் கொண்டு தப்பித்து விட கூடாது என நினைத்து நான்கு பக்கச் சுற்று சுவரையும் மிகப் பெரியதாக கட்டி வைத்திருந்தனர், அந்தக் காப்பகத்தின் உரிமையாளர்கள்.
அப்படியும் சிலர்த் தப்பித்து விட கூடும் என நினைத்துச் சிறு சிறு கண்ணாடி துண்டுகளை அச்சுற்றுச் சுவரின் மேல் ஈட்டிப் போல் பதித்தும் வைத்திருந்தனர்.
நிலவோளியில் அவைகளோ வைரமென மின்ன, அந்தக் கண்ணாடி துண்டுகள் மேல் கை வைத்து ஏறினாள், ஒரு மாது.
ஏற்கனவே பல தடவை அவற்றின் மேல் கை வைத்து ஏறியிருப்பாள் போல, இரு கைகளிலும் ‘காஸ் பேண்டேஜ்’ என அழைக்கப்படும் பருத்தித் துணிகள் கட்டப்பட்டிருந்தன.
ஏற்கனவே இருந்த அக்காயங்களோடு புதிதாய் சில காயங்களும் இப்போது அந்தக் கண்ணாடித் துண்டுகளின் உபாயத்தில் உருவாகிட, இரத்தம் கசிய கசிய அவற்றை அழுத்திப் பற்றியபடி சுற்றுச் சுவரின் மேல் ஏறினாள், அந்த மாது.
நோயாளிகள் உடுத்திக் கொள்ளும் கருப்பு கோடுப்போட்டு அந்த வெள்ளை நிற சட்டை எங்கும் திட்டு திட்டாய் இரத்த கறைகள்.
ஆங்காங்கே கிழிந்தும் காணப்பட்டன.
அந்தச் சுவரில் பதிக்கப்பட்ட கண்ணாடி துண்டுகள் மேல் அழுந்த கால் வைத்து மெல்ல நடந்தாள், அவள்.
நடக்க நடக்க அவளின் அனிச்சம் மலர்ப் பாதங்கள் கிழிந்து இரத்தம் பீறிட்டது.
நீல நிறம் பூசப்பட்ட அந்தச் சுவரில் இவளது இரத்தம் புது வண்ணத்தை நல்கிட, இரத்தம் உறையும் அந்தப் பனி இரவில் ஏனோ அவளுக்கு மட்டும் வியர்த்து விறுவிறுத்தன.
நெற்றி எங்கும் படர்ந்திருந்த வியர்வைத் துளிகளோட அவளது விழி நீரும் கலந்துக் கொள்ள, பார்வையை மறைக்கும் போது மட்டும் அவைகளை அழுந்த துடைத்துவிட்டு அந்தச் சுவரின் மேல் பதமாய் நடந்தாள் அப்பெண்.
“ஜீசஸ் பிளீஸ் சேவ் மீ.” பத்து எட்டுகள் எடுத்து வைப்பதற்குள் பத்தாயிரம் முறை இறைவனை உதவிக்கு அழைத்தவள், இறுதியாகச் சுவரிலிருந்து அப்பக்கம் குதித்து இறங்கும் முன், “லொள்…” எனக் குலைத்து தொலைத்தது ஒரு நாய்.
அதுவரைக் கடும் குளிரில் சுரண்டு கிடந்த அந்த நாயிற்கு இவளின் இரத்த வாடை உற்சாகத்தைக் கிளப்பிவிட்டது போல, “லொள் லொள்…” என அது குலைக்கத் தொடங்கிய அடுத்த கணம், அந்த மனநலக் காப்பகத்தின் விளக்குகள் எல்லாம் சட்டென எரிந்தன.
அதுவரை மற்றவர்களுக்குப் பயமாகவும், அவளுக்கு உதவியாகவும் இருந்த அந்தக் காரிருள் மறைந்திட, நிலா வெளிச்சம் காட்டாத அவள் வதனத்தை ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் கொண்ட மின்விளக்குகள் காட்டிக் கொடுத்தன.
கலைந்த கூந்தல், கருத்து குழி விழிந்த கண்கள், கண்ணீர்ப் படர்ந்த கன்னங்கள், ஆங்காங்கே தெரியும் சிராய்ப்பு காயங்கள் அனைத்தையும் சீராக்கிவிட்டாள் அவளும் ஓர் உலக அழகியே.
பளீச்சென முகத்தில் விழுந்த வெளிச்சத்தில் மிரண்டு, விழிகளால் அவள் தப்பிக்கும் மார்க்கம் தேட, கண் இமைக்கும் நேரத்தில் அவளைச் சுற்றி வளைத்திருந்தனர், அந்த மனநல மருத்துவ பணியாளர்கள்.
அவர்களைக் கண்டதும் உடல் தானாய் நடுங்க, “நோ… நோ… பிளீஸ்… பிளீஸ்… என்ன விட்டுருங்க.” என்று இவள் கதற, அவர்களோ, “உனக்கு இதே வேலையா போச்சு… ம்ம்ம் இறங்கு இறங்கு.” எனக் கத்தி, அவளை கல்லால் அடித்து தாக்கினர்.
கூர்மையான சரளைக் கற்கள் தேகத்தில் பட்டு ஏற்கனவே இருந்த அவளின் காயத்தைப் புதுப்பித்திட, “நா… நா… நான் வரமாட்டேன்.” பயத்தில் மறுப்பாய் தலையாட்டியவள், செத்தாலும் அவர்கள் கையில் சிக்கக் கூடாது என நினைத்து வெளிப்பக்கமாகப் பொத்தென குதித்தாள்.
குதித்தவளைப் பக்கென பிடித்தனர் இவளின் வரவிற்காக அப்பக்கம் காத்திருந்த மருத்துவ பணியாளர்கள்.
அவர்களைக் கண்டதும், “ஐயோ எ… என்ன விடுங்க.” என்று இவள் கத்தி கதற, “உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா, மறுபடியும் மறுபடியும் எங்க கிட்ட இருந்து தப்பிக்க டிரைப் பண்ணுவ.” எனக் கேட்டு கேட்டு அவளை அடித்து நொறுக்கியவர்களுக்கு நன்றாகவே தெரியும் இது அவளின் நூறாவது தப்பிக்கும் படலம் என்று.
அவள் அங்கே வந்து சேர்ந்த ஆறு மாதங்களில் ஒரு நாள் கூட அமைதியாக அவள் தூங்கியதும் மற்றவர்களைத் தூங்கவிட்டதும் இல்லை.
ஒவ்வொரு நாள் இரவும் அவள் தப்பிக்க முயற்சிப்பதும், அவளை இவர்கள் தேடி பிடிப்பதும் ஏதோ திருடன் போலிஸ் விளையாட்டாய் அவர்களுக்குள் நித்தம் நித்தம் நடந்தேறிட, ஒவ்வொரு முறையும் அடியின் அளவு மட்டும் கூடிக் கொண்டே போனது.
அவர்கள் அடித்த அடியில் இவளுக்கோ கதிகலங்கிக் கண்களில் பூச்சி பறந்தன.
“பிளீஸ் பிளீஸ்… விட்டுடுங்க. காட் ப்ராமிஸ்… நா… நா… நான் இனிமே தப்பிக்க டிரைப் பண்ணவே மாட்டேன்.” வலி தாங்க முடியாமல் அலறியவளுக்கு தெரியாது அந்தச் சத்தியம் தான் அவளின் ஆயிரமாவது சத்தியம் என்று.
“இதையே நீ எத்தனத் தடவ சொல்லுவ?” வாயிலேயே அடித்தனர், மிதித்தனர், கூந்தல் கற்றைகளைக் கொத்தாக பிடித்து உள்ளே இழுத்துச் சென்றனர்.
சிறைச் சாலை போல் இரும்பு கம்பிகள் கொண்ட பல நூறு அறைக்களுக்கு நடுவே அவளது அறையும் இருந்தது.
அந்த அறையை நோக்கி அவர்கள் இவளை இழுத்துச் செல்ல, போகும் வழி நெடுக, ஏதேதோ விசித்திரக் குரலை எழுப்பி கூச்சலிட்டனர், மனநல நோயாளிகள்.
“ஏய்… உன்ன அடிச்சாங்களா?” சில நோயாளிகள் சிரித்தபடியே விசாரித்தனர்.
சிலர், “நீங்கள் என்னை அழைத்து வரவில்லை இழுத்து வந்திருக்கிறீர்கள்.” என அவளைப் போலவே நடந்து சினிமா வசனம் பேசினர்.
யாரையும் அவள் கவனிக்கவில்லைக் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.
கட்டை விரல் தரையில் கோடு கிழிக்க, அவளை அவளது அறைக்கு இழுத்து வந்தவர்கள், யார் யார் மீதுதோ அவர்கள் கொண்ட கோபத்தை எல்லாம் மொத்தமாய் அவள் மேல் இறக்கத் துவங்கினர்.
மிதித்து, உதைத்து, குத்தி அவளது கூந்தலைப் பிடித்து ஆட்டி அவளைத் திணறடித்தவர்கள், இறுதியாக அவளைத் தூக்கி மின்னதிர்ச்சி தரும் இருக்கையில் அமர்த்திட, “ஏய் ஏய்… என்ன பண்றீங்க?” எனப் பதறியபடியே அவ்விடம் வந்தார்த் தலைமை மருத்துவர்.
அவரைக் கண்டதும் இவர்களோ அமைதியாகிட, “யூ… பிளடி ஃபுல்… உங்களுக்கு எத்தனத் தடவ சொல்றது? அவள அடிங்க கொடும படுத்துங்க. பட், அவ உயிருக்கோ மென்டல் ஹெல்த்துக்கோ ஒன்னும் ஆக கூடாது. ஏதாவது ஆச்சு… போங்க டா வெளியே.” என அவர்களை விரட்டிவிட்டு அவளிடம் வந்தார், அம்மருத்துவர்.
அவளோ சோர்ந்து போய் அந்த இருக்கையில் விழி மூடி விழுந்திருக்க, “ரீனா ரீனா… நான் கூப்பிடுறது உனக்குக் கேட்குதா?” ரீனா…” என்று தட்டி எழுப்பினார்.
அவர் எழுப்ப எழுப்ப, அவளுக்கோ, “ரீனா ப்ச்… ரீனா… எந்திரி டா. பிளீஸ் எந்திச்சி கொஞ்சம் காபி குடி.” என்று அவள் தந்தை ஜோசப் எழுப்பியது ஞாபகத்திற்கு வந்தது.
“டாட்… பிளீஸ் பைவ் மீனிட்ஸ்…” பதிலுக்கு இவளோ விழி மூடியபடியே ஐந்து விரலைக் காட்ட, “ம்ம்ம்… இப்படியே நல்லா செல்லம் கொடுத்துக் கெடுத்து வைங்க. போற இடத்துல இதெல்லாம் இவளுக்குக் கிடைக்குதானு பார்ப்போம்.” எனக் கரைந்துக் கொட்டியபடியே அவ்விடம் வந்தார், ஸ்டெல்லா.
வந்தவர் அவளின் தோளைத் தட்டி, “ஏய் கழுத எந்திரி டி.” என்று அரட்ட, “ப்ச்.. இப்ப எதுக்கு என் குவின்ன அடிக்கிற? எட்டு தான ஆகுது கொஞ்சம் நேரம் தூங்கட்டும் விடு.” எனத் தனது மகளுக்காகத் தந்தையோ பரிந்துப் பேச, “ம்ம் தட்ஸ் மை டாடி…” எனக் குழைந்தபடியே அவரின் இடையைக் கட்டிக் கொண்டு மடியில் தூங்கியதை நினைத்துப் பார்த்து இவள் இதழ் விரிக்க, “ரீனா…” என யோசனையில் புருவம் இடுக்கினார், மருத்துவர்.
‘இவனுங்க அடிச்ச அடியில ஏதாவது ஆயிடுச்சா?’ ஒரு நிமிடத்தில் குப்பென வியர்த்து விறுவிறுத்துவிட்டது அவருக்கு.
“ஐய்யயோ அப்படி மட்டும் ஆச்சு அவ்வளவு தான்.” பயத்தில் வாய் விட்டே அலறியவர், கைக் குட்டையால் வழியும் தனது வியர்வையைத் துடைத்தபடியே அவளின் இமைகளை விரித்துக் கண்களில் எதையோ ஆராய்ந்தார், பின் அவளின் கன்னத்தைத் தட்டி தட்டி, “ரீனா.. ரீனா… பிளீஸ் பிளீஸ் எந்திரிங்க.” என்று எழுப்ப, “ஹாங்… டாக்டர்… டாக்டர்…” ஈன ஸ்வரத்தில் முனங்கினாள், ரீனா.
அவள், “டாக்டர்…” என்று அழைத்தபின் தான் இவருக்குப் போன உயிர்த் திரும்பியே வந்தது.
“ஹப்பா.” பெருமூச்சு விட்டுக் கொண்டவர், தூக்க மருந்தை ஊசியில் ஏற்றி அவளின் தோளில் இறக்க, அமர்ந்த நிலையிலேயே ஆழ்ந்து உறக்கத்திற்குச் செல்ல ஆரம்பித்தாள், ரீனா.
அடுத்தடுத்து அவளின் வாழ்க்கையில் நிகழப் போகும் விபரிதம் அறியாமல் பூ போல் அவள் உறங்க, மருத்துவரோ தனது எண்ணிற்கு வந்த அழைப்பைக் கண்டு பதறி நடுங்கினார்.
தொண்டைக் குழியோ பயத்தில் அவருக்கு ஏறி இறங்க, மெல்ல அழைப்பை ஏற்று காதில் வைத்தவர், “இல்லச் சார் இல்ல… அவங்களத் தப்பிக்க விடல. எல்லோரும் சேர்ந்து பிடிச்சிட்டோம்.” எனப் படபடத்தார்.
மறுபக்கம், “ம்ம்ம்… காட் இட்.” என்ற பதில் மட்டும் வந்தது. அதன்பின் இணைப்பு துண்டிக்கப்பட்டதிற்கு ஆதரமாக, “க்கீ… க்கீ…” என்ற சத்தம் மட்டும் வர, முடிச்சிட்ட புருவம் நேராக, ஒருமுறை அசந்து தூங்கும் ரீனாவைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றார் அம்மருத்துவர்.
தொடரும்...
கருத்துகள்
கருத்துரையிடுக
“உங்கள் கருத்துகள் எங்களுக்கு முக்கியம். கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.. தாராளமாய் பகிருங்கள் 😊