தீ மீது வீணை 13
அத்தியாயம் 13
பசுமை அடர்ந்த மூங்கில் மரங்களுக்கு இடையே அம்மூவரும் ரீனாவை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தனர்.
பட்ட பகலில் கூட இருள் சூழ்ந்திருந்த அவ்விடத்தை கண்டதும் கிலி பிடிக்க துவங்கியது, ரீனாவிற்கு.
பயந்தாள், நடுங்கினாள், வியர்த்து விறுவிறுக்க தப்பிக்கும் மார்க்கத்தை விழிகளால் தேடினாள்.
மூலிகை வாசம் நாசியை கவர்ந்த போதிலும் ஏனோ படபடத்தது இதயம்.
“லப் டப்… லப் டப்…” தாளம் தப்பி அது துடிக்க, “வி… விடு… விடுங்க டா.” சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உரத்த குரலில் கத்திப் பார்த்தாள்.
அந்தோ பரிதாபம்! நீரோடையின் சலசலப்பில் அவளது குரலோ உப்பாய் கரைந்து காணாமல் போனது.
‘என்ன பண்ண போறோம்? எப்படி தப்பிக்க போறோம்? இவனுங்க கிட்ட மாட்டிக்கிட்டு மானத்தை இழப்பதற்கு பதிலா செத்துப் போயிடலாம்.’ என்று கூட தோன்றிட, கண்களோ உவர்நீரை அருவியாய் வழிய விட்டன.
‘யாரேனும் வரமாட்டார்களா? தன்னை காக்கும் கரம் கிட்டாதா?’ என்ற ஏக்கத்தில் இவளோ விழிகளால் சாலையை தேட, அவர்களோ அவர்களுக்கு ஏதுவான ஓர் இடம் வந்ததும் மெல்ல அவளை இறக்கினர்.
அவர்கள் இறக்கிய அடுத்த நொடி… வில்லிலிருந்து வெளிப்பட்ட அம்பாய், இது தான் சமயம் என நினைத்து தெறித்து ஓட முயன்றாள், ரீனா.
ஆனால் வினோத்தோ, அவளை போக விடாமல், “எங்க டி ஓடுற?” என்றபடியே அவளது பிடரியை பிடித்து இழுத்தான்.
“ஆ… அம்மா…” வலியில் அலறியவள், பிடரியை பிடித்திருந்த அவனது கரத்தை அடித்தபடியே, “வேணா தப்பு பண்ணாதீங்க… ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து போயிடுங்க.” என்று கூறி இறுதி எச்சரிக்கை விடுத்தாள், ரீனா.
இவளது எச்சரிக்கையை துச்சமென நினைத்தவர்களோ ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
“ஹும்… காலேஜ்ல எங்கள எவ்வளவு சுத்தவிட்ட? ம்ம்… கையில சிக்கின உன்ன அவ்வளவு சீக்கிரத்துல விட்டுட்டோமா? ஹஹா…” நக்கலாய் சிரித்தபடியே அவளது இரு கன்னங்களையும் ஒரு கையால் பற்றினான், தாமஸ்.
“ச்சே… என்னங்க டா சவசவன்னு பேசிக்கிட்டே இருக்கீங்க? சட்டுப்புட்டுனு வேலைய ஆரம்பிங்க டா.” அடுத்து நடக்கப் போகும் விபரீதத்தை அலைப்பேசியில் பதிவு செய்ய தயாரானான், தீர்த்.
“ஹஹங்… அப்படிங்கிற? இந்தா ஆரம்பிச்சிடுவோம்.” இதழ் வளைத்தபடியே ரீனாவின் முகம் நோக்கி குனிந்தான், தாமஸ்.
இமைக்கும் நொடியில் தலையால் அவனது முகத்தில் ஓங்கி முட்டினாள், ரீனா.
“ஆவ்ச்!” என்று வலியில் அவன் பின்னோக்கி தள்ளாட, அடுத்த கணமே வினோத்தின் கரத்தில் திமிறியவள், கை முட்டியால் அவனது மார்பில் ஓங்கி ஒரு குத்துவிட்டாள்.
“ஆ… ஐயோ அம்மா…” என்று அவன் அலற, மிரண்டு விழித்த தீர்த்தின் காலில் எட்டி உதைத்து, “ஹாங்… என்ன யாருனு நினைச்சீங்க? நா… நான் மைக்கேலோட ஆளுடா!” என்று இவள் கர்ஜிக்க, அவளது கர்ஜனைக்கு போட்டியாக, “டுமீல்…!” என்ற துப்பாக்கி சுடும் சத்தம் அந்த மூங்கில் காட்டையே அதிர செய்தது.
பயத்தில் மரங்களில் அமர்ந்திருந்த பறவைகள் கூட சிறகடித்து பறக்க, மூவரின் முகத்திலும் ஈ ஆடவில்லை.
திடீரென கேட்ட துப்பாக்கி சத்தத்தில் அரண்டு விழித்தவர்கள், அடுத்த நொடியே தங்களை சுற்றி மைக்கேலின் ஆட்கள் நிற்பதை கண்டு திடுக்கிட்டனர்.
“ஐயோ… மைக்கேல் டா!” கால் வெடவெடக்க அலறினான், வினோத்.
“டேய் ஓடுங்க டா… ஓடுங்க!” என்று ஆணையிட்டபடியே அரிமாவை கண்ட மான் போல பின்னங்கால் பிடரியில் அடிக்க தெறித்து ஓடினான், தாமஸ்.
“டேய் டேய்… என்ன விட்டுட்டு போகாதீங்க டா!” பயத்தில் கத்திக்கொண்டே தீர்த்தும் அவர்களோடு சேர்ந்து ஓட, ‘மைக்கேலா?’ தொண்டைக்குழி ஏறி இறங்க ஒரு நொடி அதிர்ந்து விழித்தாள், ரீனா.
விழிகள் விரிந்தன. இதய துடிப்போ நொடி நொடிக்கு உயர்ந்துக் கொண்டே போனது.
‘அவ்வளவு தானா? தப்பிக்க ட்ரை பண்ணது எல்லாமே வேஸ்டா?’ நினைக்கும் போதே கண்ணாடி கிழித்த காயங்களெல்லாம் இப்போது ரணமாய் வலிக்க தொடங்கின.
“உஹும்… நோ… நோ… நா… நான் மாட்ட மாட்டேன்…” மறுப்பாய் தலையாட்டியபடியே பின்னால் நகர்ந்தவள், கல்லென இறுகி நின்றிருந்த மைக்கேலின் திண்ணிய மார்பில் மோதி நின்றாள்.
அவனோ இறுகிய முகத்துடன் கிரேக்க சிற்பமென அசைவின்றி நின்றிருக்க, “சார் சார்… நா… நாங்க ஒன்னும் பண்ணல சார். இவ… இவ தான் எங்கள இங்க வர சொன்னா…” மைக்கேலின் ஆட்களிடம் சிக்கிக் கொண்டு தடுமாறினான், தாமஸ்.
“நானா? நா இல்ல… நா இல்ல…” என்று ரீனா பதறி அலற, “கூப்பிட்டா வந்திடுவீங்களா டா? கூமுட்ட பசங்களா…” என்று சீறிய கிரிஸ்டோபர், தாமஸின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.
“ஆஅம்மா…” என்று அவன் வலியில் துடிக்க, “ஆமா சார்… பிளீஸ்… எங்கள நம்புங்க. நாங்க இன்னசெண்ட்…” தீர்த்தும் பயத்தில் உளறிக் கொட்டினான்.
“ஆமா சார்… ரீனா கூப்பிட்டதால தான் நாங்க வந்தோம். இல்லனா நாங்க வந்திருக்கவே மாட்டோம். பிளீஸ் சார்… பிளீஸ்… எங்கள விட்டுடுங்க…” மைக்கேலின் காலை பற்றிக் கொண்டு கெஞ்சினான், வினோத்.
அவர்கள் மூவரையும் இழுத்துச் செல்லும்படி விழிகளால் கட்டளையிட்டான், மைக்கேல்.
அவனது ஆட்களும் அம்மூவரையும் தரதரவென இழுத்துச் செல்ல, “மைக்கேல்… மைக்கேல்… பிளீஸ்… எ… என்ன விட்டுடு…” பனியில் நனைந்த கோழிக்குஞ்சாய் நடுங்கியபடியே பின்னால் நகர்ந்தாள், ரீனா.
கோபத்தில் முகம் சிவக்க, “ஏன் டி இவனுங்கள பார்க்கத் தான் சுவர் ஏறி குதிச்சி வந்தியா?” என்று சீறி, பக்கென அவளது கூந்தலை பற்றியிழுத்தான், மைக்கேல்.
வலி தாங்க முடியாமலும், இனி என்ன செய்ய போகிறாம் என்ற பயத்திலும், “ஆஅம்மா…” என்று இவள் அலற, “ஏன் டி ஏன்? எனக்கு இப்படியொரு துரோகம் பண்ண உனக்கு எப்படி டி மனசு வந்துச்சு ஹாங்?" உரத்த குரலில் கத்தி,
"ம்ம்ம்... சொல்லு டி சொல்லு அப்படி என்கிட்ட இல்லாதது அவனுங்கிட்ட என்ன இருக்கு?” என்று அவன் வினவ, காதில் ஈயத்தை காய்த்து ஊற்றிய உணர்வு ரீனாவிற்கு.
“ஐயோ… இல்ல இல்ல மைக்கேல்…” தொடர்ந்து இவள் அனத்த, “அப்ப.. அப்ப நான் உனக்கு பத்தலையா டி?” என அடித்தொண்டையில் கேட்டு, அவளது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தான், மைக்கேல்.
அதில் இவளோ தடுமாறி பொத்தென்று கீழே விழ, புழுதி சேரோ அவளது உடலை வாரி அணைத்துக் கொண்டது.
எழ முடியாமல், “இல்ல இல்ல…” என்னு பதறி அலறியபடியே இவள் தரையில் கை வைத்து பின்னால் நகர, “ச்சே… நீயும் ஒரு பொண்ணா?’ என கேட்டு மெல்ல அடி மேல் அடி வைத்து முன்னால் நகர்ந்தான், மைக்கேல்.
“ஐயோ மைக்கேல் பிளீஸ் என்ன நம்புங்க?” ஆதங்கத்தில் இவள் குரலை உயர்த்த, “அட ச்சீ வாய மூடு. உன்ன பார்க்க பார்க்க… உன்ன உன்ன கொன்னா தான் டி என் ஆத்திரம் தீரும்.” என்று உறுமி கொலவெறியோடு அவள் மேல் இவன் பாய, “டூமில்…” என்ற சத்தத்துடன், சீறிப்பாய்ந்த தோட்டா ஒன்று மைக்கேலின் மார்பை துளைத்துச் சென்றது.
துளைத்த வேகத்தில் அவனது வாயிலிருந்து இரத்தம் வழிய, நிலைதடுமாறி கீழே சரிந்தவனை, “மைக்கேல்…” என்று அலறியபடியே ஓடி வந்து அவனை தனது மடியில் தாங்கிக் கொண்டாள், ரீனா.
கண்களோ உவர்நீரை கணக்கு வழக்கின்றி சுரந்து தள்ள, “ஐயோ மைக்கேல்…” என்று அவனது மார்பில் இருந்த காயத்தை தொட்டுப் பார்த்து இவள் அழ, “ரீ… ரீனா…” இரத்தம் படிந்த கரத்தை உயர்த்தி அவளது கன்னம் வருட முயன்றவன், அடுத்த நொடியே மயங்கி சரிந்தான்.
உடனே பதறி, “மைக்கேல்… பிளீஸ் என்ன பயமுறுத்தாதீங்க..” என பதறி அவனை உலுக்கியவள், அவன் அசைவின்றி கிடக்கவும், "மைக்கேல்..." என கண்ணீருடன் உரத்த குரலில் கூச்சலிட்டாள், ரீனா.
அவளது கதறலோ, அங்கிருந்த நீரோடையின் சலசலப்பையும் மீறி அந்த மூங்கில் காட்டெங்கும் எதிரொலித்தது.
தொடரும்..
கருத்துகள்
கருத்துரையிடுக
“உங்கள் கருத்துகள் எங்களுக்கு முக்கியம். கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.. தாராளமாய் பகிருங்கள் 😊