Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

தீ மீது வீணை 15



அத்தியாயம் 15

கரு நாகம் போல் வளைந்து வளைந்திருந்த அந்த சாலையில், “ப்பப்… ப்பப்…” என சைரன் அலறியபடியே அவசர ஊர்தியோ காற்றை பிளந்துக் கொண்டு முன்னே விரைந்தது. பின்னால் இரு தரப்பு வாகனங்களும் ஒன்றையொன்று இடித்து, சுட்டு, தாக்கியபடியே மரணப் பந்தயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.

“என்ன ஆனாலும் சரி… மைக்கேல் எனக்கு உயிரோடவோ இல்ல பிணமாவோ வேணும்!” உரக்க கட்டளையிட்டு தனது ஆட்களை தொடர்ந்து ஏவியபடியே வந்தான் ஆண்டனி.

கிரிஸ்டோபரோ அவசர ஊர்தியை தானே இயக்கினான்.

ஒரு கையால் ஸ்டியரிங்கையும், மறு கையால் துப்பாக்கியையும் இறுகப் பற்றிக் கொண்டு,
“ஒரு பயலையும் விடாதீங்க! எல்லாம் செத்து மண்ணோட மண்ணாகனும். நம்ம பாஸ் மேல கை வச்சா என்ன நடக்கும்னு அவனுங்களுக்கு காட்டனும்!”
என்று உறுமியபடி வந்தான் கிரிஸ்டோபர்.

இரு தரப்பினரும் சிறிதும் சோர்வின்றி மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள, பல வாகனங்கள் சாலையோர மரங்களில் மோதி சுக்குநூறாய் நொறுங்கின.

கிரிஸ்டோபர் பற்களை நெரித்தபடி அவசர ஊர்தியின் வேகத்தைக் கூட்டினான். இருப்பினும் ஆண்டனியின் இரண்டு ஜீப்புகளும் பிடிவாதமாக அவர்களைத் துரத்தின.

“ஷிட்! இவனுங்களா?” என கோபத்தில் உறுமியவன், திடீரென அருகில் வந்த ஆண்டனியின் ஒரு ஜீப்பை வேகமாகத் தட்டிவிட்டான்.

அந்த ஜீப்போ நிலை தடுமாறி சாலைக்கு நடுவே வட்டமடித்தது. அதை லாவகமாகத் தவிர்த்த கிரிஸ்டோபர், உடனே மற்றொரு ஜீப்பைப் பக்கவாட்டில் பலமாக இடித்துத் தள்ளினான்.

இரண்டு ஜீப்புகளும் ஒன்றோடொன்று மோதி பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தன.

கண்ணாடிகளோ சில்லுச் சில்லாய் நொறுங்கி சாலையில் சிதறின.

அந்த சிறிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அசுர வேகத்தில் அவசர ஊர்தியை முன்னோக்கி செலுத்தினான் கிரிஸ்டோபர்.

புழுதியை கிளப்பிக் கொண்டு அது சாலையில் பறக்க, ஆண்டனியோ ஜீப்பின் பின் இருக்கையில் பலமாக அடிபட்டு மயங்கிக் கிடந்தான்.

சில நிமிடங்களுக்குப் பின் மயக்கம் தெளிந்து, தலையை உழுக்கியபடியே மெல்ல எழுந்தான் ஆண்டனி.

அதிர்ச்சியுடன் சுற்றும் முற்றும் விழிகளால் அவசர ஊர்தியை தேட, அதுவோ மங்களூர்–மும்பை பிரதான சாலையில் தனது பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தது.

அனைத்து மருத்துவ உபகரணங்களும் நிறைந்த அந்த அவசர ஊர்தியின் உள்ளே, “பிப்… பிப்…” என்ற கருவிச் சத்தத்தின் நடுவே கண் மூடி படுத்திருந்தான் மைக்கேல்.

அவனை அவ்வாறு அந்நிலையில் பார்க்க பார்க்க, இவளுக்கோ விழிகள் கலங்கின.

கல்லூரி படிக்கும் நாட்களிலிருந்தே எவ்வளவு கம்பீரமாய் அவனை பார்த்திருக்கிறாள்?

பழுப்பு நிற மேல்சட்டையும், வெளிர் நீல நிற உள் சட்டையும், கருநீல ஜீன்ஸும், பழுப்பு நிற தோல் காலணியுமாக பவனி வரும் அவனை காண கண் கோடி வேண்டுமே.

அதுமட்டுமா?

சாக்பீஸை சுழற்றியபடியே பாடம் நடத்தும் அவனது தோரணையில் மயங்காதோர் யார்?

அவளும் மயங்கினாளே?
மயங்கி அவனது கடைக்கண் பார்வைக்காக ஏங்கி கிடந்தாளே?

அவள் மட்டுமா?
அவளது கல்லூரியே அப்படித்தானே கிடந்தது.

பாடம் நடத்தி முடிக்கும் போதெல்லாம் தெத்தப்பல் காட்டி சிரிப்பான். அதை கண்டு பெண்கள் கூட்டமோ ஏக்கப் பெருமூச்சு விடும். ஆண்கள் கூட்டமோ பொறாமையில் வெந்துபோய் நிற்கும்.

அவனிடம் இருந்த சிறப்பு வெறும் அழகு மட்டும் தானா?

அறிவு… அது இருக்கே ஏக்கர் கணக்கில்…

உலக பொறியியலாளர்களுக்கே சிம்ம சொப்பனமாக இருக்கும் கணிதம், அவனுக்கு மட்டும் ஏனோ கை வந்த கலை.

அரை நொடியில் அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்துவிடுவான். அதுமட்டுமல்ல, தனது மாணவர்களையும் அதற்கேற்ப தயார் செய்து விடுவான்.

அதனால் தானோ என்னவோ, மற்ற கல்லூரிகள் பொறாமைப்படும் அளவிற்கு மைக்கேலின் மாணவர்கள் அனைவரும் ‘ஆல் பாஸ்’ ஆகியிருப்பார்கள்.

இதனாலேயே கல்லூரி வளாகத்தில் அவனுக்கு ‘லிவிங் ரோபோட்’ என்ற செல்லப் பெயரும் உண்டு.

ஆண்களிடம் அளவாக பேசுவான். பெண்களிடம் பேசவே யோசிப்பான். அதிலும் குறிப்பாக விட்டில் பூச்சியாய் வந்து விழும் பெண்களை தனது தீப்பார்வையாலே தள்ளி வைப்பான்.

அவர்களும்,
‘கையில் சிக்காத பொருளுக்கு தான் மவுசு அதிகம்’
என்று நினைத்து அவன் பின்னாடியே சுற்றித் திரிவர்.

“ஐயோ… இன்னைக்கு ஏல் ஆரை பார்த்தியாடி? அப்படியே ஸ்டன் ஆகிட்டேன்!”

லிவிங் ரோபோட் என்பதை சுருக்கிக் கூறி அவனை பார்த்து உச்சுக்கொட்டும் பெண்களை பார்க்கும் போதெல்லாம், ஏனோ இவளுக்குள் பொறாமை அடுப்பு திகுதிகுவென எரியும்.

‘வந்துட்டாளுக… ஒரு ஆம்பிள்ள அழகா இருந்தா போதும்… உடனே விழுந்துடுவாளுக.’

மனசுக்குள் பொறுமியபடி,
“அப்படியொன்னும் அழகா இல்ல.”
என்பாள், அவர்கள் அவனை ரசிப்பதை காண பிடிக்காமல்.

அவனை பார்க்க பிடிக்கும், யாருக்கும் தெரியாமல் ரசிக்க பிடிக்கும், அவனை பற்றி பேச பிடிக்கும், இருப்பினும் தன்னை போல் மற்ற பெண்கள் நடந்துக் கொண்டால், ஏனோ எரிச்சல் வரும்.  

அப்படித்தான் ஒருநாள், கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் இவர்களது கல்லூரி முதல் பரிசை தட்டி சென்றது.

அதற்கு பெரிதும் காரணமாக இருந்தது மைக்கேலே.

அவனது தலைமையின் கீழ்தான் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு, அதுவரை வாங்காத வெற்றிக் கோப்பையை வென்று வந்தனர்.

அதற்காக தலைமை ஆசிரியர் முதல் கொண்டு அனைவரும் அவனை பாராட்டி வாய் வலித்தனர்.

அந்த பாராட்டுகள் அனைத்தும் என்னமோ தனக்கே கிடைத்தது போல அகம் மகிழ்ந்தவள், மேடையிலிருந்து கீழே இறங்கியவனின் பின்னாடியே சென்ற ஒரு பெண்ணை கண்டு முகம் சுளித்தாள்.  

அந்த பெண்ணோ, “சார்… சார்… யு ஆர் கிரேட் சார். நீங்க இல்லனா இந்த பிரைஸ் எங்களுக்கு கிடைச்சிருக்கவே கிடைச்சிருக்காது.” மார்கழி மாத தெரு நாய் போல் நாக்கை தொங்க போட, இவளுக்கு ஏனோ கோபத்தில் மூக்கு விடைத்தது. 

‘எல்லோரும் ஸ்டேஜ்ல தான பாராட்டுனாங்க. இவ மட்டும் என்ன சார தனியா பார்க்கிறா?’ கோபம் கண்ணை மறைக்க, “நாம எல்லோரும் தான இந்த இன்டர் காலேஜ் மீட்டுக்காக ஹார்ட் வொர்க் பண்ணோம். அது என்ன எல்லா கிரெடிட்டையும் ஒரே ஆளுக்கு கொடுக்கிறது?” என்றாள் சத்தமாக… அதுவும் அவன் காதில் விழும் படி.

அவனது காதில் விழ வேண்டும் என நினைத்து சத்தமிடவில்லை. ஏதோ உணர்ச்சி வசத்தில் வார்த்தையை விட்டுவிட்டாள், பின் சிதறிய வார்த்தைகளை நினைத்து நுனி நாக்கை கடிக்க, சுற்றி இருந்தவர்களின் மொத்த பார்வையும் அவள் மீதே திரும்பியது. 

“அச்சச்சோ…” அசடு வழிந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தபடியே நழுவ முற்பட, “யா… அப்சலூட்லி யு ஆர் கரெக்ட். எல்லா கிரெடிட்டையும் நானே எடுத்துக்கிறது அவ்வளவு நல்லது இல்ல.” அவளை ஆழமாய் பார்த்து கூறியவன் அனைவரும் பார்க்க, வெற்றி கோப்பையை அவளது கையில் திணித்துவிட்டு போக, “ஹேய் சார்… நா… நான் அந்த அர்த்தத்துல சொல்லல்ல.” பதறி போகும் அவனுக்கு பின்னால் கத்தினாள், ரீனா. 

அவனோ திரும்பி பார்க்காமல் விரைந்துச் செல்ல, “ம்ம்ம்… பரவாயில்லையே!  அம்மணி பெரிய சம்பவமெல்லாம் பண்றீங்க.” கை கட்டியபடியே அவளுக்கு முன்னால் வந்து நின்றாள், செரீனா. 

“ப்ச்… நீ வேற.” பதிலுக்கு இவளோ எரிச்சல் பட, ““சரி விடு டி… பார்த்துக்கலாம்.”

ஆதூரமாய் அவளது தோளை தட்டிய செரீனா,

“ம்ம்ம்… பரவாயில்ல டி. கப்பு ஹெவியா தான் இருக்கு. ரீசேல் வேல்யூ எவ்வளவு இருக்கும்?” நக்கலடித்தபடியே கோப்பையை வாங்கி ஆராய்ந்தாள், செரீனா.

அதைக் கூட கவனிக்காமல், ‘ஓவரா தான் பேசிட்டேனோ?’ என்ற எண்ணத்தில் மைக்கேல் சென்ற பாதையை வெறித்த ரீனாவிற்கு அப்போது தெரியாது. ‘தான் தொட்டிருப்பது புலி வால்’ என்று. 

அதன்பின் வந்த நாட்கள் இன்பமும் இல்லாமல் துன்பமும் இல்லாமல் கலவையாகவே அவளுக்கு கடந்து போயின. 

பெண்கள் சிலர், ஏதோ துஷ்டனை கண்டு விலகுவது போல் விலகி செல்வர். 

சில ஆண்களோ,
‘இது தான் சாக்கு’
என்று நினைத்து, அவளை பாராட்டும் தோரணையில் வந்து பேசி நச்சரித்தனர்.

அப்படியாக வந்து பேசியவர்கள் தான், தாமஸும் அவனது கூட்டாளிகளும். 

“ப்ச்… இவனுங்க வேற…” எரிச்சலுடன் அவர்களை கடந்து செல்வாள், ரீனா. 

அவர்களை எளிதில் கடந்தவளால் ஏனோ அவனை கடக்க தான் முடியவில்லை. சொல்ல போனால் எதிர் கொள்வதே தர்ம சங்கடமாக இருந்தது. 

‘எப்போதும் போல ரோபோட்டாக இருந்தா நல்லா இருக்கும்.’ என்று இவள் நினைக்க, மைக்கேலோ அவளின் எண்ணத்திற்கு நேர்மாறாக அடிக்கடி அவளை தனது பார்வையால் தீண்ட ஆரம்பித்தான். 

எதிர்ப்படும் போதெல்லாம்,
“நீங்க போங்க மேடம்…” என்று அவளுக்கு முன் இரு கரங்களையும் விரித்து வழிவிடுவது போல பாவனை செய்து, அவளது கன்னத்தை சிவக்க வைத்துவிடுவான்.

அவன் அப்படி செய்யும் ஒவ்வொரு முறையும், இதயம் ஏனோ தாளம் தப்பும்.  

‘ஐயோ… சார் என்னைப் பார்த்து சிரிச்சிட்டாரே…’

உள்ளுக்குள் புலங்காகிதம் அடிப்பவள், வெளியே… அதுவும் அவனிடம் காட்டிக் கொள்ள தயங்குவாள்.

இதெல்லாம் காதலின் அறிகுறியா?
இல்லை வெறும் ஈர்ப்பு தானா?

என்ற ஆராய்ச்சி எல்லாம் அப்போது அவளிடம் இல்லைவே இல்லை.

ஆனால்…

அந்த ஆராய்ச்சியை மைக்கேலே நடத்திக் கொண்டிருந்தான் போல.

கல்லூரி முடியும் வரை பொறுமையாக காத்திருந்தவன், கான்வோகேஷன் நாளில் தனது காதலை அவளிடம் சொன்னான்.

சொன்ன அடுத்த நொடி…

“ஹேய்…!”

என்று சந்தோஷ மிகுதியில் கத்தி, வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாள் ரீனா.

அவளது அந்த குதுகலத்தை கண்டு,
“அவ்வளவு சந்தோஷமா?”

என இதழ் விரித்தான்,  மைக்கேல்.

“இல்ல… அது வந்து…”

என்று தடுமாறியவள், தன்னை சமாளிக்க முடியாமல் முகத்தை திருப்பிக் கொள்ள,

“ரீனா…”

மெதுவாக அவளது காதருகே உச்சரித்தான், மைக்கேல். 

“ம்ம்ம்…” வெட்கத்துடன் தலை கவிழ்ந்தாள், ரீனா. 

“ஐ வான்ட் டு மேரி யு.”

இந்த முறை இன்னும் தெளிவாக, இன்னும் அழுத்தமாக கூறினான் மைக்கேல்.

அதில் அவளுக்கோ மூச்சு முட்டியது. 

கல்லூரி வளாகத்தில் எத்தனையோ நபர்கள் இருந்தனர்.  

அவர்களின் சிரிப்பு சத்தம், புகைப்பட கருவியின் ‘கிளிக்…’ சத்தமும், “ரீனா… ரீனா எங்க?” விழிகளால் தேடியபடியே செரீனா கேட்டதும் காதில் விழவே இல்லை. 

அவளை பொருத்தவரை அந்த நொடி…

அவளது உலகத்தில் மைக்கேல்... மைக்கேல் மட்டும் தான் இருந்தான். 

“சார்…” ஆனந்த கண்ணீர் விழியோரம் மின்ன, “எ… எனக்கும்…” வெட்கத்தில் இவளோ வார்த்தைகளை முழுங்க, “தெரியும்.” அவளது பதிலை பாதியிலேயே நிறுத்தினான் மைக்கேல்.

“எ… எப்படி?” அதிர்ச்சியுடன் இவளோ விழி விரிக்க,  “ஹும்… இதோ… என்ன விழுங்கிற பார்வை… அது எனக்கு உன் மனசுல இருக்கிறத சொல்லிச்சு.” குறும்பாய் கூறியவன், அவளது கையில் இருந்த கான்வோகேஷன் தொப்பியை எடுத்து அவள் தலையில் சரியாக மாட்டிவிட்டான்.

அந்த சிறிய செயல் கூட ஏனோ திருமணம் முடிந்த உணர்வை தந்தது ரீனாவிற்கு. 

கனவு போல வந்து மறைந்த தனது கடந்த கால நினைவுகளை அசைபோட்டபடியே, அவனுக்கு அருகில் அமர்ந்து அவனது கரத்தை இறுகப் பற்றிக் கொண்டிருந்தாள் ரீனா.

அவள் விரல்கள் ஒவ்வொன்றும் பயத்தில் நடுங்கின.

“மைக்கேல்… கண் முழிச்சு பாருங்க…”
அடிக்கடி உடைந்த குரலில் முணுமுணுத்தாள்.

இரவா பகலா தெரியாது. பசியோ தூக்கமோ கிடையாது… கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தாள். 

வாகனம் வேகமாக குலுங்கிய போதெல்லாம், மைக்கேலின் சிரம் அசையாமல் இருக்க பெட்டை தனது முட்டைகளை காப்பது போல் அவனை தனது மார்போடு அணைத்துக் கொண்டாள்.

உவர்நீரோ அவளது கன்னம் தாண்டி அவனது கன்னத்தில் பட்டு தெறித்திட, மைக்கேலின் விரல்கள் லேசாக அசைவது போல் தோன்றியது. 

“மைக்கேல்?” பதறி அவனது முகத்தை நோக்கினாள், ரீனா.

அவனது பாவைகளோ இமைக்குள் அங்கும் இங்கும் நகர்வது போல் இருக்க, “டாக்டர்! டாக்டர்…” பதறி  கத்தினாள், ரீனா.

உடனே மருத்துவர் ஒருவர் விரைந்து வந்து அவனது கண்களை பரிசோதித்தார்.

“மிஸ்டர் மைக்கேல்… கேன் யூ ஹியர் மீ?”

பலமுறை அழைத்தும் பார்த்தார்.

ஆனால் அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

“உஹும்… நத்திங்…”

என்று அவர் இதழ் பிதுக்கிய அடுத்த நொடி, ஜன்னி வந்தவன் போல மைக்கேலின் கை கால்கள் வெட்டத் தொடங்கின.

“மைக்கேல்!”

பதறி அவனது கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள் ரீனா.

“டாக்டர்… டாக்டர்…”

இம்முறை அவளோ அலற,

“ஓ மை காட்… டாக்டர், பல்ஸ் வீக்கா ஆகுற மாதிரி இருக்கு!” படபடத்தாள் செவிலியர்.

“பிளட் கவுண்ட் வேகமா குறையுது. அதான் இஷ்யூ. உடனே பிளட்டுக்கு அரேஞ்ச் பண்ணணும்.” என்று அவர் முடிக்கும் முன், “நான் தர்றேன்… என்கிட்ட இருந்து எடுத்துக்கோங்க டாக்டர்.” ஆளுக்கு முன் தனது கரத்தை நீட்டினாள், ரீனா. 

“உங்க பிளட் ஓ நெகட்டிவ்வா?” என்று அவரோ புருவம் உயர்த்த, “இ… இல்ல டாக்டர்…” என்றவளுக்கோ வார்த்தைகள் தடுமாறின. 

தொடரும்.... 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்