Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

நெருஞ்சி மலரோ என மோக கானமோ 1



அத்தியாயம் 1 


மண் வெட்டியால் அந்த தொழுவ மண்ணை ஓங்கி அடித்து ஆழ குழி தோண்டினாள், இசக்கியம்மாள். 


புராண கால இடும்பியோ, இல்ல இராவணனின் தாய் கைகேசியோ என எண்ணும் அளவிற்கு நெற்றி பொட்டு களைந்திருக்க, முட்டி சேலை கசங்கியிருக்க, தலைவிரி கோலமாய் மண்ணை தோண்டும் இசக்கியின் மண்வெட்டியில் சிக்கியது என்னவோ குட்டி குட்டி உடல் பாகங்கள் தான். 


பாதி சிதைந்து மக்கிய நிலையிலிருந்த அவ்வுடல் பாகங்களை எரிச்சலுடன் தூர  ஒதுக்கிவிட்டு, சுமார் மூன்றடி குழி தோண்டி அதில் அன்று இறந்தே பிறந்த தனது சிசுவின் உதிரம் சொட்ட சொட்ட குப்பையென அக்குழிக்குள் போட்டு மூடினாள், அவள். 


குடும்ப கட்டுபாடு என்பதே பாவம் என நினைக்கும் தொன்னூறு கால குடும்பம் தான் இசக்கியின் குடும்பம். 


இன்று போல் மகபேறு மருத்துவமனை இல்லாத காலம் என்பதாலோ என்னவோ குழந்தைகள் பிறப்பதும் அதிகம் இறப்பதும் அதிகம்.  


பிறந்தால் துணி சுத்தி திண்ணையில் போடுவார்கள் இல்லையென்றால் அவர்கள் வீட்டு கொல்லையில் புதைப்பார்கள். அவ்வளவு தான் அவர்களது தாய் பாசம்.  


அதில் இசக்கி ஒன்றும் விதி விலக்கல்லவே. 


குழந்தையை புதைத்துவிட்டு புதைத்த இடத்தை அவளோ காலால் சமன் செய்திட, இரவோ மெல்ல மெல்ல வெளுக்க துவங்கியது. 


அந்த இரவை வெளுக்க வந்த ஆதவனோ அக்காட்சியை கண்டும் காணாமல் தனது பணியை தொடந்தான். 


பல முறை கண்டதால் அக்காட்சி அவனுக்கு பழக்கமானதோ என்னவோ. 


அவனோ எந்த வித உறுத்தலுமின்றி தனது வேலையில் கவனத்தை செழுத்திட, அவர்களையும் தனது குடும்பமாக பாவிக்கும் தொழுவத்து எருமைகள் தான் அக்காட்சியை காண சகியாமல், “அம்மாஆஆஆ…” என கரைந்தது, தொண்டை கிழிய.  


அதன் கோர சத்தத்தில் திக்கிட்டு எழுந்து அழுதான், இசக்கியின் மகள்வழி பேரனான சுந்தர்.


ஏழு மாத குழந்தையான அவனை, “ஆங்… சரி சரி.. தூங்குப்பா தூங்கு.” தூக்க கலக்கத்தில் தட்டி கொடுத்து தூங்க வைத்தாள், இசக்கியின் மூத்தமகள் ரஞ்சிதம். 


வயது என்னமோ பதினேழு தான் இருக்கும். அதற்குள் வாழாவெட்டியாய் தாய் வீட்டில் இருக்கிறாள், அவள். 


திருமணத்தின் போது பேசிய வரதட்சணையை கொடுக்காததால் புகுந்த வீட்டாரால் தாய் வீட்டிற்கு துறத்தி விடப்பட்டவளுக்கு தூக்கம் மட்டும் ஏனோ விட்டபாடியில்லை. 


கலியுக கும்பகர்ணியாய் அவள் மல்லாந்து கிடக்க, “ஏய் எந்திரி டி.” எரிச்சலுடன் அவளை அடித்து எழுப்பினாள், இசக்கி. 


“ஹாங் இந்தா இந்தா எந்திக்கேன்த்தா.” என்று அவள் எழ, குழந்தை சுந்தரோ இசக்கி போட்ட அமையத்தில் மீண்டும் அழுதான். 


“ஆமா இது வேற நைநையினு…” பேரனை வெறுப்புடன் பார்த்த இசக்கியின் வேல் விழிகள் திண்ணையில் படுத்திருந்த பாரிஜாதத்தின் மேல் விழுந்தது. 


பாரிஜாதம், இசக்கியின் மூன்றாம் குழந்தை. பதின்பருவ மடந்தை. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி. 


படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவளது தாய் தந்தைக்கும் இல்லை. 


படிக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கும் இல்லை. 


இருந்தும் அவள் பள்ளிக்கு போவது என்னவோ அரசாங்கம் கொடுக்கும் மதிய உணவிற்காக தான். 


தான் சாப்பிட்டது போக மீதி உணவை தனது தம்பி தங்கைகளுக்கு அவள் கொண்டு வந்து தருவதால் தான் அவளை பள்ளிக்கே அனுப்புகின்றனர் அவளது பெற்றோர்கள். 


எல்லோருக்கும் எல்லாமே கிடைப்பது இல்லை தான். ஆனால் சிலருக்கு மட்டும்  எதுவுமே அது ஏனோ யார் செய்த சதியோ இல்ல அவர்களது அறியாமையோ யார் அறிவர்? 


பருவம் அடையாத மடந்தை என்பதால் தொடைக்கு மேலே உடை இருப்பினும்  நாணமின்றி கட்டாந்தரையில் அவள் கிடக்க, அவளது காலில் ஓங்கி ஒரு மிதி மிதித்து எழுப்பினாள், இசக்கியம்மாள். 


“கழுத எப்படி தூங்குது பாரு?” இசக்கியோ கடிந்துக் கொள்ள, “ஆஆஆ…” அலறியபடியே எழுந்தமர்ந்தாள், பாரி. 


“பொட்டபுள்ளைக்கு இன்னும் என்ன டி தூக்கம். சீக்கிரம் எழுந்து எருமைய மேய்க போ.” விரட்டியபடியே பாரிக்கு அருகில் கிடந்த சென்பகத்தையும் மல்லிகாவையும் தட்டி எழுப்பினாள், இசக்கி. 


இசக்கிக்கு பத்தாவதாக பிறந்த இரட்டையர்கள். 


இருவரும், “ஆ.. த்தா…” சிணுங்கியபடியே எழுந்தவர்கள்  இசக்கியின் வயிற்றை பார்த்து, “அத்தா பிள்ள பொறந்துடுச்சா?” ஒருசேர. 


“அட ஆமா! ஹாங் சொல்லு ஆத்தா! பிறந்தது பூவா? இல்ல மலையா?” கேலியாக பாரி கேட்க, “ஹாஹா…” மற்ற குழந்தைகளோ கலகலவென சிரித்தனர். 


அவர்களது சத்தம் கேட்டு மாட்டு வண்டியில் படுத்திருந்த பாரியின் அண்ணனும் ரஞ்சிதத்தின் தம்பியுமான அண்ணாமலையோ எரிச்சலுடன் கண் விழித்தான். 


“ப்ச்… இங்க என்ன சத்தம்? ச்சே ஒருத்தன் கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க முடியுதா?” என்று அவன் அலுத்துக் கொள்ள, தூரத்தில் இருந்தவாறே அவன் மேல் டம்பளரை விட்டேறிந்தான், மலையப்பன் அனைவருக்கும் மூத்தவன். 


போலியோவால் தனது கால்களை இழந்தவன், பெற்றோர்களின் புறக்கணிப்புக்கும் ஆளானவன், அதனால் தானோ என்னவோ அவனுக்கு பின் பிறந்த, பெற்றோரின் செல்ல மகனான அண்ணாமலையின் மேல் எப்போதும் இவனுக்கு பொறாமை உண்டு. 


அந்த பொறாமை சில சமயம் கோபமாகவே வெளிப்படும். 


அன்றும் அப்படி தான். 


கோபத்தில் இவனோ டம்பளரை தூக்கி அடிக்க, “டேய் உனக்கு அம்முட்டு தான் மரியாத.” அச்சாணியை உருவிக் கொண்டு அண்ணாமலை வர, “அட ச்சீ எருமைகளா! காலங்காத்தால சண்ட போட்டுக்கிட்டு… போங்க டா போய் வேலைய பாருங்க.” அனைவரையும் அதட்டிவிட்டு ஒரு வாளி தனது தண்ணீரை தலையில் ஊற்றிக் கொண்டாள்,  இசக்கி. 


தீட்டை கழிக்கிறாளாம். 


இறுகிய முகத்தோடு ஈரம் சொட்ட சொட்ட அந்த வீட்டிற்குள் கால் எடுத்து வைத்தாள், இசக்கி. 


அந்த வீட்டிலிருக்கும் ஓரே ஒரு அறை அது மட்டும் தான். 


அந்த அறைக்குள் ஓரே ஓரு கயிற்று கட்டிலிருக்க, அதில் சொகுசாய் படுத்திருந்தான், கருப்புசாமி. 


அவனுக்கு மட்டும் மேஜை மின் விசிறி இயங்கிக் கொண்டிருந்தது. 


அவனைப் பார்த்த வன்னமே கதவை அடைத்த இசக்கியோ இரும்பு பெட்டியிருந்து ஒரு புடவை எடுத்தாள். 


ஈர புடவையை உருவிப்போட்டுவிட்டு ரவிக்கையில் அவள் கை வைக்க, அவளை இழுத்து தனது மார்பில் போட்டான், கருப்பசாமி. 


“யோவ் என்ன விடுய்யா.” என்று அவள் சிணுங்க, “ப்ச்… கொஞ்ச நேரம் தான டி.” என்றவாறு அவளுக்கு மேல் படர்ந்தான், கருப்பு. 


அவர்களது முணங்கல் சத்தம் அறைக்கு வெளியே கூட வர, ரஞ்சிதமோ குழந்தையை தட்டிக் கொடுத்தபடியே கண் கலங்கினாள்.  


வாழ வேண்டிய வயதில் அவள் அங்கே வாழ வெட்டியாக இருக்க, மகளின் நிலையை எண்ணி சிறிதும் வருந்தாமல் சல்லாபிக்கும் பெற்றோரை நினைத்து அவள் கலங்க, பாரியோ அடுப்பு சாம்பலில் பல் விளக்கிக் கொண்டிருந்தாள். 


தெருவில் சிலர் மாடுகளை கூடிக் கொண்டு செல்ல, “அடியேய் பாரி.” தெருவில் நின்றவாறே பாரியை அழைத்தாள், அவளது தோழி மாம்பழம்.


“ஆங்… இந்தா வர்றேன் டி.” விறுவிறுவென வாய் கொப்பளித்துக் கொண்டு எருமைகளை பாரி அவிழ்க்க, “ஏய் ஏய் இரு டி…” குடுகுடுவென அவளிடம் வந்தாள், ரஞ்சிதம். 


“ஐயோ என்னக்கா எனக்கு சீக்கரமா கொல்லைக்கு போகனும்.” பாரியோ சிடுசிடுக்க, “ப்ச்… போலாம் டி. இந்தா இத அத்தான் கிட்ட கொடுத்துடு.” அவளிடம் ஒரு துண்டு சீட்டை நீட்டினாள், ரஞ்சி. 


“ஏய் அக்கா இது என் நோட்டுல உள்ளது தான?” ஒரு பக்கமிருந்து கையெழுத்தை பார்த்து பாரி கத்த, “உஷ்… கத்ததா டி. அத்தான் பேசிச்சுனா அதுக்கிட்ட கேட்டு உனக்கு பத்து நோட்டு வாங்கி தாறேன். இதை மட்டும் கொடுத்துடு டி.” கெஞ்சினாள், ரஞ்சிதம். 


“சரி கொண்டா?” இடது கையில் வாங்கிக் கொண்டு மாட்டுடன் மாம்பழத்திடம் வந்தாள், பாரி. 


“என்னவாம் டி?” ஆடுகளை பத்திய படியே தோழி கேட்க, “அத்தான்கிட்ட கொடுக்கனுமாம் டி.” பதிலுக்கு இவளோ துண்டு சீட்டை எடுத்துக் காட்டினாள்.  


“உக்கும்… உனக்கும் வேற வேலையில்ல உன் அக்காலும் வேற வேலை இல்லை. இதுவே நானா இருந்தேனா சரி தான் போ டி னு மாமியா மூச்சுலேயே நாலு குத்து குத்திட்டு என் புருசனை கூட்டிக்கிட்டு வேற வீட்டுக்கு போயிடுப்பேன். உன் அக்கா என்னடானா…” சலித்தாள், மாம்பழம். 


“ம்ம்… அது சரி! உனக்கு வர்ற மாமியா ரொம்பவே கொடுத்து வச்சிருக்கனும் டி.” வஞ்சபுகழ்ச்சியுடன் பாரி பதில் கொடுத்திட, இருவரும் தங்களது கால்நடைகளை கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே வந்தனர். 


“ப்ச்… ஐயோ அந்த பக்கம் வேண்டாம் டி. போன முறையே தோட்டத்து காரன் ரொம்ப பேசுனான்.” பாரியோ எச்சரிக்க, “ஐயோ எனக்கு உடனே கொல்லைக்கு போகனும் டி.” கால்களை பின்னி சிணுங்கினாள், மாம்பழம். 


“சரி வா நாம அப்ப ஆத்தகரை பக்கம் போவோம்.” பாரி சொல்ல, “ஐயோ வேண்டாம் டி! மாடுங்க வயலுக்குள்ள போயிடும்.” மறுத்தாள், மாம்பழம். 


“பின்ன என்ன தான் டி பண்றது?” பாரியோ சிடுசிடுக்க, “பேசாம மாடுகளை கோயில் பக்கத்துல மேய விட்டுட்டு ஆத்தகரை பக்கம் ஒதுங்குவோமா?” மாம்பழமோ யோசனை சொல்ல, மாடுகளோ சுடலை மாடன் கோயிலுக்கு அருகே மேய்ந்துக் கொண்டிருந்தன. 


“ஹப்பா… எப்படியோ ஒரு வேலை முடிஞ்சிடுச்சு. இனிமே அந்த ஆலமரத்துக்கு அடியில ஒரு குட்டி தூக்கத்த போட வேண்டியது.” ஆயாசமாய் மாம்பழம் பேச, “தூக்கமா? உஹும் நான் மாட்டேன். நான் மாட்டேன். கணக்கு வாத்தி பள்ளிக்கூடம் வரலைனா முட்டிய பேத்துடுவாரு.” பயந்து மறுத்தாள். 


“ஏது பள்ளி கூடமா? அதுவும் இன்னைக்கா? அட உனக்கு விசயமே தெரியாதா? யாரோ பெரிய ஆளாம் டி. அவர் தான் நம்ம நாட்ட ஆள்றாராம். அவர நேத்து யாரோ குண்டு வச்சிக் கொன்னுட்டாங்களாம் டி.” மற்றவர்கள் பேசுவதை அறைகுறையாய் கேட்டுவிட்டு பாரியிடம் கதை அளந்தாள், மாம்பழம். 


“அச்சச்சோ யாரு டி கொன்னா?” 


“அது யாரோ புலியோ சிங்கமோவாம் டி. ப்ச்… அதெல்லாம் இப்ப நமக்கெதுக்கு. நமக்கு இரண்டு நாள் லீவு விட்டாங்க அம்முட்டுதான்.” சந்தோசமாக மாம்பழம் கூற, பாரியோ முகம் வாடினாள். 


“ஏன் டி ஏன் உம்முனு ஆயிட்ட? 


“இரண்டு நாள் பள்ளிக் கூடம் கிடையாதுன்னா அப்ப சோறு போட மாட்டாங்க இல்ல.” அவ கவலை அவளுக்கு. 


“ஏன் டி உன் ஆத்தா என்ன சமைக்கவே மாட்டாளா டி?” அங்கலாப்பாய் மாம்பழம் கேட்க, “சமைக்கும்…” என இழுந்தவளுக்கு இசக்கியின் கூலும் அதை அளந்துக் கொடுக்கும் அவளது பண்பு ஞாபகத்திற்கு வந்தது. 


“ம்ம்ம்… அப்பறம் என்ன இரண்டு நாளைக்கு கூலு குடிச்சி சமாளிச்சிக்க.” 


“இரண்டு நாளா… இன்னைக்கு வியாழன், நாளை வெள்ளி, சனி ஞாயிறு பள்ளிக்கூடம் கிடையாது. ஆகமொத்தம் நாலு நாள்…” நாட்களை எண்ணிப் பார்த்து விசனப்பட்டாள், பாரி. 


“ம்ம்ம்… அப்ப கொஞ்சம் கஷ்டம் தான். ஏய் நாம ஏன் ஞானய்யா வீட்டுக்கு கத்தரிக்கா பறிக்க போக கூடாது…” மாம்பழமோ யோசனை கூறிட,  “ஹய்யயோ வேண்டாம்ப்பா.” உடனே மறுத்தாள், பாரி. 


“ஏன் டி?” 


“அந்த அமர் குரங்கு இருக்குமே டி…” 


“அந்த குரங்கு ஒரு ஓரமா இருந்துட்டு போவட்டும். நமக்கு ஒரு பெட்டிக்கு எட்டண்ணா கிடைக்குமே அத விடனுமா?” கொஞ்சலாக மாம்பழம் கேட்க, “அப்படிங்கிற…” எட்டண்ணாவிற்கு எட்டாயிரம் கனவு கண்டாள், பாரி. 


முறுக்கு, கடலை மிட்டாய், கல்கோணா எல்லாம் கண் முன்னால் வந்து நின்றன. 


நாக்கோ நாவாய் போல் வாயிக்குள் தத்தளித்திட, தீனியை நினைத்து அவளோ இதழை ஈரப்படுத்த, மாம்பழமோ எப்போதோ ஆழமரத்தடியில் கட்டையை நீட்டியிருந்தாள். 


“ஏய் மாம்பழம்…” பசியை தூண்டிவிட்டு தூங்கும் தோழியை பார்த்து இவள் கத்த, “ஆங்… ஏ… என்ன?” தூக்க கலக்கத்தில் முணுமுணுத்துவிட்டு குறட்டை விட்டாள், மாம்பழம்.


“ஐயோ இவ ஒருத்தி…” வயிற்றை தடவியபடியே சுற்று முற்றும் பார்த்த பாரிக்கு சற்று தொலைவில் கொய்யா மரம் தெரிந்தது.  


பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள்,  யார் இடம் எவர் மரம் என்றெல்லாம் பார்க்காமல் அந்த மரத்தின் மீது ஏறினாள், பாரி. 


கிளையில் கால் தொங்க அமர்ந்தவள் ஆசையுடன் ஒரு பழத்தை பறித்து ஒரு கடி கடிக்க, அவளது மலர் பாதத்தில் யாரோ சுளீரென அடித்தனர். 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்